எல் நினோவால் இந்தியாவில் உணவுப் பொருட்கள் விலை உயருமா? - விவசாயிகள் முதல் மீனவர்கள் வரை சந்திக்க இருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் 'சூப்பர் எல் நினோ' குறித்து ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஓர் இயற்கையான நிகழ்வு. இது உலகம் முழுவதிலும் உள்ள வானிலையை பாதிக்கிறது.
உலக வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, அடுத்த சில மாதங்களில் எல் நினோ வானிலை அமைப்பின் புதிய கட்டம் தொடங்கக்கூடும். இது காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய வெப்பநிலையை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.
அதோடு, 2026ஆம் ஆண்டில் எல் நினோவின் தாக்கம் மேலும் வலுவடையக் கூடும் என்றும், இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வானிலையில் இன்னும் பரவலான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.
மேலும், தேசிய வானிலை முகமைகளின் பல கணிப்புகள், இந்த எல் நினோ இதுவரை இல்லாத அளவுக்கு மிக வலுவான "சூப்பர் எல் நினோ"-வாக நிரூபிக்கப்படலாம் என்பதைக் காட்டுகின்றன.
"எல் நினோ வானிலை அமைப்பின் இந்தப் புதிய கட்டத்தை, உலகம் ஓர் அவசர காலநிலை எச்சரிக்கையாகக் கருத வேண்டும்" என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சுட்டெரிக்கும் உலகிற்கு இந்தச் சூழ்நிலை எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றுவது போல் அமையும் என்று அவர் கூறினார்.
உலக வானிலை அமைப்பு, "அடுத்த மாதத்தில் எல் நினோ நிலைமைகள் உருவாவதற்கான வாய்ப்பு 80% உள்ளது. எனவே, எல் நினோவுக்கான தயாரிப்புகள் இப்போது மிகவும் முக்கியமானவை" என்று கூறுகிறது.
இந்தியாவின் பருவமழையில் எல் நினோ எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ ஏற்படும்போது, பருவமழை வழக்கமாக சராசரியைவிடக் குறைவாகவே இருக்கிறது.
இந்தியாவின் நீர் வளங்களில் சுமார் 70% முக்கியமாக பருவமழையைச் சார்ந்திருக்கும் சூழ்நிலைகளுக்கு மத்தியில், எல் நினோவால் இந்தியாவில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
எல் நினோ இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்னென்ன ஆயத்தப் பணிகள் செய்யப்பட வேண்டும்?
பிபிசியின் குளோபல் நியூஸ் பாட்காஸ்ட்டில் பேசிய பிபிசி உலக விவகார செய்தியாளர் அன்பரசன் எத்திராஜன், "எல்-நினோ இந்தியாவின் பருவமழையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. ஏனெனில் இந்தப் பருவமழைக் காலம் இந்தியாவில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான மழையைக் காண வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நீர் வளங்களில் சுமார் 70% முக்கியமாக பருவமழை மூலமே தண்ணீரைப் பெறுவதால், இந்தச் சூழ்நிலை இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுவதாக அவர் கூறுகிறார்.
மேலும், இந்தியாவின் விளைநிலங்களில் 50%க்கும் அதிகமானவை முறையான நீர்ப்பாசன வசதிகளைக் கொண்டிருக்கவில்லை, அவை முற்றிலும் மழைநீரையே நம்பியுள்ளன. எனவே மழை குறைந்தால், அது இந்தியாவின் உணவு உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கும்.
ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அன்பரசன் எத்திராஜன், "கடந்த முறை இந்தியா இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டபோது, உணவு உற்பத்தி குறைந்து பணவீக்கம் அதிகரித்தது, இதன் விளைவாக இந்தியா தானிய ஏற்றுமதியை நிறுத்தியது. உதாரணத்திற்கு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியது" என்றார்.
அவரது கூற்றுப்படி, உலகிலேயே அரிசியை மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா என்பதால், இந்தியா ஏற்றுமதியை நிறுத்தினால், உலகளவில் அரிசியின் விலை அதிகரிக்கும். மற்றொரு புறம், இந்த ஆண்டு இந்தியாவில் பருவமழை பலவீனமாக இருக்கும் என்றும், சராசரியைவிடக் குறைவான மழையே பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் சராசரி மழைப்பொழிவு சுமார் 90 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை பலவீனமாக இருக்கக்கூடும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இருப்பினும், எல் நினோவின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு மற்றும் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடும்.
வானிலை ஆய்வு மையத்தின்படி, மத்திய மற்றும் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வட இந்தியாவில் பருவமழையின் நான்கு மாதங்களில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் 'பருவமழையின் முக்கிய மண்டலம்' (monsoon core zone) என்று அழைக்கப்படும் பகுதியிலும் வழக்கத்தைவிடக் குறைவான மழையே பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியில் குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகியவை அடங்கும். இது முக்கியமாகப் பருவமழையை நம்பியிருக்கும் விவசாயப் பகுதிகளை உள்ளடக்கியது.
இந்தப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்தால், நாட்டில் விவசாய உற்பத்தி குறையக்கூடும், இது உணவுப் பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், Getty Images
அன்பரசனின் கூற்றுப்படி, "இந்தியா சர்க்கரையின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்று. எனவே இது உலக அளவில் ஒரு பரந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மறுபுறம், இவை அனைத்தும் இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும், அதன் விளைவாகப் பல ஏழை மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம்."
பாட்காஸ்டில் பேசிய அன்பரசன், "வெப்பம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. நாம் 45, 46 மற்றும் 47 டிகிரி வெப்பநிலையைப் பார்த்திருக்கிறோம், இதன் தாக்கம் இத்தகைய வெப்பத்தில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அதிகரிக்கிறது. வெப்பத் தாக்குதல் மற்றும் இதர காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.
எல் நினோ என்றால் என்ன?
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் 'எல் நினோ தென் திசை ஊசலாட்டம்' (El Niño Southern Oscillation - ENSO) என்று அழைக்கப்படும் ஓர் இயற்கையான காலநிலை நிகழ்வின் ஒரு பகுதியே எல் நினோ.
எல் நினோ, லா நினா ஆகிய இரண்டும் உலகம் முழுவதிலும் உள்ள வானிலை வடிவங்களைப் பாதிக்கும் இரண்டு எதிரெதிர் நிகழ்வுகள். எல் நினோ, லா நினா ஆகிய இரண்டுமே நிகழாதபோது, அதுவொரு நடுநிலையான நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைமைகள் ஏற்பட்டுள்ளனவா என்பதைத் தீர்மானிக்கப் பின்வருவன உள்படப் பல அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
- வெப்பமண்டல கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருப்பது,
- ஆஸ்திரேலியாவின் டார்வினில் (அதாவது மேற்கு பசிபிக் பெருங்கடலில்) வளிமண்டல அழுத்தம் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பது,
- பிரெஞ்சு பாலினேசியாவின் டஹிடியில் (அதாவது மத்திய பசிபிக் பெருங்கடலில்) அழுத்தம் வழக்கத்தைவிடக் குறைவாக இருப்பது
பொதுவாக, டிரேட் காற்றுகள் கிழக்கிலிருந்து மேற்காக வீசுகின்றன, ஆனால் எல் நினோவின்போது, இந்தக் காற்றுகள் வலுவிழந்து எதிர்த் திசையில் வீசத் தொடங்குகின்றன; இதனால் வெப்ப நீர் கிழக்கு நோக்கி நகர்கிறது.
லா நினா காலங்களில், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிய காற்று வலுப்பெற்று, வெப்ப நீரை இன்னும் மேற்கு நோக்கித் தள்ளுகின்றன. இந்த நிகழ்வு முதன்முதலில் 1600களில் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு மீனவரால் கவனிக்கப்பட்டது. அவர் டிசம்பர் மாதத்தில் தென் அமெரிக்க கடற்கரையோரப் பகுதியின் நீர் மிகவும் வெப்பமடைவதை உணர்ந்தார்.
அவர் இந்த நிகழ்வுக்கு 'எல் நினோ டி நாவிடாட்' என்று பெயரிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
எல் நினோ மற்றும் லா நினா வானிலையை எவ்வாறு மாற்றுகிறது?
எல்லா நிகழ்வுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதன் பரிமாணங்கள் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடும். இருப்பினும், விஞ்ஞானிகள் சில பொதுவான விளைவுகளைக் கவனித்துள்ளனர்.
எல் நினோ காரணமாக வெப்பநிலையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன?
உலகளாவிய வெப்பநிலை பொதுவாக எல் நினோவின்போது அதிகரிக்கிறது மற்றும் லா நினாவின்போது குறைகிறது.
எல் நினோவின்போது, வெப்ப நீர் அதிகளவில் பரவி, கடல் மேற்பரப்பிற்கு அருகிலேயே தங்கிவிடுகிறது. இது வளிமண்டலத்தில் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது, இதனால் காற்று அதிக ஈரப்பதத்துடனும் வெப்பத்துடனும் மாறுகிறது.
இதன் பிராந்திய விளைவுகள் சிக்கலானவை, மேலும் சில இடங்கள் ஆண்டின் வெவ்வேறு காலங்களில் எதிர்பார்த்ததைவிட வெப்பமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடும்.
பதிவு செய்யப்பட்டதிலேயே 2023ஆம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டாகும். நீண்ட காலமாக மனிதர்களால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்துடன் கூடுதலாக, இந்த வெப்பமயமாதல் எல் நினோ நிலைமைகளால் உந்தப்பட்டு 2024ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது.
கடந்த 2020 மற்றும் 2022க்கு இடையில், உலகம் வழக்கத்திற்கு மாறான நீண்ட கால லா நினா நிலைமைகளை எதிர்கொண்டது. இது உலகளாவிய வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் உதவியது.
எல் நினோ காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பொதுவாக வெப்பநிலை அதிகமாகவே இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
எல் நினோ மழைப்பொழிவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்?
எல் நினோ நிகழ்வின்போது, வெப்ப நீர் பசிபிக் ஜெட் ஸ்ட்ரீமின் (நீரோட்டம்) வலுவான காற்று நீரோட்டங்களை மேலும் தெற்காகவும் கிழக்காகவும் தள்ளுகிறது. இதனால் தென் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வளைகுடாவை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது.
தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய ஆப்பிரிக்கா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் பொதுவாக குறைந்த மழைப்பொழிவு ஏற்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலை ஏற்படும்போது, இந்தியாவில் பருவமழை பொதுவாக பலவீனமாக இருக்கும், அதாவது இந்தியாவில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும்.
லா நினாவின்போது இந்த நிலைமை முற்றிலும் நேர்மாறாக உள்ளது.
அதாவது, லா நினா ஏற்படும்போது, இந்தியாவில் பொதுவாக நல்ல பருவமழை பெய்து அதிக மழைப்பொழிவு கிடைக்கிறது.
எல் நினோ மற்றும் லா நினா நிகழ்வுகள் ஏன் முக்கியமானவை?
எல் நினோ, லா நினா ஆகியவை தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன. இந்தத் தீவிர வானிலை நிகழ்வுகள் உலகம் முழுவதும் உள்ள உள்கட்டமைப்பு, உணவு மற்றும் எரிசக்தி அமைப்புகளைப் பாதிக்கின்றன.
உதாரணமாக, எல் நினோ நிகழ்வின்போது, தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்குக் குறைந்த அளவிலான குளிர்ந்த நீரே வந்து சேர்வதால், கடலடியில் இருந்து குறைவான ஊட்டச்சத்துகளே மேலே கொண்டு வரப்படுகின்றன. அதாவது, கணவாய், சால்மன் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதுதான் இதன் பொருள்.
இது, இந்தக் கடல் மீன்களைப் பிடித்துப் பிழைப்பு நடத்தும் தென் அமெரிக்க மீனவ சமூகத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக அமைகிறது.
ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, 2015-16ஆம் ஆண்டின் தீவிர எல் நினோ நிகழ்வால் ஏற்பட்ட வறட்சி மற்றும் வெள்ளம், 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு நெருக்கடியை ஏற்படுத்தியது.
சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, எல் நினோ நிகழ்வுகள் உலகப் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கின்றன, இது எதிர்காலத்தில் மேலும் ஒரு பிரச்னையாக மாறக்கூடும்.
எல் நினோ, லா நினா நிகழ்வுகள் பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றன. அவை பொதுவாக ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை நீடிக்கும். அதேபோல், அவை ஒரே நேரத்தில் நிகழ வேண்டிய அவசியமில்லை. எல் நினோவைவிட லா நினா நிகழ்வுகள் குறைவாகவே நிகழ்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































