You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இருவேறு வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட இவர்கள் சுமார் 40 ஆண்டுக்கு பிறகு 'சகோதரிகள்' என்று அறிந்தது எப்படி?
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இவர்களின் கதை பாலிவுட் திரைப்படம் ஒன்றிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டதைப் போன்றது.
40 வயதுகளில் இருக்கும், இந்தியாவில் பிறந்த இரண்டு பெண்கள், குழந்தைகளாக இருக்கும்போதே வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு, நெதர்லாந்தில் ஒருவருக்கொருவர் அருகாமையில் வளர்ந்தவர்கள். இப்போது அவர்கள் இருவரும் உயிரியல் ரீதியாக சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது.
மீனா கெல்டிங்க் மற்றும் மினல் டிஜ்சென் ஆகிய இருவரும் 1980களின் தொடக்கத்தில் பிறந்தவர்கள். பிறந்து சில மாதங்களிலேயே மும்பை நகரில் உள்ள இரண்டு வெவ்வேறு ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்து அவர்கள் தத்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் இளம் வயதிலேயே, தங்களது பெற்றோர் பயன்படுத்திய தத்தெடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாகச் சந்தித்தனர். அப்போது, தங்களது தோற்றத்திலும் நடத்தைகளிலும் இருந்த வியக்கத்தக்க ஒற்றுமையைக் கண்டு இருவரும் ஆச்சரியமடைந்தனர்.
தற்போது 43 வயதாகும் மீனாவுக்கு அந்த நாள் இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது.
"தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பழகவும், ஒருவரையொருவர் நெருக்கமாக அறிந்துகொள்ளவும், இரவு உணவு சாப்பிடவும் அழைத்து வரப்பட்டிருந்தனர்."
முதன்முறையாக சந்தித்த தருணம்
மீனாவும் மினலும் தங்களது நண்பர்களுடன் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதை நண்பர்கள் கவனித்தனர்.
"'கண்ணாடியில் உங்களைப் பாருங்கள்' என்று அவர்கள் சொன்னார்கள். நான், 'ஓ மை காட்! அவளுடைய மூக்கும் என்னுடைய மூக்கும் ஒரே மாதிரி இருக்கிறது! நாங்கள் ஒரே மாதிரியாகச் சிரிக்கிறோம்' என்று நினைத்தேன். இரவு உணவின்போது நான் முழு நேரமும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்" என்று நெதர்லாந்தில் உள்ள தனது வீட்டிலிருந்து பிபிசியிடம் மீனா கூறினார்.
மறுநாள், இருவரும் தொலைபேசி எண்களையும் முகவரிகளையும் பரிமாறிக்கொண்டு, தொடர்ந்து தொடர்பில் இருக்க உறுதியளித்தனர்.
தங்களுக்கு ரத்தத் தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாதபோதிலும், இருவருக்கும் உடனடியாக ஒரு நெருக்கம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக அவர்கள் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக்கொண்டனர். கடிதங்களில் அடிக்கடி "சகோதரி" என அழைத்துக்கொண்டனர், தாங்கள் "அவ்வாறே உணர்ந்ததாக" அவர்கள் கூறுகின்றனர்.
பள்ளி, நண்பர்கள், ஆண் நண்பர்கள், வெளியே செல்வது, நடனம் எனப் பல விஷயங்களைப் பற்றி அவர்கள் எழுதிக்கொண்டனர். தாங்கள் விளையாடிய விளையாட்டுகள் குறித்தும் பேசினர். இசையைப் பற்றிப் பேசியபோது, இருவருக்கும் பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் இசைக்குழு மிகவும் பிடிக்கும் என்பதையும் கண்டறிந்தனர்.
ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் தொடர்பை இழந்தனர். மினல் பிரான்ஸுக்குக் குடிபெயர்ந்திருந்தார். அதே நேரத்தில், மீனா தனது முதல் குழந்தையைப் பெற்றிருந்ததால், குடும்பப் பொறுப்புகளில் பரபரப்பாகிவிட்டார்.
சகோதரிகள் என அறிந்தது எப்படி?
2017-ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்பட்டவர்களுக்கான மற்றொரு சந்திப்பில் மீனா கலந்துகொண்டார். அங்கு டிஎன்ஏ பரிசோதனை குறித்து கேள்விப்பட்ட அவர், தானும் ஒரு பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்தார். ஆனால் அவருக்கு எந்த மரபணு ஒற்றுமையும் கிடைக்கவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது தொலைபேசியில் ஸ்டோரேஜ் நிரம்பியதால் அந்த செயலியை அவர் நீக்கிவிட்டார்.
பின்னர், மே 20ஆம் தேதி, மினலிடமிருந்து ஃபேஸ்புக்கில் மீனாவுக்கு ஒரு செய்தி வந்தது.
"'என்னை நினைவிருக்கிறதா?' என்று அவள் கேட்டிருந்தாள்."
ஏப்ரல் மாதம் நெதர்லாந்தில் தனது பெற்றோரைச் சந்திக்கச் சென்றபோது மினல் டிஎன்ஏ பரிசோதனை செய்திருந்தார். அதன் முடிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அந்தச் செய்தியுடன் இணைத்திருந்தார்.
"நான் அந்த செயலியை மீண்டும் நிறுவினேன். மிகவும் பதற்றமாக இருந்ததால், உள்நுழைய முயன்றபோது 10 முறை தவறான பாஸ்வேர்டை உள்ளிட்டேன்" என்று மீனா கூறுகிறார்.
அதன் முடிவு மிகவும் தெளிவாக இருந்தது – இருவரும் "100% ஒத்த மரபணு" கொண்டிருந்தனர்.
"எனக்கு 'சகோதரி' என்ற பொருத்தம் கிடைத்திருந்தது. அதாவது, எங்கள் உயிரியல் தாயும் தந்தையும் ஒருவரே" என்று மீனா விளக்குகிறார்.
"எனக்கு திடீரென பரவசமும் உற்சாகமும் ஏற்பட்டது. நான் அழுதுவிட்டேன். இத்தனை காலமாக நான் தேடிக்கொண்டிருந்த, காணாமல் போன புதிரின் துண்டாக மினல் இருந்தாள். நாங்கள் ஒருவரையொருவர் சகோதரி என்று அழைத்துக்கொண்டிருந்தோம். எங்களுடைய உள்ளுணர்வு அனைத்தும் சரிதான் என்பதற்கான உறுதிப்படுத்தலாக இந்த டிஎன்ஏ பொருத்தம் இருந்தது."
ஆகஸ்ட் மாதத்தில், நல்ல வெயில் நிலவிய ஒரு நாளில், சகோதரிகள் என்பது கண்டறியப்பட்ட பிறகு, பழைய நண்பர்களான இருவரும் முதன்முறையாக நேரில் சந்தித்தனர்.
"அது அற்புதமாக இருந்தது. சொந்த இடத்துக்குத் திரும்பியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது" என்று மூன்று குழந்தைகளின் தாயான மீனா கூறுகிறார்.
"உணர்ச்சிகரமான சந்திப்பு"
"பல ஆண்டுகளாக, மினாவுக்கும் எனக்கும் இதயத்தில் ஒரு பெரிய வெற்றிடம் இருப்பதாக உணர்ந்தோம். இப்போது நாங்கள் முழுமையடைந்துவிட்டதாக உணர்கிறோம். எல்லாமே இப்படித்தான் நடக்க வேண்டியதாக இருந்தது போல இப்போது தோன்றுகிறது."
அவர்களின் "உணர்ச்சிகரமான சந்திப்பு" குறித்து செய்தி வெளியிட்ட ராய்ட்டர்ஸ், அவர்களின் சந்திப்பின்போது "கண்ணீர், கட்டிப்பிடித்தல், சிரிப்பு" ஆகியவை தொடர்ந்து இடம்பெற்றதாகவும், பின்னர் இருவரும் முதல்முறையாக ஒன்றாக செல்ஃபி எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தது.
44 வயதான மினல், தனது துணைவர் மற்றும் இரண்டு மகன்களுடன் பிரான்ஸில் வசித்து வருகிறார். ஏப்ரல் மாதம் தனது டிஎன்ஏ பரிசோதனை முடிவு வந்தபோது, தன்னுடன் மரபணு பொருத்தம் கொண்டிருந்தவர், 30 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாகச் சந்தித்தபோது தன்னை இறுகப் பற்றிக்கொண்ட அந்தச் சிறுமிதான் என்பதை முதலில் உணரவில்லை என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
சமூக ஊடகங்களில் இருந்த தனது புகைப்படங்களைப் பார்த்தபோதுதான் அவருக்கு அது புரிந்தது.
"'மீனா: சகோதரி.' என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் சகோதரிகளாக மாறுவதற்கு முன்பே நண்பர்களாக இருந்தோம்.
"நாங்கள் அப்போதே சகோதரிகளாகத்தான் இருந்தோம். ஆனால் எங்களுக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறினார்.
மீனாவும் மினலும் இரண்டு வெவ்வேறு ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்து, இரண்டு வெவ்வேறு நெதர்லாந்து தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டவர்கள்.
மீனா, நெதர்லாந்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்ததாகக் கூறுகிறார். அவரது பெற்றோர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.
"அவர்கள்தான் எனக்கும் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் மிகவும் அன்பானவர்கள், மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள்" என்று அவர் கூறுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை இறந்துவிட்டார். ஆனால் அவரது தாய் தொடர்ந்து அதே கிராமத்தில் வசித்து வருகிறார்.
"நாங்கள் தினமும் பேசிக்கொள்கிறோம். இப்போதும் அவர்தான் எனக்கு பாதுகாப்பான உணர்வைத் தருபவர்" என்று அவர் கூறுகிறார்.
2003-ஆம் ஆண்டு, 19 வயதாக இருந்தபோது, மீனா தனது பெற்றோர் மற்றும் கோவாவில் இருந்து தத்தெடுக்கப்பட்ட தனது சகோதரருடன் மும்பையில் உள்ள அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்றார்.
அவர்கள் இரண்டு வாரங்கள் அங்கிருந்த பதிவுகளைப் பார்த்து, மீனாவின் உயிரியல் பெற்றோரைக் கண்டுபிடிக்க முயன்றனர்.
"ஏனென்றால், நான் எங்கிருந்து வந்தேன் என்பதைத் தெரிந்துகொள்வது எனக்கு முக்கியமாக இருந்தது. ஆனால் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகம் எனது உயிரியல் பெற்றோர்கள் குறித்த எந்தத் தகவலையும் வெளியிடவில்லை" என்று அவர் கூறுகிறார்.
மே மாதம் முதல், மீனாவும் மினலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பேசிக்கொள்கின்றனர். அவர்கள் ஒருவருடைய துணைவர்கள், குழந்தைகள், சகோதரர்கள் மற்றும் பெற்றோர்களையும் சந்தித்துள்ளனர்.
"நாங்கள் ஒருவருடைய வாக்கியத்தை மற்றொருவர் முடிப்பதையும், தலையை அசைக்கும் விதமும், நடக்கும் விதமும் ஒரே மாதிரியாக இருப்பதையும் அனைவரும் கவனிக்கிறார்கள்" என்று மீனா கூறுகிறார்.
தாங்கள் சகோதரிகள் என்ற உண்மை இன்னும் முழுமையாக மனதில் பதியவில்லை என்கிறார் அவர்.
"சில நேரங்களில் நாங்கள் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். நேரம் போவதே தெரியாது. திடீரென்று, மளிகைப் பொருட்கள் வாங்க வேண்டும் அல்லது குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துவர வேண்டும் என்பது நினைவுக்கு வரும்."
தானும் தனது சகோதரியும் "மிகவும் விரும்பும்" ஒரு விஷயம் இருப்பதாக மீனா கூறுகிறார் – அதாவது, எல்லாம் தொடங்கிய இடத்துக்குத் திரும்பிச் செல்வது.
"ஒருநாள் நாங்கள் இருவரும் ஒன்றாக இந்தியாவுக்குச் செல்ல விரும்புகிறோம். மும்பையின் தெருக்களில் ஒன்றாக நடக்க வேண்டும். எங்கள் இருவருக்கும் தனிமையாக உணர்ந்த தருணங்கள் இருந்திருக்கின்றன. நான் என் தந்தையை இழந்தபோதும், காதல் உறவு முறிந்தபோதும் அப்படித்தான் உணர்ந்தேன். அப்போது நாங்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடியாமல் போனதை நினைத்து வருத்தப்படுகிறேன். மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம்; கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவியிருக்கலாம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு