You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் பொதுச் செயலாளர்' - எஸ்.பி. வேலுமணி
“எப்போதும் எங்களுக்கு எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர், அதிமுக சந்தித்துள்ள தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடுதான் உள்ளது” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவை, கட்சி நிர்வாகம் என்கிற இரு வேறு நிலைகளில் அதிமுக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் அடங்கிய தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரி வருகிறது.
பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சிவி சண்முகம் கோரிய நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.
அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர், கொறடா நியமனம் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதும் பொதுக் குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதும் தமிழக அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது.
அதிமுகவின் பொதுக்குழு விதிகள் என்ன?
தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அதிமுக கட்சி விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை கட்சிப் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் அல்லது பொதுச் செயலாளர் எப்பொழுது தேவை எனக் கருதுகிறாரோ அப்போது 15 நாட்கள் அறிவிப்புடன் நடத்தப்பட வேண்டும். பொதுக் குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் கலந்து கொள்ள வேண்டும்.
ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சிறப்பு பொதுக் குழு நடத்த வேண்டும் எனக் கோரினால் பொதுச் செயலாளர் 30 நாட்களுக்குள் பொதுக் குழுவை கூட்ட வேண்டும்.
நீதிமன்றத்தை நாட முடியுமா?
சட்டப்பேரவையைப் பொருத்தவரை பேரவைத் தலைவரின் அதிகாரம் தான் இறுதியானது என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பேரவைத் தலைவர் முடிவெடிக்கிற வரையில் நீதிமன்றம் தலையிட முடியாது. அவர் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம், காலம் தாழ்த்தலாம். கடந்த கால முன்னுதாரணங்கள் நிறைய இருக்கின்றன.
பேரவைத் தலைவர் முடிவெடுத்த பிறகு நீதிமன்றத்தை அணுகலாம் அல்லது கால தாமதம் ஆகின்றது என நீதிமன்றத்தை நாடினால் முடிவெடுக்குமாறு அவருக்கு உத்தரவிடலாம் அல்லது காலக்கெடு நிர்ணயிக்கலாம்.
பொதுக்குழு என்று வருகையில் அங்கு எண்ணிக்கை முதன்மையானது, கட்சி தலைவருக்கு அதிகாரம் இருந்தாலும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடலாம்." என்று தெரிவித்தார்.
அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்? தவெக அரசை ஆதரித்த அதிமுகவின் ஒரு தரப்புக்கு அமைச்சரவையில் இடம் தரப்படுமா? என்பன போன்ற எதிர்பார்ப்புகள் நிலவின. இந்த நிலையில், விஜயின் அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், அரசை ஆதரித்த அதிமுக தரப்பு எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான், எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் 'எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் பொதுச் செயலாளர்' கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு