'கோடாரியால் தாயை 40 முறை, தந்தையை 41 முறை வெட்டினாள்' - 134 ஆண்டுக்கு பிறகும் பீதி தரும் வழக்கில் நீடிக்கும் மர்மம்

    • எழுதியவர், கிளேர் மெக்ஹக்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1893 ஜூன் மாதம், லிஸ்ஸி போர்டன் தனது தந்தை மற்றும் வளர்ப்புத் தாயைக் கொலை செய்த வழக்கில் விசாரிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இது அமெரிக்க வரலாற்றில் மிகவும் பிரபலமான, இதுவரை அவிழ்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாக மாறியது - அத்துடன் நாவல்கள், திரைப்படங்கள் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒரு புதிய நாடகத்தின் கருப்பொருளாகவும் உருவெடுத்தது.

பிரபலமான கொடூரக் கொலையாளிகளின் வாழ்க்கையைத் தத்ரூபமாக நாடகமாக்குவதன் மூலம், அதன் படைப்பாளர்களான ரியான் மர்ஃபி மற்றும் இயன் பிரென்னன், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகும் தங்களின் உண்மைக் குற்றத் தொகுப்புத் தொடரான ​​'மான்ஸ்டர்'-ஐ ஒரு மாபெரும் வெற்றிப் படைப்பாக மாற்றியுள்ளனர்.

தொடர் கொலையாளி ஜெஃப்ரி டாமர், தந்தையைக் கொன்ற சகோதரர்களான லைல் மற்றும் எரிக் மெனண்டெஸ், மற்றும் விஸ்கான்சின் கொலையாளியும் கல்லறைத் திருடனுமான எட் கீன் ஆகிய அனைவரும் இந்த "மான்ஸ்டர்" பாணியில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சித்தரிப்புகள் ஒரே ஒரு கேள்வியைக் கேட்பதை நோக்கமாக்கக் கொண்டுள்ளன என்று மர்பி கூறுகிறார்: "அரக்கர்கள் உருவாக்கப்படுகிறார்களா அல்லது பிறக்கிறார்களா?"

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் தர்மசங்கடம் தரக்கூடிய விவரங்கள் உள்ளன.

நான்காவது சீசனுக்கு, இந்த இணையர் லிஸ்ஸி போர்டனைத் தங்களின் படைப்பு ரீதியான ஊகத்தின் மையப் புள்ளியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மட்டுமே முதன்முதலில் இதைச் செய்யவில்லை. பல தசாப்தங்களாக, நாவலாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள் - ஓபரா இசையமைப்பாளர்கள் மற்றும் ராக் இசைக்கலைஞர்கள் கூட - 1892 ஆகஸ்டில் இரண்டு கொடூரமான கொலைகளுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த அமெரிக்கப் பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதையால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கக் குற்ற வரலாற்றில் இது மிகவும் எதிர்மறையாக பிரபலமான ஒரு பாடலாக இருப்பதால், பள்ளி குழந்தைகள் இன்றும் அப்பாடலை பாடுகிறார்கள்: "லிஸ்ஸி போர்டன் கோடாரியை எடுத்தாள், தன் தாயை 40 முறை வெட்டினாள் / தான் செய்ததைப் பார்த்த தன் தந்தைக்கு 41 முறை வெட்டினாள்."

ஒரு கொடூரமான குற்றம்

இந்தப் பாடல் கொலையாளியைத் தவறாக அடையாளப்படுத்தினாலும், அது தாக்குதல்களின் எண்ணிக்கையையும் ஆயுதத்தையும் மிகைப்படுத்துகிறது (அது ஒரு கைக்கோடாரி - ஒரு கையால் பயன்படுத்தக்கூடிய சிறிய கோடாரி). ஆனால் சம்பவங்களின் வரிசை துல்லியமானது.

மசாசூசெட்ஸின் ஃபால் ரிவர் நகரில் ஒரு வெப்பமான கோடை காலையில் ஆண்ட்ரூ மற்றும் ஆபி போர்டன் ஆகியோரைக் கொன்றது யாராக இருந்தாலும் அவர், முதலில் ஆபி போர்டனைத்தான் கொன்றார். 64 வயதான ஆபி, ஆண்ட்ரூவின் இரண்டாவது மனைவி மற்றும் ஆண்ட்ரூவின் திருமணமாகாத மகள்களான எம்மா (41) மற்றும் லிஸி (32) ஆகியோரின் மாற்றாந்தாயும் ஆவார்.

ஆண்ட்ரூ வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, அவரும் தனது உயிரை இழந்தார். லிஸ்ஸி அழைப்பின் பேரில் போலீசார் வந்தபோது, வரவேற்பறை சோபாவில் கோடாரியால் 11 முறை வெட்டப்பட்டு, அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்த நிலையில் இருந்த அவரது தந்தையைக் கண்டறிந்தது.

குற்றத்தின் கொடூரம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், ஃபால் ரிவரின் சென்ட்ரல் காங்கிரகேஷனல் தேவாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய, வெளித்தோற்றத்தில் சாந்தமான பெண்ணான லிஸ்ஸி மீது அதிகாரிகள் முதலில் சந்தேகப்படவே இல்லை. இருப்பினும், விசாரணையின் போது, கொலைகள் நடந்த நாளில் தனது நடமாட்டங்கள் குறித்து அவர் முன்னுக்குப்பின் முரணாகக் கூறிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரும், குடும்பத்தின் ஐரிஷ் பணிப்பெண்ணான பிரிட்ஜெட் சல்லிவனும் மட்டுமே வீட்டில் இருந்தனர். (எம்மா விடுமுறையில் வெளியூர் சென்றிருந்தார், வீட்டிற்கு வந்திருந்த விருந்தினரும் வெளியே சென்றிருந்தார்.)

தவிர, லிஸ்ஸியும் அவரது சகோதரியும் மறுத்தபோதிலும், மனக்கசப்புகள் நண்பர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் தெரிந்திருந்தன. ஆண்ட்ரூ பணக்காரராக இருந்தாலும் கஞ்சத்தனம் கொண்டவராக இருந்தார்; அவர் தனது மகள்களை நகரின் ஏழ்மையான பகுதியில் வாழவும், வீட்டுச் செலவுகளைக் குறைக்கவும் வற்புறுத்தினார், அதேவேளையில் தனது புதிய மனைவியின் குடும்பத்திற்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தார்.

கொலைகள் நடப்பதற்கு முந்தைய நாள் லிஸ்ஸி விஷத்தன்மை கொண்ட 'புரூசிக் அமிலத்தை' விலைக்கு வாங்க முயன்றதாக உள்ளூர் மருந்தாளர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து, ஒரு நீதிபதி அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் டிசம்பரில், கொலைகள் நடந்த சில நாட்களுக்குப் பிறகு லிஸ்ஸி ஒரு ஆடையை (அவருடைய சொந்த ஆடையாக இருக்கலாம்) அடுப்பில் வைத்து எரித்ததாக ஒரு நண்பர் ஜூரி குழுவிடம் வாக்குமூலம் அளித்தார். இதன் தொடர்ச்சியாக கொலைக்கான முறையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அடுத்த ஜூன் மாதத்தில் விசாரணைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது.

வரலாற்றாசிரியரும் ஃபால் ரிவரைச் சேர்ந்தவருமான ஜோசப் கான்ஃபோர்டி, தனது 'லிஸி போர்டன் மீதான வழக்கு: கொலை, இன அடையாளம் மற்றும் பாலினம்' (Lizzie Borden on Trial: Murder, Ethnicity, and Gender) என்ற புத்தகத்தில் , லிஸ்ஸி தனது மறைந்த தந்தையின் பணத்தைக் கொண்டு, முற்றிலும் ஆண்கள் மட்டுமே கொண்ட ஜூரி குழுவின் முன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பாஸ்டனிலிருந்து ஒரு முன்னணி வழக்கறிஞரை நியமித்தது பற்றி விவரிக்கிறார். (அந்தக் காலத்தில் ஆண்கள் மட்டுமே ஜூரி குழுவில் இடம்பெற முடியும்.)

"அவர் தன்னை ஒரு ஆதரவற்ற கன்னிப் பெண் போல காட்டிக்கொண்டார்" என்று கான்ஃபோர்டி எழுதியுள்ளார். "அவரது வழக்கறிஞர்கள் அவரைப் கருப்பு உடை அணியச் சொன்னார்கள். அவர் இறுக்கமான ஆடையணிந்து, மிதந்து வரும் உடைகளுடன், தளர்வான ஆடைகளை உடுத்தி, ஒரு கையில் பூங்கொத்தையும் மறு கையில் விசிறியையும் ஏந்தியபடி நீதிமன்றத்தில் ஆஜரானாள்."

கலாசார தாக்கத்தை ஏற்படுத்திய தீர்க்கப்படாத ஒரு மர்மம்

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கண்டுபிடிக்கப்படாததாலும், சந்தேகத்திற்குரிய மருந்தக வருகை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாலும், லிஸ்ஸி போர்டனுக்கு எதிரான வழக்கு சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையிலேயே இருந்தது.

அரசுத் தரப்பு குறிப்பிட்டது போல, "ஒரு காட்டுமிராண்டித்தனமான... மனநிலை பிறழ்ந்த அரக்கியாக" இருப்பதற்கு லிஸ்ஸியிடம் உடல்பலமோ அல்லது ஒழுக்கக்கேடோ இல்லை என்பதில் உறுதியாக இருந்த ஜூரி குழு, குறுகிய நேர விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்தது.

ஆனால் இந்த கொடூரக் கொலைகளுக்காக வேறு யாரும் விசாரிக்கப்படவில்லை. அதனால் லிஸ்ஸி தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதி முழுவதும் சந்தேகத்தின் நிழலில் வாழ்ந்தார்; தன் சொந்த ஊரில் பலரால் அவர் ஒதுக்கப்பட்டார்.

அப்படியென்றால், லிஸ்ஸி போர்டனின் கதை ஏன் தொடர்ந்து இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது - அதுவும் குறிப்பாக எழுத்தாளர்களுக்கு?

"ஒருவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவதில், முடிவுறாத ஒரு தன்மை இருக்கிறது," என்று 'லிஸ்ஸி போர்டன் மீதான வழக்கு' (The Trial of Lizzie Borden) என்ற நூலின் ஆசிரியரான காரா ராபர்ட்சன் பிபிசியிடம் கூறுகிறார்.

"குற்றவாளி என நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படும் ஒரு தீர்ப்பில் விடை தெரியாத மர்மம் எஞ்சியிருக்கிறது. ஒரு துப்பறியும் கதையில் நாம் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் இந்த வழக்கில் உள்ளன. லிஸ்ஸி போர்டன்தான் கொலையாளி என்று நாம் கூறினால், இது உண்மையிலேயே ஓர் ஆழ்ந்த உளவியல் நாடகக் கதையாகும்" என்றும் அவர் கூறினார்.

புனைகதை எழுத்தாளர்கள் போர்டனைப் பற்றியும் அவரது வட்டத்தைப் பற்றியும் டஜன் கணக்கான நாவல்கள், கதைகள் மற்றும் மறுபடைப்புகளில் ஆராய்ந்துள்ளனர். 1982-இல் வெளியான ஏஞ்சலா கார்ட்டரின் அமானுஷ்யமான 'ஃபால் ரிவர் கோடரி கொலைகள்' (The Fall River Axe Murders) என்ற சிறுகதை, கொலைகளுக்கு முந்தைய நேரங்களை மறுஉருவாக்கம் செய்கிறது.

"ஒவ்வொரு காட்சியும் லிஸ்ஸியின் உலகம் அதிக வெப்பமடைந்தது, எழுத்துப்பூர்வமாகவே துர்நாற்றம் வீசுவது மற்றும் உணர்ச்சி ரீதியாக நெருக்குதல் அளித்து முடக்குவது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறது" என்று 'எங்கும் சிறு தீப்பொறிகள்' (Little Fires Everywhere) என்ற நூலின் ஆசிரியரான செலஸ்டே என்ஜி, 'ஃபிக்ஷன் ரைட்டர்ஸ் ரிவ்யூ' இதழில் எழுதினார். "கோடரி கீழே விழுவதை நாம் ஒருபோதும் பார்ப்பதில்லை. அது நமக்குத் தேவையும் இல்லை."

கடந்த அரை நூற்றாண்டில் இக்கொலைகளை மையமாகக் கொண்டு மூன்று குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1975-இல் ஏபிசி தொலைக்காட்சியில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற 'தி லெஜண்ட் ஆஃப் லிஸ்ஸி போர்டன்' திரைப்படத்திலிருந்து இது தொடங்குகிறது. லிஸ்ஸியாக நடித்ததற்காக எம்மி விருதுக்கு எலிசபெத் மாண்ட்கோமரி பரிந்துரைக்கப்பட்டார்.

இப்படத்தில், சந்தேக நபர் எஃகு போன்ற உறுதியான பார்வையைக் கொண்ட விக்டோரியன் காலத்துப் பெண்ணாகக் காட்டப்படுகிறார்; அவர் எதையும் வெளிப்படுத்த மாட்டார், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்வதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. குற்ற உணர்வு குறித்த கேள்வி ஒருபோதும் நேரடியாக எழுப்பப்படாவிட்டாலும், லிஸ்ஸி போர்டனாக நடிக்கும் மாண்ட்கோமெரி, ஊகமான, கனவு போன்ற பின்னோட்டக் காட்சிகளில் ஒரு கோடரியைப் பயன்படுத்துகிறார்.

2014-இல் லைஃப்டைம் தொலைக்காட்சியில் வெளியான 'லிஸ்ஸி போர்டன் டியூக் ஆன் ஆக்ஸ்' திரைப்படத்தில், குற்றம் சாட்டப்பட்ட நபராக கிறிஸ்டினா ரிச்சி நடித்தார். லிஸ்ஸியை நவீன காலப் பெண்ணாக ரிச்சி சித்தரித்திருந்தார்: அதாவது, வஞ்சகமும் சதித்திட்டமும் கொண்ட மோசமான பெண் போல நடித்தார்.

ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான ஒரு விமர்சனத்தின்படி , ரிச்சி "தன் நடிப்பின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து, மிகை நடிப்பாக இல்லாமல், தனது வெறித்தனமான கண்களின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறார்".

அடுத்த ஆண்டு, லைஃப்டைம் நிறுவனம் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட 'தி லிஸ்ஸி போர்டன் க்ரோனிக்கல்ஸ்' என்ற குறுந்தொடரை வெளியிட்டது.

2018-இல் வெளியான 'லிஸ்ஸி' என்ற உளவியல் த்ரில்லர் திரைப்படத்தில் குளோயி செவிக்னி முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். இது ஒரு பெண்ணியக் கண்ணோட்டம் கொண்ட மறுஉருவாக்கம் ஆகும். ஆண்ட்ரூவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பணிப்பெண் பிரிட்ஜெட் சல்லிவன் (கிறிஸ்டன் ஸ்டீவர்ட்) மீதான காதலால் தூண்டப்பட்டு, கொலை செய்யத் தள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட மகளாக லிஸ்ஸி போர்டன் சித்தரிக்கப்படுகிறார். (எவன் ஹன்டரின் 1984-ஆம் ஆண்டு நாவலான 'லிஸ்ஸி'யிலும் போர்டனுக்கும் சல்லிவனுக்கும் இடையிலான காதல் கற்பனையாக வைக்கப்பட்டிருந்தது).

செவிக்னி படத்தில் நடிப்பதற்கு முன்பும், தயாரிப்பதற்கு முன்பும் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இந்த வழக்கை அவர் ஆராய்ந்தார். அவரைப் பொறுத்தவரை, லிஸ்ஸி போர்டன் "ஆணாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் ஒரு அமெரிக்கப் புரட்சியாளரைப் போலத்" தோன்றினார்.

ஒரு புதிய நாடகமாக்கல்

'மான்ஸ்டர்: தி லிஸ்ஸி போர்டன் ஸ்டோரி' தொடரின் பார்வையாளர்கள், ரிச்சியின் சித்தரிப்பை விட செவிக்னியின் சித்தரிப்பிற்கு நெருக்கமான ஒன்றை எதிர்பார்க்கலாம். புதிய லிஸ்ஸியாக நடிக்கும் எல்ஃபா பீட்டி (வாரன் பீட்டி மற்றும் அனெட் பெனிங்கின் மகள்), இந்தத் தொடர் "பெண்களுக்கு முன்வைக்கப்படும் சூழ்நிலைகளுக்கு அவர்கள் காட்டும் கோபம் மற்றும் எதிர்வினையின் ஒரு பாரம்பரியத்தை" ஆராய்கிறது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ரியான், லிஸ்ஸி போர்டன் வழக்கை ஆராய்வதை ரசித்ததாகக் கூறினார், ஏனெனில் "பல வழிகளில், அது பெண்கள் மற்றும் சமூகம் தொடர்பாகக் கையாளும் விஷயங்களைப் பார்க்கும்போது, ​அது இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது" என்றார்.

'மான்ஸ்டர்' தொடரின் ட்ரெய்லர், மீண்டும் ஒருமுறை லிஸ்ஸி, பணிப்பெண் பிரிட்ஜெட் சல்லிவனுடன் நெருக்கமான உறவில் சிக்கியிருப்பதாகக் காட்டுவதைச் சுட்டிக்காட்டுகிறது. போர்டன் வழக்கைப் பற்றி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து எழுதி வரும் ராபர்ட்சன் பிபிசியிடம் பேசுகையில், இது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று கூறுகிறார். ஏனெனில் பல நாவலாசிரியர்களும் திரைப்பட தயாரிப்பாளர்களும் "இந்தக் கதையை அப்படியே சொல்வது போதுமானதாக இல்லை என உணர்ந்தனர்... நீண்ட காலமாக அவர்கள் ஒரு ஆண் காதலனை இக்கதையில் கற்பனையாக உருவாக்கி வந்தனர். சமீபகாலமாக, அவர்கள் வீட்டிற்குள்ளேயே ஒருவரைக் கண்டறிந்துள்ளனர், அதாவது பணிப்பெண்ணை."

ஆனால் இந்தத் தேர்வு, சல்லிவனை போர்டன் நடத்திய விதம் குறித்த சில அறியப்பட்ட உண்மைகளால் பலவீனமடைவதாக ராபர்ட்சன் சுட்டிக்காட்டுகிறார். அவர்களுக்குள் காதல் உறவு சாத்தியம் தான் என்று நான் நினைக்கிறேன், ஆனால் லிஸ்ஸி ஒருபோதும் அவளை அவளது நிஜப் பெயரால் அழைக்கவில்லை என்பதும் உண்மை."

'மான்ஸ்டர்' தொடரின் இந்த சீசனில் உள்ள ஒரு விசித்திரமான திருப்பம் என்னவென்றால், இதில் நவீன காலத்தைச் சேர்ந்த மற்றொரு கொலையாளியின் கதையும் இதில் இணைத்திருப்பதுதான். 1992-இல் ஏழு ஆண் வாடிக்கையாளர்களைக் கொன்றதற்காக தண்டனை பெற்ற புளோரிடாவைச் சேர்ந்த பாலியல் தொழிலாளியான ஐலீன் வுர்னோஸாக சாரா பால்சன் நடிக்கும் சில காட்சிகளும் இடம்பெறும். இந்த இரண்டு வழக்குகளையும் இணைப்பதன் மூலம், 'மான்ஸ்டர்' தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய கருத்தை முன்வைப்பதாகத் தெரிகிறது: ஆண்கள் அளவுக்குப் பெண்கள் கொலை செய்வது மிகவும் குறைவு என்றாலும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அவர்களின் கோபம் கொலைவெறியாக மாறக்கூடும்.

இந்த வழக்கிற்கு முன்னரோ அல்லது பின்னரோ போர்டன் வன்முறையாக நடந்துகொண்டதாகத் தெரியவில்லை, அப்படியிருக்க, ஒருவேளை அவர் அப்படிச் செய்திருந்தால், கொலைவெறியுடன் ஒரு கோடரியை எடுக்க அவரைத் தூண்டியது எதுவாக இருந்திருக்க முடியும்? இதற்கான பதில் நமக்கு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்பதால், போர்டனைப் பற்றிய 'மான்ஸ்டரின்' இந்த புதிய பார்வையும் இதன் கடைசி முடிவாக இருக்கப் போவதில்லை.

கற்பனைத் திறன் படைத்த பிற படைப்பாளிகள், குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு கொடூரமான குற்றத்தை ஆராய்ந்து, 1892 ஆகஸ்ட் மாத நிகழ்வுகளை மீண்டும் ஆய்வு செய்வார்கள்.

'மான்ஸ்டர்: தி லிஸ்ஸி போர்டன் ஸ்டோரி'தொடர் செப்டம்பர் 17 அன்று நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு