97 வயது மூதாட்டி வாழை மர தண்டுகள் மூலம் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது எப்படி?

- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில், அசாமில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது, போர்னாலி பருவாவும் அவரது கணவரும் அவரது 97 வயதான தாயைக் காப்பாற்ற முயன்றுகொண்டிருந்தனர்.
ஏறக்குறைய படுக்கையிலேயே முடங்கிப் போன நிலையில் இருந்த லோகாடா துவாராவால் நடக்க முடியவில்லை.
படகு இல்லை, மீட்புக் குழுவினர் இல்லை, உதவிக்கு அண்டை வீட்டாரும் யாரும் இல்லை.
அதனால், வாழைத்தண்டுகளைக் கொண்டு அவசரமாக உருவாக்கப்பட்ட தற்காலிக மிதவையில் அவரை ஏற்றி, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
"எல்லோரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே முயன்றுகொண்டிருந்தனர்," என்று பருவா கூறுகிறார்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சாரிங் கிராமத்தில் தங்கள் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இருந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமை மூவரும் சென்றடைந்ததாக அவர் கூறுகிறார்.
சிவசாகர் மாவட்டம் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும்.
அங்கு வெள்ளநீர் மூன்று முதல் நான்கு அடி ஆழம் இருந்தது. நீரோட்டமும் மிகவும் வேகமாக இருந்ததால், ஒருவரின் கைகளை ஒருவர் பிடித்துக்கொண்டு, தங்களை நிலைப்படுத்திக்கொள்ள கொள்ள குச்சிகளைப் பயன்படுத்தி மெதுவாக நகர வேண்டியிருந்தது.
அதற்குள், பருவாவின் வீடு வெள்ளநீரில் மூழ்கத் தொடங்கியிருந்தது. பின்னர் அந்த வீட்டுக்குள் சுமார் ஐந்து அடி உயரம் வரை தண்ணீர் புகுந்தது.

சாரிங்கில் நடந்த இந்தச் சம்பவம், அசாம் முழுவதும் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவின் ஒரு பகுதியாக இருந்தது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 100 ஆக உள்ளது. 10 மாவட்டங்களும் 456 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, இந்த வெள்ளத்தால் 25 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
19,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன, மேலும் 75,000-க்கும் மேற்பட்ட மக்கள் 252 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேல் அசாமின் சில பகுதிகளில் இந்த முறை வெள்ளம் மிகவும் கடுமையாக இருந்தது. வழக்கமாக வெள்ளத்தால் பாதிக்கப்படாத சாரிங் போன்ற கிராமங்கள்கூட நீரில் மூழ்கியுள்ளன.
40 வயதான பருவா, இதனால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார்.
"எங்கள் வாழ்நாளில் இந்தப் பகுதியில் நாங்கள் சந்திக்கும் முதல் வெள்ளம் இதுதான்" என்று அவர் கூறுகிறார்.
பருவா பிறப்பிலிருந்தே சாரிங்கில் வசித்து வருகிறார். அவருக்கு முன் அவரது முன்னோர்களும் இங்கு வசித்து வந்தனர்.
தாம் பிறப்பதற்கு நீண்ட காலத்துக்கு முன்பு, 1950-ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் குறித்து கேள்விப்பட்டதாக அவர் நினைவுகூருகிறார். ஆனால், அவரது வாழ்நாளில் இதுபோன்ற வெள்ளம் எதுவும் ஏற்பட்டதில்லை.
அவரது வீடு ஆறுகள் குறுக்கிட்டுச் செல்லும் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இருப்பினும், வீட்டுக்கு அருகில் எந்த ஆறும் ஓடவில்லை. ஒரு தளத்தில் அமைந்துள்ள அந்த எட்டு அறைகள் கொண்ட வீடு, சிவசாகர் நகரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பிரம்மபுத்திரா ஆறு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், திகோவ் ஆறு 12 கிலோமீட்டர் தொலைவிலும், ஜான்ஜி ஆறு 10 கிலோமீட்டர் தொலைவிலும், மிட்டோங் ஆறு வெறும் 5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
'கால்நடைகள் இறந்தன'
வெள்ளநீர் தனது வீட்டு வாசல் வரை வரும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், அது வந்தபோது, வெள்ளம் அவரது வீட்டை மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் உருவாக்கிய வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்தியது.
பருவா ஒரு காலத்தில் முழுநேர பத்திரிகையாளராக இருந்தார். 2016-ஆம் ஆண்டு அந்தத் தொழிலை விட்டு, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அசாமின் 'சிறந்த கால்நடை விவசாயி' என்ற விருதைப் பெற்றார்.
அவரது பண்ணையில் சுமார் 300 ஆடுகள், 500 வாத்துகள், 1,000 கோழிகள் மற்றும் மீன்களும் இருந்தன. வெள்ளம் அவற்றில் பெரும்பகுதியை அழித்துவிட்டது.
பெரும்பாலான ஆடுகள், 300 வாத்துகள், 300 கோழிகள் மற்றும் கணிசமான அளவு மீன்களை இழந்ததாக அவர் கூறுகிறார்.
மேலும், கால்நடைகளுக்கான தீவனம் தயாரிக்க அவர் பயன்படுத்திய இயந்திரமும் வெள்ளத்தில் சேதமடைந்தது.
வீட்டில் இருந்த மரச்சாமான்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் குடும்பத்தினர் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களும் அழிந்துவிட்டன.
அவரது கால்நடைகளில் எதற்கும் காப்பீடு செய்யப்படவில்லை.
"இங்கு கால்நடைகளுக்கு, குறிப்பாக ஆடுகளுக்கு, காப்பீட்டு வசதி எதுவும் இல்லை," என்று அவர் கூறுகிறார்.
ஜூலை 17-ஆம் தேதி ஜான்ஜி ஆற்றின் நீர்மட்டம் உயரத் தொடங்கியபோது முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரம்மபுத்திரா நதியும் அதன் கிளை நதிகளும் வேகமாக பெருக்கெடுத்ததால், திகோவ் மற்றும் மிட்டோங் ஆறுகள் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் பெருக்கெடுத்து ஓடின.
பல ஆறுகளின் கரைகள் உடைந்ததாகவும், இதனால் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக வேகமான நீரோட்டம் பாய்ந்ததாகவும் பருவா கூறுகிறார்.
நீர்மட்டம் உயரத் தொடங்கிய சுமார் ஒரு நாளுக்குப் பிறகு, அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
அதற்குள் வீட்டுக்குள் நான்கு அடி உயரத்துக்கு வெள்ளநீர் தேங்கியிருந்தது. அடுத்த 10 நாட்களை அவர்கள் நிவாரண முகாமில் கழித்தனர்.

முகாமில் ஐந்து நாட்களுக்கு மின்சாரமும், செல்போன் இணைப்பும் இல்லை. இதனால் பருவாவால் தனது செல்போனைக் கூட சார்ஜ் செய்ய முடியவில்லை.
அரசாங்கம் அந்தக் குடும்பத்துக்கு அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கியது.
முகாமில் இருந்த அந்நியர்களிடமிருந்தும் உதவி கிடைத்தது.
போர்னாலிக்கு முன்பின் அறிமுகமில்லாத இளம் பெண் ஒருவர், உணவு அளிப்பது, சுத்தம் செய்வது மற்றும் உயிர் பிழைத்திருந்த 60 ஆடுகளைப் பராமரிப்பது போன்றவற்றுக்கு உதவினார்.
மற்றொரு பெண், நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் அவற்றுக்கு உணவு கொடுப்பதற்கும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆனால், இதற்கு முன்பு ஒருபோதும் வெள்ளம் ஏற்படவில்லை என்று பருவா கூறும் இந்தப் பகுதிக்கு வெள்ளநீர் எப்படி வந்தது?
கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் பிரம்மபுத்திரா ஆய்வு மையத்தின் இயக்குநரும், புவியியல் பேராசிரியருமான துருபஜோதி சஹாரியா, அசாமில் உள்ள தாழ்நிலப் பகுதியான பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான் என்கிறார்.
"வரலாற்று ரீதியாகப் பதிவாகியுள்ள அளவுகளை விட, வெள்ளங்களின் நிகழ்வுத் தொடர்ச்சி, தீவிரம் மற்றும் பாதிப்பின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய பல்வேறு நீரோட்டங்களைக் கொண்ட ஆறுகளில் ஒன்றான பிரம்மபுத்திரா, நீர்வெளியேற்றம் மற்றும் வண்டல் படிவத்தின் அளவு ஆகிய இரண்டிலும் உலகின் முதல் ஐந்து ஆறுகளில் ஒன்றாக உள்ளது. இந்த வண்டல்களில் பெரும்பகுதி, பிரம்மபுத்திரா ஆறு உருவாகும் திபெத்தில் இருந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
சுமார் 2.8 கோடி மக்கள் வசிக்கும், மலைகளால் சூழப்பட்ட அசாமின் பரந்த வெள்ளச் சமவெளிப் பகுதிக்குள் பிரம்மபுத்திரா நுழையும்போது, அதன் வேகம் குறைந்து வண்டல்களைப் படியச் செய்கிறது.
இது மண் அரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கிறது.
அசாமில் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
சில ஆண்டுகளில் அதன் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். உதாரணமாக, 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மட்டும் சுமார் 1.2 கோடி மக்களை பாதித்ததுடன், 251 பேரின் உயிரிழப்புக்கும் காரணமாக இருந்தது.
சமீபத்திய வெள்ளத்தைப் பொறுத்தவரை, மேல் அசாம் மற்றும் அண்டை மாநிலமான நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை, சிவசாகர், சராய்தியோ மற்றும் ஜோர்ஹாட் பகுதிகளில் கடுமையான வெள்ளத்தையும் பெரிய அளவில் வண்டல் படிவதையும் ஏற்படுத்தியதாக சஹாரியா கூறுகிறார்.
ஒருகாலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படாத பகுதிகளையும் தற்போது வெள்ளம் சென்றடைவதற்கு பல காரணங்கள் உள்ளதாக சஹாரியா கூறுகிறார்.
அவற்றில், வெள்ளம் ஏற்படும் சமவெளிப் பகுதிகளில் அதிகமான மக்கள் குடியேறியிருப்பது, காடுகள் அழிக்கப்பட்டிருப்பது, சுரங்கப் பணிகள் மற்றும் மலைகளை வெட்டுவது அதிகரித்திருப்பதால் ஆறுகளில் வண்டல் அதிகரித்திருப்பது ஆகியவை அடங்கும்.
மேலும், அந்தப் பிராந்தியத்தின் நீரியல் தன்மையை போதுமான அளவில் கருத்தில் கொள்ளாமல் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என்கிறார் சஹாரியா.
இருப்பினும், பிரம்மபுத்திராவை அசாம் மட்டும் நிர்வகிக்க முடியாது. அதன் பல துணை ஆறுகள் சுற்றியுள்ள மலை மாநிலங்களில் உருவாகின்றன. அதே நேரத்தில், வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பெரும்பாலும் அசாமுக்குள் மட்டுமே திட்டமிடப்படுகின்றன.
"மாநிலங்களுக்கு இடையேயான மேம்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் ஆறுகளின் மாறிவரும் புவியியலைப் பற்றிய சிறந்த புரிதலுடன், படுகை அளவிலான திட்டமிடலும் தேவைப்படுகிறது" என்று சஹாரியா கூறுகிறார்.
ஆனால், பருவாவுக்கு இந்த அறிவியல் விளக்கங்கள் அனைத்தும் இப்போது மிகவும் தனிப்பட்ட அனுபவமாக மாறிவிட்டன.

பட மூலாதாரம், AFP via Getty Images

வெள்ளத்தால் சேதமடைந்த தனது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிக்கு அவர் திரும்பியுள்ளார்.
தற்போது, அவரும் அவரது குடும்பத்தினரும் அருகில் உள்ள அண்டை வீட்டில் தங்கியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்துக்குள் தங்களது சொந்த வீட்டுக்குத் திரும்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
சாரிங்கை விட்டு வெளியேறப் போவதில்லை என்கிறார் பருவா . இடம் மாறிச் செல்லத் தேவையான பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலை தங்கள் குடும்பத்துக்கு இல்லை என அவர் கூறுகிறார்.
எனவே, இதுவரை தனது வாழ்க்கையில் பெரும்பாலும் இல்லாதிருந்த ஒரு அச்சுறுத்தலுடன் எப்படி வாழ்வது என்பது குறித்து அவர் இப்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளார்.
மீண்டும் கனமழை பெய்தால், வீட்டை இன்னும் உயரமாக்க வேண்டியிருக்கும் என்றும், அதற்காக வீட்டின் அடித்தளத்தை உயர்த்த வேண்டியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
அதை எப்படிச் செய்வது அல்லது அதற்கான செலவை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து அவருக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
மேலும், பாதுகாப்புக்காக தஞ்சமடையக்கூடிய அளவுக்கு மேடான தளத்தையும் குடும்பத்தினர் அமைக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீரையும் முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும்.
மேலும் அதிகமான வெள்ளத்துடன் வாழ்வதற்கும், அதற்கு எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கும் பருவா கற்றுக்கொண்டு வருகிறார்.
தன்னை காலநிலை அகதியாக அவர் உணர்ந்தாரா? என்று கேட்டபோது, "இல்லை. எங்களது பொருளாதார மற்றும் மன வலிமையை மீண்டும் பெற்றுவிட்டால், வாழ்க்கை முன்பு இருந்ததைப் போலத் திரும்பிவிடும்."
"வெள்ளத்துடன் இணைந்து வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்," என்கிறார் பருவா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































