காணொளி: சினிமா முதல் அரசியல் வரை அடிக்கடி பேசப்படும் திரிஷாவின் பின்னணி என்ன?
சமீப நாட்களில் திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் நபர் நடிகை திரிஷா.
'மிஸ் சென்னை' பட்டம் வென்று மாடலாக பயணத்தைத் தொடங்கிய திரிஷா, திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருவது எப்படி?
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் - உமா தம்பதியினரின் மகள் திரிஷா. சிறுவயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.
சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படிப்பை முடித்த திரிஷா, எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்து, கிரிமினல் சைக்காலஜி படிக்க ஆசைப்பட்டார். ஆனால் வேறு சில காரணங்களுக்காக பிபிஏ படித்தார். அந்த சமயத்தில் மாடலிங்கிலும் கவனம் செலுத்தினார். 1999-ஆம் ஆண்டில் 'மிஸ் சென்னை' போட்டியில் கலந்துகொண்டு பட்டம் பெற்றார்.
இதற்கிடையில் இளம்வயதில் திரிஷா, ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்திருப்பார். அப்படத்திற்கு திரிஷா ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்கியதாகவும், அந்த படத்தில் நடித்ததற்காக அவர் பெயர் கூட டைட்டிலில் இடம்பெறவில்லை என அப்படத்தின் இயக்குநர் பிரவீன் காந்தி கூறியிருப்பார்.
பிரியதர்ஷன் இயக்கிய 'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகி ஆனார் திரிஷா. அந்த படம் வெளியாகும் முன்பு அமீர் இயக்கத்தில் அவர் நடித்த 'மெளனம் பேசியதே' திரைக்கு வந்தது. ஹரி இயக்கத்தில் சாமி, தரணி இயக்கத்தில் கில்லி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார் திரிஷா. அவர் நடித்த படங்களில் சாமி, விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா, அபியும் நானும், கொடி, 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் அவருக்கு தனிப்பட்ட முறையில் புகழை பெற்றுக் கொடுத்தன.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். கடந்த 25 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் திரிஷா. 2006ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கலைமாமணி விருது பெற்றார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பிரபல தொழிலதிபர் வருண்மணியனுக்கும் திரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும் அந்த திருமணம் நடக்கவில்லை.
சினிமாவைத் தாண்டி நடிகை திரிஷா பீட்டா அமைப்பின் ஆதரவாளராக இருந்தார். வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்காமல் தெரு நாய்களை எடுத்து வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பீட்டா ஏற்பாடு செய்திருந்த விளம்பரப் படத்தில் திரிஷா நடித்தார். இதனால் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் சமயத்தில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
2023ஆம் ஆண்டு நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசிய ஒரு சர்ச்சை கருத்து பலரால் கண்டனத்துக்கு உள்ளானது. இதற்காக மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டது. கடைசியில் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க, திரிஷாவும் அதை ஏற்றுக்கொண்டார்.
பிறகு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன், நடிகை திரிஷா தொடர்பாக பேசியது சர்ச்சையானது. பிறகு பார்த்திபன் வருத்தம் தெரிவிக்க, அந்த விவகாரமும் முடிவுக்கு வந்தது.
திருமணம் தொடர்பாக ஒருமுறை பேட்டியில் பேசியபோது , "விவாகரத்து மீது நம்பிக்கை இல்லாததால் திருமணம் குறித்து ஆழ்ந்து யோசித்து முடிவு எடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
சமீபகாலமாக அவர் பேட்டி அளிப்பதையே தவிர்த்துவிட்டார். பொன்னியின் செல்வன், தக் லைஃப் படங்களுக்குப் பின் அவர் ஊடகங்களுடன் பேசுவதையும் பெருமளவில் குறைத்துவிட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



