You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதியில் தலைநகர் ரியாத் உள்பட பல இடங்களை தாக்கியதாக ஹூத்தி தகவல் - என்ன நடக்கிறது?
- எழுதியவர், பேட் ரிக் ஜேக்சன்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூத்தி போராளிகள், சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் செங்கடல் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் ஆற்றல் மையங்கள் மீது டிரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியுள்ளனர்.
சனிக்கிழமை ரியாத் நோக்கி ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைத் தாங்கள் இடைமறித்து அழித்ததாக சௌதி அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், ஏதேனும் தாக்குதல்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பதை அவர்கள் உறுதி செய்யவில்லை.
இதற்கு முன்னர், சனிக்கிழமை தற்காலிகமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த சௌதி தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலிருந்த எரிபொருள் சேமிப்பு தொட்டிகளில் இருந்து புகை மேகங்கள் எழுந்ததைக் காண முடிந்தது.
இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள் ஜூலை மாதத்தில் சௌதி அரேபியாவுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரித்ததில் இருந்து, தலைநகரில் முதல் முறையாக விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கப்பட்டன.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் "எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், விமானங்கள் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட பயணத் தடங்கல்களுக்கு தயாராக இருக்க வேண்டும்" என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
"இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள், பொதுமக்கள் பயன்படுத்தும் விமான நிலையங்கள் உள்பட சௌதி அரேபியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ராணுவ மோதல் விரைவாகத் தீவிரமடையும் சாத்தியம் உள்ளது," என்று அந்தத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "இந்தப் பிராந்தியத்திற்கும் அதன் வழியாகவும் பயணம் செய்வதை அமெரிக்கர்கள் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமெறும்" அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சௌதி தலைமையிலான கூட்டணியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, பிஷ், தாய்ஃப், ஃபரசான், யான்பு ஆகிய நகரங்களில் பொதுமக்களை இலக்காகக் கொண்ட "விரோத முயற்சிகளை" வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தின.
ஆன்லைனில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ஹூத்தி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா அல்-சரீயா, ரியாத்தில் உள்ள "முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்" மற்றும் கடற்கரை நகரமான யான்புவில் அமைந்துள்ள அராம்கோ அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் வசதிகளைத் தாக்குவதற்காக "அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள்" பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
தற்போது ஹூத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகர் சனாவை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளும் "குற்றச் செயல்களுக்கு பதிலடியாக" இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், கடந்த ஒரு வாரத்தில் ஏமன் முழுவதும் 300 தாக்குதல்களை சௌதி அரேபியா நடத்தியதாக சரீயா குற்றம் சாட்டியிருந்தார். ஹூத்திகள், சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில் அவர்கள் பலமுறை சௌதி அரேபியாவுக்குள் உள்ள இலக்குகளைத் தாக்கியுள்ளனர். மேலும், இந்த வாரம் ஏமன் வான்பரப்பில் ஒரு சௌதி போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கும் தாங்களே பொறுப்பெனத் தெரிவித்தனர்.
ஏமன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரின் ராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி செய்தி முகமை வெளியிட்ட, இன்னும் உறுதி செய்யப்படாத தகவலின்படி, ஹூத்திகளுக்கும் சௌதி ஆதரவு பெற்ற அரசு படைகளுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மோதல்களில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், "தங்களது தரப்பில் 31 போராளிகள் உயிரிழந்ததாக ஹூத்திகள் தெரிவித்தனர். அதோடு, தங்களது தரப்பில் 17 வீரர்கள் உயிரிழந்ததாக அரசு வட்டாரங்கள் கூறின" என்று ஏ.எஃப்.பி வெளியிட்ட செய்தி கூறுகிறது.
செப்டம்பர் 19ஆம் தேதியன்று, ஐ.நா. சபையின் அமைப்பான சர்வதேச இடப்பெயர்வு நிறுவனம், சமீபத்திய மோதல்களின் விளைவாக இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 104,796ஐ கடந்துவிட்டதாக அறிவித்தது.
சனிக்கிழமை அதிகாலையில், ரியாத்தில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விமானப் போக்குவரத்தை கண்காணிக்கும் இணையதளமான ஃப்ளைட்ரேடார் 24 விமானங்கள் தாமதமானதையும் ரத்து செய்யப்பட்டதையும் தெரிவித்தது.
ஏ.எஃப்.பி செய்தியாளர் ஒருவரின் தகவலின்படி, அராம்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான எரிந்து சேதமடைந்த எரிபொருள் சேமிப்புத் தொட்டியில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் முயல்வதைக் காண முடிந்தது.
சனிக்கிழமை (செப்டம்பர் 20) காலையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக அறிவிக்கும் முன்பு, ரியாத் மற்றும் பிற பகுதிகளில் அபாயம் ஏற்படக்கூடுமென எச்சரித்து, சௌதி சிவில் பாதுகாப்புத் துறை இரவு நேரத்தில் கைபேசி எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பியிருந்தது.
தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் ஏ.எஃப்.பி-யிடம் பேசிய சில குடியிருப்புவாசிகள், எச்சரிக்கை ஒலிகளுக்குப் பிறகு நகரம் முழுவதும் எதிரொலித்த வெடிப்புச் சத்தங்களைப் போன்ற ஒலிகளைக் கேட்டதாகத் தெரிவித்தனர்.
"எச்சரிக்கை ஒலியைக் கேட்டேன், அதைத் தொடர்ந்து என் வீட்டின் ஜன்னல்கள் அதிர்ந்தன. அது நிச்சயமாக பயமுறுத்தியது. இதை நான் எதிர்பார்க்கவில்லை," என்று வடக்கு ரியாத்தில் வசிக்கும் 27 வயது நபர் ஒருவர் கூறினார்.
ஹூத்திகள் சமீபத்தில் முக்கியமான துறைமுக நகரமான மொகாவையும், பெரிம் தீவையும் கைப்பற்றினர். வளைகுடா நாடுகள் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகப் பயன்படுத்தும் முக்கியக் கடல் வர்த்தகப் பாதைக்கான நுழைவாயிலாக இவை அமைந்துள்ளன.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமனின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மீது சௌதி அரேபியா விதித்திருந்த முற்றுகைக்குப் பதிலடியாகவே கடற்படை முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக ஹூத்தி குழு தெரிவித்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இரானுடனான போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணை நடைமுறையில் மூடப்பட்டதில் இருந்து, சௌதி கப்பல்கள் எண்ணெய் ஏற்றுமதிக்காக செங்கடலின் அந்தப் பகுதியையே நம்பியிருந்தன.
செப்டம்பர் 19ஆம் தேதியன்று, முதலீட்டு வங்கியான ஜேபி மோர்கன், இந்தப் போர் எண்ணெய் விலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணிக்கப் போராடி வருவதாகத் தெரிவித்தது. முதலீட்டாளர்களுக்கான அரிதான ஒரு குறிப்பில், "இந்த மோதலின் இறுதி நிலை எவ்வாறு அமையும் என்பதை மாதிரி அமைத்து எளிதில் கணிக்க முடியவில்லை" என்று அது கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு