You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செய்தித்தாள் சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு - நூறாண்டுக்கு முன்பு நடந்த கொலையா?
- எழுதியவர், டங்கன் லெதர் டேல்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
பிரிட்டனில் தரைப்பலகைக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட, 1910-ஆம் ஆண்டு செய்தித்தாளில் சுற்றப்பட்டிருந்த குழந்தையின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரி, இந்த வழக்கைத் தீர்க்க காவல்துறையினர் வழக்கமான முறைகளைத் தாண்டி சிந்திக்க வேண்டியிருந்ததாகக் கூறினார்.
2024 ஜூலை மாதம், பிஷப் ஆக்லாந்தில் உள்ள ஃபோர் பாண்ட் கேட் பகுதியில் ஒரு கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியின்போது, கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் முழு வளர்ச்சியடைந்த ஆண் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 1910-ஆம் ஆண்டு பிறந்த அந்தக் குழந்தை, பிறந்த சிறிது நேரத்திலேயே கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் உடல் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கவுன்டி டர்ஹாம் மற்றும் டார்லிங்டனின் மரண விசாரணை அதிகாரி கிரிஸ்பின் ஆலிவர் முடிவு செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை சவாலானதாக இருந்தாலும், அதே நேரத்தில் பலனளித்ததாக டர்ஹாம் காவல்துறையின் துப்பறிவு தலைமை ஆய்வாளர் மெல் சதர்லேண்ட் தெரிவித்தார்.
க்ரூக்கில் நடைபெற்ற மரண விசாரணையில், 2024 ஜூலை 29-ஆம் தேதி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள வரவேற்பறையின் தரைப்பலகைக்கு அடியில் உடல் இருப்பதை அதன் உரிமையாளர் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குழந்தை யார் என்பதையும், குழந்தைக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டறிய அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக விசாரணையின்போது சதர்லேண்ட் தெரிவித்தார். இதில் டிஎன்ஏ பரிசோதனை மற்றும் கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு உள்ளிட்ட ஆய்வுகளும் அடங்கும்.
குழந்தையின் கழுத்தை நான்கு முறை சுற்றியிருந்த கயிறுதான், அது கொலைச் சம்பவம் என்று முடிவு செய்ய முக்கிய காரணமாக இருந்ததாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
அந்தக் கட்டடம் சுமார் 1890-ஆம் ஆண்டில்தான் கட்டப்பட்டிருந்தது. மேலும், குழந்தையின் உடல் 1910 ஜூன் 19, ஞாயிற்றுக்கிழமை வெளியான 'தி அம்பயர்' செய்தித்தாளின் பிரதியில் சுற்றப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், அந்தக் குழந்தை செய்தித்தாள் வெளியான காலகட்டத்தில் பிறந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஆலிவர் தெரிவித்தார்.
மரண விசாரணைக்குப் பிறகு பேசிய சதர்லேண்ட், "இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணை சில நேரங்களில் மிகவும் சவாலானதாக இருந்தது" என்றார்.
இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள், செல்போன் தரவுகள் போன்ற இன்றைய காலகட்டத்தில் வழக்கமாகக் கிடைக்கும் ஆதாரங்கள் எதுவும் அதிகாரிகளிடம் இல்லை என்றும், அதனால் இது "மிகவும் சுவாரஸ்யமான வழக்காக" இருந்ததாகவும் அவர் கூறினார்.
"இது வழக்கமான முறைகளுக்கு அப்பால் சிந்திக்க வைக்கிறது" என்று சதர்லேண்ட் கூறினார்.
மரண விசாரணை அதிகாரியின் முடிவையும், குழந்தை ஆக்லாந்து எவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டதையும் கேட்டபோது, இந்த வழக்கு உண்மையில் எவ்வளவு சோகமானது என்பது புரிந்ததாக சதர்லேண்ட் தெரிவித்தார்.
"குறுகிய காலமே வாழ்ந்த அந்தக் குழந்தையின் வாழ்க்கை கொடூரமான முறையில் முடிவுக்கு வந்தது. அவர் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகூட அவருக்கு வழங்கப்படவில்லை" என்று சதர்லேண்ட் கூறினார்.
இந்த வழக்கு சில நேரங்களில் சவாலாகவும், சிக்கலாகவும் இருந்தபோதிலும், அது முடிவுக்கு வந்ததைப் பார்ப்பது மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்ததாக அவர் தெரிவித்தார்.
குழந்தை ஆக்லாந்துக்கு உரிய இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள மக்கள் ஒன்றிணைந்ததையும் அவர் பாராட்டினார். ஏப்ரல் மாதம் பிஷப் ஆக்லாந்து நகர கல்லறையில் குழந்தைக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இந்த இறுதிச் சடங்கை காவல்துறையும் டர்ஹாம் கவுன்டி கவுன்சிலும் இணைந்து ஏற்பாடு செய்தன. டர்ஹாம் பதிவாளர் அலுவலகமும், உள்ளூர் இறுதிச் சடங்கு சேவை நிறுவனத்தைச் சேர்ந்த சார்லட் ஃப்ளெமிங்கும் தங்களது சேவைகளை இலவசமாக வழங்கினர்.
மேலும், 'முர்ரே மெமோரியல்ஸ்' நிறுவனம் குழந்தைக்கான நினைவுக் கல்லையும் இலவசமாக வழங்கும் என்று மரண விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு