You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்ணை தாக்கி தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற ஊர்க்காவல் படை வீரர் – என்ன நடந்தது?
- எழுதியவர், அமரேந்திர யார்லகடா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(இந்தச் செய்தியில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
தெலங்கானாவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர், ஒரு பெண்ணை மோசமாகத் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று கீழே தள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்தச் சம்பவம் செப்டம்பர் 18-ஆம் தேதி இரவில், தெலங்கானாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள மியாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹஃபிஸ்பேட் ரயில் நிலையம் அருகே நடந்துள்ளதாக சைபராபாத் காவல்துறை கண்டறிந்துள்ளது.
மியாபூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராம், செப்டம்பர் 19 அன்று குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
மியாபூர் காவல் ஆய்வாளர் ஜெயராம் இந்தச் சம்பவத்தின் விவரங்களை பிபிசியிடம் விளக்கினார். அவர் வழங்கிய தகவலின்படி, வெள்ளிக்கிழமை இரவு ஹஃபிஸ்பேட் ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் சிலர் பழைய காகிதங்கள் மற்றும் இரும்புக் கழிவுகளைச் சேகரித்துக் கொண்டிருப்பதை நிலைய மேலாளர் கவனித்தார். அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்குமாறு ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு நிலைய மேலாளர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையின் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஆனந்த் என்பவர் அவர்களை அங்கிருந்து அனுப்ப முயன்றபோது, ஒரு பெண் அவரைத் திட்டியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல் ஆய்வாளர் ஜெயராம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், அந்தப் பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரல்...
சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் காணொளியில், அந்தப் பெண் லத்தியால் தாக்கப்படுவதும், தலைமுடியைப் பிடித்து இழுத்துச் செல்லப்படுவதும், கீழே தள்ளப்படுவதும் காணப்படுகிறது..
இந்தச் சம்பவத்தை சில பொது மக்கள் காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து வைரலாக பரவியது.
சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த பணி நீக்கம்
ஒரு பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சைபராபாத் காவல் ஆணையர் ரமேஷ் அதற்கு எதிர்வினையாற்றினார்.
ஆனந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். அதுகுறித்துப் பேசிய காவல் ஆணையர், "ஆனந்த் தனது பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களை தெலங்கானா காவல்துறை எந்தச் சூழ்நிலையிலும் சகித்துக் கொள்ளாது," என்று தெரிவித்தார்.
தாக்குதலுக்கு ஆளான பெண் யார்?
இதற்கிடையில், தாக்கப்பட்ட அந்தப் பெண்ணின் விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை என்று மியாபூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராம் தெரிவித்தார்.
"உள்ளூர் மக்கள் அந்தப் பெண் யார் என்ற விவரங்கள் தெரியாது என்று கூறினர். பழைய காகிதங்கள் மற்றும் கழிவுப் பொருட்களைச் சேகரித்து வாழும் நாடோடி நபராக அவரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர் எங்கு சென்றார் என்பது தெரிய வேண்டும். சம்பவம் நடந்த நாளில்தான் அந்தப் பெண்ணை முதன்முறையாக அங்கு பார்த்ததாக உள்ளூர் மக்கள் கூறினர்," என்று ஜெயராம் பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் விவரங்களைக் கண்டறிய பிபிசியும் முயற்சி செய்து வருகிறது. அவரது அடையாளம் மற்றும் விவரங்கள் தெரிய வந்தவுடன், அவருடன் பேச முயற்சி செய்யப்படும்.
இதற்கிடையில், ஆனந்த் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதால், அவரிடம் இருந்து கருத்தைப் பெற முடியவில்லை. ஆனந்தின் குடும்பத்தினருடன் பேசுவதற்கும் பிபிசி முயன்று வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு