கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'டோரதி' திரைப்படம் மீது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் ஏன்?

பால் புதுமையினர், டோரதி, இளையராஜா
படக்குறிப்பு, 'டோரதி' இயக்குநர் கார்த்தி சுப்புராஜுடன், நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த்.
    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'டோரதி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இளையராஜாவின் பாடல்களுக்காகவும், அது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் திரைப்படம் என்பதற்காகவும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

திரைப்படத்தின் முன்னோட்டம் (ட்ரெய்லர்) கூட நல்ல வரவேற்பைப் பெற்றது.

செப்டம்பர் 11, 12, 20 ஆகிய தேதிகளில் புகழ்பெற்ற டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் 'டோரதி' திரையிடப்பட்டு, பெரும் பாராட்டையும் பெற்றது.

ஆனால், திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது (செப்டம்பர் 25) முதல் இணையத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைப்படம் 'நன்றாக உள்ளது, இல்லை' என்பதைக் கடந்து, அத்திரைப்படம் கையாண்டுள்ள பால் புதுமையினர் (LGBTIQA+) கதாபாத்திரங்கள், கருத்துகள் தான் பெரும்பாலும் இந்த எதிர்மறை விமர்சனங்களின் பின்னணியில் உள்ளன.

பாராட்டுகளும் எதிர்மறை விமர்சனங்களும்

பால் புதுமையினர், டோரதி, இளையராஜா

திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், ரசிகர்கள் என பல தரப்புகளில் இருந்து இப்படத்திற்கு பாராட்டுகளும், ஆதரவுக் குரல்களும் எழுந்தாலும், மறுபுறம் இணையத்தில் இப்படம் குறித்த 'ட்ரோல்கள்', எதிர்மறையான விமர்சனங்களையும் அதிகம் காண முடிகிறது.

கடந்த காலத்திலும் பால் புதுமையினர் குறித்த கருத்துகள், கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றுள்ளன. 'கோவா', 'காஞ்சனா', 'சூப்பர் டீலக்ஸ்', 'பாவக் கதைகள்', 'நட்சத்திரம் நகர்கிறது', 'பேரன்பு' போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.

அதிலும் 'பேரன்பு' (2018) திரைப்படத்தில் நாயகன் ஒரு திருநங்கையை திருமணம் செய்துகொள்வது போல திரைப்படம் முடியும். அதில் கதாநாயகனாக நடித்தவர் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி. அதே மம்மூட்டி, 'காதல்' (2023) என்ற மலையாள திரைப்படத்தில் 'தன்பாலின ஈர்ப்பாளராக' நடித்திருப்பார்.

ஆனால், அந்தத் திரைப்படங்களுக்கு எழாத 'இணைய எதிர்ப்பு' டோரதி திரைப்படத்திற்கு எழுந்திருப்பதை பார்க்க முடிகிறது.

'இப்படிப்பட்ட திரைப்படங்கள் இன்னும் பலரை தன்பாலின ஈர்ப்பாளர்களாக அல்லது பால் புதுமையினராக மாற்றிவிடும்', 'இப்படம், சமூகத்திற்கு கேடானது', ' 'தன்பாலின ஈர்ப்பு என்பது மனநோய்' போன்ற கருத்துகளை பார்க்க முடிந்தது.

"'டோரதி' திரைப்படம், நவீன தமிழ் சமூகத்தில் நிலவும் பால் புதுமையினர் மீதான வெறுப்பை அம்பலப்படுத்தியுள்ளது" என 'தி இந்து' ஆங்கில நாளிதழின் விமர்சனம் குறிப்பிடுகிறது.

பால் புதுமையினர், டோரதி, இளையராஜா
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

'டோரதி மீது வெறுப்பைக் கொட்டும் அனைத்து தன்பாலின ஈர்ப்பு வெறுப்பாளர்களுக்கும், உங்கள் வெறுப்பு பால் புதுமையினரை எந்த வகையிலும் மனிதத்தன்மையற்றவர்களாக ஆக்கிவிடாது. சினிமாவால் தான் தவறான சமூக எண்ணங்களைக் களையவும், சொல்லப்பட வேண்டிய கதைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சவும் முடியும்.' என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

'இணையத்தில் பரவிய கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்த பிறகு, 'டோரதி' மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். ஆனால் படத்தைப் பார்த்தபோது, ​​அது என்னை முற்றிலும் ஆச்சரியப்படுத்தியது. இது கார்த்திக் சுப்பராஜின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.' என மற்றொரு சமூக ஊடகப் பதிவு குறிப்பிடுகிறது.

'டோரதி பேசும் கருத்தோடு நீங்கள் முரண்படலாம், ஆனால் இதுவொரு ஆகச்சிறந்த ரீதியில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பதை மறுக்க முடியாது' என ஒரு பதிவு கூறுகிறது.

'இப்படத்திற்கு இசையமைத்துள்ள இளையராஜாவிற்கு 83 வயது, ஆனால் அவர் மிக உற்சாகமாக இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால், பல இளைஞர்கள் 'டோரதி'யை விமர்சிக்கிறார்கள்' என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், சுரேஷ் கிருஷ்ணா, நடிகர் தனுஷ், தமிழக அமைச்சர் ராஜ்மோகன் என பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தாலும், எதிர்மறை விமர்சனங்களும் அதிகமாகவே வந்துள்ளன.

சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பு

பால் புதுமையினர், டோரதி, இளையராஜா
படக்குறிப்பு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் கனடாவாழ் தமிழர் திலீபன்

ஆனால், இத்திரைப்படம் கனடாவில் நடைபெற்ற டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் சுமார் 10 நிமிடம் வரை எழுந்து நின்று கைதட்டியதாகக் குறிப்பிடுகிறார் கனடாவாழ் தமிழர் திலீபன்.

"அங்கு திரைப்படத்திற்கும், படக்குழுவுக்கும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பிரெஞ்சு பார்வையாளர் ஒருவர், 'இந்தியாவிலிருந்து இத்தகைய ஒரு சிறந்த திரைப்படத்தை எதிர்பார்க்கவில்லை, கதையாகவும், உருவாக்கப்பட்ட வகையிலும் இது மிகச் சிறப்பாக உள்ளது' என பாராட்டினார்" என்கிறார் திலீபன்.

ஆனால், தமிழ்நாட்டில் இப்படம் சந்திக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசும் திரைப்பட விமர்சகர் கார்த்திக் கிருஷ்ணா, "விமர்சிக்கும் பலரும் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, உருவாக்கம் குறித்தோ பேசுவதில்லை. அது பால் புதுமையினரைப் பற்றி பேசிவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக எதிர்க்கிறார்கள்" என்கிறார்.

மம்மூட்டி நடித்த 'பேரன்பு' குறித்துப் பேசும் கார்த்திக், "மம்மூட்டி தமிழ்நாட்டில் முன்னணி நடிகர் கிடையாது. ஆனால், கார்த்திக் சுப்புராஜ் இங்கு முக்கிய இயக்குநர், அவருடைய திரைப்படங்களில் 'மாஸ் ஹீரோக்கள்' எனும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எனவே அவரது திரைப்படத்தில் ஒரு ஆண் கதாபாத்திரம் திருநங்கையை காதலிப்பதை ஒரு தரப்பால் ஏற்க முடியவில்லை. அதேபோல, திரைப்படம் பார்த்து ஒருவருக்கு பாலின ஈர்ப்பில் மாற்றம் வருமென்பது முட்டாள்தனம்" என்கிறார் அவர்.

'டோரதி' திரைப்படத்திற்கு தான் அளித்த விமர்சனத்திற்கும் எதிர்மறையான கருத்துகள் இணையத்தில் எழுந்தன எனக் குறிப்பிடும் கார்த்திக், "எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல, 'ஒரு கொலைகாரனைப் பற்றி கதை எழுத, நானும் கொலைகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை.' அதேபோல தான் பால் புதுமையினரை ஆதரிக்கும் திரைப்படங்களை எடுப்பதால் அல்லது அவற்றை ஆதரிப்பதால் நானும் பால் புதுமையாளன் ஆகிவிட மாட்டேன்" என்கிறார்.

பால் புதுமையினர், டோரதி, இளையராஜா

"தன்பாலின ஈர்ப்புக்கும், ஆண்- திருநங்கை இடையேயான உறவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தான் பெரும்பாலும் 'டோரதி' குறித்து மிக மோசமாக விமர்சிக்கிறார்கள்" என்கிறார் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அமைப்பைச் சேர்ந்த மௌலி.

இந்த அமைப்பு, ஒரு சுயாதீன பதிப்பகமாகவும் இலக்கியக் குழுவாகவும் செயல்பட்டு வருவதாகக் கூறும் மௌலி, "பால் புதுமை எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மீது சமூகத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்" என்கிறார்.

"தன்பாலின ஈர்ப்பு அல்லது பால் புதுமையினர் குறித்து சமூகத்தில் அனைவருக்கும் வெறுப்பு உள்ளது எனக் கூற முடியாது, அதேசமயம் எதிர்பால் ஈர்ப்பு தவிர்த்து பிற பாலின ஈர்ப்புகளை இந்தச் சமூகம் அந்நியமாகப் பார்க்கிறது. இதில் இருவரின் சம்மதம் என்பது உறுதி செய்யப்படும்போது, அவர்களை கண்ணியத்தோடும், விருப்பப்படியும் வாழ அனுமதிக்க வேண்டும்" என்கிறார் அவர்.

'எதிர்மறையான விமர்சனங்கள் ஆரோக்கியமான விஷயம் தான்'

பால் புதுமையினர், டோரதி, இளையராஜா
படக்குறிப்பு, எழுத்தாளர் சரவணன் சந்திரன்

'டோரதி' திரைப்படத்தில் கார்த்தி சுப்புராஜுடன் இணைந்து திரைக்கதையில் பணிபுரிந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் சரவணன் சந்திரன், "இந்தத் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம் தான்" என்கிறார்.

"'புல், பூண்டுக்கு கூட இங்கு வாழ உரிமை உண்டு, இயற்கை ஏற்படுத்திய இந்தக் கூட்டத்திற்கு வாழ உரிமை இல்லையா?' என்ற வசனம் திரைப்படத்தில் வரும். அதுவே 'டோரதி' மூலம் நாங்கள் சொல்ல வந்த கதை" என்கிறார் அவர்.

"பால் புதுமையினர் எதிர்பார்ப்பது கருணையை அல்ல, அன்பை. ஒருவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியதற்கோ, அல்லது பெண்ணாக பிறந்து ஆணாக மாறியதற்கோ அவர் காரணமில்லை எனும்போது, ஏன் இந்தச் சமூகம் அவர்களிடம் வெறுப்பைக் காட்டுகிறது என்பதைத் தான் இத்திரைப்படம் பேசுகிறது. இந்தத் திரைப்படத்தை இதில் உள்ள பால் புதுமையினர் தொடர்பான கருத்தாக்கத்திற்காகவே எதிர்ப்பவர்கள் முன் நாங்கள் அதே கேள்வியைத் தான் முன்வைக்கிறோம்" என்கிறார் சரவணன் சந்திரன்.

"ஒரு ஆண் ஒரு திருநங்கையை காதலிப்பதை ஏற்க மறுக்கும் இந்தச் சமூகம், ஒரு ஆண் வேறு மதம் அல்லது வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறதா? இல்லையெனும்போது, எதிர்மறை விமர்சனங்கள் 'டோரதி'க்கு இன்னும் அதிகமாக வந்தாலும் ஆச்சரியமில்லை" என்கிறார் அவர்.

"'டோரதி' திரைப்படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம், 'இன்னும் 10 வருடத்தில், நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும், ஆனால் எங்களை அருவெறுப்பாக பார்க்கும் உங்களைப் போன்ற ஆட்களை தான் ஜந்துக்கள் போல பார்ப்பார்கள்' என ஒரு ஆணிடம் பேசுவது போல காட்சி இருக்கும். இந்தக் கதை நடைபெறுவது 90களில், ஆனால் 2026-இல் கூட, சமூகம் திருநங்கைகள் மற்றும் பால் புதுமையினரை பார்க்கும் விதம் மாறவில்லை என்பதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன" என ஒரு சமூக ஊடகப் பதிவு குறிப்பிடுகிறது.

"இதற்கு முன்னர் ஒரு திரைப்படம் இத்தகைய விவாதங்களை எழுப்பியதில்லை. விவாதங்கள் மூலமே நமது சமூகம் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். பால் புதுமையினர் தொடர்பான ஆரோக்கியமான ஒரு சமூகப் பார்வைக்கு 'டோரதி' போன்ற திரைப்படம் ஒரு தொடக்கமாக இருக்கும்" என்கிறார் எழுத்தாளர் சரவணன் சந்திரன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு