You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
3 வயது சிறுவன் எங்கே? பேச முடியாத சிறுவனை தேடி களமிறங்கிய 1,300 பேர், ஹெலிகாப்டர்கள் - இறுதியில் கிடைத்த அதிர்ச்சி தகவல்
- எழுதியவர், ஷிவானி சௌத்ரி
- எழுதியவர், லூயிஸ் ஆடம்ஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பிரிட்டனில் காணாமல் போன 3 வயது சிறுவன் நோவா வுட்ஸைத் தேடும் பணியின்போது ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிரிட்டன் நேரப்படி சுமார் 15:00 மணியளவில், சஃபோல்கின் பிராந்தம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உறவினர் ஒருவரிடம் இருந்து பிரிந்ததைத் தொடர்ந்து நோவா காணாமல் போனார்.
சஃபோல்க் போலீஸ் கண்காணிப்பாளர் டாம் பியர்ஸ், அருகில் உள்ள குளத்தில் இருந்து ஒரு சிறுவனின் உடலை நீரில் தேடும் குழுவினர் மீட்டதாகத் தெரிவித்தார்.
இந்த மரணம் தொடர்பான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், ஆனால் சந்தேகத்திற்குரிய மரணமாக இது கருதப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சிறுவனின் உடல் நோவாவுடையதுதானா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அடையாளம் காணும் பணி இன்னும் நடைபெறவில்லை. இருப்பினும், நோவாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் பியர்ஸ் கூறினார்.
"நோவாவின் குடும்பத்தினருக்கும் அவரை அறிந்த அனைவருக்கும் எங்களது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
"பொதுமக்கள் அளித்த ஆதரவாலும், உதவுவதற்காக களமிறங்கியவர்களின் எண்ணிக்கையாலும் நாங்கள் பெரிதும் நெகிழ்ந்துள்ளோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
பேச முடியாதவராகவும், ஓரளவு காது கேளாதவராகவும் இருந்த காணாமல் போன சிறுவனைத் தேடும் பணியில் குறைந்தது 1,300 பொதுமக்கள் பங்கேற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
பர்மிங்காம் மற்றும் ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் மக்கள் தேடுதல் பணியில் உதவுவதற்காக வந்திருந்தனர்.
எஸ்ஸெக்ஸ் எல்லைக்கு அருகே, ஸ்டோர் ஆற்றின் கழிமுகப் பகுதியைச் சுற்றிலும் ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பொதுமக்கள் தீவிரமாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தன்னார்வலர்களின் தேடுதல் பணிகள் பிராந்தம் பொழுதுபோக்கு மையம் மற்றும் கிராம அரங்கில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் வந்ததால், அங்கு அணிவதற்கான பிரதிபலிப்பு பட்டைகள் கொண்ட பாதுகாப்பு மேலாடைகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது.
நோவா சத்தம் கேட்டாலும் அதற்குப் பதிலளிக்க மாட்டார் என்று தேடுதல் பணியில் ஈடுபட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை விளையாட்டு மைதானத்திற்கு எதிரே பணியில் இருந்த மைக்கேல் க்ராவ்லி, நோவா காணாமல் போவதற்கு முன்பு அவரைப் பார்த்த கடைசி நபர்களில் ஒருவராவார். "அவன் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தான்" என்றார் அவர்.
எஸ்ஸெக்ஸில் உள்ள கெல்வெடனைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயான ஜெசிகா கேம்மன்ஸும், அந்தச் சிறுவனைத் தேடிச் சென்ற ஏராளமான தன்னார்வலர்களில் ஒருவராக இருந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், தேடுதல் பணியில் பங்கேற்க வேண்டும் என்று தான் உணர்ந்ததாக அவர் கூறினார். அதற்குக் காரணம், ''நோவாவைப் போலவே எனது மகனுக்கும் 3 வயது என்பதுதான்.''
"இது என் மகனாக இருந்தால், முடிந்தவரை அனைவரும் உதவ வேண்டும் என்று நான் விரும்புவேன் என்று எனக்குள் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தேன்," என்று அவர் கூறினார்.
"இது மிகவும் சோகமான சூழ்நிலை. அவனைப் பற்றிய எண்ணம் என் மனதில் இருந்து அகலவே இல்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
புதன்கிழமை தேடுதல் பணி எஸ்ஸெக்ஸ் எல்லையைக் கடந்து ஈஸ்ட் பெர்கோல்ட் மற்றும் மானிங்ட்ரீ பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
அருகில் உள்ள மீன்பிடிக் குளமான டிகாய் பாண்டில் தேடுதல் நடத்த மெட்ரோபாலிட்டன் போலீசாரின் டைவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
நோவா கடைசியாகப் பார்க்கப்பட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து இந்தக் குளம் சுமார் 350 யார்டுகள் (320 மீட்டர்) தொலைவில் உள்ளது.
கண்காணிப்பாளர் பியர்ஸ் தொடர்ந்து கூறுகையில், "நோவா காணாமல் போனதாகத் தகவல் கிடைத்தது முதல், அவரைத் தேடும் பணியிலும் அவரது குடும்பத்துக்கு ஆதரவளிப்பதிலும் எங்கள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெருமளவில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.'' என்றார்
"ஆபத்தான பகுதி மீட்புக் குழு, சமவெளிப் பகுதி தேடல் மற்றும் மீட்புக் குழு, சுற்றுச்சூழல் முகமை, கடலோரக் காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி, ஆம்புலன்ஸ் சேவை ஆகிய அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவளித்துள்ளன.''
"நானும் ஒரு பெற்றோர் என்பதால், மக்கள் ஏன் உதவ விரும்புகிறார்கள் என்பதை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான உதவி, சஃபோல்க் மக்களின் வலுவான சமூக உணர்வையும் மனிதநேயத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அதுதான் இந்த பகுதியை மிகவும் சிறப்பான இடமாக மாற்றுகிறது.
"இப்போது குடும்பத்தினருக்கு அவகாசமும், தனிமையும், தனியுரிமையும் தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதைப் புரிந்துகொண்டதற்கு நன்றி," என்று அவர் கூறினார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு