"நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் துணைவர் பாலியல் வன்புணர்வு செய்தார் என எனக்கு தெரியாது"

    • எழுதியவர், கரோலின் லோபிரிட்ஜ்
    • பதவி, ஈஸ்ட் மிட்லேண்ட்ஸ் இன்வெஸ்டிகேஷன்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

"என்னைப் பொறுத்தவரை, அவர் செய்ததை ஒப்புக்கொள்வதற்கு முந்தைய நாள் வரை, எங்கள் உறவுதான் நான் கொண்டிருந்த உறவுகளிலேயே மிகச் சிறந்த உறவாக இருந்தது".

அடெல் ஓவர்டனின் 13 ஆண்டுகால காதலரான ஸ்டீவன் யூடன், ஒரு சிறந்த துணையாகவே தோன்றினார்.

இருவரும் ஒரு ஜாம்பி திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு நிறைய பொதுவான விருப்பங்களும் இருந்தன.

யூடன் அன்பானவராகவும், கனிவானவராகவும் இருந்ததாகவும், ஓவர்டன் மாற்றுத்திறனாளியான போது அவரைப் பராமரிப்பதற்காக தனது வேலையைக்கூட விட்டு விட்டதாகவும் அவர் கூறுகிறார்.

"அவர் அற்புதமானவர். நான் அவரை ஆழமாக நேசித்தேன். இப்போதும் கொஞ்சம் நேசிப்பதாகவே நினைக்கிறேன்" என்று டெர்பியில் உள்ள தனது வீட்டில் சோஃபாவில் அமர்ந்தபடி ஓவர்டன் கூறுகிறார்.

ஓவர்டன், யூடனை முழுமையாக நம்பினார்.

ஆனால், தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது யூடன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட போது, அந்த நம்பிக்கை சிதைந்தது.

"நான் துரோகம் செய்யப்பட்டதாக உணர்ந்தேன். அதற்கு முன்பு வரை, ஓர் உறவில் நான் இவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்ததே இல்லை" என்று ஓவர்டன் கூறுகிறார்.

மார்பகப் புற்றுநோய்க்காக ஓவர்டன் சிகிச்சை பெற்று வந்தபோது யூடன் அவரை கவனித்துக்கொண்டார்.

ஆனால், பின்னர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், மருந்துகளின் தாக்கத்தில் ஓவர்டன் இருந்தபோது, தான் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்தார்.

"அந்தத் துரோக உணர்வு... அவரை எனக்குத் தெரியும் என்று நான் நினைத்திருந்தேன், ஆனால் அவர் யார் என்றே எனக்குத் தெரியவில்லை" என்கிறார் ஓவர்டன்.

"அவர் 13 ஆண்டுகளாக என்னுடன் வாழ்ந்திருக்கிறார், என் குழந்தைகளை வளர்ப்பதிலும் அவர் உதவியிருக்கிறார் என்று கூறும் ஓவர்டன்,

"அவர் பாதுகாப்பானவர் என்று நினைத்தேன். ஆனால், அவர் அப்படி இல்லை"என்கிறார்.

யூடன் தற்போது சிறையில் உள்ளார். நடந்த சம்பவம் குறித்து மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில், பெயர் வெளியிடப்படாமல் இருக்கலாம் எனும் தனது உரிமையைத் துறந்து, பிபிசியிடம் பேச ஓவர்டன் முடிவு செய்துள்ளார்.

2009-ஆம் ஆண்டு, நாட்டிங்ஹாமில் படமாக்கப்பட்டு வந்த ஒரு ஜாம்பி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஓவர்டனும் யூடனும் சந்தித்தனர். அப்போது ஓவர்டனுக்கு 29 வயது, யூடனுக்கு 27 வயது.

யூடன் மேக்கப் பணியிலும் நடிப்பிலும் ஈடுபட்டிருந்தார். ஓவர்டனும் நடிகர்களில் ஒருவராக இருந்தார். இருவரும் அப்போது வேறு நபர்களுடன் உறவில் இருந்தனர். இருப்பினும், நண்பர்களாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்.

இறுதியில், 2012ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி இருவரும் காதல் உறவில் இணைந்தனர். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13-ஆம் தேதி என்பதால், 'ஃபிரைடே தி 13த்' திரைப்படங்களின் தொடர்ச்சியான திரையிடலை இருவரும் பார்த்ததாகவும், அதனால் அந்த தேதியை நினைவில் வைத்திருப்பதாகவும் ஓவர்டன் கூறுகிறார்.

கடந்த காலத்தில்தான் இருந்த உறவுகளிலிருந்து, யூடனுடனான உறவு வித்தியாசமாக இருந்ததாக ஓவர்டன் கூறுகிறார்.

"அவர் வேடிக்கையானவராகவும், அக்கறையுள்ளவராகவும் இருந்தார். அவர் என்னை நேசிப்பதாக நான் உணர்ந்தேன்" என்று அவர் கூறுகிறார்.

அவர்கள் வழக்கத்துக்கு மாறான முறையில் சந்தித்துக் கொண்டனர். அவர்களின் வாழ்க்கையும் வழக்கத்துக்கு மாறானதாகவே இருந்தது.

ஜாம்பி திகில் அனுபவ நிகழ்ச்சிகளை நடத்தும் ஒரு நிறுவனத்துக்காக, இருவரும் தொழில்முறை ஜாம்பிகளாகப் பணியாற்றினர்.

ஜாம்பியாக நடிப்பதற்கு ஓவர்டன் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டியிருந்தது. ஆனால், அவருக்கு எஹ்லர்ஸ்-டான்லோஸ் சிண்ட்ரோம் இருப்பது 2017-ம் ஆண்டு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பணியை அவர் விட வேண்டியிருந்தது.

2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஓவர்டனின் பராமரிப்பாளராக யூடன் மாறினார்.

"எனக்காக அவர் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் செய்தார்" என்று ஓவர்டன் கூறுகிறார்.

இப்போது நடந்தவற்றை திரும்பிப் பார்க்கும்போது, யூடன் தன்னைக் கட்டுப்படுத்த தொடங்கியிருந்ததை உணர்வதாக குறிப்பிடுகிறார் ஓவர்டன். ஓவர்டனை 'டெல்' என்று அழைப்பார்கள்.

"என்னால் என்ன செய்ய முடியும் என்பதை மற்றவர்களிடம் கூறுவதில் அவர் மகிழ்ச்சி அடைவார்" என்றும் அவர் கூறுகிறார்.

"யாராவது ஏதாவது செய்யலாம் என்று ஒரு யோசனையைச் சொன்னால், 'டெல் அதைச் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். வேறு ஏதாவது யோசிப்போம்' என்று சொல்வதில் அவர் மகிழ்ச்சி அடைவார்"என நினைவு கூறுகிறார் ஓவர்டன்.

ஆனால், யூடனின் நடத்தை தான் கற்பனை செய்ததைவிட மிகவும் மோசமானதாக இருந்தது என்பதை இப்போது ஓவர்டன் அறிந்திருக்கிறார்.

2020-ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

"என் உடலில் ஏற்பட்ட அசௌகரியம் அப்போது அதிகமாகத் தெரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அவர் அதைச் செய்து கொண்டிருந்த போது நான் கண்விழித்தேன்" என்று அவர் கூறுகிறார்.

"'நீ விழித்திருப்பதாக நினைத்தேன். நீ சரியான சத்தங்களை எல்லாம் எழுப்பிக் கொண்டிருந்தாய்' என்று கூறி, அவர் பல காரணங்களைச் சொன்னார்.

"நாங்கள் எதிர்கொண்டிருந்த அனைத்து மன அழுத்தங்களையும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதை அவர் தவறுதலாகச் செய்ததாகக் கூறினார்."

அதனால், ஓவர்டன் தனது சந்தேகங்களைப் புறந்தள்ளினார் .

"உண்மை என்னவாக இருந்திருக்கும் என்பதை எதிர்கொள்வதைவிட, அந்த பொய்யை நம்புவது எளிதாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

ஆனால், ஓவர்டனுக்கு தூங்குவதில் சிரமம் ஏற்படத் தொடங்கியது.

"நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்பாக இல்லை என்று என் மனதின் ஏதோ ஒரு பகுதியில் என் மூளை உணர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

யூடனுடன் நெருக்கமாக இருப்பதிலும் தனக்குச் சிரமம் ஏற்பட்டதாகவும், கடந்த காலத்தில் தான் எதிர்கொண்ட பாலியல் துஷ்பிரயோக அனுபவங்கள் தொடர்பான கனவுகள் அதிகமாக வரத் தொடங்கியதாகவும் ஓவர்டன் கூறுகிறார்.

"அப்போது, அதை கடந்த காலத்தில் எனக்கு நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தேன். எனது அந்த அதிர்ச்சியின் காரணமாக, அவரையும் அவர் செய்ததையும் நான் மிகவும் கடுமையாக மதிப்பிடுவதாக நினைத்தேன்" என்று கூறும் அவர்,

"நான் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, நடந்த அனைத்திற்காகவும் என்னையே மனதளவில் குற்றம்சாட்டத் தொடங்கினேன்" என்கிறார்.

யூடனின் வாக்குமூலம்

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2025-ஆம் ஆண்டு, யூடன் குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, தான் செய்ததை ஒப்புக்கொண்டார்.

"ஏதோ ஒன்று அவருடைய மனதை உறுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருந்ததை அவர் மறுபுறத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்" என்று ஓவர்டன் கூறுகிறார்.

"நான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, அவர் என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என்ற விஷயத்திலேயே அவர் அதிகமாகக் கவனம் செலுத்தினார்."

இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தான் கண் விழித்த போது யூடன் தன்னுடன் பாலியல் உறவில் இருந்ததைப் பார்த்த நினைவை ஓவர்டனுக்கு மீண்டும் ஏற்படுத்தியது.

"நான் அவரைத் தள்ளிவிட்டு, 'அதற்கு என்ன அர்த்தம்? என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என்று சொல்வதன் மூலம் என்ன சொல்கிறாய்? எந்த வகையில்?' என்று கேட்டேன்" என அவர் கூறுகிறார்

ஓவர்டன் கூறுவதன் படி, இரண்டு நாட்களுக்கு நீடித்த அந்த உரையாடலின் போது ஒரு கட்டத்தில், யூடன் தனது நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து, தான் செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் வீட்டுக்குத் திரும்பி, ஓவர்டனிடமும் தான் செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் துரோகம் செய்யப்பட்டதாகவும், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் உணர்ந்தார். ஆனால், உடனடியாக அந்த உறவை முறித்துக் கொள்ளவில்லை. யூடனைத் தான் சார்ந்திருப்பதாக அவர் உணர்ந்தார். அதேநேரத்தில், அவரை நேசித்தும் வந்தார்.

கடந்த காலத்தில் தான் எதிர்கொண்ட பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக ஓவர்டன் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த சிகிச்சை அமர்வின் போது இதைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுகுறித்துப் பேசிய அவர், "நான் நிலைகுலைந்து, கட்டுப்படுத்த முடியாமல் அழுதுகொண்டிருந்தேன். 'நான் என்ன செய்வது? அவர் இதைச் செய்வதை நான் எப்படி தடுத்து நிறுத்துவது?' என்று கேட்டுக்கொண்டிருந்தேன் என்கிறார்.

"அப்போது ஒரு ஆலோசகர், ஒரு சிகிச்சையாளர் என்னை அந்த நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். 'அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டு, காவல்துறையை அழைக்க வேண்டும்' என்று அவர் கூறினார்.

"அன்று பின்னர், அவர்கள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும், நடந்த அனைத்தையும் குறித்து காவல்துறையைத் தொடர்புகொள்ளப் போவதாகவும் அவர் கூறினார். அந்த நேரத்தில், இது இனி என் கையில் இல்லை என்பதை ஓரளவு உணர்ந்தேன்"என்று விவரிக்கிறார்.

இந்த வழக்கு டெர்பிஷயர் காவல்துறையைச் சேர்ந்த துப்பறியும் சார்ஜென்ட் எலினோர் கிர்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.

"நான் முதலில் செய்தது அடெலைத் தொடர்புகொண்டதுதான்" என்று அவர் கூறுகிறார்.

"நடந்த சம்பவத்தால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தது புரிந்துகொள்ளக்கூடியது தான்"

ஓவர்டனிடம் விசாரணை நடத்திய பிறகு, காவல்துறையினர் யூடனை கைது செய்தனர்.

"நான் அவரிடம் விசாரணை நடத்தியபோது, தான் செய்ததை அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்" என்று எலினோர் கூறுகிறார்.

"எங்களது விசாரணைகளில் ஒரு வழக்கு இவ்வளவு விரைவாக அந்த நிலைக்குச் செல்வது மிகவும் அரிதானது."

யூடன் மீது இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பின்னர் நீதிமன்றத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஓவர்டனின் நடவடிக்கைகள் மற்ற பெண்களைப் பாதுகாக்க உதவியுள்ளதாக கிர்டன் கூறுகிறார்.

"இதுபோன்று ஏதாவது உங்களுக்கும் நடக்கக்கூடும் என்று ஒருவர் உணர்ந்தால், அதைப் பற்றி எங்களிடம் வந்து பேசுமாறு நான் அவர்களை மிகவும் வலியுறுத்துகிறேன். ஏனென்றால், எங்களால் செய்யக்கூடிய காரியங்கள் இருக்கின்றன. இந்தச் சம்பவமே அதற்கான சான்றாக உள்ளது"என்கிறார் கிர்டன்.

ஆனால், 13 ஆண்டுகளாகத் தன்னை அன்புடன் பார்த்துக்கொண்டதாகக் கருதிய துணை, தான் தூங்கிக் கொண்டிருந்த போது தன்னை ஏன் பாலியல் வன்கொடுமை செய்தார் என்பதை ஓவர்டனால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

"ஒருவர் எந்தவித எதிர்வினையும் காட்டாத நிலையில், அவரிடமிருந்து ஒருவர் எப்படி இன்பத்தைப் பெற முடியும் என்று எனக்குப் புரியவில்லை. அதுதான் எனக்குப் புரியாத விஷயமாக இருந்தது" என்று அவர் கூறுகிறார்.

"தூங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் மீது அவருக்கு ஒரு விருப்பம் இருந்தது என்று சொல்லலாம். அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

"நான் தூங்க வேண்டும் என்றும், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து எனக்குத் தெரியக்கூடாது என்றும் அவர் விரும்பினார்."

தன்னுடைய மருந்துகளையே பயன்படுத்தி யூடன் தனக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கலாம் என்று ஓவர்டன் சந்தேகிக்கிறார். அந்த மருந்துகள் அனைத்தும் யூடனின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன.

"என்னிடம் சிறிய மருந்துப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் இருந்த அனைத்து மருந்துகளையும் அவர் எனக்காக வெளியே எடுத்து வைப்பார்" என்று அவர் கூறுகிறார்.

"இப்போது மற்ற மருந்துகளுடன் ஒப்பிடும்போது, என்னிடம் மயக்க மருந்துகள் மிகவும் குறைவாக உள்ளன. எனவே, நான் தூங்கிக்கொண்டே இருப்பதற்காக அவர் எனக்கு அளவுக்கு அதிகமாக மருந்து கொடுத்திருக்கலாம் என்று நான் வலுவாக சந்தேகிக்கிறேன்."

இது காவல்துறையினர் "பழைய வழக்கு" என்று குறிப்பிடும் வழக்கு என்பதால், இது நடந்ததா இல்லையா என்பதை தடயவியல் மற்றும் நச்சுயியல் பரிசோதனைகளால் உறுதி செய்திருக்க முடியாது என்று கிர்டன் கூறுகிறார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

ஆனால், ஓவர்டன் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது ஒரு சந்தர்ப்பத்தில், அவர் மிகவும் சோர்வாக இருந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக யூடன் காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.

"அப்போது அவர் இதை குறிப்பிட்டதாக நினைக்கிறேன். அவர் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்றும், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் மருந்துகளின் தாக்கத்தில் இருந்திருப்பார் என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்"என்றும் கிர்டன் குறிப்பிடுகிறார்.

ஓவர்டனை இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாக யூடன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் தன்னை அதைவிட அதிக முறை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக ஓவர்டன் நம்புகிறார்.

"அவர் என்னிடம் ஏழு அல்லது எட்டு முறை இதைச் செய்ததாகக் கூறினார்" என்று ஓவர்டன் கூறுகிறார்.

அவரது மகள் ஷாரி ஓவர்டன், யூடனின் குற்றங்கள் தனது தாயின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்ப்பது கடினமாக இருந்ததாகக் கூறுகிறார்.

"அவர் இப்போது மிகவும் மாறிவிட்டார். அவரது தன்னம்பிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டதை என்னால் பார்க்க முடிகிறது" என்று ஷாரி கூறுகிறார்.

"அதேநேரத்தில், காவல்துறையிடமும் நீதிமன்றத்திடமும் பேசி, தனக்காகத் துணிந்து நின்றதற்காக நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்"என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தங்களைப் பராமரிப்பதாகக் கூறப்படும் நபர்களின் துஷ்பிரயோகத்தை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மற்றவர்களுக்கு இல்லை என்பதை தனது கதை உணர்த்தும் என்று ஓவர்டன் நம்புகிறார்.

"நான் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று உணர்கிறேன். ஏனென்றால், தங்களை மற்றவர் கட்டுப்படுத்தும் சூழலில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள் என்று இது என்னைச் சிந்திக்க வைத்தது" என்று அவர் கூறுகிறார்.

"எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட பிறகு சில மாதங்களுக்கு, அவருடைய பராமரிப்புக்கான ஒரு வகையான கைமாறாக இது இருந்திருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஒருவேளை நான் அவருக்கு அந்த நெருக்கத்தை வழங்க வேண்டியிருந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், நான் அவருக்கு எதையும் கடன்பட்டிருக்கவில்லை. வேறு யாரும் அப்படிக் கடன்பட்டிருக்கவில்லை"என்கிறார் ஓவர்டன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு