டெல்லி போராட்டம் சிஜேபி, வாங்சுக்கை தாண்டி மாபெரும் மக்கள் இயக்கமாகிறதா? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள தடுப்புகளுக்குச் சற்று முன்பாக, ஒரு குடும்பத்தினர் குளிர்ந்த லஸ்ஸி மற்றும் மோர் பாக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.
மீனு போகட் தனது 18 வயது மகள் மற்றும் கணவருடன் கடந்த சில நாட்களாக இங்கு வந்து கொண்டிருக்கிறார். ஒரு போராட்டத்தில் தான் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று அவர் கூறுகிறார்.
அதுகுறித்து அவர் கூறும்போது, "எங்கள் மகன் ஐ.ஐ.டி-யில் படிக்கிறான், ஆனால் அனைத்து இளைஞர்களின் போராட்டத்திலும் இணையவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். போனில் வீடியோக்களை பகிர்வது மட்டும் போதாது, நாம் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்" என்றார்.
மீனு போகட்டின் கணவர் வட டெல்லியில் ஒரு இனிப்புக் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக, கடையை ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, முழு குடும்பமும் ஜந்தர் மந்தருக்கு வந்து கொண்டிருக்கிறது.
எனக்கு 200 கிராம் லஸ்ஸி பாக்கெட்டை வழங்கியபடி, "நீங்களும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள், வெயில் மிகவும் அதிகமாக இருக்கிறது" என்கிறார் அவர்.
ஜூலை 21 அன்று நான் ஜந்தர் மந்தரை அடைந்தபோது நான் கண்ட முதல் விஷயம் இதுதான். பல வழிகளில், இது இந்த முழு இயக்கத்திற்கும் ஒரு பரந்த கட்டமைப்பை வழங்குகிறது.
போராட்டங்களை ஒருபோதும் நெருக்கமாகக் கண்டிராத, செய்தி சேனல்களிலும் நாளிதழ்களிலும் மட்டுமே போராட்டங்களைப் பற்றிப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த சாதாரண மக்கள், இன்று ஒருவருக்கொருவர் ஆதரவாக, அமைப்பாக இந்தப் போராட்டத்தில் நிற்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தர், இப்போது நரேந்திர மோதி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் மிகப்பெரிய சவாலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது.
26 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி' ஆகியவை இதன் மையப் புள்ளியாக இருந்துள்ளன.
'காக்ரோச் ஜனதா கட்சி' எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே பலமுறை கேட்டும் படித்தும் இருப்பீர்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது இங்கு கூடி வருகிறார்கள், அவர்களின் கோரிக்கைகளை காகிதத்தில் அச்சிட்டு, பலகைகளில் ஏந்தி, "தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்" என்ற முழக்கங்களின் வடிவில் எழுப்புகிறார்கள்.
ஆனால் இந்த வாரம் என்ன நடந்திருந்தாலும், இந்த போராட்டத்தின் முதன்மை கோரிக்கை, அதற்கு வழிவகுத்த உண்ணாவிரதம், மற்றும் அது உண்ணாவிரதம் முடிவடைந்த தருணமும், முடிவடைந்த விதம் என அனைத்துமே ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகத் தோன்றுகின்றன.
முன்பு கூறப்பட்டதற்கும், இந்த இயக்கம் வேகம் பெற்ற விதத்திற்கும், தற்போது நடப்பதற்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பதாகத் தெரிகிறது.
என்ன சொல்லப்பட்டது, இந்த இயக்கம் எவ்வாறு தீவிரமடைந்தது, இப்போது என்ன நடக்கிறது என்பதற்கு இடையே ஒரு இடைவெளி இருப்பது போல் தெரிகிறது,
தற்சமயம் இந்தப் போராட்டம் இந்த இருவேறுபட்ட வடிவங்களுக்கு இடையே ஒரு வழியைத் தேடுவது போலவும் தோன்றுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம், வாங்சுக் மற்றும் சிஜேபியின் நிலைப்பாடு
வியாழக்கிழமை நள்ளிரவில், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதற்காக அரசு அளித்த உறுதிமொழிகள் பின்வருமாறு:
- அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாது.
- நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து, கல்வி முறையை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை அரசு கண்டறியும்.
- நீட் வினாத்தாள் கசிவு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்படும்.
இப்போது, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இந்தப் போராட்டமும் உண்ணாவிரதமும் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த கோரிக்கைகளைப் பற்றிப் பேசுவோம்.
- கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்.
- நீட் வினாத்தாள் கசிவு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
சி.ஜே.பியின் இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, சோனம் வாங்சுக் ஜூன் 28 அன்று சி.ஜே.பி மேடையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
ஒரு நேர்காணலில், ஒரு நபர் ராஜினாமா செய்வதால் என்ன மாறிவிடும் என்று வாங்சுக்கிடம் கேட்கப்பட்டதற்கு, "அது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும்" என்று அவர் பதிலளித்தார்.
வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து, சி.ஜே.பி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா என்னிடம் கூறும்போது, "அவர் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்பதை நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சி.ஜே.பி மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் அமர்தீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), யாரும் மேடையை நெருங்காமல் தடுக்கும் பொறுப்பில் உள்ளார்.
மேடையைச் சுற்றி பாதுகாப்பை உறுதி செய்யும் சி.ஜே.பி-யின் முக்கிய தன்னார்வலர் குழுவில் இவரும் ஒருவர்.
நான் மேடையை நோக்கி வருவதைப் பார்த்து, என்னைத் தடுப்பதற்காக அவர் தன் கையை நீட்டுகிறார். ஆனால் அடுத்த சில நொடிகளில், நான் மேடையை நோக்கி நகரவில்லை என்பதை உணர்ந்து, இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்.
இந்தப் போராட்டத்திற்காக அமர்தீப் மத்தியப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். அவர் ஒரு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர், இந்த இயக்கத்தில் பங்கேற்பதற்காக விடுப்பு எடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "எப்படியிருந்தாலும், அவரால் எவ்வளவு காலம் தான் உண்ணாவிரதம் இருக்க முடியும்? அவர் அதை முடித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், அவர் அதை முடித்த விதம் சரியானதாகத் தெரியவில்லை" என்றார்.
அதே நேரத்தில், போராட்டத்தின் திசை குறித்து அவரும் தெளிவில்லாமல் இருப்பது போல் தெரிகிறது.
"தற்போது என்னால் எதையும் அதிகம் புரிந்து கொள்ள முடியவில்லை. ராஜினாமா செய்யும் வரை இது தொடரும் என்று இவர்கள் சொல்கிறார்கள், ஆனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யாருக்குத் தெரியும்" என்றார்.
'இந்த இயக்கம் வாங்சுக் மற்றும் சிஜேபியை விடப் பெரிதாகிவிட்டது'
டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரும், நாட்டில் நன்கு அறியப்பட்ட அறிஞருமான அபூர்வானந்த் இதுகுறித்து கூறும்போது, "சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது, மக்கள் அவரை ஒரு துறவியைப் போலப் பார்த்தார்கள். அவருடன் உணர்வுப்பூர்வமாக இணைந்தார்கள். அவருடைய பசியின் வலியைக் கண்டார்கள். ஆனால் அவரால் தனது சொந்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்க முடியவில்லை"என்கிறார்.
"கடந்த சில நாட்களாக, அவர் தனது நிபந்தனைகளை மாற்றிக்கொண்டார். அவர் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கோரவில்லை, ஆனால் சி.ஜே.பி இப்போதும் ஜந்தர் மந்தரில் அவரது ராஜினாமையைக் கோரி வருகிறது. எனவே, வாங்சுக் சி.ஜே.பி-யுடன் பேசுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. வாங்சுக் சொந்தமாக உண்ணாவிரதப் போராட்டம் இருக்கத் தீர்மானித்தார். அதனால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள அவருக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை".
"தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சர்களைச் சந்தித்த பிறகே அவரது கோரிக்கைகள் மாறின. கல்வி அமைச்சரின் ராஜினாமா குறித்த கோரிக்கை அவரது கோரிக்கைப் பட்டியலில் இருந்து மறைந்துவிட்டது. இந்த இயக்கம் அவரை விட மிகவும் பெரியது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் நிச்சயமாக இதில் ஒரு முக்கியப் பங்கை வகித்தார், அவரது உண்ணாவிரதப் போராட்டமும் ஒரு பங்கை வகித்தது"என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையைத் தாம் கைவிடவில்லை என்று கூறி சோனம் வாங்சுக் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சிஜேபி, இயக்கம் மற்றும் கேள்விகள்
கடந்த சனிக்கிழமை (ஜூன் 18) சோனம் வாங்சுக் அழைத்துச் செல்லப்பட்டபோது, தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அபிஜித் தீப்கே அறிவித்தார்.
ஜூலை 20 அன்று, தான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக மேடையில் இருந்து அவர் அறிவித்தார். ஜூலை 22 அன்று நான் ஜந்தர் மந்தரில் இருந்தபோது, இந்தப் பிரச்னை இப்போது தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் இருந்து பிரதமரின் ராஜினாமா வரை தீவிரமடைந்துள்ளதாக அபிஜித் தீப்கே கூறினார்.
ஆனால் மேடையில் இருந்து அவர் செய்த அந்த அறிவிப்பில் எந்தவொரு தீவிரத்தன்மையும் இருக்கவில்லை.
சி.ஜே.பி தன்னார்வலரான மோஹித் கூறும்போது, "தீப்கே சாரால் உண்ணாவிரதத்தைத் தொடர முடியாததாலும், பேரணியில் பங்கேற்க வேண்டியிருந்ததாலும் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்" என்கிறார்.
மோஹித்திற்கு 32 வயதாகிறது, இந்த இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே அவர் ஜந்தர் மந்தருக்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் பல போட்டித் தேர்வுகளில் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில், மருத்துவக் காரணங்களால் அவரால் காவல் துறை ஆள்சேர்ப்புத் தேர்விற்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனது. இந்த இயக்கம் ஒரு முக்கியமான கோரிக்கைக்கானது என்று மோஹித் நம்புகிறார். ஆனால் இந்த இயக்கத்திற்கு இன்னும் அதிகமான தயாரிப்பு தேவைப்படுகிறது என்றும் அவர் கருதுகிறார்.
பல இயக்கங்களில் பங்கேற்றுள்ள யோகேந்திர யாதவ், இந்த இயக்கத்தை "தீவிரமற்றது" என்று கூறவில்லை, ஆனால் சிஜேபி-யின் தலைமையிடம் முதிர்ச்சியின்மை இருப்பதாக அவர் உறுதியாக நம்புகிறார்.
யோகேந்திர யாதவ் கூறுகையில், "இவர்கள் அனுபவம் இல்லாத இளைஞர்கள். இந்த அனுபவமின்மையின் காரணமாக, தீவிரமற்றதாகத் தெரியக்கூடிய விஷயங்களை இவர்கள் பேசுகிறார்கள்" என்கிறார்.
"அவர்கள் இந்த இயக்கத்தில் தீவிரமாக இல்லை என்றால், ஜூலை 20 அன்று நடந்த அத்தனை சம்பவங்களுக்குப் பிறகு அவர்கள் ஜந்தர் மந்தருக்குத் திரும்பியிருக்க மாட்டார்கள். இதுபோன்ற விஷயங்களை நான் புரிதல் இன்மையாகவே பார்க்கிறேன்."
"வாங்சுக்கின் உண்ணாவிரதத்திற்குப் பிறகு அவர்கள் பின்வாங்கியிருக்கலாம். ஆனால் பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து கோருவதாக அவர் உறுதியளித்துள்ளார். பாருங்கள், இந்த இயக்கம் இனி வாங்சுக் அல்லது சி.ஜே.பி-யுடன் மட்டும் சுருங்கிவிடவில்லை என்று நான் நம்புகிறேன். இப்போது, நாட்டின் இளைஞர்கள் ஒரு கருத்தைப் பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள், அதுவே மிக முக்கியமான விஷயம்."
குறிப்பிடப்பட வேண்டிய அளவுக்குப் பேசப்படாத ஒரு முக்கியமான விஷயமும் இங்கு உள்ளது.
மாணவர் அமைப்புகள் ஆரம்பத்திலிருந்தே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் மேடையில் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றாலும், மேடையின் ஓரத்தில் இருந்தபடி அதைச் செய்தார்கள். சி.பி.ஐ (எம்.எல்)-ன் மாணவர் பிரிவான அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) மூன்று மாணவர்கள் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
அவர்களில் ஒருவர் தான் நேஹா.
சி.ஜே.பி-யின் உத்திகளில் ஏஐஎஸ்ஏ சேர்க்கப்பட்டுள்ளதா என்றும், இந்தப் போராட்டத்திற்கான உத்திகளை வகுக்கும் போது அவர்களின் கருத்துகள் கருத்தில் கொள்ளப்படுகிறதா என்றும் நேஹாவிடம் நான் கேட்டேன்.
இதற்குப் பதிலளித்த நேஹா, "ஆம், நாங்கள் எங்கள் கருத்தை முன்வைக்கிறோம், கூட்டத்திற்கு எங்களை அழைக்கிறார்கள்" என்கிறார்.
ஆனால் ஜூலை 20 அன்று நடந்த பேரணியின் போது சி.ஜே.பி செய்தி தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்த கூட்டம் குறித்து நேஹாவிற்கோ அல்லது அவரது அமைப்பின் உறுப்பினர்களுக்கோ தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பட்டது.
"இல்லை, அந்தச் சந்திப்பைப் பற்றி நாங்கள் ஊடகங்கள் மூலமாகவே தெரிந்துகொண்டோம்"என்கிறார் நேஹா.
ஜந்தர் மந்தரில் உள்ள ஏஐஎஸ்ஏ கூடாரத்தில் அமர்ந்து நேஹா எங்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே, அவரது தோழர்களில் ஒருவர் சி.ஜே.பி கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.
அதுகுறித்து அபூர்வானந்த் கூறுகையில், "உங்கள் சக்திக்கு மீறிய ஒரு காரியத்தை நீங்கள் கையில் எடுத்துள்ளீர்கள். அபிஜித் தீப்கேவிடம் முதிர்ச்சி இல்லை என்று நான் நினைக்கிறேன். ஜூலை 20-ஆம் தேதி இந்தத் தலைமைத்துவக் குறைபாட்டை நாங்கள் கண்டோம். போராட்டக்காரர்களை வழிநடத்த யாரும் இல்லை; பேரணியின் போது இந்தத் தலைவர்களை எங்கும் காண முடியவில்லை என்று பல போராட்டக்காரர்கள் என்னிடம் கூறினார்கள்"என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "பேரணியில் பங்கேற்றவர்கள் தனித்து விடப்பட்டனர், ஆனால் மக்கள் அவர்களை மன்னித்துவிட்டார்கள். விஷயம் என்னவென்றால், இது போன்ற ஒரு பேரணிக்கு அழைப்பு விடுக்கப்படும்போது, நீங்கள் திட்டமிட வேண்டும், ஒரு உத்தியை உருவாக்க வேண்டும், அதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்" என்கிறார்.

இந்த இயக்கம் எதை நோக்கிச் செல்கிறது?
அலோக் குமார் வர்மா ஜூலை 21 அன்று லக்னோவில் இருந்து ஜந்தர் மந்தருக்கு வந்தார். அவர் எஸ்.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார், மேலும் நீட் தேர்வெழுதும் தனது தம்பிக்காக இங்கு வந்ததாகக் கூறுகிறார்.
இப்போது அவர்கள் இந்த இயக்கத்தை எப்படிப் பார்க்கிறார்கள்?
இக்கேள்விக்கு அலோக் பதிலளிக்கும் போது, "அரசு நம்மைத் தாமதப்படுத்திக் கொண்டே இருக்கும். பிறகு நாம் சோர்வடைந்து இங்கு வர முடியாமல் போகலாம், மேலும் இந்தப் போராட்டம் தானாகவே வேகம் குறையத் தொடங்கலாம்.
ரயில்கள் பல மணிநேரம் தாமதமாக இயங்குகின்றன, ஒரு ரயில் காஸியாபாத்தில் ஐந்து மணி நேரம் நிறுத்தப்பட்டது. நான் வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன, எனது போனை சார்ஜ் செய்ய வேண்டும், குளிக்க வேண்டும், ஹோட்டல் முன்பதிவு செய்ய வேண்டும், இது நிச்சயமாக எனது பொருளாதாரத்தை பாதிக்கிறது. நிறைய நேரம் வீணடிக்கப்படும் என்பதால் மக்கள் தானாகவே வீட்டிற்குத் திரும்பத் தொடங்குவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்கிறார்.
இது அலோக்கைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல.
மீரட்டில் இருந்து போராட்டத்திற்கு வந்த வந்தனாவும் இதே விஷயத்தைச் சொல்கிறார்.
"எங்களுக்கு உணவு கிடைக்கிறது, ஆனால் எங்களுக்குக் கழிப்பறை தேவைப்படுகிறது. நான் நினைத்ததை விட அதிக பணம் செலவழித்துவிட்டேன். ஓரிரு நாட்களில் நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்"என்கிறார் வந்தனா.
ஒவ்வொரு கணமும் ஒரு புதிய நடவடிக்கை உருவாகி வரும் நிலையில், வரவிருக்கும் நாட்களில் இந்த இயக்கம் என்ன வடிவத்தை எடுக்கும் என்பதைக் கணிப்பது கடினம்.
இந்த வார இறுதியில் சி.ஜே.பி மற்றும் அரசுக்கு இடையே நடைபெறும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் மூலம் என்ன மாற்றம் ஏற்படும் என்பதற்கான பதில், அங்கு நின்று கொண்டிருக்கும் மக்களிடமோ, இந்த இயக்கத்தைப் பார்த்துப் புரிந்து புரிந்துகொள்பவர்களிடமோ இல்லை.
இந்த இயக்கத்திற்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவர் இல்லை, ஆனால் மத்திய அரசு ஒரு தரப்புடன் பேசி வருகிறது. அரசு சில வாக்குறுதிகளை அளித்து வருகிறது. பிரதமர் மோதி கூட ஒரு வீடியோ பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மாலை 6:30 மணி ஆகிவிட்டது, ஜந்தர் மந்தரில் அதிகக் கூட்டம் இருப்பதால் அந்த குறுகிய வாசலில் இருந்து வெளியேறுவதே ஒரு வெற்றியாக தெரிகிறது.
கேரளா ஹவுஸை நோக்கி நடந்து சென்றபோது, எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஸ்ருதியைச் சந்தித்தேன், அவர் வாக்கர் உதவியுடன் போராட்டத்திற்கு வந்திருந்தார். "ஏன் இவ்வளவு சிரமப்பட்டு வந்தீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.
இதுகுறித்து ஸ்ருதி கூறும்போது, "ஜூலை 20 அன்று காவல்துறை என் கால்களில் அடித்தது, அதனால் இப்போது நான் வாக்கர் மூலம் நடக்க வேண்டியுள்ளது, ஆனால் நான் இங்கு வர வேண்டியிருந்தது. வாழ்க்கையில் ஏதேனும் நல்லது செய்ய விரும்பும் அனைத்து இளைஞர்களுக்காகவும் நான் வந்தேன்" என்கிறார்.
இது தான் இந்த இயக்கத்தின் அழகு, இங்கு மக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக மாறி வருகிறார்கள்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























