இரானில் போராட்டங்களுக்குப் பிறகு மரண தண்டனையை எதிர்கொள்ளும் பெண்களின் உருக்கமான கோரிக்கைகள்

பட மூலாதாரம், Supplied by family
- எழுதியவர், சோரூஷ் பக்ஸாத்
- பதவி, பிபிசி பாரசீக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இரானில் தரனே ரஹிமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 21 வயதான தரனேவின் கால்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களாக அவரால் சரியாக நடக்க முடியவில்லை. மேலும், தலையில் ஏற்பட்ட காயத்துக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால், காதில் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர் கூறுகிறார்.
அவர் "மன உறுதியுடன் இருக்க முயற்சி செய்கிறார். ஆனால், சில நாட்களில் மனமுடைந்து அழுதுவிடுகிறார்" என்று தரனேவின் உறவினரான மசூத் நூர்மொஹம்மதி பிபிசி பாரசீக சேவையிடம் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் இரான் முழுவதும் பரவிய அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக தரனேவும் அவரது இரட்டைச் சகோதரி ரொமினாவும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.
"இரட்டைச் சகோதரிகளை அவர்களது தாய் முதன்முதலில் சிறையில் சந்தித்தபோது, இருவரின் முகங்களும் வீங்கி, காயங்களுடன் காணப்பட்டன. அவர்களது தலைமுடியும் பிடுங்கப்பட்டிருந்தது. இதனால், அவர்களின் குரல்களைக் கேட்டுத்தான் இருவரையும் அடையாளம் காண முடிந்தது" என்று அமெரிக்காவில் இருந்து பேசிய நூர்மொஹம்மதி கூறினார்.
தன் கண் முன்னாலேயே தனது சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார் என்று விசாரணை அதிகாரிகள் மிரட்டியதைத் தொடர்ந்து, தரனே ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டதாக அவர் கூறுகிறார்.
ஜனவரி மாதப் போராட்டங்கள் தொடர்பாக இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பெண்களில் தரனேவும் ஒருவர் என்று இரானுக்கான ஐநா மனித உரிமைகள் சிறப்புப் பிரதிநிதி மாய் சாடோ தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகம். இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக விதிக்கப்படும் மரண தண்டனைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன.
பல தசாப்தங்களாக இல்லாத அளவுக்கு பெண் போராட்டக்காரர்களுக்கும் அரசை எதிர்ப்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் இரான் ஆய்வாளர் ரஹா பஹ்ரெய்னி கூறுகிறார்.
இரட்டை சகோதரிகள் கைது ஏன்?

பட மூலாதாரம், Anonymous/Getty Image
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
போராட்டங்கள் தொடர்பான வழக்குகளில் மரண தண்டனையின் பயன்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் "தவறாக வழிநடத்துபவை" என்று லண்டனில் உள்ள இரான் தூதரகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும், அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுவதையும் இரான் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமைதியான முறையில் போராடுவது "சட்டபூர்வமான மற்றும் பாதுகாக்கப்பட்ட உரிமை" என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
"ஜனவரி 2026 கலவரம்" தொடர்பான வழக்குகளில், "திட்டமிட்ட கொலை" அல்லது "மொஹரெபே" (மக்களின் உயிருக்கு அல்லது சொத்துகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அல்லது அவற்றை அழிக்கும் நோக்கில் ஆயுதம் ஏந்துதல்) போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே மரண தண்டனைகள் விதிக்கப்பட்டதாக அது தெரிவித்தது.
ஜனவரி மாத இறுதியில் இரட்டைச் சகோதரிகள் கைது செய்யப்பட்டதாக நூர்மொஹம்மதி கூறுகிறார்.
பொருளாதாரப் பிரச்னைகளை முன்வைத்து டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய போராட்டங்கள் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை நடைபெற்றது. 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, மதகுருமார்களின் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக இரானில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டங்களாக இவை அமைந்தன.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம், போராட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 7,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போராட்டக்காரர்கள் என்றும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
இந்த அமைதியின்மைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே தூண்டுதலாக இருந்ததாக இரான் அரசு குற்றம்சாட்டுகிறது. பாதுகாப்புப் படையினர் சிலர் உட்பட மொத்தம் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் உயிரிழப்புகளுக்கு "பயங்கரவாதிகள்" மற்றும் "கலவரக்காரர்களே" காரணம் என்றும் இரான் அரசு கூறுகிறது.
அந்த இரட்டைச் சகோதரிகள் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது அவர்களது குடும்பத்தினருக்கே மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தெரியவில்லை என்று அவர்களின் உறவினர் ஒருவர் கூறுகிறார். இஸ்ஃபஹான் நகரில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த நகரின் ஒரு பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

பட மூலாதாரம், Instagram
நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தரனேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கான தீர்ப்பு ஆவணத்தின் ஒரு பகுதியை பிபிசி பார்த்துள்ளது. இரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றமான 'மொஹரெபெ' குற்றத்துக்காக தரனே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் கூர்மையான ஆயுதத்தை எடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மொஹரெபெ குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி தரனேவின் சகோதரி ரொமினாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ஐநா சிறப்புப் பிரதிநிதி மாய் சாடோ தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக இரானில் உள்ள உறவினர்கள் மற்றும் பிறருடன் தொடர்பில் இருக்கும் நூர்மொஹம்மதி, சகோதரிகள் இருவரும் தங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாகவும், தரனேவிடம் 'கூர்மையான ஆயுதம்' இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்கிறார்.
இந்த வழக்கில் அந்தச் சகோதரிகள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், ஆனால் ஒவ்வொருவரும் என்ன செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டனர் என்பது குறித்து எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் மாய் சாடோ கூறுகிறார்.
`இந்த வழக்கு குறித்து விவரமறிந்த வட்டாரங்களின்படி, விசாரணையின்போது தாங்கள் சித்திரவதைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, இரட்டைச் சகோதரிகளின் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், சித்திரவதை செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டும் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையிலேயே அந்தப் புகார் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
'விரக்தியையும் மன உறுதியையும் வெளிப்படுத்தும் குரல் பதிவுகள்'

பட மூலாதாரம், Supplied to human rights groups
மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பிற பெண்கள் அனுப்பியுள்ள குரல் பதிவுகளில், விரக்தியும் தளராத மன உறுதியும் வெளிப்படுகின்றன.
மனித உரிமை அமைப்புகளின் தகவலின்படி, 33 வயதான சிவில் பொறியாளர் மஹ்பூபே ஷபானிக்கு, காயமடைந்த போராட்டக்காரர்களை அழைத்துச் சென்றதற்காக, இரானின் உளவுத் துறை தொடர்பான சட்டத்தின்கீழ் செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இரானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மஷ்ஹத் நகரச் சிறையில் உள்ள அவர், தனக்கும் மற்ற கைதிகளுக்கும் உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
"அனைவரும் மனதளவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். குறிப்பாக, மரண தண்டனை உறுதி செய்யப்பட்டவர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்" என்று அவர் கூறினார்.
மஷ்ஹத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொருவர் நஜ்மே அமினி. அவருக்கு 23 வயது என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதப் போராட்டங்களைத் தொடர்ந்து அவர் முதலில் கைது செய்யப்பட்டார். பின்னர், சமூக ஊடகப் பதிவு ஒன்றில் மதநிந்தனையில் ஈடுபட்டதாகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
"நான் உயிருடன் இருக்கும் வரை எனக்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் இருக்கிறது. தூக்குக் கயிற்றில் என் உயிர் பிரிவதற்கு முன்பு, சுதந்திரமான, வளமான இரானைக் காண வேண்டும் என்பதே அந்த நம்பிக்கை" என்று அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குரல் பதிவில் உள்ளது.
மேலும், 27 வயதான மொஜ்தே ஹஷேமி பஸர்கானியும் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட அவர், "உளவு பார்த்தல்" உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த இரானிய மனித உரிமை அமைப்பான தவானா, சிறையில் இருந்து தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவைப் பகிர்ந்துள்ளது. அதில், தனது தலை, கழுத்து மற்றும் உடலில் தாக்கப்பட்டதாகவும், கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திடச் செய்ததாகவும் அவர் விவரிக்கிறார்.
"அவர்கள் என் மீது உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்காக எனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஒருவேளை நான் உளவு பார்த்ததற்காகப் பணம் பெற்றிருந்தால், என்னிடம் ஒரு காரோ அல்லது வீடோ இருந்திருக்கும். ஆனால், என்னிடம் எதுவுமே இல்லை" என்று அந்தக் குரல் பதிவில் அவர் கூறுகிறார்.
பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் மரண தண்டனைகள்

பட மூலாதாரம், Supplied to Hrana
இந்த மூன்று வழக்குகள் மற்றும் இரட்டைச் சகோதரிகளுக்கு எதிரான வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் "அரசியல் உள்நோக்கம் கொண்டவை" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.
பிபிசியின் கேள்விகளுக்குப் பதிலளித்த லண்டனில் உள்ள இரான் தூதரகம்,"குறிப்பிடப்பட்ட வழக்குகளில் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்." என்று தெரிவித்தது.
தனிப்பட்ட வழக்குகள் குறித்து கூடுதல் கருத்துகளைத் தெரிவிக்காத தூதரகம், "கட்டாயப்படுத்திப் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை" என்றும் கூறியது.
ஜனவரி மாத போராட்டங்களுடன் தொடர்புடைய வழக்குகளில் இதுவரை குறைந்தது 39 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐநா சிறப்புப் பிரதிநிதி மாய் சாடோ தெரிவித்துள்ளார்.
ஆண்கள், பெண்கள் என இருதரப்பிலும் கைது நடவடிக்கைகளும் தண்டனைகளும் "கணிசமாக" அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது அதிகரித்திருப்பது, ஏற்கெனவே நிலவி வரும் "ஒடுக்குமுறைப் போக்கின் தீவிரமடைதலையும் விரிவடைவதையும்" காட்டுவதாக அவர் கருதுகிறார்.
"தண்டனையின் கடுமையைத் தீர்மானிப்பதில் பாலினம் அல்லது வயது போன்ற காரணிகளுக்கு இப்போது குறைவான முக்கியத்துவமே அளிக்கப்படுவதாகத் தெரிகிறது" என்கிறார் துருக்கியில் வசிக்கும் இரானிய மனித உரிமைகள் வழக்கறிஞர் மூசா பார்சின்.
வழக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் பெரும்பாலும் மிகக் குறைவாகவே வெளியிடப்படுகின்றன. சில வழக்குகள் வெளிச்சத்திற்கே வராமல் போகக்கூடும்.
இருப்பினும், போராட்டங்களுடன் தொடர்புடையதாகத் தான் கண்டறிந்த ஆறு பெண்களைத் தவிர, இந்த ஆண்டு மேலும் மூன்று பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மாய் சாடோ தெரிவிக்கிறார்.
"மதநிந்தனை", "பூமியில் ஊழல் விளைவித்தல்", "உளவு பார்த்தல், மொஹரெபே" ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
2025-ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், இதேபோன்ற குற்றங்களுக்காகப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைகளின் மொத்த எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஒன்பது மரண தண்டனைகளின் எண்ணிக்கை அதிகம் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி முகமை பதிவு செய்துள்ளது.
அந்தப் பத்தாண்டுகளில் எந்தவொரு ஆண்டிலும் இதுபோன்ற குற்றங்களுக்காக மூன்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை.
மாய் சாடோ அடையாளம் கண்ட போராட்டங்கள் தொடர்பான மூன்று வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகள் பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், அவற்றில் இரண்டு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்களின் கவனம் குறைந்த பிறகு, ரத்து செய்யப்பட்ட மரண தண்டனைகள் நீதித்துறையின் மற்றொரு பிரிவால் மீண்டும் விதிக்கப்படும் போக்கு அதிகரித்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Supplied by family
மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்கள், இரானியப் பெண்களைப் பொறுத்தவரை ஒரு "திருப்புமுனையாக" அமைந்ததாக மாய் சாடோ கூறுகிறார். இரானின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி, காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.
"அரசின் கொள்கைகளையும் கட்டுப்பாட்டு அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவதில் பெண்கள் முன்னணியில் இருந்தனர். அவர்களின் அரசியல் செயல்பாடும், பொதுவெளியில் அதிகரித்த பங்களிப்பும், தலைமைத்துவமும் அவர்களை அரசின் ஒடுக்குமுறைக்கு இலக்காக்கியுள்ளன" என்று சாடோ கூறுகிறார்.
இரானில் நீதித்துறை நடவடிக்கைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆட்சிக்கு உட்பட்டும் நடைபெறுவதாக அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது.
"மரண தண்டனை தொடர்பான வழக்குகளில் கடுமையான குற்றங்கள், வன்முறை, பயங்கரவாதம், உளவு பார்த்தல், விரோதமான உளவு அமைப்புகளுடன் ஒத்துழைத்தல் மற்றும் மொஹரெபெ போன்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன" என்றும் இரான் தூதரகம் கூறியுள்ளது.
மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில், உலகின் வேறு எந்த நாட்டையும்விட இரானில்தான் அதிகமானோர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐ.நா. நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
2026 அக்டோபர் வரையிலான ஓராண்டில் 2,003 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி முகமை பதிவு செய்துள்ளது. அவர்களில் 47 பெண்கள் உட்பட பெரும்பாலானோர் கொலை, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்காக மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.
இரட்டைச் சகோதரிகளுக்கு ஆதரவளிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் குடும்பத்தினர் செய்து வருவதாக நூர்மொஹம்மதி கூறுகிறார்.
ரொமினாவுக்கு இசையில் ஆர்வம் அதிகம் என்றும், தொலைபேசி வழியாகப் பாடல்களை ஒலிக்கச் செய்யுமாறு அவர் அடிக்கடி உறவினர்களிடம் கேட்பார் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"தரனேவுக்கு குதிரைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குதிரைகள் இனப்பெருக்கம் மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது அவரது நீண்டகால விருப்பம். அந்தக் கனவை நனவாக்க எதிர்காலத்தில் உதவுவதாகக் குடும்பத்தினர் அவரிடம் கூறி வருகின்றனர்." என்றார் அவர்.
"அவருக்கு நம்பிக்கை கொடுப்பதற்காகத்தான் நாங்கள் இப்படிச் செய்கிறோம்" என்று நூர்மொஹம்மதி கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































