செய்தித்தாளில் வைத்த வடை, போண்டாவை சாப்பிடுவதால் கர்ப்பிணி, குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷேக் அன்சாரி
- பதவி, பிபிசி நிருபர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஒரு காலத்தில் உணவகங்களில் காகிதப் பைகள் அல்லது உறைகளில் சாப்பாடு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. உணவுகள் பார்சல்களாக எடுத்துச் செல்லப்படும் போதும் காகிதப் பொருட்களிலே அவை சுற்றப்பட்டன.
ஆனால் காலப்போக்கில் செய்தித்தாள்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் காகிதப் பைகளின் இடத்தைப் பிடித்தன. நீண்டகாலமாக உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் கவர்கள் அல்லது அச்சிடப்பட்ட காகிதங்களில் வழங்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்.
இந்த நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) தெருவோர வியாபாரிகள், உணவகங்கள் மற்றும் இதர உணவு வியாபாரிகளுக்கு சில முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதில் வடை, போண்டா, பஜ்ஜி மற்றும் சமோசா போன்ற பொருட்களை செய்தித்தாள்கள் அல்லது இதர அச்சிடப்பட்ட காகிதங்களில் வழங்குவதோ அல்லது மடிப்பதோ ஆரோக்கியத்திற்கு தீங்கானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காகிதத்தில் அச்சிட பயன்படுத்தப்படும் மையில் ஈயம் இருப்பதாகவும் அவை சூடாகும்போது உணவில் ஒட்டி வயிற்றுக்குள் சென்று உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற நிபுணர்களிடம் பிபிசி பேசியது.

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் மும்பையில் தெருவோர வியாபாரி ஒருவர் செய்தித்தாளில் உணவுப் பொருளைச் சுற்றி விற்றதை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கண்டறிந்தது.
முந்தைய வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும் செய்தித்தாள்களில் உணவுப் பொருட்களை பரிமாற கூடாது என்ற புதிய அறிவிப்பை எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ வெளியிட்டுள்ளது.
எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 2018 விதிகள் உணவைப் பரிமாறுவதற்கும் சேமித்து வைப்பதற்கும் செய்தித்தாள்கள் அல்லது அது போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதை தடை செய்கிறது.
செய்தித்தாளை எதற்காகவெல்லாம் பயன்படுத்தக் கூடாது?
- உணவுப் பொருட்களில் கூடுதல் எண்ணெயை உறிஞ்சுவதற்கு
- உணவுப் பொருட்கள் அல்லது அவற்றை சமைக்க தேவையான பொருட்களைச் சுற்றுவதற்கு
- உணவு பரிமாற
- உணவைப் பொட்டலம் கட்டுவதற்கு

பட மூலாதாரம், Dr. syam prasad
மருத்துவர்கள் கூறுவது என்ன?
செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட சூடான உணவுகளை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, கர்நூல் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஷியாம் பிரசாத்திடம் பிபிசி பேசியது.
சோனாலஜிஸ்டாகப் (sonologist) பணியாற்றும் ஷியாம் பிரசாத், அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் மை உடலுக்குள் சென்றால் என்னவாகும் என்பது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இதனால் என்னென்ன உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம் மற்றும் உடலின் உள்ளுறுப்புகளில் இது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்தும் அவர் விளக்கினார்.
கேள்வி: காகிதங்களில் எழுத்துகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் மை உடலுக்குள் சென்றால் என்ன நடக்கும்?
பதில்: எழுத்துகளை அச்சிடப் பயன்படும் மையில் 'ஈயம்' உள்ளது. இது உணவு வழியாக உடலுக்குள் சென்று கல்லீரலைப் பாதிக்கிறது. இது இரத்தத்தில் கலந்து உடலின் உறுப்புகளையும் சேதப்படுத்துகிறது. சில சமயங்களில், மூளை பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
கேள்வி: வீடுகளில் கூட, சப்பாத்தி மற்றும் பூரி செய்யும்போது அவற்றை பழைய செய்தித்தாள்களின் மீது வைக்கும் வழக்கம் உள்ளதல்லவா? இதனால் என்ன விளைவு ஏற்படுகிறது?
பதில்: இந்தப் பழக்கம் பெரியவர்களை விடக் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இது அவர்களின் மன மற்றும் உடல் வளர்ச்சியில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் உடல் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில் இருப்பதால், இந்தத் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது.
கேள்வி: கர்ப்பிணிகள் மீது என்ன தாக்கம் ஏற்படுகிறது?
பதில்: கர்ப்பிணிகள் அச்சிடப்பட்ட காகிதங்களில் ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இது மிகவும் ஆபத்தானது. கரு முழுமையாக உருவாகாத நிலையில் இத்தகைய வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்றால், கருச்சிதைவு, மனநலக் குறைபாடுகளுடன் குழந்தை பிறத்தல் மற்றும் இறந்த குழந்தை பிறத்தல் போன்ற அபாயங்கள் ஏற்படலாம். எனவே, கர்ப்பிணிகள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
உணவு விற்பனை மற்றும் விநியோகத்தின் போது, உணவு வணிக நிறுவனங்கள் பாதுகாப்பான மற்றும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, உணவுப் பயன்பாட்டிற்கு ஏற்ற பேக்கேஜிங் பொருட்களை மட்டுமே பயன்படுத்துமாறு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தெரிவிக்கிறது.
இது தொடர்பாக நுகர்வோரும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உணவு பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படும் காகிதம் அல்லது காகிதப் பெட்டிகள், தட்டுகள் மற்றும் கோப்பைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள், உணவுத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதோடு, மாசற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் இந்த விதிமுறை தெளிவுபடுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
உடல்நல அபாயங்கள்
செய்தித்தாள் அச்சிடும் மையில் பிணைப்பான்கள் (binders), சாயங்கள், வேதிப்பொருட்கள், கனிம எண்ணெய் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் கன உலோகங்கள் ஆகியவை உள்ளன.
செய்தித்தாள் மீது சூடான உணவை வைக்கும்போது, அச்சு மையில் உள்ள வேதிப்பொருட்கள் வெப்பத்தின் காரணமாக உணவில் கலக்கக்கூடும்.
அத்தகைய உணவை உட்கொள்வது, இந்த வேதிப்பொருட்கள் நம் உடலுக்குள் நுழைந்து பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான அபாயத்தை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
சுகாதாரப் பிரச்னைகள்
செய்தித்தாள்கள் பல கைகளுக்கு மாறி, பல்வேறு சூழல்களிலிருந்து வருகின்றன.
இதனால் அவற்றின் மீது தூசி, பாக்டீரியா மற்றும் பிற மாசுக்கள் படிந்துவிடக்கூடும்.
"இது நுகர்வோரை நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக்கக்கூடும்," என்று மருத்துவர் ஷியாம் பிரசாத் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
1. நீங்கள் வீட்டிலும் காகிதத்தைப் பயன்படுத்துகிறீர்களா?
வீட்டில்கூட, சிலர் எண்ணெய் பசை கொண்ட உணவுகளைப் பொட்டலம் கட்டச் செய்தித்தாள்களைப் பயன்படுத்துகிறார்கள். இதைச் செய்யாமல் இருப்பது நல்லது.
2. எவ்வாறு பரிமாறுவது உகந்தது?
துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள், காய்ந்த இலைகள் அல்லது கண்ணாடிப் பாத்திரங்களில் உணவைப் பரிமாறுவது சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
உணவை காகிதத்தில் பொட்டலம் கட்டினால், யாரிடம் புகார் அளிக்கலாம்?
ஏதேனும் வணிகர்கள் செய்தித்தாள்கள் அல்லது துண்டுப் பிரசுரங்களில் வைத்து உணவை விற்பனை செய்தால், மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பின்வரும் வழிகளில் புகார் அளிக்கலாம்.
- எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.fssai.gov.in-இல் புகாரைப் பதிவு செய்யலாம்.
- உணவுப் பாதுகாப்பு குறித்த புகார்கள் இணையதளம் (FoSCoS): foscos.fssai.gov.in/consumergrievance
- மொபைல் செயலி: புகார்களைப் பதிவு செய்யவும், புகைப்படங்களுடன் அவற்றை நேரடியாகக் கண்காணிக்கவும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப்பைப் பயன்படுத்தலாம்.
- கட்டணமில்லா உதவி எண்: 1800-11-2100 (24 மணிநேரமும் இயங்கக்கூடிய்து)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























