You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள பெண்ணின் கடைசி வேண்டுகோள் - யாரால் நிறைவேற்றப்பட விரும்புகிறார்?
- எழுதியவர், ஸ்டெஃபானி ஹெகார்டி
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
அமெரிக்காவின் டென்னஸி மாகாண அரசு, விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராகி வரும் நிலையில், மரண தண்டனை கைதிகளுக்கான சிறையில் இருந்து கிறிஸ்டா பைக் இந்த வார தொடக்கத்தில் தனது தோழி ஆஷ்லீ செல்லர்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதுதான் பைக்கிடம் இருந்து செல்லர்ஸ் பெற்ற கடைசி தகவல்.
புதன்கிழமை தனது மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது, தனது அன்புக்குரியவர்கள் யாரும் அங்கு இருக்க வேண்டாம் என்று தான் விரும்புவதாக செல்லர்ஸிடம் பைக் தெரிவித்தார்.
"நாங்கள் அதைப் பார்ப்பதை அவர் விரும்பவில்லை" என்கிறார் செல்லர்ஸ்.
தான் அறிந்தவரை எப்போதும் கனிவாகவும், பாதுகாப்பானவராகவும் இருந்த இந்தப் பெண்ணும், 31 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவரும் ஒரே நபரென ஏற்றுக்கொள்வது செல்லர்ஸுக்கு கடினமாக இருக்கிறது.
தற்போது 50 வயதாகும் பைக், 18 வயதாக இருந்தபோது, அப்போது தனது காதலனாக இருந்த டடாரில் ஷிப்புடன் சேர்ந்து, 19 வயதான கொலீன் ஸ்லெம்மரை அடித்து, சித்ரவதை செய்து கொலை செய்தார். பிரச்னைக்குரிய இளைஞர்களுக்கான வேலைப் பயிற்சி முகாமில் இருவரும் கொலீனை சந்தித்திருந்தனர்.
1995 ஆம் ஆண்டு டென்னஸி மாகாணத்தின் நாக்ஸ்வில் நகரில், இந்தக் கொலை ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலீனின் மார்பில் சாத்தானிய சடங்குகளின் அடையாளமாகக் கருதப்படும் பென்டகிராம் சின்னம் செதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலீன் தன்னை அவமதித்ததாகவும், தனது காதலனைத் தன்னிடமிருந்து பறிக்க முயன்றதாகவும் பைக் குற்றம் சாட்டியிருந்தார்.
முகாமில் தங்கியிருந்த மேலும் இருவர் பின்னர் அளித்த சாட்சியத்தில், கொலைக்கு முன்னரும் பின்னரும் பைக் அதைப் பற்றி பெருமையாகப் பேசியதாகவும், கொலீனின் மண்டை ஓட்டின் ஒரு பகுதியை அவர்களிடம் காட்டியதாகவும் தெரிவித்தனர்.
ஒரு வருடத்துக்குப் பிறகு பைக்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது 17 வயதாக இருந்த ஷிப்புக்கு பரோல் பெறுவதற்கான வாய்ப்புடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீடுகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், பைக்கின் மரண தண்டனை புதன்கிழமை நிறைவேற்றப்படுவதாக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டால், 200 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் டென்னஸியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் பெண் பைக் ஆவார்.
1970களுக்குப் பிறகு அமெரிக்காவில் 18 பெண்களுக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 1,663 ஆண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொலீனின் தாயார், தனது மகள் "இறுதியாக அமைதியாக ஓய்வெடுக்க" பைக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், 226 பக்கங்கள் கொண்ட கருணை மனுவை தாக்கல் செய்துள்ள பைக்கின் வழக்கறிஞர்கள், கடைசி நேரத்தில் மரண தண்டனை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இன்னும் உள்ளனர். ஐ.நா. மனித உரிமை நிபுணர்களும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைக்கின் குழந்தைப் பருவத்தில் பாலியல் துஷ்பிரயோகம், கைவிடப்படுதல் மற்றும் புறக்கணிப்பு ஆகியவை நடந்ததற்கான ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகள் உள்ளன.
அதே குற்றத்திற்காக ஒரு பதின்ம வயதினராக இன்று அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்காது என்று அவரது வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.
அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து கடந்த ஆண்டுகளில், அவரது குழந்தைப் பருவம் குறித்த சில விவரங்களை அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வெளிக்கொணர்ந்துள்ளனர். அவற்றை பரிசீலிக்கும் வாய்ப்பு நடுவர் குழுவுக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
"அவர் எதிர்கொண்டிருந்த துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வரலாற்றை அவர்கள் அறிந்திருந்தபோதும், அதை நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என்பது நம்ப முடியாததாக இருக்கிறது" என்கிறார் கார்னெல் சட்டப் பள்ளியில் பாலினம் மற்றும் மரண தண்டனை தொடர்பான நிபுணரும், பைக் தரப்பில் பணியாற்றியவருமான சாண்ட்ரா பாப்காக்.
"அவரது வழக்கு பல வகைகளிலும் மிகவும் முக்கியமானது. புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நீண்ட பாலியல் வன்முறை வரலாறு மட்டுமின்றி, அதனுடன் அவரது இளம் வயது மற்றும் மனநல பாதிப்பும் இணைந்திருப்பது தான் இதற்குக் காரணம்" என்று அவர் கூறுகிறார்.
1995ஆம் ஆண்டு, பைக்கின் வழக்கறிஞர் தரப்பால் தடயவியல் உளவியல் நிபுணர் முனைவர் டயானா மெக்காய் பணியமர்த்தப்பட்டார்.
தாய், தந்தை இருவராலும் பைக் கடுமையாகப் புறக்கணிக்கப்பட்டதாக மெக்காய் கண்டறிந்தார்.
மெக்காயின் அறிக்கைப் படி, பைக்கின் தாயுடன் இருந்த பல கணவர்கள் மற்றும் காதலர்களால் அவர் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு பல முறை உள்ளாகியுள்ள அவர், அவருக்கு 11 வயதாக இருந்தபோதும், 17 வயதாக இருந்தபோதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியாக இருந்தபோது அவரது பாட்டியின் காதலனால் அவர் தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் கண்டறியப்பட்டது. இந்த பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக பைக் கூறியதை அவரது தாய் நம்பவில்லை என்று மெக்காய் தெரிவித்தார்.
ஆனால், பைக்கின் விசாரணையின் போது அவரது வழக்கறிஞர் மெக்காயை சாட்சியமளிக்க அழைக்கவில்லை. அவர் பரிந்துரைத்த பல சாட்சிகளையும் அழைக்கவில்லை.
பத்தாண்டுகளுக்கும் மேலாக கடந்த பின்னர், அவரது வழக்கை மறுபரிசீலனை செய்த நீதிமன்ற விசாரணையின் போது இந்த விவரங்கள் வெளிவந்தன. அப்போது புதிய வழக்கறிஞர்கள், பைக்கின் வழக்கறிஞர் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று வாதிட்டனர். ஆனால், அதனை நீதிபதி நிராகரித்தார்.
2021ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது பைக்குக்கு பைபோலார் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவர் அதற்கான மருந்துகளை உட்கொண்டு வருகிறார்.
பின்னர், பைக் தரப்பில் பணியாற்றிய மற்றொரு தடயவியல் உளவியல் நிபுணரான முனைவர் பெத்தானி பிராண்ட், 2023ஆம் ஆண்டு பைக்கை மதிப்பீடு செய்தார்.
பைக்கின் வழக்கு மிகவும் அரிதானது. ஏனெனில், தன்னைப் பாதுகாக்க வேண்டிய பலராலேயே அவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருந்தார் என அவர் கூறினார்.
"அவரது குழந்தைப் பருவம் உடல் ரீதியான, பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகங்களால் நிறைந்திருந்தது. அவர் பள்ளிக்குச் செல்லும் வயதுக்கு முன்பிருந்தே பல ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்" என்று அவர் குறிப்பிட்டார்.
பைபோலார் கோளாறு காரணமாக பைக்குக்கு சிகிச்சை அளிக்கப்படாத மனக்கிளர்ச்சி நிலைகளும், சிகிச்சை அளிக்கப்படாத பிடிஎஸ்டி-யும் இருந்ததாக பிராண்ட் கூறுகிறார்.
"அந்த இரண்டும் சேர்ந்து, அவர் இறுதியில் கொலை செய்த அந்தப் பெண்ணால் தான் எந்த அளவுக்கு அச்சுறுத்தப்படுவதாக அவர் உணர்ந்தார் என்பதிலும், அந்தச் சூழ்நிலையில் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாததிலும் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தின" என்று அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய பாப்காக், "அவரை மரண தண்டனைக்கு உட்படுத்த அனுமதித்தால், இந்த நாட்டில் மரண தண்டனை என்பது ஒரு கேலிக்கூத்து என்பதைத்தான் அது நமக்குச் சொல்கிறது. இது மிக மோசமான குற்றங்களைச் செய்தவர்களுக்காக மட்டும் வழங்கப்படுவதில்லை. மாறாக, மிக மோசமான சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெறுபவர்களுக்கும், மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கும் இது வழங்கப்படுகிறது" என்றார்.
'அவர் அதற்கான தண்டனையை பெற வேண்டும்'
கடந்த ஆண்டு, டென்னஸி நீதிமன்றம், பைக்கின் தண்டனையை மாற்றுவதற்கு நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் இருப்பதை அவர் நிரூபிக்கவில்லை என்று தீர்ப்பளித்தது. அவரது மேல்முறையீட்டு நடைமுறை முடிவடைந்த நிலையில், அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, ஒரு கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம், பைக்கின் விசாரணையின் போது அவரது தாய், தந்தை மற்றும் அத்தை அளித்த சாட்சியங்களின் மூலம் அவரது கடினமான குழந்தைப் பருவம் குறித்து நடுவர் குழு ஏற்கெனவே அறிந்திருந்ததாகத் தீர்ப்பளித்திருந்தது.
பைபோலார் கோளாறு, அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (PTSD) மற்றும் மூளை பாதிப்பு தொடர்பான புதிய ஆதாரங்கள், நடுவர் குழு ஏற்கெனவே கேட்டறிந்த விஷயங்களையே "பெரும்பாலும் மீண்டும் கூறுவதாக" இருந்தன என்றும், அவை தீர்ப்பை மாற்றியிருக்காது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலைக் குற்றவாளியான லிசா மாண்ட்கோமெரியின் வழக்குடன் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. அவரும் மனநல பாதிப்புடன், துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர் என்றும், அவருக்கு கருணை காட்டப்பட வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
மாண்ட்கோமெரியின் தண்டனையை மாற்றுவதற்கான சட்டரீதியான முயற்சிகள் தோல்வியடைந்தன. 2021ஆம் ஆண்டு இந்தியானாவில் விஷ ஊசி செலுத்தி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
டென்னஸி ஆளுநர் பில் லீ, பைக்குக்கு கருணை வழங்காவிட்டால், செப்டம்பர் 30ஆம் தேதி அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.
இந்த முடிவு கடைசி நேரம் வரை வராமல் இருக்க வாய்ப்புள்ளது. மரண தண்டனை வழக்கில் லீ இதுவரை ஒருபோதும் கருணை வழங்கியதில்லை.
இந்த வாரம், டென்னஸி நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்தக் கோரிய பைக்கின் மனுவை நிராகரித்தது. அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தாங்கள் ஆலோசித்து வருவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாளில், முழுவதும் பெண்களைக் கொண்ட குழுவை தான் விரும்புவதாக பைக் கோரியுள்ளார். ஆண்கள் குழுவால் தன்னைப் பிடித்து கட்டுப்படுத்துவது தனது மன உளைச்சலை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறுகிறார்.
பைக்கை மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறைக்கு அழைத்துச் செல்லும் பணியை பெண் காவலர்கள் மேற்கொள்வதே நோக்கம் என்று டென்னஸி அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.
கொலீனின் தாயார் மே மார்டினெஸ், கிறிஸ்டா பைக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை ஆதரிக்கிறார்.
"அவர் குற்றம் செய்தார். அதற்காக அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்று 2021ஆம் ஆண்டு நாக்ஸ்வில்லில் உள்ள டபிள்யூபிஐஆர் ( WBIR ) தொலைக்காட்சி நிலையத்திடம் அவர் கூறியிருந்தார். இந்த வாரம் பிபிசியிடம் பேசியபோதும், அந்தக் கருத்தில் தான் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
பைக் இறப்பதற்கு முன்பு அவர் துன்பப்பட வேண்டும் என்று மார்டினெஸ் டபிள்யூபிஐஆர்-யிடம் தெரிவித்தார்.
"கொலீன் அனுபவித்த அதே வலியை அவரும் உணர்ந்தார் என்றால், நான் நன்றாக உணர்வேன்" என்றார் மார்டினெஸ்.
"ஒவ்வொரு நாளும் என் இதயம் உடைகிறது. ஏனென்றால், நான் அதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். இனி என்னால் முடியவில்லை. நான் இறப்பதற்கு முன்பு இது நடந்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.
"கொலீனைப் பற்றியோ, அவர் எப்படி இறந்தார், அது எவ்வளவு கொடுமையாக இருந்தது என்பதையோ நினைக்காமல் ஒரு நாள் கூட கடந்து செல்வதில்லை. கிறிஸ்டாவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் இதை முடித்துக்கொள்ள முடியும். என் மகளுக்கு நிம்மதி கிடைக்கும். அவர் இறுதியாக அமைதியாக ஓய்வெடுக்க முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக செயல்படும் 'ஜஸ்டிஸ் கோயலிஷன்' என்ற அமைப்பு, மரண தண்டனையைப் பார்ப்பதற்காக மார்டினெஸ் டென்னஸிக்கு பயணம் செய்வதற்கு உதவ நிதி திரட்டியுள்ளது.
இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் ராபர்ட் பிரேஸ்வெல், பைக்கின் சம வயதினரைக் கொண்ட நடுவர் குழுவால் இந்தத் தண்டனை தீர்மானிக்கப்பட்டது என்றும், கொலீனின் குடும்பத்தினர் விரும்புவதும் இதுதான் என்றும் கூறினார்.
"செப்டம்பர் 30ஆம் தேதி அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற குடும்பத்தினரின் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
ஆஷ்லீ செல்லர்ஸ், ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தோன்றும் இரண்டு நம்பிக்கைகளுக்கு இடையே போராடுகிறார். கொலீனின் தாயாருக்கு நீதி வழங்கப்பட்டதாக உணருவதற்கான உரிமை உள்ளது என்பது ஒன்று. கிறிஸ்டா உள்ளிட்ட அனைவருக்கும் தங்களை மீட்டுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது மற்றொன்று.
"தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கும் நபரையும், கொலீனுக்கு நடந்த அந்தக் கொடூரமான சம்பவத்தையும் எப்படி ஒன்றாகப் புரிந்துகொள்வது என்று நான் நினைக்கும்போது, எனக்கு அர்த்தமுள்ளதாகத் தோன்றும் ஒரே விஷயம் மனநலம் மற்றும் மன உளைச்சல் தொடர்பானது. தங்களுக்குத் தேவையான ஆதரவோ உதவியோ இல்லாத ஒரு தருணத்தில், மனிதர்கள் ஒரு விஷயத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது " என்று செல்லர்ஸ் கூறுகிறார்.
"உங்கள் இளம் வயதில் இதுபோன்ற கொடூரமான விஷயங்கள் நடக்கின்றன. பின்னர் அந்த மன உளைச்சல்கள் உங்களுக்குள்ளும், நமது சமூகத்திலும் தொடர்ந்து பயணிக்கின்றன. அதன் விளைவாக நீங்கள் வேறொருவருக்குத் தீங்கு விளைவிக்கிறீர்கள்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்தில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தபோது, பைக்கை செல்லர்ஸ் சிறையில் சந்தித்தார்.
உயர் பாதுகாப்புப் பிரிவில், அவர்களது அறைக் கதவுகளில் இருந்த உணவு வழங்கும் சிறிய திறப்புகள் வழியாக இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
தற்போது செல்லர்ஸ், நீதி சீர்திருத்தம் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆதரவாளராகப் பணியாற்றி வருகிறார்.
"ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் முக்கியமானது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள், இல்லையா? கொலீனின் வாழ்க்கையும் முக்கியமானது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.
"இந்த தருணத்தில் கிறிஸ்டா வாழ்வதை விடத் தன் உயிருக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதிகமாகப் போராடுகிறார் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு