கொல்லூர்: 'வைரச் சுரங்கம்' என்று பெயர் பெற்ற இந்த ஊரில் இப்போது என்ன நிலைமை? இன்னும் வைரம் கிடைக்கிறதா?

தெருக்களில் குவியல் குவியலாக வைரங்கள் விற்கப்பட்டன என்றால், தெலுங்கு மக்களின் நினைவுக்கு வருவது விஜயநகரப் பேரரசுதான்.
படக்குறிப்பு, குறைந்தது 800 ஆண்டுகளுக்கு முன்பே, கொல்லூர் உலகப் புகழ்பெற்ற வைரச் சுரங்கம் கொண்ட நகரமாகப் புகழ் பெற்றது என்று வரலாறு கூறுகிறது.
    • எழுதியவர், பல்லா சதீஷ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

தெருக்களில் குவியல் குவியலாக வைரங்கள் விற்கப்பட்டன என்றால், தெலுங்கு மக்களின் நினைவுக்கு வருவது விஜயநகரப் பேரரசுதான்.

ராயர்களின் ஆட்சிக் காலத்தில் ஹம்பி நகரத் தெருக்களில் நடைபெற்ற அந்தப் பிரமாண்டமான வணிகம் குறித்து பல கதைகள் உள்ளன. திரைப்படங்களிலும் பார்த்திருக்கலாம்.

ஆனால், அதே தெலுங்கு மண்ணை ஆட்சி செய்த மற்றொரு பேரரசும் வைர வணிகத்தில் அதே அளவுக்குப் புகழ்பெற்றிருந்தது என்பது பலருக்குத் தெரியாது. அது கோல்கொண்டா பேரரசு. அதன் தலைநகரம் இருந்த இடத்தில்தான் இன்றைய ஹைதராபாத் அமைந்துள்ளது.

பழமையான கோட்டை என்ற அளவில் மட்டுமே தற்போது பெரும்பாலான தெலுங்கு மக்களுக்குத் தெரிந்துள்ள கோல்கொண்டா என்ற சொல், ஆங்கில மொழியில் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாகவும் மாறியிருப்பதில் ஆச்சரியமில்லை.

ஹம்பி நகரத் தெருக்களில் எந்த அளவுக்கு வைரங்கள் விற்கப்பட்டனவோ, அதே அளவுக்கு தற்போதைய ஹைதராபாத்தின் பழைய நகரப் பகுதியில் உள்ள கார்வான் தெருக்களிலும் வைரங்கள் விற்கப்பட்டதாகக் கூறலாம்.

சுமார் 18-ஆம் நூற்றாண்டு வரை, உலகிலேயே வைரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்த, மிக முக்கியமான ஆதாரமாக இந்தியா இருந்தது.

18-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் வைரச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தென்னிந்தியாவில் உள்ள கிருஷ்ணா, துங்கபத்ரா மற்றும் பென்னா நதிப் பகுதிகள் தான் இந்த வைரங்கள் உருவான இடங்களாகும்.

அதனால் தான் விஜயநகரம், பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா பேரரசுகள், அதாவது ஒட்டுமொத்த தக்காணப் பகுதியும், வைர வணிகத்துடன் இணைத்துப் பார்க்கப்பட்டன.

விஜயநகர, பிஜாப்பூர் மற்றும் கோல்கொண்டா
படக்குறிப்பு, விஜயநகர, பிஜாப்பூர் மற்றும் கோல்கொண்டா பேரரசுகள் வைர வர்த்தகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தன.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒரு காலத்தில் கோல்கொண்டா பேரரசின் பகுதியாக இருந்ததும், தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அந்த வைரம் கிடைத்த கிராமத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், இன்றைய பல்நாடு மாவட்டத்தில் உள்ள பெல்லம்கொண்டாவைக் கடந்து செல்ல வேண்டும்.

வயல்வெளிகள் வழியாகப் பயணித்து, மரங்களையும் மலைகளையும் கடந்து, கார்கள் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத, டிராக்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய பாதையில் செல்ல வேண்டும்.

அங்கு சென்றால், செல்போன் சிக்னலும் மின்சாரமும் இல்லாத ஒரு கிராமத்தை அடையலாம்.

அந்தக் கிராமம்தான் புலிச்சிந்தலா தடுப்பணைக்குப் பின்னால் அமைந்துள்ள கொல்லூர் கிராமம்.

அந்தக் கிராமத்தில் உள்ள வீடுகளில் யாரையும் காண முடிவதில்லை.

ஆனால், வாரக்கணக்கில், சிலர் தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு, மண்ணில் எதையோ தேடுவதும், குழிகள் தோண்டுவதும், மணலைச் சலிப்பதும் காணப்படுகிறது.

இந்த மக்கள் பல இடங்களிலிருந்தும் அந்தக் கிராமத்திற்கு வருகிறார்கள்.

வரலாற்றின்படி, குறைந்தது 800 ஆண்டுகளுக்கு முன்பே உலகப் புகழ்பெற்ற வைரச் சுரங்கத்தைக் கொண்ட பகுதியாக இந்தக் கிராமம் இருந்துள்ளது.

இந்த நகரத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், குறைந்தது 400 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்கள், பயணிகள் மற்றும் வணிகர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
படக்குறிப்பு, புளிச்சிந்தலை நீர்த்தேக்கத்தால் வெள்ளம் சூழ்ந்த பகுதியாக கொல்லூர் மாறியுள்ளது.

இந்த பகுதியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், குறைந்தது 400 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்கள், பயணிகள் மற்றும் வணிகர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

கி.பி. 1618 முதல் 1622 வரையிலான காலகட்டத்தில், வில்லியம் மோத்தோல்ட் என்ற வெளிநாட்டவர் ஐரோப்பாவிலிருந்து கொல்லூர் வந்தார். அங்கு வாழ்ந்த மக்களைக் கண்டு அவர் வியப்படைந்தார்.

அந்தக் கிராமத்துக்கு அருகிலுள்ள வைரச் சுரங்கங்களில் 30,000 பேர் வேலை செய்வதாக அவர் எழுதியுள்ளார்.

அவர் எழுதி 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 1665-ஆம் ஆண்டு, பாப்டிஸ்ட் டேவர்னியர் என்ற பிரெஞ்சுப் பயணி அதே நகரத்துக்கு வந்தார்.

அந்தக் கிராமத்தின் வைரச் சுரங்கங்களில் 30,000 பேர் அல்ல, 60,000 பேர் வேலை செய்வதாக அவர் எழுதியுள்ளார்.

இவர்கள் மட்டுமின்றி, மார்கோ போலோ, ஹென்றி ஹோவர்ட், காலின் மெக்கன்சி உள்ளிட்ட பலரும் இந்த வைரச் சுரங்கங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர்.

கி.பி. 1618 முதல் 1622 வரையிலான காலகட்டத்தில், வில்லியம் மோத்தோல்ட் என்ற வெளிநாட்டவர் ஐரோப்பாவிலிருந்து கொல்லூர் வந்தார். அங்கு வாழ்ந்த மக்களைக் கண்டு அவர் வியப்படைந்தார்.
படக்குறிப்பு, கொல்லூரில் சிலர் இன்னும் வைரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிற்காலத்தில், இந்தக் கிராமம் முற்றிலும் நீரில் மூழ்கி மறைந்தது.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட இந்தக் கிராமத்தில், தற்போது அதன் கடைசிப் பகுதியில் உள்ள உயரமான குன்றில் ஆடுகளை மேய்த்து வாழும் நான்கு குடும்பங்கள் மட்டுமே உள்ளன.

அங்கிருந்து படகில் ஏறி, கிருஷ்ணா ஆற்றின் நடுவே உள்ள புலிச்சிந்தலா நீர்த்தேக்கத்தில் சில கிலோமீட்டர் பயணித்தால், நடுவில் தீவு போன்ற ஒரு பகுதியைக் காணலாம்.

நீர்த்தேக்கத்தில் மூழ்கிய கிராமத்தின் நடுவில் உள்ள மேடான பகுதியே அது.

அந்தத் தீவு போன்ற பகுதியில் சிறிய கூடாரங்களைக் காண முடியும். சிலர் மண்ணில் எதையோ தோண்டித் தேடுவதையும் பார்க்கலாம்.

அவர்கள் அனைவரும் தங்களது வீடுகள், திண்ணைகள் மற்றும் குடும்பங்களை விட்டுவிட்டு, அங்கு வந்து வைரங்களைத் தேடுகின்றனர். அங்கு இன்னும் வைரங்கள் கிடைப்பதால், சிலர் தொடர்ந்து தங்களது அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து வருகின்றனர்.

2018-ஆம் ஆண்டு பிபிசி குழுவினர் அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, அது இவ்வளவு தூரம் நீரில் மூழ்கியிருக்கவில்லை.

அப்போதும் அங்கு டஜன் கணக்கானோர் வைரங்களைத் தோண்டி எடுத்துக்கொண்டிருந்தனர். பிபிசி குழுவினர் 2025-ஆம் ஆண்டில் மீண்டும் அந்தக் கிராமத்துக்குச் சென்றனர்.

2018ஆம் ஆண்டு பிபிசி குழுவினர் அந்தக் கிராமத்துக்குச் சென்றபோது, அது இவ்வளவு தூரம் நீரில் மூழ்கியிருக்கவில்லை.
படக்குறிப்பு, ஓய்வு பெற்ற விஞ்ஞானி எஸ்.வி.சத்தியநாராயணன் ஜி.எஸ்.ஐ

சுரங்கத்துக்குப் இணைச்சொல்லாக மாறியது

சுருக்கமாகச் சொன்னால், கொல்லூர் என்றாலே சுரங்கம் என்ற சொல்லுக்கு இணையானதாக மாறிவிட்டது. அந்தக் காலத்தில் இந்தக் கிராமம் எந்த அளவுக்குப் புகழ்பெற்றிருந்தது என்றால், "சுரங்கம் என்றாலே கொல்லூர் தான்" என்று கூறும் அளவுக்குப் பிரபலமாக இருந்தது.

"18ஆம் நூற்றாண்டு வரை, தென்னிந்தியாவின் தக்காணப் பகுதி வைரங்களின் முக்கிய ஆதாரமாக இருந்தது. கோஹினூர் மட்டுமின்றி, கிரேட் முகல், ரீஜென்ட், ஆர்லோஃப், நிஜாம் மற்றும் ஹோப் போன்ற வைரங்களும் இங்குதான் கண்டெடுக்கப்பட்டன. குறிப்பாக, 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை வைர வணிகம் செழித்தோங்கியது" என்று இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி எஸ்.வி. சத்யநாராயணா பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள கிருஷ்ணா, பென்னா நதிப் பள்ளத்தாக்குகளில் அதிக அளவில் வைரங்கள் கிடைத்தன. ஆங்காங்கே இருந்த சிறிய சுரங்கங்களைத் தவிர்த்துப் பார்த்தால், உலகிலேயே வைரங்களின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தப் பகுதிதான் இருந்தது. 1725-ஆம் ஆண்டு பிரேசிலில் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை இதுவே நிலைமையாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் வைரங்கள் முக்கியப் பங்கு வகித்தன. விஜயநகரம், பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா பேரரசுகளின் ஆட்சிக் காலங்களில் வைரங்கள் மிகவும் பிரபலமடைந்தன" என்று எஸ்.வி. சத்யநாராயணா பிபிசியிடம் தெரிவித்தார்.

"துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிப் பகுதிகளில் தான் பெரும்பாலும் வைரங்கள் கிடைத்தன. அவற்றில் கொல்லூர் மிகவும் புகழ்பெற்றது. ராவுலகொண்டா போன்ற சுரங்கங்களும் இருந்தன. கந்திகோட்டை போன்ற வர்த்தக மையங்களும் இருந்தன. இதற்காக விஜயநகரப் பேரரசு மிகவும் புகழ்பெற்றிருந்தது. பின்னர், விஜயநகரப் பேரரசின் இடத்தைப் பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா பேரரசுகள் பிடித்தன.

வைரங்களைச் சுற்றிப் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளன. சில வைரங்கள் சாபம் கொண்டவை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக, கோடைக்காலத்தில் ஆறு வறண்டு போகும்போது வெளிப்படும் மண்ணில்தான் வைரங்கள் தேடப்படுகின்றன" என்று வரலாற்று ஆய்வாளரும் பத்திரிகையாளருமான நானிசெட்டி ஷெரிஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

 நனிசெட்டி செரிஷ்
படக்குறிப்பு, வரலாற்று ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர் நனிசெட்டி செரிஷ்

வைரங்களைப் பட்டை தீட்டுவதில் புகழ்பெற்ற கார்வான்

1518 முதல் 1687 வரையிலான காலகட்டத்தில், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு குதுப் ஷாஹி வம்சத்தினர் கோல்கொண்டா பேரரசை ஆட்சி செய்தனர்.

மேற்கில் குஜராத்தின் சூரத் முதல் கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினம் வரை இந்தப் பேரரசு பரவியிருந்தது.

இந்த இரு நகரங்களும் பண்டைய காலத்திலிருந்தே சர்வதேச வணிக மையங்களாக விளங்கின. இவற்றுக்கு இடையில் ஹைதராபாத் அமைந்திருந்தது.

பழைய ஹைதராபாத் நகரில் உள்ள கார்வான் பகுதி, ஒரு காலத்தில் வைரங்களைப் பட்டை தீட்டுதல், வெட்டுதல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான முக்கிய மையமாக இருந்தது. குஜராத்தியர்கள், மார்வாரிகள் உள்ளிட்ட இந்திய வணிகர்கள் கார்வானில் குடியேறினர். வெளிநாட்டவர்களும் அங்கு வந்து சென்றனர்.

"தெவனோ என்ற பிரெஞ்சுப் பயணி, கோல்கொண்டா ராஜ்ஜியம் வைரங்கள் நிறைந்த நிலம் என்று எழுதியுள்ளார். 17ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டாவின் கட்டுப்பாட்டில் 23 சுரங்கங்களும், பீஜப்பூரின் கட்டுப்பாட்டில் 15 சுரங்கங்களும் இருந்தன. அங்கு ஏராளமானோர் வேலை செய்தனர். கோல்கொண்டாவில் வைரங்கள் கிடைத்ததே ஔரங்கசீப் அந்தப் பேரரசின் மீது படையெடுத்ததற்கான காரணங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது" என்று நானிசெட்டி ஷெரிஷ் தெரிவித்தார்.

"விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, வைர வணிகர்களுக்கான மிகப்பெரிய மையமாக கோல்கொண்டா ராஜ்ஜியம் உருவெடுத்தது" என்று ஷெரிஷ் கூறுகிறார்.

"விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, வைர வணிகர்களுக்கான மிகப்பெரிய மையமாக கோல்கொண்டா ராஜ்ஜியம் உருவெடுத்தது" என்று ஷெரிஷ் கூறுகிறார்.
படக்குறிப்பு, கோஹினூர் வைரம்

கோஹினூர் இங்கு கண்டெடுக்கப்பட்டதா?

கோஹினூர் வைரம் எங்கு கண்டெடுக்கப்பட்டது என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்றாலும், பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் புவியியலாளர்களும் அது கொல்லூரில் கண்டெடுக்கப்பட்டதாக நம்புகின்றனர்.

கோஹினூர் வைரம் ஷாஜகானின் கைக்குச் சென்ற பிறகு, அது எவ்வாறு கைமாறி இறுதியில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சென்றடைந்தது என்பது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

ஆனால், அது ஷாஜகானிடம் எவ்வாறு சென்றடைந்தது என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இல்லை.

"கோஹினூர் வைரம் குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. எனது ஆய்வின்படி, அது கொல்லூர் சுரங்கத்திலிருந்து நேரடியாக கந்திகோட்டையின் ஆட்சியாளரான மீர் ஜும்லாவிடம் சென்றது. அவரிடமிருந்து அது ஷாஜகானுக்கு வழங்கப்பட்டது. தனக்கு ஆதரவளித்ததற்கான அடையாளமாக, மீர் ஜும்லா அந்த வைரத்தை ஷாஜகானுக்குப் பரிசாக வழங்கினார்.

முகலாய ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள அதன் நிறம், அளவு, தெளிந்த நீர்மை, ஒளி ஊடுருவும் தன்மை மற்றும் சிவப்பு வெல்வெட் துணியால் செய்யப்பட்ட பெட்டி ஆகியவை அது கோஹினூர் வைரம்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு பெரிய வைரங்கள் கிடைத்த ஒரே சுரங்கம் கொல்லூர்தான். மீர் ஜும்லாவிடம் இருந்த காலம் வரை அந்த வைரத்துக்குப் பெயர் எதுவும் இல்லை. பாரசீக மொழியில் 'ஒளியின் மலை' என்று பொருள்படும் கோஹினூர் என்ற பெயரை ஷாஜகான் அதற்கு வழங்கினார்" என்று ஷெரிஷ் கூறுகிறார்.

மீர் ஜும்லாவிடம் இருந்த வைரங்கள் குறித்து பிரெஞ்சு நாட்டவரான பாப்டிஸ்ட் டேவர்னியர் விரிவாக எழுதியுள்ளார். அவரிடம் குவியல் குவியலாக வைரங்கள் இருந்ததாக டேவர்னியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி எஸ்.வி. சத்யநாராயணாவும் இதே கருத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

"அது 1656-ஆம் ஆண்டிலோ அல்லது 1304-ஆம் ஆண்டிலோ கொல்லூரில் கண்டெடுக்கப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார்.

"கோஹினூர் எப்போது கண்டெடுக்கப்பட்டது, கண்டெடுக்கப்பட்டபோது அதன் எடை எவ்வளவு இருந்தது என்பதில் சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால், அது கிருஷ்ணா நதிப் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்று ஷெரிஷ் கூறினார்.

இங்கு வைரங்கள் ஏன் கண்டெடுக்கப்பட்டன?

ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய அனந்தபூர், கர்னூல், கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் அதிக அளவிலும், தெலங்கானாவின் தற்போதைய மகபூப்நகர் மாவட்டம், கர்நாடகாவின் ராய்ச்சூர், மகாராஷ்டிராவின் வைராகர் பகுதி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய பிரகாசம், கடப்பா மாவட்டங்களில் குறைந்த அளவிலும் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன.

வைரங்கள் பெரும்பாலும் கிம்பர்லைட், லாம்ப்ரோயிட், கூழாங்கல் படிவப் பாறைகள் மற்றும் சரளைக் கற்களுடன் தொடர்புடையவை.

"இந்தப் பழமையான சுரங்கங்கள் அனைத்தும் ஏறக்குறைய படிவுப் பாறைகளில்தான் அமைந்துள்ளன. அதாவது, கிம்பர்லைட், லாம்ப்ரோயிட் மற்றும் மேற்பரப்பு மண்ணில் உள்ளன. கிருஷ்ணா, குண்டூர், மகபூப்நகர், கர்னூல், பிரகாசம், கடப்பா, அனந்தபூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில், கிருஷ்ணா - துங்கபத்ரா ஆறுகள் சங்கமிக்கும் இடத்திலிருந்து விஜயவாடா வரை சுமார் 300 கிலோமீட்டர் தொலைவுக்குப் பரவியுள்ளன.

கொல்லூர் - பரிடாலா பகுதிக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில்தான் பெரும்பாலான சுரங்கப் பணிகள் நடைபெற்றன. கோஹினூர், கிரேட் முகல், பிட் அல்லது ரீஜென்ட், ஆர்லோஃப், நிஜாம் மற்றும் ஹோப் வைரங்கள் இங்குதான் கண்டெடுக்கப்பட்டன. துங்கபத்ரா - கிருஷ்ணா ஆறுகள் சங்கமிக்கும் இடத்துக்கும், கொல்லூர் - பரிடாலா பகுதி என்று அழைக்கப்படும் இந்த நிலப்பரப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் வைரங்கள் கிடைத்தன" என்று எஸ்.வி. சத்யநாராயணா தெரிவித்தார்.

எஸ்.வி. சத்யநாராயணாவின் கூற்றுப்படி, கர்னூல் மாவட்டத்தின் ராமல்லகோட், பனகனப்பள்ளி, வஜ்ரகிரி, முனிமடுகு; குண்டூர் மாவட்டத்தின் கொல்லூர்; கிருஷ்ணா மாவட்டத்தின் மல்லவெல்லி ஆகிய பகுதிகளில் முக்கியமான கூழாங்கல் படிவப் பாறைத் தாதுக்கள் காணப்படுகின்றன.

அனந்தபூர் மற்றும் கர்னூல் மாவட்டங்களில் உள்ள வஜ்ரகரூர், ஜொன்னகிரி பகுதிகள், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் கிம்பர்லைட் குழாய்ப் பாறைகள், கர்னூல் மாவட்டத்தில் உள்ள செலிமா லாம்ப்ரோயிட் பாறைத் திணிவுகள் ஆகிய பகுதிகளிலும் வைரச் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளின் மண்ணில் வைரங்கள் உள்ளன.

"விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணா மாவட்டத்தின் சரளைச் சுரங்கங்களிலும், வஜ்ரகரூர் பகுதிகளின் அகழ்வாராய்ச்சிகளிலும் பெருமளவு வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. 1610-ஆம் ஆண்டுவாக்கில் வஜ்ரகரூரில் 400 காரட்டுக்கும் அதிகமான எடையுள்ள வைரத்தைப் போர்ச்சுகீசியப் பயணி ஒருவர் கண்டெடுத்ததாக ஹோவர்ட் 1677-ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.

கார்சியா டா ஓர்டாவின் கூற்றுப்படி, 1534-ஆம் ஆண்டு விஜயநகரத்தில் சிறிய கோழி முட்டையின் அளவுள்ள வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனுடன் சுமார் 150, 175 மற்றும் 312 காரட் எடையுள்ள மேலும் மூன்று வைரங்களும் கிடைத்தன. பல வைரங்கள் எந்தெந்த ஆண்டுகளில் எந்தெந்த மன்னர்களைச் சென்றடைந்தன என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்" என்று சத்யநாராயணா தெரிவித்தார்.

இப்போது ஏன் வைரங்களைத் தோண்டி எடுப்பதில்லை?

வரலாற்று ரீதியாக, கொல்லூர் போன்ற இடங்களில் 13-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை சுமார் 600 ஆண்டுகளாகப் பெரிய அளவில் வைரச் சுரங்கப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இதைத் தவிர, வேறு பல சுரங்கங்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வைரங்களை உற்பத்தி செய்துள்ளன.

"ஒரு வைரச் சுரங்கம் அதிக அளவில் வைரங்களை உற்பத்தி செய்தால் மட்டுமே லாபகரமானதாக இருக்கும். இல்லையென்றால், தொழில்துறை அளவில் வைரங்களை எடுப்பது சாத்தியமில்லை" என்று ஷெரிஷ் கூறினார்.

இந்தச் சுரங்கங்களும் இதே பிரச்னையை எதிர்கொண்டன. அந்தந்த மன்னர்களின் ஆட்சிக் காலத்திலேயே இந்த வைரச் சுரங்கங்கள் அனைத்தும் சல்லடை போட்டுத் தேடப்பட்டுவிட்டன. இப்போது அங்கு எதுவும் இல்லை.

அதாவது, வைரங்களே கிடைப்பதில்லை என்று அர்த்தமல்ல. அவ்வப்போது ஆங்காங்கே சில வைரங்கள் கிடைக்கலாம். ஆனால், தொழில்துறை அளவில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு வைரங்கள் கிடைப்பதில்லை.

1890-94-க்கு இடைப்பட்ட காலத்தில், ஹைதராபாத் தக்காண நிறுவனம் இன்றைய பரிதாலா அருகே வைரச் சுரங்கத் தொழிலைத் தொடங்கியது

"1725ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரேசிலில் புதிய வைரச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, பேரரசுகளின் வீழ்ச்சி, குறிப்பாக வைரங்களின் முக்கியத்துவம் குறைந்தது ஆகிய காரணங்களால் இங்குள்ள சுரங்கப் பணிகள் நின்றுபோயின. இருப்பினும், ஆங்காங்கே வைரங்களைத் தேடும் பணி தொடர்கிறது. 1890 முதல் 1894 வரை, ஹைதராபாத் டெக்கான் நிறுவனம் தற்போதைய பரிடாலா பகுதிக்கு அருகே மீண்டும் வைரங்களைத் தேடும் பணியைத் தொடங்கியது. ஆனால், அது லாபகரமாக இல்லாததால் நிறுத்தப்பட்டது.

1825-ஆம் ஆண்டு, வாய்சி என்பவர் கிருஷ்ணா - பென்னா நதிப் பள்ளத்தாக்குகளில் உள்ள சுரங்கங்கள் ஏறக்குறைய காலியாகிவிட்டதாகவும், பெரிய அளவில் வைரங்கள் கிடைக்கவில்லை என்றும், சில சிறிய சுரங்கங்களைத் தேடி வருவதாகவும் எழுதியுள்ளார்" என்று எஸ்.வி. சத்யநாராயணா தெரிவித்தார்.

"1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய அரசும் இப்பகுதிகளில் வைரங்களைத் தோண்டி எடுக்க முயற்சி செய்தது. குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களில் உள்ள கொல்லூர், சந்திரலபாடு, பரித்தலா பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கிம்பர்லைட், லாம்ப்ரோயிட் பாறைகள் தேடப்பட்டன. ஆனால், பெரிய பலன் கிடைக்கவில்லை. மிகச் சிறிய வைரங்களே கிடைத்தன. தொழில்முறையில் லாபகரமாக இல்லாததால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன" என்று சத்யநாராயணா கூறினார்.

இப்போது யார் தோண்டுகிறார்கள்?

தற்போது சாதாரண மக்கள், ஏழைகள், குறைந்த வருமானம் கொண்ட நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கும் நோக்கில் வைரங்களைத் தேடி வருகின்றனர்.

மழைக்காலத்தின் முதல் சில நாட்களில் தான் இந்த வைரங்கள் குறிப்பாகக் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

கர்னூல் மாவட்டத்தின் ஜொன்னகிரி, அனந்தபூர் மாவட்டத்தின் வஜ்ரகரூர், கிருஷ்ணா மாவட்டத்தின் பரிடாலா, குண்டூர் மாவட்டத்தின் கொல்லூர் ஆகிய பகுதிகளில் மே மாத இறுதி முதல் ஜூலை மாத இறுதி வரை, இரு தெலுங்கு மாநிலங்களிலிருந்தும் வைரங்களைத் தேடி வருபவர்களைக் காண முடிகிறது.

அரிசி, உப்பு, எண்ணெய், மிளகாய் போன்ற அடிப்படைப் பொருள்களைக் கொண்டு வருபவர்கள், அங்கு மீன் பிடித்தோ அல்லது வாரச் சந்தையில் காய்கறிகளை வாங்கியோ தங்கிவிடுகின்றனர். பின்னர், வைரங்களைத் தேடத் தொடங்குகின்றனர்.

குடும்பத்துடன் வருபவர்கள், குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு வருபவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் குழுவாக வருபவர்கள் எனப் பல வகையான மக்கள் இங்கு வருகின்றனர். வாரத்தின் மற்ற நாட்களில் வேலை செய்துவிட்டு, வார இறுதி நாட்களில் மட்டும் வைரங்களைத் தேடி வருபவர்களும் உள்ளனர்.

விஜயம்மா
படக்குறிப்பு, விஜயம்மா, வைரங்களைத் தேடும் பெண்

இங்கு வைரங்களைத் தேடுபவர்கள் பலரிடம் பிபிசி பேசியது.

தாங்கள் வைரத்தைக் கண்டுபிடித்ததாக யாரும் கூறவில்லை.

ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நபருக்கு வைரம் கிடைத்ததாகவும், அது மிகவும் விலை உயர்ந்தது என்றும், அதை வேறொருவரிடம் விற்றுவிட்டதாகவும் கூறுகின்றனர்.

இதுபோன்ற கதைகள் தான் அங்கு கேட்கக் கிடைக்கின்றன. அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்பதை யாராலும் தீர்மானிக்க முடியவில்லை.

பிடுகுரல்லாவைச் சேர்ந்த விஜயம்மா, மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடியில் பணத்தை இழந்தார். தனது கடன்களை அடைப்பதற்காக வைரங்களைத் தேடி ஒரு மாதம் கொல்லூரில் தங்கியிருந்தார்.

"யாருக்கு வைரம் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்குக் கிடைக்கும். யாரும் அதை மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு யாராவது ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது." என்று அவர் கூறினார்.

எர்ரகொண்டபாலம் பகுதியைச் சேர்ந்த நரசம்மாவும் ஏழு மாதங்கள் கொல்லூரில் தங்கியிருந்தார்.

ஒவ்வொரு மாதமும் தனது ஓய்வூதியத்தைப் பெறுவதற்காகச் சொந்த ஊருக்குத் திரும்புவார். மற்ற நாட்களில் தனது கணவருடன் சேர்ந்து வைரங்களைத் தேடுவார்.

"எங்கள் கடன்களை அடைப்பதற்காக நாங்கள் மேற்கொள்ளும் முயற்சி இது" என்று அவர் கூறினார்.

இங்குள்ள உள்ளூர் மக்களில் பலர் வைரத் தரகர்களாக மாறியுள்ளனர். வைரங்களின் தரத்தை அளவிடுவதற்கான கருவிகளும் அவர்களிடம் உள்ளன.

வைரமாக இருக்கலாம் என்று கருதப்படும் கற்களைக் கொண்டு சென்று தரகர்களிடம் கொடுத்தால், அவர்கள் அவற்றின் தரத்தைச் சோதிப்பார்கள். பின்னர், வைர வியாபாரிகளுடன் விலை பேசி அவற்றை விற்பனை செய்வார்கள். இல்லையென்றால், இவை அனைத்தும் சட்டபூர்வமான நடைமுறைக்குள் நடைபெறாது.

பென்னா, குந்தேறு மற்றும் ஹிந்த்ரி ஆற்றங்கரைப் பகுதிகள் உள்ளிட்ட ராயலசீமாவின் பல இடங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

நீங்கள் வைரங்களைப் பற்றி என்ன எழுதினீர்கள்?

மகாபாரதம் முதல் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் வரை, பண்டைய இந்திய இலக்கியங்களின் பல நூல்களில் வைரங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட சுரங்கங்கள் குறித்த விரிவான விவரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

அந்தச் சுரங்கங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணிகள், வணிகர்கள் மற்றும் ஐரோப்பியக் காலனித்துவ நிர்வாகிகள் எழுதிய குறிப்புகள் மூலமாகவே கிடைக்கின்றன.

13-ஆம் நூற்றாண்டில், தற்போதைய பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பள்ளி துறைமுகப் பகுதிக்குச் சென்ற மார்கோ போலோ, இந்த வைரச் சுரங்கங்கள் குறித்து எழுதியுள்ளார்.

அவர் கிருஷ்ணா நதிப் பள்ளத்தாக்கில் உள்ள வைரச் சுரங்கங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மோட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள கிருஷ்ணா நதிப் பள்ளத்தாக்கு என்பது கொல்லூராக இருக்கலாம் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"இந்த உலகில் வேறு எங்கும் கிடைக்காத வைரங்கள் இந்த ராஜ்ஜியத்தில் மட்டுமே கிடைக்கின்றன. இங்கு பல சிறந்த வைரங்களைக் காணலாம்" என்று மார்கோ போலோ எழுதியுள்ளார்.

இவர்களில் மிகவும் விரிவாக எழுதியவர் ஜீன் பாப்டிஸ்ட் டேவர்னியர்.

அவரே ஒரு வைர வணிகராக இருந்ததால், வைரச் சுரங்கங்கள், அவற்றின் செயல்பாடுகள், தொழில்துறை, வர்த்தகம், வைரங்களுக்குப் பட்டை தீட்டுதல், அவற்றின் எடை மற்றும் தரம் ஆகியவை குறித்து எழுதியுள்ளார்.

இங்கிருந்த சுரங்கங்களின் வகைகள் மற்றும் அவற்றிலிருந்து கிடைத்த பொருள்கள் குறித்து ஐரோப்பியர்கள் எழுதியுள்ளனர்.

அவர்களில் பலரால் அதிகம் பார்வையிடப்பட்டு, விரிவாக விவரிக்கப்பட்ட இடம் கொல்லூர் ஆகும்.

இதுதவிர, மல்லவரம், கொடவட்டிக்கல் மற்றும் பரிடாலா ஆகிய இடங்களும் பெரிய சுரங்கங்களாக இருந்ததாக அவர் எழுதியுள்ளார்.

1814-ஆம் ஆண்டு, ஹீனி என்ற எழுத்தாளர், ஒரு மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு வைரங்கள் அனைத்தும் கொடவட்டிக்கல்லில் கிடைத்ததாக எழுதியுள்ளார்.

பென்னா, குந்தேறு மற்றும் ஹிந்த்ரி ஆற்றங்கரைப் பகுதிகள் உள்ளிட்ட ராயலசீமாவின் பல இடங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

கொல்லூர் தற்போது வரலாற்றுப் பக்கங்களில் மட்டுமே எஞ்சியிருந்தாலும், காலத்தின் ஆழத்தில் அந்த இடம் மறைந்துவிட்டாலும், பலருக்கு இன்றும் தங்களது கனவை நனவாக்கும் வைரமாக அது திகழ்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு