இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்றும் இந்தியாவுக்கு கவலை அளிக்கும் 2 விஷயங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வித்யுத் சிவராமகிருஷ்ணன்
- பதவி, முன்னாள் கிரிக்கெட் வீரர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
காலேவில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களும் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 206 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியின் வெற்றியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் முக்கியப் பங்கு வகித்தார்.
போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இலங்கை ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப சிறப்பாகத் தன்னை மாற்றிக்கொண்டு பந்துவீசியுள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் எவ்வாறு இருந்தது, அணியில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டனவா என்பது குறித்தும், இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ள தேவ்தத் படிக்கலின் செயல்பாடு குறித்தும், இந்திய அணியின் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும், பேட்டிங்கில் எந்தெந்த பகுதிகளில் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பது குறித்தும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
1. ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி
டாஸ் வென்றது நிச்சயமாக இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.
பேட்ஸ்மேன்களின் அணுகுமுறையும் மிகவும் புத்துணர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.
அதேபோல், பந்துவீச்சாளர்களும் தங்களது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தப் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வீரர்கள் பலரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனவே, இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.
பல வீரர்களுக்கு மாற்றாக புதிய வீரர்கள் அணிக்குள் வந்துள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற முக்கியமான பந்துவீச்சாளருக்கு மாற்றாக வந்துள்ள புதிய பந்துவீச்சாளரும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களும் இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, இந்திய அணிக்கு இது ஒரு சிறப்பான டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இந்த வெற்றி அடுத்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள இந்திய அணிக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது.
2. தேவ்தத் படிக்கலின் ஆட்டம்

பட மூலாதாரம், Getty Images
தேவ்தத் படிக்கல் சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிறகு, கடந்த ஓராண்டு காலத்தை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்துள்ளது. தனது ஆட்டத்தில் சிறிய சிறிய மாற்றங்களைச் செய்துள்ள அவர், வொயிட் பால் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், ரெட் பால் கிரிக்கெட்டில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தையும் தேவ்தத் படிக்கல் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கால்கள் மிகவும் துல்லியமாக இயங்கின. குறிப்பாக இந்த டெஸ்ட் போட்டியில் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் சிறப்பாக நகர்ந்து விளையாடியதுடன், ஸ்வீப் ஷாட்டையும் சிறப்பாகப் பயன்படுத்தினார்.
சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது கால்களை சரியாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.
அவரது தந்தை தொடர்பான விஷயங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தச் சூழ்நிலைக்குப் பிறகும், தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு ரெட் பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதற்காக படிக்கல் கடினமாக உழைத்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
உயரமான வீரரான படிக்கல், தனது உயரத்தை இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். இது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
குறிப்பாக இலங்கை போன்ற சூழ்நிலைகளில், சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆதிக்கம் செலுத்தி விளையாடியிருப்பது சிறப்பான விஷயம். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைத் தேடும் மனநிலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, மூன்றாவது வரிசையில் அந்த உறுதியையும் நிலைத்தன்மையையும் வழங்கியது இந்த டெஸ்ட் போட்டியின் முக்கியமான அம்சமாக இருந்தது.
இது இந்திய கிரிக்கெட்டுக்கும், குறிப்பாக ரெட் பால் கிரிக்கெட்டுக்கும் மிகவும் நல்ல செய்தியாகும்.
3. படிக்கல், சாய் சுதர்சனுக்கு போட்டியாக இருப்பாரா? சாய் சுதர்சன் திரும்ப வந்ததும் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும்?

பட மூலாதாரம், Getty Images
நிச்சயமாக, இது ஒரு பெரிய போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சாய் சுதர்ஷனின் நிலை தற்போது சற்று பின்தங்கியிருக்கிறது. அவரிடம் டாப்-10 பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவாகும் திறன், குணம் மற்றும் அதை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறது.
ஆனால், தேவ்தத் படிக்கல் நிச்சயமாக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
150-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த இன்னிங்ஸைத் தொடர்ந்து, 40-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளார். இதைத்தான் அணி நிர்வாகமும் எதிர்பார்த்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் தொடர்ந்து நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை என்றால், அடிப்படையில் அந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டியது அவசியம்.
எனவே, இப்போதே இவர் மூன்றாவது இடத்தை உறுதி செய்துவிட்டார் எனக் கூறுவது மிகவும் முன்கூட்டியே கூறும் கருத்தாக இருக்கும் .
இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரது செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதன்பிறகு தேர்வாளர்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
டாஸ் வென்றது ஒரு பக்கம் சாதகமாக அமைந்திருந்தாலும், தேவ்தத் படிக்கல் நிச்சயமாக அணி தேர்வில் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறார்.
பாரம்பரியமாகப் பார்க்கும்போது, இந்திய அணியில் மூன்றாவது வரிசையில் இதுபோன்ற நிலைத்தன்மையை வழங்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் இருப்பது முக்கியம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாய் சுதர்ஷன் இரண்டு அரைசதங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
ஆனால், தேவ்தத் படிக்கல் நிச்சயமாக தனது ஆட்டத்தின் மூலம் தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எனக்குத் தெரிந்தவரை, இனிவரும் காலத்தில் அவருக்கு முதல் வாய்ப்பு கிடைக்கும்.
ஏனென்றால், நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள ஒரு பேட்ஸ்மேனை நீண்ட காலத்துக்கு அணியில் இருந்து வெளியே வைத்திருக்க முடியாது.
4. மானவ் சுதர் இலங்கை பிச்சுகளுக்கு ஏற்ப தன்னை சீரமைத்துக் கொண்டது எப்படி ?

பட மூலாதாரம், Getty Images
மானவ் சுதர் நிச்சயமாக இந்திய அணிக்கு முக்கியமான வீரராக இருக்கிறார். அவர் இந்த போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
எதிரணிகளைச் சிதறடித்து, இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியைத் தேடித் தரக்கூடியவராகவும் அவர் திகழ்கிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலேயே அவர் தனக்கான வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, 'நான் இந்த இடத்துக்குப் பொருத்தமானவன்' என்பதை நிரூபித்துவிட்டார்.
இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியிலும் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.
பழமையான முறையிலான சிறந்த சுழற்பந்து வீச்சாளருக்கான அம்சங்கள் அவரிடம் இருக்கின்றன.
நல்ல ரன்-அப், சிறப்பான பந்துவீச்சு நிலை ஆகியவற்றுடன், நீண்ட நேரத்துக்கு ஒரே இடத்தில் துல்லியமாகப் பந்துவீசக்கூடிய திறனும் அவரிடம் உள்ளது.
அதுபோன்ற மனநிலையும் பொறுமையும் மிகவும் முக்கியம்.
நீண்ட நேரம் ஓவர்கள் வீசுவதையும், பேட்ஸ்மேனுடன் அந்தப் போட்டியை ரசித்து எதிர்கொள்வதையும் அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மிகவும் நிலையான பந்துவீச்சாளர். எப்போதும் கடினமாக உழைக்கத் தயாராக இருப்பவர். இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச் சிறந்த செய்தியாக அமையும்.
பல ஆண்டுகளாக அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
வாஷிங்டன் சுந்தரும் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
ஆனால், தற்போது மானவ் சுதர் அந்தத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
மிக வேகமாக இந்திய அணிக்கு வந்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், தரமான பந்துவீச்சாளராக உருவாகும் மனநிலையும் பொறுமையும் அவரிடம் இருக்கிறது. குறிப்பாக ரெட் பால் கிரிக்கெட்டில் அதுதான் தேவை.
வொயிட் பால் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், ரெட் பால் கிரிக்கெட்டில் மானவ் சுதரின் செயல்பாடு ஆச்சரியமாக இருக்கிறது.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் அவரது செயல்பாட்டைப் பார்த்திருக்கிறோம். ரஞ்சி டிராபியிலும், 'ஏ' தொடர்களிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சரியான நேரத்தில் அவரை அணிக்குள் கொண்டு வந்த தேர்வாளர்களைப் பாராட்ட வேண்டும்.
25 வயதாகும் அவர் ஏற்கெனவே நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் மிகவும் சிறப்பான பந்துவீச்சாளர். அவரது பந்துவீச்சு ஆக்ஷன் மிகவும் சிறப்பாகவும், தொடர்ந்து ஒரே மாதிரியாகச் செயல்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது.
அவரது பந்துவீச்சில் தேவையற்ற சிக்கல்கள் எதுவும் இல்லை. நீண்ட நேரம் ஓவர்கள் வீசியபோதும், அதே தீவிரத்தை அவரால் தொடர்ந்து பராமரிக்க முடிகிறது.
பல பந்துவீச்சாளர்களைப் பார்க்கும்போது, முதல் ஸ்பெல்லில் இருக்கும் தீவிரம் இரண்டாவது ஸ்பெல்லில் சற்று குறைந்துவிடும். ஆனால், மானவ் சுதர் முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை அதே நிலைத்தன்மையையும் தீவிரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே, இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது மிகச் சிறந்த செய்தி. நிச்சயமாக அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
மற்ற எந்த ஸ்பின்னர்களையும் விட மானவ் சுதர் அதிக வெற்றியைப் பெற்றது எப்படி?
இந்த ஆடுகளத்தில் தேவையான வேகத்தில் அவர் பந்துவீசியது முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அதனால் தான் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களைவிட அவர் அதிக வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
வேகம் மற்றும் நிலைத்தன்மை என இரண்டு காரணிகள்தான் இதில் முக்கியமானவை.
சில ஆடுகளங்களில் பந்தை காற்றில் வேகமாக வீச வேண்டும்; சில ஆடுகளங்களில் மெதுவாக வீச வேண்டும். ஆனால், இந்த ஆடுகளத்துக்கு என்ன தேவையோ, அதை சரியான நேரத்தில் அவர் செய்திருக்கிறார்.
அவரது பந்துவீச்சைப் பார்த்தால், ரன்கள் வழங்குவதற்கான வாய்ப்பையே அவர் கொடுக்கவில்லை. ஒரு பந்து ஃபுல் டாஸாகச் சென்றது போன்றவற்றைக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு பந்தையும் சரியான இடத்தில் தொடர்ந்து வீசியுள்ளார்.
ஜடேஜா என்ன செய்வார் என்றால், தனது வெவ்வேறு கோணங்களைப் பயன்படுத்தி, ஒரே இடத்தில் நாணயத்தை வைத்து வீசுவது போல தொடர்ந்து பந்துவீசுகிறார். அதையே மானவ் சுதரும் செய்திருக்கிறார்.
தேவையான நேரத்தில் பந்தை காற்றில் வேகமாக வீசியதும் அவருக்கு சாதகமாக அமைந்தது. அவரது பந்தை வெளியிடும் முறையைப் பார்த்தால், அதுதான் அவரது மிகப்பெரிய பலம் என்று நினைக்கிறேன்.
அந்தச் சிறப்பான ரிலீஸ் பாயிண்ட்டுடன் பந்தில் சுழலை உருவாக்கிய விதமும் மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் தான் இந்தப் போட்டியில் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களைவிட அவர் அதிக வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
5.இந்த போட்டியில் இந்திய அணியிடம் என்ன பிரச்னை இருந்தது?

பட மூலாதாரம், Getty Images
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய அணியில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. இருப்பினும், முன்னேற்றம் செய்ய வேண்டிய இடங்கள் நிச்சயமாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
பேட்டிங்கில் சில நேரங்களில் சற்று ஆக்ரோஷமாக விளையாடலாம். அதேபோல், ஷாட் தேர்விலும் சில மாற்றங்களைச் செய்யலாம்.
பந்துவீச்சிலும் நிறைய சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. வேகப்பந்து வீச்சில் விக்கெட்டுகளும் கிடைத்துள்ளன. பிரசித் கிருஷ்ணா இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுத்தார். முகமது சிராஜும் விக்கெட் எடுத்தார்.
எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருந்துள்ளன.
ஜெய்ஸ்வால் குறித்து பார்க்கும்போது, அவர் நல்ல ஸ்டார்ட்டை பெற்றுள்ளார். ஆனால், ஒரு பெரிய இன்னிங்ஸை அவர் இன்னும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் நிச்சயமாக அதைச் செய்வார் என்று நினைக்கிறேன்.
உண்மையில், ஒரு பிரச்னை என்று பார்த்தால், இந்திய அணி தங்களிடம் இருக்கும் வாய்ப்புகளை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
மற்றபடி, இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டியவற்றைச் சிறப்பாகச் செய்திருக்கிறது.
பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. ஆனால், முன்னேற்றத்துக்கான வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது.
6. மொத்தத்தில் இந்தியாவின் பேட்டிங் எப்படி இருந்தது?
இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது.
கடந்த டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிடும்போது, இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
கடந்த போட்டியுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக இது மிகச் சிறந்த செயல்பாடு தான். ஆனால், இதனால் இனிமேல் அந்தப் பிரச்னையே இருக்காது என்று உடனடியாகக் கூறிவிட முடியாது.
இந்த டெஸ்ட் போட்டியில் தேவ்தத் படிக்கல் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர் நன்றாக விளையாடியுள்ளார். ரிஷப் பந்தையும் குறிப்பிட வேண்டும். அவர் மிகவும் பயனுள்ள பேட்ஸ்மேன்.
எனவே, இந்த ஒரு டெஸ்ட் போட்டியை மட்டும் வைத்து இந்திய அணிக்கு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இருந்த பிரச்னைகள் முழுமையாகத் தீர்ந்துவிட்டன என்று கூற முடியாது. இந்திய அணி இன்னும் பெரிய அளவில் சோதிக்கப்படவில்லை.
அணிக்கு எதிராக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஓரளவு சிறப்பாக இருந்தனர். ஆனால், தரமான சுழற்பந்து வீச்சாளர்களை வெவ்வேறு ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது இனிமேல் தான் நமக்குத் தெரியவரும். இதுவும் ஒரு முக்கிய கவலையாகும்.
இருப்பினும், முன்பு இருந்த நிலையை விட நிச்சயமாக மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இந்திய அணி சற்று சிரமப்பட்டு வந்தது. ஆனால், இப்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கிறது.
அதேநேரத்தில், இனிமேல் இந்தப் பிரச்னையே இருக்காது என்று அதிகமாக நம்பிவிடக்கூடாது.
குறைந்தபட்சம் கடந்த ஐந்து, ஆறு இன்னிங்ஸ்களைப் பார்க்கும்போது, இந்திய அணியின் செயல்பாடு முன்பைவிட முன்னேறியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆனால், இந்தப் போட்டியில் நல்ல ஆடுகளம் இருந்தது. அதில் சற்று சுழல் இருந்தாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் அதற்கு பேட்டிங் மூலம் சிறப்பாக பதிலளித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































