You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவையில் சிறு வயதில் தொலைந்த மகனை 23 ஆண்டு கழித்து பஞ்சாபில் இளைஞராக மீட்ட தாய் நெகிழ்ச்சி
23 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தனது மகன் பிரகாசத்தை பஞ்சாப் மாநிலத்தில் சந்தித்த தாய் சுந்தரி, இன்று (ஜூலை 30) அவருடன் கோவைக்கு திரும்பினார்.
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பல ஆண்டுகளாக கொத்தடிமையாக வாழ்ந்த பிரகாசம், தாயுடன் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கோவைக்கு திரும்புவதற்காக சுந்தரி மற்றும் அவருக்கு உதவிய பத்திரிகையாளர் முத்தையா ஆகியோர் முதலில் ரயில் பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து பஞ்சாபுக்கு சென்ற நீண்ட பயணத்தால் சுந்தரி மற்றும் முத்தையாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சில தனிநபர்கள் உதவி செய்து சண்டிகரில் இருந்து சென்னைக்கு விமானத்திலும், அங்கிருந்து பேருந்து மூலம் கோவைக்கும் வர ஏற்பாடு செய்தனர்.
இன்று காலை சுந்தரி, முத்தையா மற்றும் பிரகாசம் கோவைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் நீலாம்பூரில் உள்ள தங்களது வீட்டிற்குச் சென்ற சுந்தரியையும் பிரகாசத்தையும் காண அண்டை வீட்டார் மற்றும் உறவினர்கள் பலர் திரண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரியின் குடும்பம், பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக கோவைக்கு குடிபெயர்ந்தது. சுந்தரியின் மூத்த மகனான பிரகாசம், 2003-ஆம் ஆண்டு 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு காணாமல் போனார். குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தேடியும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள ஒரு விவசாயப் பண்ணையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு அரசு சாரா அமைப்பொன்றால் பிரகாசம் மீட்கப்பட்டார். அவரால் சரியாக பேச முடியாத காரணத்தால் அவரது குடும்பத்தை கண்டறிவது தாமதமானது. பின்னர் பலரின் முயற்சியால் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டு, கோவை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் தாயிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஜூலை 28-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள காப்பகத்தில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு தாயும் மகனும் சந்தித்துக்கொண்டனர். அந்த சந்திப்பு பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
கோவை திரும்பிய பிறகு பிபிசியிடம் பேசிய சுந்தரி, "என் மகனை தொலைதூரமாகச் சென்று மீட்டுக்கொண்டு வந்ததில் மிகவும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறது. இதற்காக இங்கேயும் அங்கேயும் பலர் உதவி செய்துள்ளனர். முக்கியமாக, கொத்தடிமையாக இருந்த என் மகனை மீட்ட அமைப்பினர் மூன்று ஆண்டுகளாக அவனை நன்றாகப் பார்த்துக்கொண்டுள்ளனர்," என்றார்.
"என் மகன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்ததும், என் உயிரைப் பணயம் வைத்தாவது அவனை மீட்டுக்கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இத்தனை பேர் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. சில நாட்கள் அவன் ஓய்வெடுக்கட்டும். அவன் இயல்பு நிலைக்கு வர இன்னும் காலம் தேவைப்படலாம்," என்றும் அவர் கூறினார்.
மேலும், "என் மகன் எந்த வேலைக்கும் போகட்டும். இல்லாவிட்டால் நானே அவனைக் காப்பாற்றுவேன். இனிமேல் அவன் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை," என்றார்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு தாயுடன் வீட்டிற்குத் திரும்பியுள்ள பிரகாசம் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இருப்பினும், தாயுடன் மீண்டும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.
"என் அம்மாவிடம் மீண்டும் வந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அங்கே என்னை காலில் இரும்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தார்கள். அந்த பண்ணையில் மாடு மேய்த்தேன். இரு வேளைதான் சாப்பாடு கொடுப்பார்கள். என்னை மீட்டுக்கொண்டு வந்த பிறகுதான் மூன்று வேளை சாப்பிட்டேன்," என்று பிரகாசம் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு