காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறை நடவடிக்கை குறித்து ஐ.நா. கவலை - என்ன நடக்கிறது?

காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறை நடவடிக்கை குறித்து ஐ.நா. கவலை - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 12 நிமிடங்கள்

டெல்லியில் சனிக்கிழமை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை பெருமளவில் நடவடிக்கை எடுத்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்தின்போது பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு தனது எக்ஸ் பதிவில், "டெல்லியில் இன்று நடைபெற்ற பெரும் போராட்டங்களுக்கு முன்னரும், அவை நடைபெற்றபோதும், போராட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெருமளவில் காவலில் வைக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து நாங்கள் கவலை அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

"அமைதியான முறையில் ஒன்றுகூடிப் போராடுவதற்கான உரிமை முழுமையாக மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசுக்கு சோனம் வாங்சுக் அரசுக்கு 24 மணி நேர கெடு
படக்குறிப்பு, அரசுக்கு சோனம் வாங்சுக் அரசுக்கு 24 மணி நேர கெடு

டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவிருந்த காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தை முன்னிட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசியல் கட்சி தலைவர்கள், செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் சங்க தலைவர் நேஹா போரா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் மற்றும் திவாங்கர் பட்டாச்சார்யா ஆகியோரை டெல்லி காவல்துறை தடுத்து வைத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, கோபால் ராய், மம்தா பானர்ஜி மற்றும் அவரது ஆதரவு திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சி.ஜே.பி நிறுவனர் அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லிக்கு வந்திறங்கிய விமானத்திலேயே வைத்து காவல்துறையினரால் தடுப்புக்காவலில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

போராட்டம் தொடங்குவதற்குச் சற்று முன்பாக பிரபல யூடியூபர் துருவ் ராத்தி காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டார்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தர் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு, டெல்லி எல்லைகள் மற்றும் முக்கியப் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைநகரில் சுமார் 25,000 முதல் 30,000 வரையிலான காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சி.ஜே.பி. பேரணி தொடங்குவதற்கு முன்பாகவே நாடு முழுவதிலும் இருந்து வந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி போராட்டத்தில் காவலில் எடுக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் இல்லையேல் உண்ணாவிரதம் உள்ளிட்ட எந்த வடிவ போராட்டத்திற்கும் தயாராக இருப்பதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அரசுக்கு கெடு விதித்துள்ளார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, அபிஜித் திப்கே விமானத்தில் வைத்தே காவலில் எடுக்கப்பட்டபோது கூறியது என்ன?

அரசுக்கு சோனம் வாங்சுக் 24 மணி நேர கெடு

காவலில் எடுக்கப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அரசாங்கத்திற்கு 24 மணி நேர கெடு விதித்துள்ளார்; அவ்வாறு செய்யாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் எச்சரித்துள்ளார்.

சனிக்கிழமையன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சோனம் வாங்சுக் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் , "சில நேரங்களுக்கு முன்பு நான் ஊர் திரும்பியபோது, டெல்லியில் இன்று மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி எனக்குத் தெரியவந்தது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் என்று அவர்கள் நேற்று நினைத்தனர். ஆனால், தற்போது நாடு முழுவதும் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது போலத் தோன்றுவதாக அவர் தெரிவித்தார்.

"அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை என்றால், நானும் அமைதியான போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்றார்.

மேலும், தான் தர்ணா, உண்ணாவிரதம் அல்லது பாதயாத்திரை போன்ற எத்தகைய போராட்டத்திலும் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும், அது டெல்லி அல்லது லே என எங்கு வேண்டுமானாலும் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்

திரிணாமுல் காங்கிரஸ் பேச்சாளர் சாகத் கோகலே, மம்தா பானர்ஜியின் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் பேச்சாளர் சாகத் கோகலே, மம்தா பானர்ஜியின் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மம்தா பானர்ஜி மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை டெல்லி காவல்துறை தடுப்புக் காவலில் அடைத்துள்ளது.

இதுகுறித்துத் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகத் கோகலே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மம்தா திதி உட்பட எங்கள் ஐந்து பேரை டெல்லி காவல்துறையும் சி.ஆர்.பி.எஃப்.-ம் இல்லத்திற்கு வெளியில் வைத்துப் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். எங்களை எங்கோ அழைத்துச் செல்கிறார்கள். இது இந்தியாவில் ஜனநாயகம் மரணித்துவிட்டதைக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சவுத் அவென்யூவில் உள்ள பேருந்து நிலையம் அருகில் மம்தா பானர்ஜியும் இதர கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை அவர்களை காவலில் எடுத்துள்ளது.

காவலில் அடைக்கப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "நாங்கள் ஜந்தர் மந்தர் செல்ல விரும்பினோம், ஆனால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சூழல் அவசரநிலைக் காலத்தை விட மோசமாக இருப்பதாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டார்.

இதேபோன்று, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் டெல்லி காவல்துறை தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

டெல்லி காவல்துறையினர் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனையும் தன்னையும் சத்ரசால் மைதானத்தில் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தடுத்து வைத்திருந்ததாகவும், பின்னர் ஜீப்பில் ஏற்றி, எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்றுகூடத் தெரிவிக்காமல் வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

''இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பினராயி விஜயனுக்கு உடல்நலப் பிரச்னைகள் உள்ளன. அவர் உரிய நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், அந்த அடிப்படை மனிதாபிமானத்தைக்கூட டெல்லி காவல்துறையினர் காட்டத் தவறுகின்றனர்.'' என அவர் கூறியுள்ளார்

காவலில் எடுக்கப்பட்ட நேஹா போரா

சப்தர்ஜங் மேம்பாலம் அருகில் நேஹா போரா உள்ளிட்ட தலைவர்கள் கைது

மாணவர் செயற்பாட்டாளர் நேஹா போரா, தெற்கு டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் விமான நிலைய மேம்பாலம் அருகே காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

டில்லி ஹாட் பகுதியில் போராட்டக்காரர்கள் ஒன்று கூடுமாறு நேஹா போரா அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், "டில்லி ஹாட் எங்களின் ஜந்தர் மந்தராக மாறுகிறது! ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

தி இந்து வெளியிட்ட தகவலின்படி, நேஹா போரா மற்றும் பிற காவலில் எடுக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மேம்பாலம் அருகே போராட்டக்காரர்கள் திரண்டதால் நிறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களின் முக்கிய முகங்களுள் ஒருவராக நேஹா போரா கருதப்படுகிறார்.

குருத்வாராவுக்கு வெளியே கூடியவர்கள் மீது தடியடி மற்றும் கைது

ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி
படக்குறிப்பு, ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி

டெல்லியின் புகழ்பெற்ற சீக்கிய வழிபாட்டுத் தலமான பங்களா சாகிப் குருத்வாராவில் தஞ்சம் புகுந்திருந்த சில போராட்டக்காரர்கள், ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றபோது காவல்துறையினரால் தடியடி நடத்தப்பட்டு பேருந்துகளில் கட்டாயமாக ஏற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாள் முழுவதும் எத்தனை பேர் காவலில் எடுக்கப்பட்டனர் என்பது குறித்து டெல்லி காவல்துறை தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்துத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அஜய் ஜிங்கடே கூறுகையில், "காலை முதல் நாங்கள் ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றோம், ஆனால் காவல்துறையினர் எங்களை அனுமதிக்கவில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு எங்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது" என்றார்.

இதனிடையே, பங்களா சாகிப் குருத்வாராவுக்குச் செல்லும் சாலைகளில் பலத்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் ஏராளமான பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும், தாங்கள் சோர்ந்துபோகவில்லை என்றும், எப்படியாவது ஜந்தர் மந்தரைச் சென்றடைவதற்கான முயற்சியைத் தொடர்வோம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் சேர்த்து நியூஸ்லாண்ட்ரி, ஸ்க்ரோல்.இன், நவ்பாரத் டைம்ஸ் ஆகிய ஊடக நிறுவனங்களுடன் தொடர்புடைய சில பத்திரிகையாளர்களும் காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டனர்.

டெல்லி காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தங்களது மூன்று செய்தியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக 'நியூஸ்லாண்ட்ரி' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களது செய்தியாளர்களை டெல்லி காவல்துறை வாகனத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சுற்றி அழைத்துச் சென்று, பின்னரே விடுதலை செய்ததாக நியூஸ்லாண்ட்ரி தெரிவித்துள்ளது. "நாங்கள் தொடர்ந்து செய்திகளைச் சேகரிப்போம்" என்றும் அந்நிறுவனம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

டெல்லியில் விமானத்தில் வைத்தே காவலில் எடுக்கப்பட்டபோது அபிஜித் திப்கே கூறியது என்ன?

நியூஸ்லாண்ட்ரி தனது அதிகாரபூர்வ அறிக்கையில், "பத்திரிகையாளர்கள் தாங்கள் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தபோது, 'இங்கே எந்த ஊடகமும் இல்லை' என்று அவர்களிடம் கூறப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்த மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 30 பேர் ஒரே பேருந்தில் அமர வைக்கப்பட்டனர். அவர்களில் போராட்டக்காரர்களும் பத்திரிகையாளர்களும் அடங்குவர்" என்று தெரிவித்தது.

மேலும், நியூஸ்லாண்ட்ரி, "பத்திரிகையாளர்களின் பணி செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதுதான், போராட்டத்தில் பங்கேற்பது அல்ல. அவர்கள் காவல்துறையின் பணிக்கு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. அப்படியிருக்க, எந்த அடிப்படையில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்? ஏன் அவர்களது தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன? இந்த நடவடிக்கைகளுக்காக டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், அச்சுறுத்தலின்றி பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று கூறியது.

ஸ்க்ரோல்.இன் வெளியிட்ட தகவலின்படி, அதன் பத்திரிகையாளர்களில் ஒருவர் ஐடிஓ அருகே டெல்லி காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டார். அதன் அதிகாரபூர்வ அறிக்கையில், "அவர் ஜந்தர் மந்தரில்கூட இல்லை. அவரது பத்திரிகையாளர் அடையாள அட்டை தெளிவாகத் தெரிந்தது. தாம் ஒரு பத்திரிகையாளர் என்று அவர் காவல்துறையிடம் பலமுறை கூறியிருந்தார். இருந்தபோதிலும், அவரை வலுக்கட்டாயமாக ஒரு வேனில் அமர வைத்து அழைத்துச் சென்றனர்" என்று தெரிவிக்கப்பட்டது.

டெல்லி போராட்டத்தின்போது காவலில் எடுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்

நவ்பாரத் டைம்ஸின் ஆசிரியர் ஆஷிஷ் பாண்டேவும், தனது ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை டெல்லி காவல்துறை காவலில் எடுத்ததாகக் கூறினார். "காவல்துறையினர் அவர்களை தர்யாகஞ்ச் நோக்கி அழைத்துச் செல்கின்றனர். எங்கள் குழுவினரிடம் ஊடக அடையாள அட்டைகள் இருந்தன, அவை தெளிவாகக் காணப்பட்டன" என்று தெரிவித்தார்.

இருப்பினும், பின்னர் அவர் வெளியிட்ட புதுப்பிப்பு தகவலில், தனது நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதற்கு முன்பும், யூடியூபர் துருவ் ரத்தீ, காவ்யா கர்நாடகா உள்ளிட்ட சில உள்ளடக்க உருவாக்குநர்களையும் காவல்துறை காவலில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) ஊடக நிறுவனம், டெல்லி காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டிருந்த தனது மூன்று பத்திரிகையாளர்களும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நியூஸ்லாண்ட்ரியின் குற்றச்சாட்டின்படி, அவர்களது செய்தியாளர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக டெல்லி நகரம் முழுவதும் காவல்துறையினரால் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், "நாங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவோம்" என்று அந்த நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் நேஹா போரா
படக்குறிப்பு, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் நேஹா போரா

நேஹா போரா விடுத்த அழைப்பு

போலீசாரால் தடுப்புக் காவலில் எடுக்கப்படுவதற்கு முன்பாக, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் நேஹா போரா, போராட்டக்காரர்கள் டில்லி ஹாட் பகுதியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ள நிலைல் நேஹா போரா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

நேஹா போரா தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று டில்லி ஹாட் தான் ஜந்தர் மந்தராக மாறியுள்ளது! அங்கே சந்திப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

உண்மையில், போராட்டத்தின் போது, நேஹா போரா எங்கு உள்ளார் என்பது குறித்து தொடர்ந்து தகவல்கள் தேடப்பட்டு வந்தன. அவரது இந்த எக்ஸ் பதிவுக்குப் பிறகு, அவர் டில்லி ஹாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவருடன் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சமூக-அரசியல் செயற்பாட்டாளர் யோகேந்திரா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

அதே நேரத்தில், இடதுசாரிக் கட்சிகளுடன் தொடர்புடைய மாணவர் அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, போராட்டம் தொடங்கும் முன்பாகவே தடுக்கப்படும் போராட்டக்காரர்கள்

காவலில் எடுக்கப்பட்டபோது அபிஜித் திப்கே கூறியது என்ன?

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும், அவர்கள் விமானத்தில் இருந்தபோதே காவல்துறை தடுப்புக் காவலில் எடுத்தது.

அப்போது, அபிஜித் தீப்கே, தாம் கைது செய்யப்படுவதற்கு அஞ்சவில்லை என்றும் அதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மேலும் அவர், "நாடு எந்தத் திசையில் செல்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். விமானங்களிலேயே எங்களைத் தடுத்து வைக்கின்றனர். இந்திரா காந்திகூட இது போலச் செய்யவில்லை. இது சர்வாதிகாரம். ஆனால், எங்களுக்கு இவர்களிடம் எவ்வித பயமும் இல்லை" என்றார்.

காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் காவல்துறை காவலில் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. சனிக்கிழமையன்று டெல்லியில் விமானத்தில் இருந்தே அவர் காவலில் எடுக்கப்பட்டதாக சிஜேபி அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தன்னைக் "கைது செய்ய வந்த காவல்துறையினரிடம்" அபிஜித் திப்கே, "நான் உங்களைப் பார்த்து அஞ்சவில்லை. கைது செய்யப்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார். அப்போது, தடுப்புக் காவலில்தான் எடுக்கிறோம், கைது செய்யவில்லை என்று அங்கிருந்த போலீஸ் ஒருவர் கூறுவதை காணொளியில் கேட்க முடிகிறது.

அபிஜித், சௌரவ், அஷுதோஷ் ஆகியோரை காவலில் எடுக்க பெண் காவல்துறையினர் முன்வந்தனர். அப்போது, திப்கே மற்றும் அவருடன் இருந்தவர்கள், ஆண் போலீசாரை அனுப்புமாறு கோரிக்கை வைத்தனர்.

அபிஜித் திப்கே, சௌரவ், அஷுதோஷ் எங்கே?

காக்ரோச் ஜனதா கட்சி தனது நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் மும்பையில் இருந்து டெல்லி வந்த விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் காவல்துறை காவலில் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. சனிக்கிழமையன்று டெல்லியில் விமானத்தில் இருந்தே அவர் காவலில் எடுக்கப்பட்டதாக சிஜேபி அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
படக்குறிப்பு, சிலர் போராட்டக் களத்தைச் சென்றந்த போதிலும் அங்கிருந்து அவர்கள் காவலில் எடுக்கப்பட்டனர்.

அந்தக் குழுவால் பகிரப்பட்ட ஒரு காணொளியில், காவல்துறை அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைவது போலத் தெரிகிறது. அதே நேரத்தில், தாம் கைது செய்யப்படக்கூடும் என முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததாக திப்கே கூறுவதையும் கேட்க முடிகிறது.

ஆனால் அதற்குப் பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தற்போது மூவரும் எங்கு உள்ளனர் என்பதும் இன்னும் தெரிய வரவில்லை. அவர்களை ஏன் தடுத்து வைத்துள்ளனர் என்பதற்கான காரணத்தை காவல்துறை இதுவரை பொதுவாக விளக்கவில்லை.

இது சிஜேபி தலைமையுடன் நின்றுவிடவில்லை. போராட்டக்காரர்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க காவல்துறை முயன்று வருவதால், டெல்லி மற்றும் பிற பகுதிகளில் மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன நடக்கிறது என்பதற்கான தெளிவான தகவல்களைப் பெறுவதும் கடினமாகி வருகிறது. மத்திய டெல்லியின் சில பகுதிகளில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைக்கு திப்கே மற்றும் அவரது சகாக்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெளிவாக இல்லை. மேலும் விவரங்கள் கிடைக்கும்போது அதுகுறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவோம்.

சிலர் போராட்டக் களத்தைச் சென்றந்த போதிலும் அங்கிருந்து அவர்கள் காவலில் எடுக்கப்பட்டனர்.

'நான் கைதானாலும் போராட்டம் நடக்கும்'

அபிஜித் திப்கே ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசியபோது, "இந்த நாட்டின் இளைஞர்களையும் மக்களையும் பார்த்து பிரதமர் ஏன் இவ்வளவு அஞ்சுகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அனைத்து ரயில் சேவைகளையும் மெட்ரோ நிலையங்களையும் மூட வேண்டிய அவசியம் என்ன? அவர் இணைய சேவையை நிறுத்தியுள்ளார், சாலைகளையும் மறித்துள்ளார்."

"அவர்கள் ஜம்மு-காஷ்மீரில் இருந்து ராணுவத்தைக் கொண்டு வந்து டெல்லியில் நிறுத்தியுள்ளனர். மேலும், நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினரையும் அழைத்து வந்து டெல்லியில் அமர்த்தியுள்ளனர். நரேந்திர மோதியும் அமித் ஷாவும் தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் போர் நடத்த விரும்புகிறார்களா? அவர்களுக்கு ஞானேஷ் குமார் இவ்வளவு முக்கியமானவரா? அதற்காக அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக காவல்துறையையும் ராணுவத்தையும் பயன்படுத்தத் தயாராக உள்ளனரா?" என்று கேள்வி எழுப்பினார்.

'என்னை கைது செய்தாலும் போராட்டம் தொரும்' - அபிஜித் திப்கே இவ்வாறு கூறியது ஏன்?

மேலும் அவர், "பிரதமர் மோதி அச்சத்தில் இருக்கிறார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நாட்டு மக்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர் அஞ்சுகிறார். அதனால், ஆட்சியில் நீடிப்பதற்காக மட்டுமே அவர் ரயில்களில் இருந்து மக்களைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். மக்கள் போராட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று குடியிருப்பு வளாகங்களில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன."

"டெல்லி காவல்துறை வீடு வீடாகச் சென்று மக்களை போராட்டங்களில் பங்கேற்க வேண்டாமெனக் கூறுகிறது. ஆனால் நாம் ஏன் பங்கேற்கக் கூடாது? போராட்டம் நடத்துவது நம் அடிப்படை உரிமை. அரசமைப்பின் 19வது பிரிவு, ஜனநாயக முறையிலும் அமைதியான வழியிலும் போராட்டம் நடத்தும் அடிப்படை உரிமையை நமக்கு வழங்குகிறது. அதையே நாங்கள் செய்யப் போகிறோம்" என்றார் அபிஜித் திப்கே.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, சிஜேபி போராட்டம்: பதற்றமான சூழலில் டெல்லி

அவரிடம், டெல்லி விமான நிலையத்தை அடைந்ததும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்டபோது, "அவர்கள் என்னை காவலில் எடுக்கவோ கைது செய்யவோ விரும்பினால் அதைச் செய்யட்டும். அதற்குத் தயாராக இருக்கிறேன். அதுவொரு பொருட்டல்ல. யு.ஏ.பி.ஏ. சட்டத்தைப் பயன்படுத்தட்டும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும்கூட பயன்படுத்தட்டும். ஆனால் இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று பதிலளித்தார்.

இதற்கிடையில், ஜந்தர் மந்தர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் நிறுத்தம் அதிகரிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

1000க்கும் மேற்பட்டோர் தடுத்து வைப்பு

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சிஜேபி அமைப்புக்கு அனுமதி மறுத்துள்ளதாக டெல்லி காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம்
படக்குறிப்பு, டெல்லியின் பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போராட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் குறைந்தது 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை கூறியது. ஜூலை மாத போராட்டத்தின்போது விதிமீறல்கள் நடந்ததாகக் கூறப்படுவதையும், சட்டம்-ஒழுங்கு குறித்த கவலைகளையும் சுட்டிக்காட்டிய காவல்துறை, கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி, டெல்லி முழுவதும் 1,000க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக் களத்தில் அதிகாலையில் இருந்தே இருக்கும் பிபிசியின் கீதா பாண்டே கூறுகையில், காவல்துறையுடன் ஒத்துழைக்கவும் அமைதியைக் கடைப்பிடிக்கவும் மக்களை வலியுறுத்தி, ஒலிப்பெருக்கிகள் மூலம் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், தடை உத்தரவுகள் அமலில் இருப்பதாகவும், காவல்துறையின் பணிகளுக்குத் தடையாக இருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

'நாட்டைச் சீர்குலைக்கும் முயற்சி' - பாஜக தலைவர் நிதின் நபின்

காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தை 'நாட்டைச் சீர்குலைக்கும் முயற்சி' என்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் விவரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை ஊடங்களில் பேசிய நிதின் நபின், "இன்று, நாட்டில் மிகவும் ஆபத்தான, தீவிரமான சூழலை உருவாக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் ஒத்துழைக்கும் 140 கோடி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, நாட்டைச் சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. இதைச் செய்வது யார்? இரண்டு அராஜக குழுக்கள். ஒன்று, 'இந்தியா' கூட்டணியின் தலைவரான ராகுல் காந்தி தலைமையிலான குழு. மற்றொன்று, அரவிந்த் கேஜ்ரிவாலின் கூட்டாளியான சிஜேபி தலைமையிலான குழு" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "இந்த இரண்டு குழுக்களிடமும் ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இந்திய மக்களுக்கு உங்கள் நோக்கங்கள் நன்றாகத் தெரியும். இந்த நாட்டில் யாரால் அதிக குழப்பத்தையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்த முடியும் என்பதில் இன்று நீங்கள் போட்டி போடுகிறீர்கள். உங்கள் திட்டங்கள் நிறைவேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

சிஜேபியின் டெல்லி போராட்டம் பற்றி பாஜக தேசிய தலைவர் கருத்து
படக்குறிப்பு, கோப்புப் படம்

"கடந்த 12 ஆண்டுகளில், பிரதமர் தலைமையில், நாட்டில் நிலவிய பதற்றச் சூழலில் இருந்து இந்தியாவை மீட்டுள்ளோம். பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க முயன்றோம். நக்சலிசத்தில் இருந்து நாட்டை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், நகர்ப்புற நக்சல் மனப்பான்மை கொண்ட சிலர் இப்போதும் நாட்டைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "ராகுல் காந்தி அவர்களே, உங்கள் திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது. ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் 'இந்தியா' கூட்டணியினர் பயன்படுத்தும் மொழியையும், இளைஞர்கள் தலைமை தாங்குவதாகக் கூறப்படுபம் காக்ரோச் ஜனதா கட்சியினர் பேசுவதையும் இந்திய இளைஞர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட துருவ் ரத்தீ

காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பிரபல யூட்யூபர் துருவ் ரத்தீ சனிக்கிழமை காலை காவல்துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா அளித்த தகவலின்படி, துருவ் ரத்தீயின் நெருங்கிய நண்பரும் குருகிராம் காவல்துறையும் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். துருவ் ரத்தீ குருகிராமின் செக்டார் 56 பகுதியில் இருந்து காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்தார்.

துருவ் ரத்தீ

முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு, துருவ் ரத்தீ சமூக ஊடகங்களில் ஒரு ரீலை பதிவிட்டார். அந்த வீடியோவில் அவர் இந்தியா கேட் முன்பாக நடந்து செல்வது தெரிந்தது. அந்தக் காணொளியில், துருவ் ரத்தீ, "நான் டெல்லிக்கு வந்துவிட்டேன். பிரதமர் 50க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களை மூடியிருப்பதையும், பல ரயில்கள் மற்றும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டிருப்பதையும் பார்த்தேன். போராட்டங்கள் காரணமாக அவர்கள் டெல்லியை முடக்கி வைத்துள்ளார்கள்" என்று கூறினார்.

"மோதி ஜி என்ன செய்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. ஒருபுறம், போராட்டத்திற்கு மக்கள் கூட்டம் வராது என்று உங்கள் தகவல் தொழில்நுட்பப் பிரிவு கூறுகிறது. மக்கள் கூட்டம் வராது என்றால், பிறகு ஏன் இதையெல்லாம் செய்கிறீர்கள்? நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில், ஒட்டுமொத்த மக்களும் விழித்துக் கொண்டுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக திரண்டிருந்த பல போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, டெல்லி சிஜேபி போராட்டம் - பேரிகார்டுக்கு 'போல்ட்' போட்ட அதிகாரிகள்
டெல்லி ஜந்தர் மந்தர் இளைஞர்கள் போராட்டம்

டெல்லி: மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு

டெல்லியில் பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதற்கும், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதற்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் மீறியுள்ளதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லைவ் லா வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய உள்துறை அமைச்சக செயலர் கோவிந்த் மோகன், டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார், டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தின் தலைவர் டி. தாரா ஆகியோருக்கு எதிராக இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தர் வந்த சில போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்
படக்குறிப்பு, ஜந்தர் மந்தர் வந்த சில போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்

நியாயமான காரணங்கள் இன்றி ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றத் தவறியதால், டெல்லியில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தைக் கருத்தில் கொண்டு டெல்லி மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளுக்குத் தடை விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கும் டெல்லி காவல்துறைக்கும் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜந்தர் மந்தர் வந்த சில போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்

ஜந்தர் மந்தரில் என்ன நிலவரம்?

டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி அறிவித்துள்ள போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்தில் பங்கேற்க மக்கள் திரளத் தொடங்கியுள்ள நிலையில், காவல்துறையினர் போராட்டக்காரர்களைத் தடுக்க முயன்று வருவதோடு, பலர் காவலிலும் எடுக்கப்பட்டுள்ளனர்.

போராட்டங்களை முன்னிட்டு, டெல்லியின் ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் முக்கிய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளும், ஹோட்டல்களில் தங்கியுள்ளவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், போராட்டங்களில் பங்கேற்பதற்காக டெல்லி வருவோரையும் காவல்துறை கண்காணித்து வருகிறது.

ஜந்தர் மந்தர் வந்த சில போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்

ஜந்தர் மந்தரில் திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்திற்கு முன்னதாக, ஃபெரோஸ் ஷா சாலை மற்றும் மாண்டி ஹவுஸ் பகுதிகளில் அதிவிரைவுப் படையினர் (RAF) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். டெல்லி-நொய்டா எல்லைப் பகுதிகளிலும் பெருமளவு காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தெற்கு டெல்லி துணை காவல் ஆணையர் (DCP) அனந்த் மிட்டல் கூறுகையில், போராட்ட அழைப்பை முன்னிட்டு தெற்கு மாவட்டம் உள்பட முழு டெல்லியிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சோதனைகள் மூலம் அனுமதியில்லாத நபர்கள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க காவல்துறையினர் முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, போராட்டங்களின்போது அமைதியையும் சட்டம்-ஒழுங்கையும் பேணுவது காவல்துறையின் முன்னுரிமை. இதற்காக "பல்வேறு எல்லைப் பகுதிகளில் சுமார் 12 காவல் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, மாவட்டத்தின் பல இடங்களிலும் காவல் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, வெளிப்புற காவல் நிலையங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

சி.ஜே.பி. நிறுவனர் அபிஜித் திப்கேயின் பாட்டி காலமானார்:

உடல்நலக்குறைவால் திப்கேயின் பாட்டி காலமானார்.
படக்குறிப்பு, உடல்நலக்குறைவால் திப்கேயின் பாட்டி காலமானார்.

சி.ஜே.பி. நிறுவனர் அபிஜித் திப்கே காவல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாட்டி காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிபிசி மராத்தியின் ஸ்ரீகாந்த் பங்காலே, அபிஜித் திப்கேயின் தந்தை பகவான் திப்கேயிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மகாராஷ்டிரா மாநிலம், ஹிங்கோலி மாவட்டம், சாந்துக் பிம்பிரி கிராமத்தில் உள்ள எங்களது பூர்வீக இல்லத்தில் எனது தாயாரும், அபிஜித்தின் பாட்டியுமான சாவித்ரிபாய் சங்கர் திப்கே காலமானார். அவருக்கு வயது 78" என்று தெரிவித்தார். இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

திப்கேவுக்கு அவரது பாட்டியின் மறைவுச் செய்தி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதா அல்லது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

முன்னதாக, திட்டமிடப்பட்ட போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்த சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, இன்று காலை காவல்துறையினரால் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த விவரங்களும் வெளிவரவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு