You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மேகமலை மக்களை வெளியேற்றுக': உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி - தமிழக அரசு முன்னுள்ள வாய்ப்புகள் என்ன?
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
"காட்டை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துள்ள மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று எப்படி கூற முடியும்?" என்ற வாதம் தமிழக அரசின் சார்பாக முன்வைக்கப்பட்டது.
ஆனால், "இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதற்காக வெளியில் இருந்து வந்தவர்கள் எந்த வகையிலும் அப்பகுதியை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு அப்போது தெரிவித்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மறுபுறம், மேகமலை வனச்சரகத்திற்கு உள்பட்ட மலைக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 'பல்லாண்டுகளாக மலைகளில் வாழ்ந்து வரும் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என நான்கு நாட்களாக (செப்டம்பர் 26-29) தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
"நாங்கள் பிழைப்புக்காக இலவம் பஞ்சு விவசாயம் செய்பவர்கள், பெரு முதலாளிகள் அல்ல. அப்படி இலவம் பஞ்சு விவசாயம் தான் பிரச்னை என்றால், நாங்கள் பல தலைமுறைகளாக வசித்து வரும் நிலத்தில் பிழைப்பிற்கு வேறு ஏதேனும் விவசாயம் செய்து கொள்கிறோம். ஆனால், வெளியேற மாட்டோம்," என்கிறார் வாலிப்பாறை மலைக் கிராமத்தைச் சேர்ந்த மருது பாண்டி.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்ததைத் தொடர்ந்து, தற்காலிகமாக தங்களது போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ள மக்கள், உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்து தங்களது அடுத்தகட்ட போராட்டங்கள் இருக்கும் எனக் கூறுகின்றனர்.
வழக்கின் பின்னணி என்ன?
தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூா், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா், ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட சுமார் 12,300 ஏக்கர் (5,000 ஹெக்டேர்) பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மே 29ஆம் தேதி அளித்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், "பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மொத்தம் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இந்த உத்தரவை மாநில அரசு நிறைவேற்றத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படையை ஈடுபடுத்தலாம்" என்பது தான் அந்த உத்தரவு.
ஆனால், தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், "ஆக்கிரமிப்பாளர்களில் பலர் நிலமற்ற மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் ஆவர்" எனக் குறிப்பிட்டது.
இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருவதாகக் கூறுகின்றனர். இலவம்பஞ்சு, முந்திரி மற்றும் காய்கறிகள் பயிரிடுவது என விவசாயமே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
இப்பகுதி 2021-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
மே மாதம் வெளியான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, இப்பகுதியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களை கவலைகொள்ளச் செய்தது. பிபிசி தமிழ் இப்பகுதிக்கு கள ஆய்வு செய்தபோது, "நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை, பல தலைமுறைகளாக இங்கேயே வாழ்கிறோம். நாங்கள் சுற்றுலா விடுதிகளையோ உணவகங்களையோ நடத்தவில்லை" என அவர்கள் கூறினார்கள்.
அதேபோல, "மேகமலை என்றதும் அதை சுற்றுலா தலம் அல்லது தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதி என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குள் பல்வேறு கிராமங்கள் உள்ளன. அவை சுற்றுலா தலங்கள் அல்ல, தமிழ்நாட்டின் சராசரி கிராமங்கள் தான்," என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இந்த மலைக்கிராமங்கள் பலவற்றிலும் ரேஷன் கடைகள், சாலைகள், மின்சாரம் மற்றும் பேருந்து வசதி, பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
ஆனால், "மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மேகமலையில் உள்ள சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் மற்றும் வணிக நோக்கிலான கட்டடங்களை தான் உச்ச நீதிமன்றம் அகற்றுமாறு கூறியுள்ளது." என அப்போது தேனி மாவட்ட நிர்வாகம் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்தது.
இதைத் தொடர்ந்து, 'பல தலைமுறைகளாக இங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றக் கூடாது, படிப்பறிவு இல்லாமை மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக பட்டா பெறாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைக்கிராம மக்கள் செப்டம்பர் 26 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
இந்நிலையில், இந்த வழக்கு செப்டம்பர் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, "மேகமலையின் சில பகுதிகள் முன்பு வனப்பகுதியாக இல்லை. பின்னர் அவை ரிசர்வ் வனமாக அறிவிக்கப்பட்டன." என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், "ஒரு பகுதி வனம் என அறிவிக்கப்பட்டுவிட்டால், அது வனமாகத்தான் கருதப்பட வேண்டும். அதற்கு வேறு விளக்கம் கிடையாது. அப்படியிருக்கும்போது, வனப்பகுதியில் இலவம்பஞ்சு தோட்டங்களை அமைக்க அரசு ஏன் அனுமதிக்கிறது?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இலவம்பஞ்சு தோட்டங்கள் காரணமாக அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், "அத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை." என்றனர்.
தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது என்ன?
'இலவம்பஞ்சு தோட்டங்களை அமைத்திருப்பவர்கள் அந்தப் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் உள்ளூர் மக்கள் என்றும், வெளியிலிருந்து வந்தவர்கள் யாரும் அங்கு தோட்டங்களை அமைக்கவில்லை' என்றும் தமிழக அரசு தரப்பில் ஜெய்தீப் குப்தா தெரிவித்தார்.
மேலும், சமீப காலங்களில் யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை என்று கூறிய அவர், "1982-ஆம் ஆண்டிலேயே சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்த முயன்றால், அது சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும்." என்றார்.
"இந்த வழக்கு ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெறும்போதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. எனவே, இந்தச் சூழலையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், பட்டா இல்லாமல் வனப்பகுதியை ஆக்கிரமித்து நிலங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெய்தீப் குப்தா கூறினார்.
இதையடுத்து, நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பரமேஸ்வர் தனது வாதத்தை முன்வைத்தார். "மேகமலை பகுதி 1978ஆம் ஆண்டிலேயே ரிசர்வ் வனமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு வசிப்பவர்களை பழங்குடியினர் அல்லது வனத்தைச் சார்ந்து வாழ்வாதாரம் மேற்கொள்பவர்கள் எனக் கருதுவதற்கு, அவர்கள் குறைந்தது மூன்று தலைமுறைகளாக அந்தப் பகுதியில் வசித்து வந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் பலர் ஆக்கிரமிப்பாளர்களாக உள்ளனர்." என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்வாதம் முன்வைக்கப்பட்டது. "வன உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே அந்தப் பகுதியில் வசித்து வரும் மக்களை எப்படி கையாள்வது? வனத்தைச் சார்ந்தே தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டுள்ள இவர்களை எவ்வாறு ஆக்கிரமிப்பாளர்கள் என்று வரையறுக்க முடியும்?" என அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, "இலவம்பஞ்சு தோட்டம் அமைப்பதற்காக வெளியில் இருந்து வந்தவர்கள் எந்த வகையிலும் அப்பகுதியை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது" எனக் கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
மலைக்கிராம மக்கள் கூறுவது என்ன?
"உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளைப் பார்க்கையில், எங்களை வெளியேற்றுவதில் உறுதியாக உள்ளது எனத் தெரிகிறது. நாங்கள் மலையடிவாரத்தில் மாடி வீட்டை வைத்துக்கொண்டு, மலையின் மீது விவசாயம் செய்பவர்களோ, விடுதி நடத்துபவர்களோ அல்ல. சாமானியர்களான எங்களை ஏன் வெளியேற்ற வேண்டும்?" என்று கேள்வியெழுப்புகிறார் தும்மகுண்டு பகுதியைச் சேர்ந்த புயல் மன்னன்.
"உச்ச நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்து எங்களது போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றும் அவர் கூறுகிறார்.
"பட்டா வைத்திருப்பவர்களையும் வெளியேற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன" என குற்றம்சாட்டிய அவர், "இங்கு பல தலைமுறைகளாக வசிக்கும் அனைவருக்கும் வன உரிமைச் சட்டத்தின்படி நிலம் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைக்கிறார்.
வன உரிமைகள் சட்டத்தின்படி (2006), 13 டிசம்பர் 2005-க்கு முன்பாக காட்டுப்பகுதிகளில் குடியிருந்த பழங்குடியினர் அல்லது குறைந்தது மூன்று தலைமுறைகளாக (அதாவது 75 ஆண்டுகளாக) காட்டுப்பகுதிகளிலேயே வாழ்ந்து, காட்டை வாழ்வாதாரமாகக் கொண்ட பிற பாரம்பரிய காடுவாழ் மக்கள் சில உரிமைகளைப் பெறத் தகுதியானவர்கள்.
தமிழக அரசின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள காப்புக்காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்களைப் பாதுகாப்பது மற்றும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான விரிவான வழக்கின் ஒரு பகுதியாகவே இந்த மேகமலை ஆக்கிரமிப்பு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அதாவது, கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் பெரியார் புலிகள் காப்பகம் உள்ளிட்ட முக்கிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் இந்த வழக்கில் அடங்கும்.
"ஒருவேளை உச்ச நீதிமன்றம் மேகமலை மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அவ்வாறே தீர்ப்பளித்தால், மக்களை வெளியேற்றுவது 'மாஞ்சோலை'யைப் போல எளிதாக இருக்காது" என்கிறார் மாஞ்சோலையை பூர்வீகமாக கொண்டவரும், வழக்கறிஞருமான ராபர்ட் சந்திரகுமார்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில், வாடியா குழுமத்திற்குச் சொந்தமான 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்' (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வந்த தேயிலைத் தோட்டம் 2024-ஆம் ஆண்டு மூடப்பட்டு, அங்கிருந்த தொழிலாளர்களை நிர்வாகம் வெளியேறச் சொல்லியது. அதன் பிறகு பெரும்பாலான மக்கள் வெளியேற்றப்பட்டு கடந்த ஜூலை மாதம் இப்பகுதி முழுவதும் வனத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
"மாஞ்சோலையில் அந்தத் தேயிலை தோட்டத்தை விட்டால் மக்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை என்பதால், அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். ஆனால், மேகமலை கிராம மக்கள் தங்களுக்கென சுய தொழிலை அமைத்துக் கொண்டவர்கள், அதை விட்டு அவர்களை வெளியேற்றுவது சரியானதா என்பதை யோசிக்க வேண்டும்" என்கிறார் ராபர்ட்.
மேகமலை தொடர்பாக 'மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு செயல் திட்டம்' ஒன்று வகுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் குறிப்பிட்ட தமிழக அரசு, முதல்கட்டமாக ஆக்கிரமிப்பாளர்களில் 1595 பேர் வனப்பகுதிக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டு, அரசால் வழங்கப்படும் ஆயத்த குடியிருப்புகளில் குடியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தது.
"மாஞ்சோலையை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கே இன்னும் முழுமையாக மறுவாழ்வு அளிக்கப்படவில்லை, அப்படியிருக்க பல்லாயிரக்கணக்கான மேகமலை மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பது எளிதல்ல" என்கிறார் ராபர்ட்.
மேகமலை மலைக்கிராமங்களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் என வகைப்படுத்தப்படுபவர்களை வெளியேற்றுவது மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் கேட்க தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரை பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரது பதில் கிடைக்கும் பட்சத்தில் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.
ஆனால், 'தமிழக அரசு இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யும்' என்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் சத்யகுமார்.
"நிச்சயமாக மக்களின் பக்கம் நின்றே தவெக அரசு முடிவெடுக்கும். அதைத் தான் தமிழக அரசின் வாதங்களும் உணர்த்துகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில் நாமாக எதையும் அனுமானிக்க முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு