தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் - என்ன நடக்கிறது?

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Youtube/tvk

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 பேர், தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர், ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் இன்று (ஜூலை 2) தவெகவில் இணைந்தனர்.

இதற்கான நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ரமேஷ், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெக

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர்கள் பேசியது என்ன?

தவெக-வில் இணைந்த பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "தேர்தலுக்கு முன்பே தவெக- அதிமுக கூட்டணி குறித்து வலியுறுத்தினோம். ஆனால் அதிமுகவின் தலைமை செவிசாய்க்கவில்லை. அதேபோல, தேர்தலுக்கு பிறகும் புதிய ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அப்போதும் அந்த தலைமை எங்கள் பேச்சுக்கு செவிமடுக்கவில்லை." என்று கூறினார்.

"ஆனால் இதையெல்லாம் ஏற்காத அந்த தலைமை, எந்த திமுகவை அழிக்க அதிமுக உருவாக்கப்பட்டதோ, அதே திமுகவோடு கூட்டணி வைக்க முயன்றதை நாங்கள் ஏற்கவில்லை. எனவே மக்களின் கருத்துகளைக் கேட்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்." என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில் விஜய் ஆட்சியமைத்துள்ளார். இது சாதாரண மாற்றமல்ல, ஒரு தலைமுறைக்கான மாற்றம். ’ திமுகவை ஒழிக்க வேண்டும்' என்பதே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் லட்சியமாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடியவர் எடுத்த தவறான முடிவுகளால் தான் நாங்கள் இன்று இந்த முடிவை எடுத்துள்ளோம். ஒருபோதும் திமுகவை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் எங்களோடு பல தொண்டர்களும் இன்று தவெக-வில் இணைந்துள்ளனர்" என்றார்.

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெக

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் செங்கோட்டையன்

"இன்று கரூர் மாவட்டத்தின் அதிமுக நிர்வாகிகள் பலர் தவெக-வில் இணைந்துள்ளனர். இது முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கையால் தான். ஒரு தலைமை சரியாக இருப்பதற்கு உதாரணம் தவெக, மோசமாக இருப்பதற்கு உதாரணம் அதிமுக" என்று கூறினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "திமுகவுடன் இணைந்து முதலமைச்சர் ஆகலாம் என்று முயற்சி செய்த எடப்பாடி பழனிசாமியின் செயலால் அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. திமுகவுடன் கூட்டணி சேர நினைத்தது தான் துரோகம், இன்று தவெக-வுக்கு வந்திருப்பவர்கள் தான் அதை அன்று தகர்த்தார்கள்" என்றார்.

"இதேபோல அதிமுகவில் இருந்து என்னை தூக்கி எறிந்தபோது, எனக்கு ஆதரவு அளித்தவர் முதலமைச்சர் விஜய். எனவே அவரது தலைமையை ஏற்று, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்துள்ளார்கள்" என அவர் பேசினார்.

முன்பு என்ன நடந்தது?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் த.வெ.க வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை.

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தங்களிடம் இருந்த தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை த.வெ.கவுக்கு வழங்கின.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக தலைமை முடிவுக்கு எதிராக 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தார்.

பின்னர், அதிமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும், மீண்டும் அதிமுக தலைமையுடன் சமரசமாகிவிட்டனர். சிலர் அதிருப்தியுடன் வெளியில் இருந்தனர்.

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெக

பட மூலாதாரம், @Vijayabaskarofl

படக்குறிப்பு, கோப்புப் படம்

அதன் பின்னர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.கவில் இணைந்தனர்.

இந்நிலையில், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர் த.வெ.கவில் இணைவதாக அறிவித்திருந்தார்.

முன்னதாக, 'தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகள் காரணமாக அதிமுக சோதனைகளை எதிர்கொள்கிறது' எனவே தான் அதிமுகவிலிருந்து விலகுவதாக அவர் கடந்த ஜூன் 16ஆம் தேதி அறிவித்திருந்தார்.

அதேபோல முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் 'திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார். இதனால் தான் அதிமுகவிலிருந்து விலகுவதாக' நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரும் இன்று த.வெ.கவில் இணைந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு