ஆப்கனில் கிடைத்த அரிய விநாயகர் சிலையின் கதை - தாலிபன் ஆட்சியில் என்ன நடந்தது?

ஆப்கானிஸ்தான், கணபதி சிலை, விநாயகர், விநாயகர் சதுர்த்தி

பட மூலாதாரம், Archeological Survey of India

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானின் கார்டேஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கணபதி சிலை
    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இது 1956-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற ஒரு உண்மை நிகழ்வு. இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் ஆய்வுக் குழுவொன்று, ஆய்வுப் பணிக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தது.

காபூலில் தங்கியிருந்தபோது, ஓர் இந்தியத் தெய்வத்தின் வரலாற்றில் புதிய மற்றும் முக்கியமானதொரு அத்தியாயத்தைச் சேர்க்கும் வகையிலான அரிய கண்டுபிடிப்பு ஒன்று அந்தக் குழுவினருக்குக் கிடைத்தது.

அங்கு விநாயகப் பெருமானின் பழமையான சிலை ஒன்று இருப்பது அவர்களுக்குத் தெரியவந்தது. வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன இச்சிலை, காபூலிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள கார்டேஸ் நகருக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாகும்.

இந்த விநாயகர் சிலை காபூலில் உள்ள 'பீர் ரத்தன் நாத்' தர்காவில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வாழ்ந்து வந்த இந்துக்கள் அதனை வழிபட்டு வந்தனர்.

காபூலின் 'மகாவிநாயகர்' எப்படிப்பட்டவர்?

1956-இல் ஆப்கானிஸ்தான் சென்ற அந்தக் குழுவைச் சேர்ந்த டி.என். ராமச்சந்திரன் மற்றும் ஒய்.டி. சர்மா ஆகிய தொல்லியல் அதிகாரிகள், இந்தச் சிலை குறித்த விரிவான அறிக்கையை இந்திய அரசிடம் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில், சிலையின் அமைப்பைப் பற்றிய விளக்கங்களும், சிலையின்கீழ் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டுக் குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான் குறிப்பாக அதன் கிழக்குப் பகுதி குறித்து ஆய்வு செய்த பல தொல்லியல் ஆய்வாளர்கள் இச்சிலையைப் பற்றி எழுதியுள்ளனர்.

வரலாற்றாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான மதுகர் கேசவ் தவலிகர் இச்சிலையைப் பற்றிக் குறிப்பிடுகையில், "இந்தச் சிலை இந்தோ-ஆப்கன் சிற்பக் கலை பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். சாதாரண ரக சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட இச்சிலை, 24 அங்குல உயரமும் 14 அங்குல அகலமும் கொண்டது" என்று விவரிக்கிறார்.

ஆப்கானிஸ்தான், கணபதி சிலை, விநாயகர், விநாயகர் சதுர்த்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2007-இல் எடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் கார்டேஸ்-கோஸ்ட் நெடுஞ்சாலையின் காட்சி

இச்சிற்பத்தில் விநாயகப் பெருமான் கம்பீரமாக நின்ற கோலத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார். யானை முகத்துடன் மிளிரும் இவரது துதிக்கை இடப்புறம் வளைந்தவாறு அமைந்திருந்தாலும், நுனிப்பகுதி உடைந்த நிலையில் காணப்படுகிறது; இதனால் இவர் 'இடம்புரி விநாயகர்' வகுப்பைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகிறது. சிற்பத்தில் உள்ள நான்கு கரங்களும் காலப்போக்கில் சேதமடைந்துள்ளன.

அரையில் புலித்தோல் ஆடையும், மார்பில் பூணூலாகப் பாம்பும் (நாகபூஷணம்) துலங்குகின்றன. 'லம்போதரன்' எனும் திருநாமத்திற்கு ஏற்ப, பெரிய வயிறுடன் இச்சிலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வலுவான கரங்களும் விரிந்த தோள்களும் இந்தோ-கிரேக்கச் சிற்பக் கலையின் தாக்கத்தைப் பறைசாற்றுகின்றன. விநாயகரின் சிரசில் வீற்றிருக்கும் கிரீடம், பட்டை அமைப்பைக் கொண்ட பாரசீகக் கலை பாணியைப் பிரதிபலிக்கிறது.

இந்திய, காந்தார மற்றும் பாரசீகப் பண்பாடுகளின் அரிய கலவையாகவும் சங்கமமாகவும் திகழ்வதால், இச்சிற்பம் தொல்லியலாளர்கள் மற்றும் கலை வரலாற்றாசிரியர்களால் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

காபூலின் 'மகா விநாயகர்' சிலையின் கால கட்டம் என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இச்சிற்பம் குறிக்கும் தெய்வம் விநாயகரே என்பது அதன் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள இருவரிச் சாசனத்தின் மூலம் உறுதியானது. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் கல்வெட்டியலாளருமான டி.சி. சர்கார் இக்கல்வெட்டை விரிவாக ஆய்வு செய்தார்.

இக்கல்வெட்டு சமஸ்கிருத மொழியில், பிராமி-சித்தமாத்ரிகா எழுத்துமுறையில் பொறிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். இதில் சில இலக்கண வழுக்கள் காணப்படுவதோடு, நிழற்படங்களைக் கொண்டு சில சொற்களைத் துல்லியமாக வாசிப்பதிலும் தடங்கல்கள் உள்ளன.

அக்கல்வெட்டின் பொழிப்புரை: "மகாராஜாதிராஜ ஷாஹி கிங்கலா தனது ஆட்சியின் எட்டாம் ஆண்டில், மகா-ஜ்யேஷ்ட மாதத்து வளர்பிறை திரயோதசி திதியும், விசாக நட்சத்திரமும், சிம்ம லக்னமும் கூடிய சுபயோக நாளில் இந்த 'மகா விநாயகர்' திருமேனியைப் பிரதிஷ்டை செய்தார்."

இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் கிங்கலா மன்னரின் அடையாளத்தைப் பற்றி தொல்லியலாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஏனெனில், ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 'கிங்கலா' என்ற பெயரில் குறைந்தது இரண்டு மன்னர்களாவது இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர்; அக்காலத்தில் இப்பகுதி ஹூணர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

சிற்பக் கலைப் பாணி மற்றும் எழுத்து அமைப்பின் அடிப்படையில், இச்சிலை கி.பி. 5-ஆம் அல்லது 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. வரலாற்று ஆசிரியர் எம்.கே. தவலிகரின் கூற்றுப்படி, இச்சிலை கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

"ஆயினும், காபூலில் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு ஒரே ஒரு சிலை மட்டும் கிடைக்கவில்லை. மற்றொரு விநாயகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டதை 1956-ஆம் ஆண்டின் தொல்லியல் ஆய்வு அறிக்கை ஒன்று உறுதிப்படுத்துகிறது."

இந்த இரண்டாவது சிலை, காபூலுக்கு வடக்கே பத்து மைல் தொலைவில் உள்ள 'சக்கர் தார்' (சங்கர் தார்) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் காபூல் தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது. இச்சிலை கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தவலிகர் கணக்கிடுகிறார்.

காபூல் மகாகணபதிக்கு என்ன நேர்ந்தது?

சக்கர் தார் மற்றும் கார்டேஸ் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட இந்த அரிய கணபதி திருமேனிகளின் வரலாற்றை ஆராயும்போது, "அந்தச் சிலைகள் இன்று எங்கே இருக்கின்றன?" என்ற கேள்வி மனதைக் குடைகிறது.

துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் தற்போதைய நிலையைப் பற்றிய உறுதியான தகவல்கள் எங்குமில்லை. ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பைத் தொடர்ந்து, கார்டேஸ் நகரின் விநாயகர் சிலை காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குப் பாதுகாப்பாக மாற்றப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன.

இருப்பினும், 1996-க்குப் பிந்தைய தாலிபன் ஆட்சிக்காலத்தில், காபூல் அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது; அங்கிருந்த எண்ணற்ற அரிய கலைப் பொக்கிஷங்களும் சிலைகளும் உடைத்து அழிக்கப்பட்டன அல்லது கடத்தப்பட்டன.

அதன் விளைவாக, தொன்மை வாய்ந்த அந்த மகா விநாயகரின் வரலாற்றுச் சிறப்பை, இன்று பழைய புகைப்படங்களின் வாயிலாக மட்டுமே கண்டு திருப்தியடைய வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், கணபதி சிலை, விநாயகர், விநாயகர் சதுர்த்தி, காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகம். தொல்பொருட்கள்

பட மூலாதாரம், Archeological Survey of India

படக்குறிப்பு, சக்கர் தாரில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை

இவை, இதுவரை கண்டறியப்பட்ட விநாயகரின் மிகவும் தொன்மையான திருவுருவங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இன்று இந்தியாவில் வழிபடப்படும் கணபதியின் தோற்றத்திலிருந்து இவை ஓரளவு மாறுபட்டு காணப்படுவதால், பலருக்குள் இயல்பாகவே ஒரு வினா எழக்கூடும்.

"கணபதி வழிபாடு ஆப்கானிஸ்தானில் தோன்றி அங்கிருந்து இந்தியாவுக்குள் பரவியதா? அல்லது இந்தியாவில் தோன்றிய வழிபாட்டு முறை அங்கு சென்றடைந்ததா?"

கணபதி வழிபாட்டின் துல்லியமான தோற்றுவாய் எது என்பதைக் தீர்க்கமாக அறுதியிட்டுக் கூறுவது கடினம். எனினும், கால ஓட்டத்தில் அவருடைய வடிவமும் வழிபாட்டு முறைகளும் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதற்கான தொல்லியல் சான்றுகளையும் இலக்கியக் குறிப்புகளையும் நமது பண்டைய சமய நூல்களில் தெளிவாகக் காண முடிகிறது.

மனித உடலும் யானை முகமும் கொண்ட விநாயகர் உருவம் உருவானது எப்படி?

கணபதி ஆரத்திக்குப் பிறகு ஓதப்படும் துதிப் பாடல்களில், ரிக் வேதத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முதல் மந்திரத்திலேயே விநாயகப் பெருமான் போற்றப்படுகிறார்; "கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே" என்ற புகழ்பெற்ற ரிக்வேத மந்திரத்தை நீங்கள் கேட்டிருக்கக்கூடும்.

இருப்பினும், ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் 'கணபதி' என்பவர் இன்று நாம் வழிபடும் யானை முகத்தைக் கொண்ட 'கஜானனன்' அல்ல; மாறாக, அது தேவகுருவான 'பிருஹஸ்பதியைத்' (பிரகஸ்பதி) குறிப்பதாகும்.

ரிக் வேதம் முக்கியமாக இந்திரன், அக்னி மற்றும் குபேரன் போன்ற தெய்வங்களைப் பற்றியே விவரிக்கிறது. ரிக் வேத காலத்திற்குப் பிந்தைய நூல்களிலேயே பலதரப்பட்ட பிற தெய்வங்களைப் பற்றிய விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதச் சடங்குகள் குறித்த நூலான 'மானவ கிருஹ்ய சூத்திரம்', நான்கு வகையான 'விநாயகர்களைப்' பற்றிக் குறிப்பிடுகிறது. ஹஸ்திமுகன், வக்ரதுண்டன், தத்தின், லம்போதரன் என பல்வேறு பெயர்களில் சுட்டப்படும் இந்த நான்கு தனித்தனி வடிவங்களும் காலப்போக்கில் ஒன்றிணைந்து, 'விநாயகர்' என்ற ஒரே தெய்வமாக உருவெடுத்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

இதன் மூலம், கணபதி தொடர்பான வர்ணனைகளும், அவரது வழிபாட்டு அம்சங்களும் காலப்போக்கில் பல பரிணாம மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன என்பதைத் தொல்லியலாளர்களும் வரலாற்று நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆப்கானிஸ்தான், கணபதி சிலை, விநாயகர், விநாயகர் சதுர்த்தி, காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகம். தொல்பொருட்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காபூலில் உள்ள தேசிய அருங்காட்சியகம். தலிபான் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, அங்குள்ள தொல்பொருட்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன

தொல்லியலாளரும் மானுடவியலாளருமான குருஷ் எஃப். தலால் இதுகுறித்துப் பேசுகையில் "தொடக்கக் காலத்தில் கணபதி 'விக்னஹர்த்தா'வாக (தடைகளை நீக்குபவர்) பார்க்கப்படவில்லை; மாறாக அவர் 'விக்னகர்த்தா'வாகவே (தடைகளை உருவாக்குபவர்) கருதப்பட்டார். அவரைச் சரியாக வழிபடத் தவறினால், அவர் காரியத்தைச் சீர்குலைத்து விடுவார் என்பதால், அந்த விக்னகர்த்தாவை முதலிலேயே சாந்தப்படுத்துவது அவசியமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில், கணபதியின் தன்மையும் வடிவமும் படிப்படியாக மாற்றமடைந்தன" எனக் குறிப்பிடுகிறார்.

எழுத்தாளரும் புராணவியல் ஆய்வாளருமான தேவ்தத் பட்நாயக், 'கணபதி குறித்த 99 சிந்தனைகள்' (99 Thoughts on Ganesha) என்ற தனது நூலில் கணபதியின் தோற்ற மாற்றம் மற்றும் வழிபாட்டு முறைகளின் வளர்ச்சி குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் இந்துக்கள் மந்திரங்களை ஓதி, வேள்வித் தீயில் அவிர்பாகம் அளிக்கும் யாக வழிபாட்டையே முதன்மையாகப் பின்பற்றி வந்ததாகவும், காலப்போக்கில் சாமானிய மக்களிடையே 'உருவ வழிபாடு' மெல்லமெல்லப் புகழ்பெற்றதாகவும் பட்நாயக் சுட்டிக்காட்டுகிறார்.

"கி.மு. 326-இல் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்குப் பிறகு, மௌரியப் பேரரசு விரிவடைந்தது. அக்காலகட்டத்தைச் சேர்ந்த பல இந்தோ-கிரேக்க நாணயங்களில் யானை அல்லது யானையை ஒத்த உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இத்தகைய கிரேக்க கலாசாரத் தாக்கத்தினாலேயே விநாயகரின் உருவ வழிபாடு வடிவம் பெற்றிருக்கலாம் எனப் பலர் நம்புகின்றனர்."

இந்தியாவுக்கு வரும் முன்பே எகிப்தைக் கைப்பற்றிய கிரேக்கர்கள், அங்கு மனித உடலும் விலங்குத் தலையும் கொண்ட தெய்வ உருவங்களைக் கண்டிருந்தனர் என்பதையும் பட்நாயக் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய பல்வேறு பண்பாட்டுக் கலப்புகளிலிருந்தே யானை முகக் கடவுளை வழிபடும் முறை உருவாகியிருக்கக் கூடும்.

"பின்னர், ரோமானியப் பேரரசின் காலத்தில் இந்தியாவுடன் விரிவான வர்த்தகத் தொடர்புகள் ஏற்பட்டன. ரோமானியக் கடவுளான 'ஜானஸ்' மற்றும் கணபதி ஆகிய இருவருக்குமிடையே வியக்கத்தக்க ஒற்றுமைகள் உள்ளன. இவர்கள் இருவருமே தடைகள், தொடக்கங்கள் மற்றும் மாற்றங்களின் தெய்வமாகக் கருதப்பட்டவர்கள்."

இருப்பினும், "கிரேக்க, ரோமானிய மற்றும் எகிப்தியக் கடவுளரின் அம்சங்கள் இந்தியச் சிந்தனையிலும் கணபதி வழிபாட்டிலும் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதைத் துல்லியமாக அறுதியிட முடியாவிட்டாலும், அவற்றை ஊகங்களின் வாயிலாக உணர முடிகிறது" என்கிறார் பட்நாயக்.

ஆதிசங்கரரின் காலமான கி.பி எட்டாம் நூற்றாண்டில் இந்து மதம் பெருமளவில் ஒருங்கிணைக்கப்பட்டது. அப்போது சைவம், சாக்தம், வைணவம், சௌரம், காணாபத்தியம் மற்றும் கௌமாரம் எனும் அறுவகைச் சமயங்கள் சீரமைக்கப்பட்டன.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 'காணாபத்தியம்' (கணபதியை முதன்மைக் கடவுளாக வழிபடும் பிரிவு) வேகமாகப் பரவத் தொடங்கியது. குறிப்பாக மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் விநாயகருக்குத் தனித்துவமான கோயில்கள் எழுப்பப்பட்டதையும், அவரது திருவுருவம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்ததையும் குருஷ் தலால் விளக்குகிறார்.

இக்காலகட்டத்தில் கணபதி 'சாத்வீக' (தூய்மையான மற்றும் சாந்தமான) குணநலன்களைக் கொண்ட தெய்வமாக உருவெடுத்தார். பிற்காலத்தில் மகாராஷ்டிராவில், பேஷ்வாக்கள் மற்றும் பிராமண சமூகத்தினரின் முதன்மைத் தெய்வமாக விளங்கிய அவர், சிவன்-பார்வதியின் திருமகனாக 'சைவ உணவு உண்பவராகச்' சித்தரிக்கப்பட்டார்.

கணபதியும் கலாசாரங்களின் சங்கமமும்

குறிப்பிட்ட சில பௌத்தப் பிரிவுகளில்—குறிப்பாக திபெத்தின் வஜ்ராயன மரபில்—விநாயகர் 'விக்னகர்த்தா'வாகவே (தடைகளை உருவாக்குபவர்) சுட்டப்படுகிறார். போதிசத்துவரான அவலோகிதேஸ்வரர் விநாயகரை அடக்கி வென்றதாகக் கூறும் புராணக் கதைகளும் அவற்றில் உண்டு. பௌத்த சமயத்தின் பரவலோடு இணைந்து, விநாயகர் வழிபாடும் கிழக்கத்திய நாடுகளுக்குப் பயணித்து ஜப்பான் வரை சென்றடைந்தது.

கணபதி என்னும் திருவுருவம் பிரதிபலிக்கும் இந்த அரிய பண்பாட்டுச் சங்கமத்திற்கு வரலாற்று அறிஞர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனர். இது குறித்து 'பிரதாய ஹெரிடேஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்' நிறுவனத்தின் இயக்குநரும், ஆப்கானிஸ்தானின் பாமியான் மற்றும் ஹெராத் ஆகிய இடங்களில் யுனெஸ்கோ திட்டங்களில் பணியாற்றியவருமான வரலாற்றுப் பதிவாளர் ஆனந்த் கணித்கரிடம் உரையாடினோம்.

அவர் கூறுகையில் "பண்டைய இந்திய வரலாற்றை ஆராயும்போது, அன்றைய சூழலில் இன்றைய எல்லைக் கோடுகள் இருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மகதம் தொடங்கி காந்தாரத்தில் உள்ள தட்சசீலம் வரையிலான பகுதிகள் அன்றே செழிப்பான வர்த்தகப் பாதைகளால் இணைக்கப்பட்டிருந்தன. அதேபோல, காந்தாரத்திலிருந்து வடக்கு ஆப்கானிஸ்தானின் பல்க் வரையிலான பகுதியும் வணிக வலைப்பின்னல்களால் பிணைக்கப்பட்டிருந்தது. பல காலகட்டங்களில், இப்பகுதிகள் ஒரே பேரரசின் ஆளுகையின் கீழும் இயங்கியுள்ளன. எனவே, அங்கு இந்தியப் பண்பாட்டின் தடயங்களைக் காண்பதில் வியப்பேதுமில்லை" என்கிறார்.

பல்க் முதல் பாடலிபுத்திரம் வரை பரந்து விரிந்து ஆட்சி செய்த குஷாண பேரரசர்களின் நாணயங்களில் இரானிய, இந்திய மற்றும் கிரேக்கத் தெய்வங்களின் உருவங்கள் ஒருங்கே பொறிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"பண்டைய வரலாற்றை ஆழ்ந்து நோக்கினால், எந்தவொரு பண்பாடும் தனிமைப்பட்டு இயங்கவில்லை என்பது புலப்படும். குறிப்பாக ஆப்கானிஸ்தான் பல்வேறு கலாசார நீரோட்டங்களின் பிரிக்க முடியாத சங்கமப் புள்ளியாகத் திகழ்ந்தது: மேற்கிலிருந்து வந்த இரானிய கலாசாரம், கிரேக்க ஆட்சியாளர்களால் பரவிய கிரேக்க கலாசாரம், வடக்கிலிருந்து ஊடுருவிய மத்திய ஆசிய கலாசாரம் மற்றும் தென்கிழக்கிலிருந்து பரவிய இந்திய கலாசாரம் ஆகியவை அங்கு ஒன்றோடொன்று கலந்தன. கார்தேஸ் நகரில் கண்டெடுக்கப்பட்ட கணபதி திருமேனியில் கிரேக்க மற்றும் இரானிய கலைத்தாக்கங்கள் விரவி காணப்படுவதற்கு இதுவே பிரதான காரணமாகும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு