மனித குலம் உருவாக்கிய அனைத்து புத்தகங்களையும் அழித்து ஏஐ-க்கு பயிற்சி; அதிர்ச்சி அளிக்கும் பனாமா திட்டம்

மார்சல் ஃபோன்ட் 20 ஆண்டுகளாகப் பழைய புத்தகங்களை விற்பனை செய்பவராக (பயன்படுத்தப்பட்ட அல்லது அச்சிடப்படாமல் போன புத்தகங்களை வாங்கி விற்பவர்) பணியாற்றி வருகிறார்.

பட மூலாதாரம், Courtesy of Marçal Font

படக்குறிப்பு, மார்சல் ஃபோன்ட் 20 ஆண்டுகளாகப் பழைய புத்தகங்களை விற்பனை செய்பவராக (பயன்படுத்தப்பட்ட அல்லது அச்சிடப்படாமல் போன புத்தகங்களை வாங்கி விற்பவர்) பணியாற்றி வருகிறார்.
    • எழுதியவர், மடியாஸ் ஸிபெல்
    • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

ஏப்ரல் 30-ஆம் தேதி, கத்தலோனியாவின் படலோனா நகரில் பழைய புத்தகங்களின் விற்பனைக்குப் புகழ்பெற்ற லிப்ரேரியா ஃபெனிக்ஸ் புத்தகக் கடைக்கு வந்த ஒரு ஆர்டர், மார்சல் ஃபோன்ட்டின் கவனத்தை ஈர்த்தது.

"நான் 20 ஆண்டுகளாகப் பழைய புத்தகங்களை விற்பனை செய்து வருகிறேன். எனவே, கோடிக்கணக்கான வித்தியாசமான ஆர்டர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் எதற்கும் அவ்வளவு எளிதில் பதற்றமடைவதில்லை" என்கிறார் அவர். பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியப் பேராசிரியராகவும் கவிஞராகவும் அவர் உள்ளார்.

அந்த குறிப்பிட்ட ஆர்டர் கனடாவில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து வந்தது. ஆனால், அந்தப் புத்தகக் கடை இதற்கு முன்பும் கத்தலோனியப் புத்தகங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

"ஜப்பான் வரையிலும் நாங்கள் புத்தகங்களை அனுப்புகிறோம். அது ஒன்றும் அசாதாரணமான விஷயமல்ல. ஆனால், இந்த ஆர்டர்களின் முறைதான் வித்தியாசமாக இருந்தது" என்கிறார் ஃபோன்ட்.

மே மாத தொடக்கத்தில் மேலும் புதிய ஆர்டர்கள் வரத் தொடங்கியபோது, இது மோசடி நடவடிக்கையாக இருக்கலாம் என்ற அச்சத்தில் ஃபோன்ட் விசாரிக்க முடிவு செய்தார்.

"எங்களிடம் யார் புத்தகங்களை வாங்குகிறார்கள் என்று வழக்கமாகத் தேடிப் பார்ப்பதில்லை. ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் விசாரிக்கத் தொடங்கினோம். முக்கியமாக, அந்த ஆர்டர்கள் அனைத்தும் ஒரு மணி நேரம் அல்லது 40 நிமிடங்களுக்குள் வந்தன. மூன்று அல்லது நான்கு மின்னஞ்சல்கள் வந்தன. ஒவ்வொன்றிலும் சீரற்ற எண்ணிக்கையிலான புத்தகங்கள் கேட்கப்பட்டிருந்தன. அதோடு, அவற்றை அனுப்புவதற்கான கட்டணமும் அளவுக்கு அதிகமாக இருந்தது" என்கிறார் அவர்.

இதையடுத்து, புத்தகங்கள் மீதான ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளும் தனது நண்பரும், செயற்கை நுண்ணறிவு மீதான ஆர்வம் கொண்டவருமான சேவியர் வினாய்சாவிடம் அவர் ஆலோசனை கேட்டார்.

"அவர் என்னை அழைத்து, 'எனக்கு இங்கே சில வித்தியாசமான ஆர்டர்கள் வருகின்றன. ஒரே வாடிக்கையாளரிடமிருந்து, சர்வதேச அளவில் புத்தகங்களை அனுப்ப வேண்டியுள்ளதுடன், அனுப்பும் கட்டணத்தைவிட மூன்று மடங்கு பணம் செலுத்தி ஆர்டர்கள் வருகின்றன' என்றார். இது ஒரு மோசடியாக இருக்கலாம் என்பதுதான் அவரது முதல் எண்ணமாக இருந்தது" என்று பிபிசி முண்டோவிடம் வினாய்சா நினைவுகூர்ந்தார்.

"அங்கிருந்துதான் நாங்கள் விசாரிக்கத் தொடங்கினோம். மார்சல் ஃபோன்ட்டுக்கு ஏற்பட்ட அதே சந்தேகங்களுடன் ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்த வேறு சிலரையும் கண்டுபிடித்தோம். அதன் பிறகு விஷயம் எங்களுக்கு தெளிவாகத் தெரியத் தொடங்கியது" என்கிறார் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும் தொழில்நுட்ப நிறுவனமான சோரென்சென்.ஏஐ-யின் (Sorensen.ai) தொழில்நுட்ப இயக்குநருமான வினாய்சா.

பனாமா திட்டம்

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"பழைய புத்தகங்கள்" மற்றும் "செயற்கை நுண்ணறிவு" என்ற வார்த்தைகளை இணையத்தில் தேடினால், வினாய்சா குறிப்பிட்ட அந்த "சந்தேகங்கள்" குறித்த தகவல்கள் விரைவாகக் கிடைக்கின்றன.

பிரிட்டனின் தி டெலிகிராஃப் நாளிதழில் வெளியான "கலாசார காட்டுமிராண்டித்தனம்: உலகின் புத்தகங்களை செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் எவ்வாறு அழிக்கின்றன?" (Cultural barbarism: how AI companies are destroying the world's books) என்ற கட்டுரையில், நெதர்லாந்தின் ஹார்லெம் நகரைச் சேர்ந்த புத்தக விற்பனையாளர் ஒருவர் பெருமளவில் புத்தகங்கள் ஆர்டர் செய்யப்பட்டதைப் பார்த்து ஆச்சரியமடைந்ததைப் பற்றி கூறியுள்ளார்.

"பழமையான புத்தகங்களின் விற்பனையில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்க விரும்புவது மிகவும் அரிது. எனவே, ஒருவர் வந்து 'உங்களிடம் உள்ள 200 புத்தகங்களை வாங்க விரும்புகிறேன்' என்று கூறினால், அது மிகவும் வித்தியாசமான விஷயம்தான்" என்று பழைய புத்தக விற்பனையாளர் பீட்டர் டி விரீஸ் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் உள்ள புத்தக விற்பனையாளர் ஒருவருக்கும் மார்சல் ஃபோன்ட்டிடம் ஆர்டர் செய்த அதே நிறுவனத்திடமிருந்து ஆர்டர் வந்ததாக தி கார்டியன் செய்தி வெளியிட்டது.

"அவர்கள் ஆர்டர் செய்தார்கள், முன்கூட்டியே பணம் செலுத்தினார்கள். புத்தகங்களை அனுப்புவதற்கான கட்டணத்தைக் குறித்தும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை" என்று டெல்ஃபினா மேனர் கூறினார்.

இந்த இரண்டு கட்டுரைகளும், கத்தலோனிய புத்தக விற்பனையாளர் குறித்த செய்திகளும், "பனாமா திட்டம்" என்று அழைக்கப்படும் ஒரு பத்திரிகை விசாரணையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தன்னைத்தானே பயிற்றுவித்துக் கொள்ளத் தொடர்ந்து புதிய தகவல்கள் தேவைப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவு தன்னைத்தானே பயிற்றுவித்துக் கொள்ளத் தொடர்ந்து புதிய தகவல்கள் தேவைப்படுகின்றன.

அழித்தலும் பயிற்சியும்

2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக், தங்களது படைப்புகளை அனுமதியின்றி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தியதாக எழுத்தாளர்கள் தொடர்ந்த கூட்டு வழக்கை முடிவுக்குக் கொண்டுவர 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஒப்புக்கொண்டது.

நான்கு மாதங்களுக்குப் பிறகு, தி வாஷிங்டன் போஸ்ட் அந்த வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் இடம்பெற்றிருந்த ஒரு ஆவணத்தை பிரத்யேகமாக வெளியிட்டது. மனிதகுலம் இதுவரை எழுதிய அனைத்து படைப்புகளையும் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றும் திட்டம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"உலகில் உள்ள அனைத்து புத்தகங்களையும் அழித்துப் பக்கங்களை ஸ்கேன் செய்வதற்கான எங்களது முயற்சியே பனாமா திட்டம்" என்று கசிந்த அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், "நாங்கள் இதைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியக்கூடாது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த ப்ரோகிராமிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான நூல்களை எழுதிய பேராசிரியர் மாக்ஸிமிலியானோ ஃபிர்ட்மேனும், அந்தக் கூட்டு வழக்கில் ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர்.

அவர் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், நிறுவனம் ஒரு புத்தகத்தின் பிரதியை வாங்கியிருந்தால், அதை செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்ததாகத் தெரிவித்தார்.

"அதன்பிறகு உலகம் முழுவதும் உள்ள புத்தக விற்பனையாளர்களிடமிருந்து தகவல்கள் வரத் தொடங்கின. யாரும் தொடக்கூட இல்லாத புத்தகங்களுக்கு ஆர்டர்கள் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், சில நிறுவனங்கள் இந்தப் புத்தகங்களை ஸ்கேன் செய்து, அவற்றை செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரியவந்தது. இப்படித்தான் புத்தகங்களை அழிக்கும் விவகாரம் உருவானது" என்கிறார் அவர்.

அர்ஜென்டினா செய்தி நிறுவனமான டோடோ நோடீசியாஸ் (Todo Noticias -TN)-ன் தொழில்நுட்ப செய்தியாளர் ரோட்ரிகோ அல்வாரெஸ், புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்க இரண்டு முறைகள் உள்ளதாக விளக்குகிறார்.

அதில் ஒரு முறையில் புத்தகத்தைப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. தட்டையான ஸ்கேனர்கள் அல்லது V வடிவிலான சாதனங்கள் மூலம் புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்ய முடியும்.

"புத்தகங்களை 'அழிக்கும்' முறையில், முதலில் புத்தகத்தின் வெளிப்புற செங்குத்து விளிம்பு (spine part) வெட்டப்பட்டு, பக்கங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. பின்னர் அந்தப் பக்கங்கள் அதிவேக தொழில்துறை ஸ்கேனர்களுக்குள் செலுத்தப்பட்டு, மிக வேகமாகத் தானியங்கி முறையில் ஸ்கேன் செய்யப்படுகின்றன" என்று அவர் பிபிசி முண்டோவிடம் கூறினார்.

பக்கங்கள் டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்தப் புத்தகத்தை மீண்டும் ஒன்றாக இணைக்க முடியாது. பொதுவாக அதன் மீதமுள்ள பகுதிகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.

"பெரிய அளவில் புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டியிருப்பதால் நிறுவனங்கள் இந்த இரண்டாவது முறையைத் தேர்வு செய்கின்றன. இதன் மூலம் மில்லியன் கணக்கான பிரதிகளை விரைவாகவும் குறைந்த செலவிலும் டிஜிட்டல் மயமாக்க முடியும். ஆந்த்ரோபிக் தொடர்பான ஆவணப்படுத்தப்பட்ட விவகாரத்தில், பனாமா திட்டத்துக்காக இந்த முறையே பயன்படுத்தப்பட்டது" என்கிறார் ரோட்ரிகோ அல்வாரெஸ்.

புத்தக விற்பனையாளரான 'ஃபோன்ட்'-ஐப் பொறுத்தவரை, ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்துக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து அறிவுப் பரிமாற்றங்களும் மதிப்புமிக்கவை; அவை தரவு மற்றும் தகவல் இழப்புகளை ஏற்படுத்தினாலும் கூட.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புத்தக விற்பனையாளரான ஃபோன்ட்-ஐப் பொறுத்தவரை, ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்துக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து அறிவுப் பரிமாற்றங்களும் மதிப்புமிக்கவை; அவை தரவு மற்றும் தகவல் இழப்புகளை ஏற்படுத்தினாலும் கூட.

செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி

புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் மனித வரலாற்றில் எழுதப்பட்ட நூல்களைப் பாதுகாக்க முடியும். ஆனால், முக்கிய நோக்கம் பாதுகாப்பு என்பதைவிட செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளிப்பதாகவே தெரிகிறது.

"செயற்கை நுண்ணறிவு என்று பேசும்போது, பொதுவாக எல்எல்எம் (LLM - Large Language Model) எனப்படும் 'பெரிய மொழி மாதிரி'யைத்தான் குறிப்பிடுகிறோம்" என்கிறார் சேவியர் வினாய்சா.

சாட்ஜிபிடி போன்ற எல்எல்எம்கள், அடுத்ததாக வரக்கூடிய சொல் அல்லது உரைப் பகுதியைக் கணிப்பதன் மூலம், உரையைப் புரிந்துகொள்ளவும், சுருக்கவும், மொழிபெயர்க்கவும், புதிய உரை அல்லது பிற உள்ளடக்கங்களை உருவாக்கவும் கற்றுக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு ப்ரோகிராம்களாகும்.

"நாம் அனைவரும் நமது செல்போன்களில் முன்கணிப்பு உரையைப் பயன்படுத்துகிறோம். 'ஹலோ, நான் வந்து கொண்டிருக்கிறேன்...' என்று நீங்கள் தட்டச்சு செய்தால், அது 'தாமதமாக' என்ற வார்த்தையைப் பரிந்துரைக்கலாம். அந்த முன்கணிப்பு உரை எப்படி செயல்படுகிறது? நீங்கள் முன்பு எழுதிய உரைகளின் புள்ளிவிவரத் தரவுகளின் அடிப்படையில்தான். அதே விஷயத்தை பல மில்லியன் மடங்கு பெரிய அளவில் செய்தால் அதுதான் எல்எல்எம்" என்று மாக்ஸிமிலியானோ ஃபிர்ட்மேன் விளக்குகிறார்.

எனவே, சொற்களுக்கு இடையிலான நுட்பமான தொடர்புகளைக் கண்டறியும் இந்தப் பெரிய மொழி மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்க, முதலில் இணையத்தில் கிடைத்த அனைத்து தகவல்களும் பயன்படுத்தப்பட்டன — விக்கிப்பீடியா, வலைப்பதிவுகள், இணைய மன்றங்கள் உள்ளிட்டவை.

அவை குறையத் தொடங்கியபோது, செய்தித்தாள் கட்டுரைகள் மட்டுமின்றி, யூடியூப் காணொளிகளின் வசன வரிகள்கூடப் (subtitles) பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டன.

"அவர்களிடம் கிடைத்த அனைத்தையும் அந்த உரைகளை உள்வாங்கும் இயந்திரத்துக்குக் கொடுத்தார்கள். அவை முடிந்தபோது, ஏற்கெனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அச்சுப் புத்தகங்களைத் தேடத் தொடங்கினர். பின்னர் நூலகங்களுக்குச் சென்றனர். இப்போது வித்தியாசமான, வணிக ரீதியாகப் பெரிதும் கிடைக்காத புத்தகங்களைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவை எங்கே கிடைக்கும்? பழைய புத்தகக் கடைகளிலும், பழமையான புத்தக விற்பனைக் கடைகளிலும்தான்" என்கிறார் ஃபிர்ட்மேன்.

"மார்சலின் விஷயத்தில், அவர் பெற்ற சில ஆர்டர்களைப் பற்றி என்னிடம் கூறினார். உதாரணமாக, கத்தலோனிய சாசேஜ்களின் வரலாறு போன்றவை. இவை இன்னும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய விஷயங்கள்" என்கிறார் வினாய்சா.

பனாமா திட்டம்

பட மூலாதாரம், Getty Images

டிஜிட்டல்மயமாக்கல் - பாதுகாப்பு: இரண்டுக்குமான வித்தியாசம்

செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஸ்கேன் செய்யப்பட்ட புத்தகங்களை அழிப்பது பல்வேறு அமைப்புகளிடையே கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

ஸ்பெயினின் பழமையான புத்தகங்கள் மற்றும் சேகரிப்புப் பொருட்கள் விற்பனையாளர்களின் தொழில்முறை சங்கத்தின் தலைவர் மிகுவல் ஏஞ்சல் ஒர்டேகா, அதிக எண்ணிக்கையில் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கும் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கும் இடையே வேறுபாடு காட்ட வேண்டும் என்கிறார்.

"பாரம்பரியத்தைப் பாதுகாத்து, பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் விற்பனையாளர்கள் என்ற முறையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்ட அல்லது அரிதாகக் கிடைக்கும் அல்லது தனித்துவமான பதிப்புகளின் இறுதிப் பயன்பாடு அவற்றை அழிப்பதாக இருக்கக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம்" என்கிறார் அவர்.

TN செய்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப செய்தியாளர் ரோட்ரிகோ அல்வாரெஸும் இதை ஏற்றுக்கொள்கிறார்.

"விநியோகஸ்தர்கள், புத்தகக் கடைகள் அல்லது தனிநபர்களிடம் அந்தப் புத்தகங்களின் எத்தனை பிரதிகள் மீதமிருக்கின்றன என்பதை முதலில் சரிபார்க்காமல், அரிதான அல்லது அச்சிடப்படாத பிரதிகளை கண்மூடித்தனமாக வாங்கி அழிப்பதே மிகப்பெரிய ஆபத்து" என்கிறார் அவர்.

ஆனால், மார்சல் ஃபோன்ட் புத்தகங்கள் அழிக்கப்படுவது குறித்து அதிகம் கவலைப்படவில்லை.

"இந்த விஷயத்தில் நான் ஒன்றும் உணர்ச்சிவசப்பட்ட பார்வை கொண்டவன் அல்ல" என்கிறார் அவர்.

"விலங்குகளைக் காப்பாற்றுவதற்காகப் படிக்கும் கால்நடை மருத்துவர்களே இறுதியில் அதிகமான விலங்குகளை கருணைக் கொலை செய்ய வேண்டிய நிலைக்கு வருவது போல, பழைய புத்தக விற்பனையாளர்களைவிட அதிகமான புத்தகங்களை அழிப்பவர்கள் வேறு யாரும் இல்லை என்பதுதான் என் பார்வை. நாங்கள் முழு நூலகங்களையே வாங்குகிறோம். காப்பாற்றக்கூடிய அனைத்தையும் காப்பாற்றுகிறோம். ஆனால், காப்பாற்ற முடியாதவை நிறைய இருக்கின்றன" என்கிறார் ஃபோன்ட்.

ஒரு புத்தகத்துக்கு சட்டப்பூர்வ பாதுகாப்புப் பிரதிகள் இருந்தால், குறைந்தது 5 அல்லது 10 பிரதிகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும். அப்படியிருக்கும்போது, ஒரு பிரதியை அழித்து, அதில் உள்ள அனைத்து தகவல்களையும் புதிய அறிவு வடிவத்துக்குக் கொண்டு செல்வதில் தனக்கு பிரச்னையில்லை என்கிறார் ஃபோன்ட்.

ஆனால், அவருக்கு வேறு ஒரு கவலை உள்ளது. மனிதகுலம் உருவாக்கிய அனைத்து உள்ளடக்கங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஐஎஸ்பிஎன் (International Standard Book Number) இல்லாதவை புறக்கணிக்கப்படலாம் என்பதே அந்தக் கவலை.

ஒவ்வொரு வெளியிடப்பட்ட புத்தகத்தையும் அடையாளம் காணும் சர்வதேச தரநிலை புத்தக எண்ணே ஐஎஸ்பிஎன்.

"உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் எதிர்ப்புக் கருத்துகள், எல்ஜிபிடி உரிமைகளுக்கான போராட்டம், கிளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறு இதழ்கள்/சுய வெளியீட்டு இதழ்கள், எதிர் கலாசாரம், பதுங்கி செயல்படும் இயக்கங்கள் என அனைத்துமே ஐஎஸ்பிஎன் இல்லாமல் உருவாக்கப்பட்டவை" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இவையும் டிஜிட்டல் மயமாக்கப்படாவிட்டால், அவை எதிர்காலத் தலைமுறைகளிடம் இருந்து முற்றிலும் தொலைந்துவிடக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

இதனால்தான் டிஜிட்டல் மயமாக்கலைப் பாதுகாப்புடன் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று அல்வாரெஸும் ஃபோன்ட்டும் வலியுறுத்துகின்றனர்.

பழைய மற்றும் அரிய வகை புத்தகக் கடைகள், செயற்கை நுண்ணறிவுக்கான (AI) ஒரு புதிய புகலிடமாக மாறியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழைய மற்றும் அரிய வகை புத்தகக் கடைகள், செயற்கை நுண்ணறிவுக்கான (AI) ஒரு புதிய புகலிடமாக மாறியுள்ளன.

"ஒரு புத்தகத்தை டிஜிட்டல் மயமாக்குவது என்பது அந்தப் புத்தகத்தைப் பாதுகாப்பதற்கு சமமானது அல்ல. பொதுவாக அந்த டிஜிட்டல் கோப்பு ஒரு தனியார் தரவுத்தளத்திலேயே இருக்கும். வாசகர்கள், நூலகங்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அது கிடைக்காது" என்று அல்வாரெஸ் எச்சரிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், இவ்வாறு தீவிரமாக டிஜிட்டல் மயமாக்கும்போது, புத்தகத்தின் உரையைத் தாண்டி அதன் கட்டமைப்பு, குறிப்புகள், ஓவியங்கள், அச்சுத் தரம், தோற்றம் மற்றும் பிற தனித்துவமான அம்சங்களும் இழக்கப்படலாம் என்கிறார்.

ஃபோன்ட்டின் பார்வையில், இந்த "மெட்டாடேட்டா" (ஒரு குறிப்பிட்ட தரவு அல்லது தகவலைப் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கும் மற்றொரு தரவு) இல்லாமல் போவது, ஒரு உரையைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான தகவல்களை மறைத்துவிடுகிறது. இதனால் செயற்கை நுண்ணறிவுத் துறைக்காக உருவாக்கப்படும் தரவுகளேகூட பற்றாக்குறையுடன் உள்ளன.

"புத்தக வடிவில் இருக்கும் அறிவை புதிய வடிவங்களுக்கு மாற்றுவது மிகவும் நல்ல விஷயம் என்று நான் கருதுகிறேன். 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளிலும் புதிதாக அறிமுகமான அச்சுத் தொழில்நுட்பத்தின் மூலம் புத்தகங்கள் மாற்றப்பட்டபோது இதேபோன்ற செயல்முறை நடந்தது. ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு மாற்றும்போது தரவின் தரமும் இழந்தது. அதை எப்படி சரிசெய்தார்கள்? மெட்டாடேட்டா மூலம்" என்கிறார் அவர்.

கல்லில் பொறிக்கப்பட்ட தகவல்களை காகிதத்துக்கு மாற்றிய உதாரணத்தையும் அவர் கூறுகிறார்.

"கல்லில் இருந்த உரையை மட்டும் படியெடுத்தால் போதாது. அந்தக் கல்லை வரைந்து காட்ட வேண்டும், அது எந்தப் பொருளால் ஆனது, எங்கே இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். அந்த மெட்டாடேட்டாதான் அந்தக் கல் உண்மையில் என்ன கூறியது என்பதை இப்போது நம்மால் மீண்டும் உருவாக்கிப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்கிறார்.

ஸ்பெயினின் பழமையான புத்தகங்கள் மற்றும் சேகரிப்புப் பொருட்கள் விற்பனையாளர்களின் தொழில்முறை சங்கத்தின் தலைவர் கூறுகையில், ஒரே உரையைக் கொண்ட இரண்டு புத்தகங்கள்கூட முற்றிலும் மாறுபட்ட கலாசார மதிப்பைக் கொண்டிருக்கலாம்.

"இரண்டு புத்தகங்களிலும் ஒரே தகவல் இருக்கலாம். ஆனால், ஒரு புத்தகத்தில் அதன் உரிமையாளரைக் குறிக்கும் சிறிய அலங்கார ஸ்டிக்கரான பெயர் பொறிப்புச் சீட்டு (bookplate) இருக்கலாம்; கைவினை முறையில் செய்யப்பட்ட அட்டைப்படம் இருக்கலாம்; கையால் எழுதப்பட்ட குறிப்புகள் இருக்கலாம். இவற்றை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்ற முடியாது. மின்னணு புத்தக வடிவத்தில் ஏற்படும் சிக்கலைப் போன்றதுதான் இதுவும்" என்கிறார் அவர்.

'மிகப்பெரிய ஆபத்து'

புத்தகங்களை அழித்துவிடும் வகையிலான டிஜிட்டல் மயமாக்கலைத் தவிர்ப்பதற்கும், முக்கியமான தகவல்கள் விடுபடாமல் இருப்பதற்கும் இடைத்தரகர்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஃபோன்ட்டும் வினாய்சாவும் கூறுகின்றனர்.

"எங்களது பாரம்பரியத்தை எங்களுடைய சொந்த மொழியிலேயே நாங்களே ஸ்கேன் செய்து, அதைச் சேமித்து, தரவுக்கான உரிமத்தை வழங்க வேண்டும் என்பதுதான் நாங்கள் முன்வைக்கும் தீர்வு. உங்களுக்கு அந்தத் தரவு தேவை என்றால், அதை மிகச் சிறந்த முறையில் உங்களுக்கு வழங்குவேன். அதே நேரத்தில் புத்தகத்தை என்னிடமே வைத்துக்கொள்வேன். ஏனென்றால் ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, புத்தகத்தின் அட்டைப்படம் எப்படி இருக்கிறது, அது எப்படித் தைக்கப்பட்டுள்ளது என்பதுகூட முக்கியம். அதன் உள்ளடக்கம் மட்டுமல்ல" என்கிறார் வினாய்சா.

தொழில்நுட்ப நிறுவனமான சோரென்சென்.ஏஐ-யின் தொழில்நுட்ப இயக்குநரான அவர், செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான தரவுகளுக்கான தேவை, செயற்கை நுண்ணறிவுக்கு அளிப்பதற்கான தரவு தீரும் வரை தொடர்ந்து அதிகரிக்கும் என்கிறார்.

"செயற்கை நுண்ணறிவுக்கு போதுமான கணினி செயலாக்க சக்தி இல்லாதபோது அது மிகவும் சிறியதாகிவிடும் என்று நினைத்தோம். ஆனால், அது இல்லை. அதன் வரம்பு தரவுதான். போதுமான தரவு இல்லாததால் செயற்கை நுண்ணறிவு அதன் வளர்ச்சியின் வரம்பைச் சந்தித்துள்ளது" என்கிறார் அவர்.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஒருநாள் தீர்ந்துவிட்டால் என்ன நடக்கும் என்பது இன்னும் நமக்குத் தெரியாது என்கிறார் ஃபிர்ட்மேன்.

"அடுத்ததாக நம்மிடம் இருப்பது செயற்கை தரவு. அதாவது, செயற்கை நுண்ணறிவே உருவாக்கிய உரைகள். இன்னும் சில தசாப்தங்களில் உருவாகக்கூடிய மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், மூல ஆதாரங்களுக்குச் செல்லாமல் எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவிடமே நாம் கேட்டால், அது தானே உருவாக்கிய அதே தகவல்களைக் கொண்டு மீண்டும் பயிற்சி பெறத் தொடங்கும். அப்போது அது படிப்படியாகத் தரம் குறையத் தொடங்கும்" என்கிறார்.

தொழில்நுட்ப செய்தியாளர் ரோட்ரிகோ அல்வாரெஸ், இந்தத் தரம் குறைவதை தன் வாலையே தானே தின்றுகொண்டிருக்கும் பாம்பு என்ற உருவகத்தின் மூலம் விளக்குகிறார்.

"நிறுவனங்கள் பிற செயற்கை நுண்ணறிவுகள் உருவாக்கிய உள்ளடக்கத்தைத் தங்களது மாதிரிகளுக்கான தரவாகப் பயன்படுத்தத் தொடங்கும். அப்போது பிழைகள் பெருகக்கூடும். மொழி மேலும் மேலும் எளிமையாகிவிடும். இது ஒரு சுருக்கத்தின் சுருக்கத்தின் சுருக்கம் போன்றதாக மாறும். அதாவது, அசல் தகவலில் இருந்து மேலும் மேலும் விலகிச் செல்லும் சுருக்கமாகிவிடும்" என்கிறார் அவர்.

தனித்துவமான அல்லது அரிதான மாதிரிகள் அழிந்துபோகக்கூடிய சாத்தியம் குறித்து மிகுவல் ஏஞ்சல் ஒர்டேகா எச்சரிக்கிறார்.

பட மூலாதாரம், Courtesy of Miguel Ángel Ortega

படக்குறிப்பு, தனித்துவமான அல்லது அரிதான மாதிரிகள் அழிந்துபோகக்கூடிய சாத்தியம் குறித்து மிகுவல் ஏஞ்சல் ஒர்டேகா எச்சரிக்கிறார்.

இதற்கிடையில், மார்சல் ஃபோன்ட்டின் லிப்ரேரியா ஃபெனிக்ஸ் புத்தகக் கடையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வந்த அந்த "வித்தியாசமான" ஆர்டர்களுக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது.

"அவர்கள் தங்களது விநியோக முறையையும் நிறுவனங்களையும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது புத்தகங்களை வட அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல், ஜெர்மனிக்கும் அனுப்புமாறு எங்களிடம் கேட்கத் தொடங்கியுள்ளனர்" என்கிறார் ஃபோன்ட்.

ஒரு மாதமாக எந்தத் தகவலும் இல்லாத நிலையில், இந்த வாரம் அவருக்கு மீண்டும் ஒரு புதிய ஆர்டர் வந்துள்ளது.

அது தனக்கு ஒரே ஒரு விஷயத்தைத்தான் உணர்த்துவதாக ஃபோன்ட் கூறுகிறார்:

"பனாமா திட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு