You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பிரதமர் வேட்பாளராக விஜய்' - தவெக காணும் தேசிய அரசியல் கனவு சாத்தியமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 9) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தலைவராக முதலமைச்சர் விஜய் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "இந்தக் கூட்டத்தில், 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதை முதலமைச்சர் விஜய் ஏற்றுக் கொண்டாரா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், "இந்தக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கானது. அதேநேரம், தேசிய அளவில் 'இந்திய கூட்டணி'யின் ஓர் அங்கமாகச் செயல்படும். யார் பிரதமர் வேட்பாளர் என்பது 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்தியா கூட்டணியால் முடிவு செய்யப்படும். அந்த வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்வார்" என்று கூறினார்.
தவெக-வின் பிரதமர் கனவு சாத்தியமா?
இந்தக் கூட்டத்திற்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வேட்பாளர் வர வேண்டும் என்பது எதிர்காலத்திற்கான கனவுதான். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கனவு இருக்கும், ஒவ்வொரு கட்சிக்கும் தங்களது தலைவர்கள் தொடர்பான எண்ணங்கள் இருக்கும். அதுபோலத்தான் இதுவும். மற்றபடி, இதை குழப்பிக் கொள்ள வேண்டாம்" எனக் கூறினார்.
விஜய் '2029இல் பிரதமர் வேட்பாளராக இருப்பார்' என்ற கருத்தைச் சுற்றிக் கடந்த சில நாட்களாக விவாதங்கள் எழுந்து வருகின்றன. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த மாதம் சட்டப் பேரவையில் உரையாற்றும்போது, "எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து, தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதமர் வர வேண்டும்" என்று பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்தும் எதிர்வினைகள் வெளிப்பட்டன.
இது குறித்து சில நாட்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "தவெக அமைச்சர்கள் தொண்டர்கள் மனநிலையில் இருந்து பேசுகிறார்கள். அது அக்கட்சியின் நிலைப்பாடு என எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை" என்று கூறியிருந்தார்.
ஆனால், "தமிழகத்திற்கு வெளியே தவெக-வுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், பிரதமர் பதவிக்கான அதன் கனவு நிறைவேறுவது கடினம்" என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
மூத்த செய்தியாளரும் அரசியல் பிரிவு ஆசிரியருமான பாபு ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழகத்திற்கு வெளியே தவெக-வுக்கு ஆதரவு இல்லை என்பதால் பிரதமர் பதவிக்கான கனவு நிறைவேறாது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமாக 40 இடங்களை மட்டுமே அந்தக் கட்சி பெற முடியும். ஆனால் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதற்கு குறைந்தது 150 இடங்களாவது தேவை" என்றார்.
அதோடு, தவெக தேசிய அளவில் தங்களை வலுவான கட்சியாக முன்னிறுத்தும் நோக்கத்திலேயே பிரதமர் பதவி குறித்து பேசுவதாகவும் குறிப்பிடுகிறார் பாபு ஜெயக்குமார்.
அது மட்டுமின்றி, "காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், தவெக-வின் இந்த ஆசையை காங்கிரஸ் இப்போது எதிர்க்காது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர்கள் இருப்பதால், அந்த வாய்ப்பையும் அவர்கள் இழக்க விரும்பவில்லை" என்று கூறினார்.
அதேபோல, "தவெக-வின் பிரதமர் பதவி ஆசையை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை" என்கிறார் மூத்த செய்தியாளர் கோலப்பன்.
மேலும், பிபிசி தமிழிடம் பேசிய அவர், "முதல்வர் சி ஜோசப் விஜயை பாராட்டுவதற்காகவே இதுபோன்ற கருத்துகள் கூறப்படுவதாகவும்" குறிப்பிட்டார்.
இதுபோலவே, "கடந்த காலத்திலும் பல மாநிலக் கட்சித் தலைவர்கள் பிரதமராகும் விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், தமிழகத்திற்கு வெளியே போதிய அரசியல் செல்வாக்கு இல்லாத காரணத்தால் அது நிறைவேறவில்லை" என்றும் தெரிவித்தார்.
கோலப்பன் கூற்றுப்படி, "ஜெயலலிதா, மூப்பனார், மமதா பானர்ஜி போன்றோரும் பிரதமராகும் ஆசையை வெளிப்படுத்தினர். ஆனால் தமிழகத்திற்கு வெளியே அவர்களுக்குப் போதிய அரசியல் இருப்பு இல்லாதது ஒரு தடையாக இருந்தது."
அத்துடன், "தவெக அரசு தற்போது தமிழ்நாட்டில் பெரும்பான்மை பலத்துடன் இல்லாத நிலையில், தேசிய அரசியலைப் பற்றிப் பேசுவதைவிட ஆட்சியில் பெரும்பான்மையை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கோலப்பன் அறிவுறுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு