இந்திய குழு அஞ்சலி: காமனெயி உடல் இராக் எடுத்துச் செல்லப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Anadolu via Getty Images
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரான் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவர்கள் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
இறுதிச் சடங்கிற்கான அட்டவணை ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஜூலை 3 முதல் ஜூலை 9 வரை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிசி உருது வழங்கும் தகவல்களின்படி, தெஹ்ரானில் உள்ள மிகப்பெரிய மத மற்றும் கலாசார மையமான இமாம் கொமெனி மசூதியில் இறுதிச் சடங்குகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இறுதிச் சடங்கிற்கு முந்தைய நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்து மக்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை அலி காமனெயி மற்றும அவரது மூன்று குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் இரான் கொடி போர்த்தப்பட்டு கிராண்ட் மொசல்லா மசூதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. சிவப்பு மலர்களுக்கு இடையே சவப்பெட்டிகள் வைக்கப்பட்ட நிலையில் வெள்ளை நிற பட்டாம்பூச்சிகள் காற்றில் பறந்து கொண்டிருந்தன.
இந்த இறுதி வழியனுப்பும் நிகழ்ச்சிகளை இரான் ஒரு மதச் சடங்காக மட்டும் பார்க்கவில்லை. போருக்குப் பிந்தைய அதன் அரசியல் மற்றும் ராஜாங்க சக்தியின் வெளிப்பாடாகவும் பார்க்கிறது.
இரானில் அரசாங்கம் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஆளும் அமைப்பிற்கான ஆதரவின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
இரானில் தேசிய விடுமுறை அறிவிப்பு

பட மூலாதாரம், KHAMENEI.IR / AFP via Getty Images
ஜூலை 4 மற்றும் 5 தெஹ்ரானிலும் ஜூலை 6-ஆம் தேதி நாடு முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் துணை அதிபருமான முகமது ரேஸா அரெஃப் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளை மேற்பார்வையிடும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஹசன் ஹசன்சாதே, "இந்த நிகழ்வில் 1.2 கோடியிலிருந்து 1.5 மக்கள் கலந்து கொள்வார்கள் என அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த எண்ணிக்கை 2 கோடியைத் தொடும்." என்றார்.
பாதுகாப்பு மற்றும் உதவிக்காக 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்களும் 10 ராணுவ மருத்துவமனைகளும் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் 1.5 லட்சம் காவலர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். ஜூலை 6-ஆம் தேதி தெஹ்ரான் வான்பரப்பும் ஜூலை 9-ஆம் தேதி மஷாத் வான்பரப்பும் மூடப்பட உள்ளன.
உடல் நீண்ட காலத்திற்கு எவ்வாறு பாதுகாக்கப்பட்டது?

பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
அலி காமனெயி மற்றும் அவரது உறவினர்களின் உடல்கள் எவ்வாறு இவ்வளவு காலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது மற்றும் அடக்கம் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம் ஆகியவை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இரான் எந்த தெளிவான பதிலையும் வழங்கவில்லை.
பயங்கரவாத எதிர்ப்பு வல்லுநரான மருத்துவர் ஒமர் அகமதை மேற்கோள்காட்டி ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ள செய்தியில், "இது நிச்சயமாக குளிரூட்டப்பட்ட சேமிப்பு மூலமே சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் வேதிப் பொருட்கள் மூலம் பதப்படுத்துவது இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளது. நல்லடக்கத்தைத் தள்ளி வைப்பதற்கும் சில தருணங்களில் உடலைக் குளிரூட்டி வைப்பதற்கும் ஷியா சட்டம் அனுமதிக்கிறது. அதி உயர் தலைவருக்காக மத அதிகாரிகளிடமிருந்து எளிதாக விதிவிலக்கு பெறப்பட்டது." என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான 40 நாள் போரால் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஜூன் 15-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இரான் இடையே 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு இரண்டு நாட்கள் முன்பாக இறுதிச் சடங்கிற்கான அட்டவணையை இரான் வெளியிட்டிருந்தது.
மொஜ்தபா காமனெயி பங்கேற்பாரா?

பட மூலாதாரம், AFP via Getty Images
அலி காமனெயி இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் மொஜ்தபா காமனெயி கலந்து கொள்வாரா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அலி காமனெயியும் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
பிபிசி உருது செய்தியின்படி, அலி காமனெயி மனைவியின் சகோதரரான ஹசன் கொஜஸ்தா பாகிர்சாதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி "தலைவரின் இரண்டாவது மகளுக்காக" தொழுகை செய்யுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது சில குடும்ப உறுப்பினர்களின் உடல்நலன் தொடர்பான சந்தேகங்களைக் கிளப்பியது.
அலி காமனெயிக்கு நான்கு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். இதில் புஷ்ரா காமனெயி என்பவர் தாக்குதல் நடந்த அன்றே உயிரிழந்தார்.
எனவே இன்னொரு மகளான ஹூடா காமனெயி பற்றித் தான் ஹசன் கொஜஸ்தா குறிப்பிட்டதாக பார்வையாளர்கள் நம்புகின்றனர். அவரது கணவரான மிஸ்பா அல்-ஹூடா பாகிர் கனியும் அதே நாளில் உயிரிழந்தார்.
மொஜ்தபா காமனெயி உடல்நலன் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனினும் மொஜ்தபா காமனெயி கலந்து கொள்வது 'ஒருங்கிணைப்பு குழுவின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல," என்று அதன் செயலாளர் அலி அக்பர் பூர்ஜம்ஷிடியான் தெரிவித்துள்ளார்.
அலி காமனெயி இறுதிச் சடங்கு தொழுகையை யார் வழிநடத்துவார் என்பதிலும் தெளிவில்லை.
ஷியா மதப் பாரம்பரியத்தில் குறிப்பாக மர்ஜாயி-இ-தக்லீத், சமூகத்தில், இறுதிச் சடங்கு தொழுகையை வழிநடத்தும் நபர் மத ரீதியாக மட்டுமல்லாமல் அடையாள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறார்.
மொஜ்தபா காமனெயி பல மாதங்கள் கழித்து பொதுவெளிக்கு வந்து இறுதிச் சடங்கு தொழுகையை நடத்துவது முக்கியமான அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என சில பார்வையாளர்கள் நம்புகின்றனர். எனினும் அலி காமனெயி உயில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்தச் சூழலிலும் எதையும் உறுதிபடக் கூற முடியாது.
மஷாத்தில் உள்ள வெள்ளிக்கிழமை தொழுகை இமாம் ஆன அஹ்மது அலாம் அல்-ஹூடா அலி காமனெயி உயில் பற்றி தனக்குத் தெரியவில்லை எனக் கடந்த மாதம் கூறியிருந்தார்.
முக்கியமான நாட்கள்

பட மூலாதாரம், Getty Images
ஜூலை 3 - சர்வதேச அஞ்சலி நிகழ்ச்சி
வெளிநாட்டுப் பிரமுகர்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்துவார்கள் என துணை உள்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அலி அக்பர் பூர்ஜம்ஷிடியான் தெரிவித்தார்.
வெளிநாட்டு பிரமுகர்களுக்கான நிகழ்ச்சி உள்ளுர் நேரப்படி காலை 8 மணிக்குத் தொடங்கும் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மற்ற நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அஞ்சலி செலுத்துவார்கள்
ஜூலை 4 - 5 தெஹ்ரானில் இறுதிச் சடங்கு தொழுகைகள்
தெஹ்ரானில் கிராண்ட் மொசல்லா மசூதியில் இரண்டு நாள் துக்கம் கடைபிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜூலை 4 உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு நுழைவுக் கதவுகள் திறக்கப்பட்டு ஜூலை 5-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மூடப்பட உள்ளது. முக்கிய இறுதிச் சடங்கு தொழுகை ஜூலை 5 காலை மேற்கொள்ளப்படும்.
காமனெயி தவிர அவரது மகள் புஷ்ரா ஹொசைனி காமனெயி மற்றும் மருமகள் ஜாஹ்ரா ஹதாத்-அடில் (மொஜ்தபா காமனெயி மனைவி) மருமகன் மிஸ்பா அல்-ஹூடா மற்றும் பேத்தி ஜாஹ்ரா மொகமதி கோல்பாய்கானி ஆகியோரின் சவப்பெட்டிகளும் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளன.
ஜூலை 6 - தெஹ்ரானில் இறுதிப் பயணம்
இறுதிச் சடங்கும் ஊர்வலம் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது. தலைநகர் வழியாக நீண்ட பாதையை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். ஏனெனில் எதிர்பார்க்கப்படும் கூட்டத்தைச் சமாளிக்க ஒரு சாலை போதாது என்றும் தெரிவிக்கின்றனர். மாலை உடன் நிகழ்ச்சிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஜூலை 7 - கோம் நகருக்கு இறுதிப் பயணம்
இரானின் முக்கிய மத நகரமான கோமில் உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. ஜம்கரன் மசூதியில் உள்ள மூத்த மதகுருவால் தொழுகை வழிநடத்தப்பட இருக்கிறது.
ஜூலை 8 - நஜஃப் மற்றும் கர்பாலாவுக்குப் இறுதிப் பயணம்
ஜூலை 7-ஆம் தேதி மாலை நஜஃப் நகருக்கு காமனெயி உடல் கொண்டு வரப்படும் என இராக்கில் உள்ள இரானின் கலாசார தூதுரான கொலாம்ஸா அபாஸாரி தெரிவித்துள்ளார். இறுதிச் சடங்கு ஊர்வலம் நஜஃபில் உள்ளூர் நேரப்படி ஜீலை 8-ஆம் தேதி காலை 6 மணிக்கும் கர்பாலாவில் மாலை 4 மணிக்கும் நடைபெற உள்ளது. அதன்பிறகு உடல் இரானுக்கு மீண்டும் அனுப்பப்படும்.
ஜூலை 9 - மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
இரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் உள்ள எட்டாவது ஷியா இமாம் ஆன இமாம் ரேஸாவின் திருத்தலத்தில் காமனெயி அடக்கம் செய்யப்பட உள்ளார்.
காமனெயி உடல் இராக் எடுத்துச் செல்லப்படுவது ஏன்?

பட மூலாதாரம், AFP via Getty Images
மெக்கா மற்றும் மதீனாவுக்குப் பிறகு நஜஃப் மற்றும் கர்பாலா ஷியா இஸ்லாமின் புனிதமான நகரங்களாகக் கருதப்படுகின்றன.
முதல் ஷியா இமாமும் முகமது நபியின் உறவினருமான இமாம் அலியின் திருத்தலம் நஜஃபில் இருக்கிறது. கர்பாலாவில் இமாம் ஹுசைனின் திருத்தலம் இருக்கிறது. கர்பாலா போரில் இவர் உயிர்நீத்தது ஷியா அடையாளம் மற்றும் மதப் பாரம்பரியங்களுக்கு மையமானதாகக் கருதப்படுகிறது.
இராக் பழங்குடி தலைவர்கள், மதத் தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கைக்கு இணங்க நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 28 அன்று பாக்தாத் சென்ற வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கு ஆதரவு அளித்ததற்காக இராக் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார். இவை இரு நாடுகளின் வரலாறு, கலாசாரம் மற்றும் மத உறவுகளின் பலத்தைப் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க நஜஃப் மற்றும் கர்பாலாவின் ஆளுநர்களையும் அவர் சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சிகள் இரானுக்கு வெளியே ஷியா சமூகத்தினர் மத்தியில் காமனெயி செல்வாக்கைக் காட்டும் முயற்சியாகவும் ஷியா இஸ்லாமின் முக்கிய மையங்களில் இரானில் மத மற்றும் அரசியல் தொடர்பைக் காட்டும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கான இரான் வெளியுறவு அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு பாக்தாத் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு "அடையாள முக்கியத்துவம்" இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நஜஃப் மற்றும் கர்பாலா நகரங்களில் இது நடத்தப்படுவது ஷியா பிரிவினர் மத்தியில் உள்ள காமனெயி செல்வாக்கு இரான் எல்லைகளைக் கடந்து உள்ளதைக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் இராக் அரசும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மெஹர் செய்தி முகமையின்படி, நஜஃப் மற்றும் கர்பாலாவின் ஆளுநர் நிர்வாகம், இராக் போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் இந்த நிகழ்ச்சிகளை மேற்பார்வையிடுகின்றன.
தெஹ்ரான், கோம், நஜஃப் மற்றும் கர்பாலாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இறுதி நிகழ்ச்சி மஷாத்தில் நடைபெற உள்ளது. எட்டாவது ஷியா இமாமின் கல்லறை மண்டபத்தில் அலி காமனெயி அடக்கம் செய்யப்பட உள்ளார்.
அதன்பிறகு 40 நாட்களுக்கு வெவ்வேறு மாகாணங்களில் இறுதி வழியனுப்பும் நிகழ்ச்சிகள், மதக் கூட்டங்கள் மற்றும் தொழுகைகள் நடத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டும் நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அலி காமனெயிக்கு இந்தியக் குழு அஞ்சலி

பட மூலாதாரம், X/@GovernorBihar
இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்திய அரசாங்கத்தின் குழு அலி காமனெயிக்கு அஞ்சலி செலுத்தியது.
இந்தக் குழுவில் பிகார் ஆளுநர் செயத் அடா ஹஸ்னைன் மற்றும் வெளியுறவு இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிடா ஆகியோரும் அடங்குவர்.
இது தொடர்பாக புகைப்படங்கள் பிகார் ஆளுநரின் சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், "மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிடா உடன் தெஹ்ரானில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆயதுல்லா செயத் அலி காமனெயியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு சமீபத்தில் மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிடாவின் சமூக ஊடகப் பக்கத்தில் புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தன.
"தெஹ்ரானில் நடைபெற்ற முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இறுதிச் சடங்கில் பிகார் ஆளுநரும் நானும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினோம். இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் சார்பாக நாங்கள் அஞ்சலி செலுத்தினோம்," என்று அந்தப் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலி காமனெயி இறுதிச் சடங்கு இரானில் தொடங்கியுள்ள நிலையில் தெஹ்ரானில் நடைபபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல வெளிநாட்டு விருந்தினர்கள் வருகை புரிந்துள்ளனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


























