ராமர் கோவில் காணிக்கைத் திருட்டு வழக்கு: அதிக கேள்விகளை எதிர்கொள்வது யார்?

ராம் மந்திர்

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மஹிபால் சிங் ஜனவரி 2021 முதல் மே 2022 வரை ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கணக்கு பொறுப்பாளராக இருந்தார்.

ராமர் கோயிலுக்காக பெறப்பட்ட காணிக்கை பணம் எண்ணப்படும் காவல் நிலையத்தின் எண்ணும் மையத்தில் தாம் பணியில் இருந்ததாக பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு அளித்த பேட்டியில் மஹிபால் சிங் கூறினார்.

அபிஷேக் உபாத்யாயிடம் மஹிபால் சிங் கூறுகையில், "ரத்னேஷ் சதுர்வேதி மற்றும் ககன்தீப் ஆகிய இரண்டு வங்கி அதிகாரிகள் வருவார்கள். பதினான்கு சிறுவர்கள் நோட்டுகளை பிரிப்பார்கள், நான் பொறுப்பாளராக இருந்தேன். என் முன்னிலையில் தான் எண்ணும் பணி நடக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும், அந்த சிறுவர்கள் அதிக நோட்டுகளை பேக் செய்து எடுத்துச் செல்வார்கள், வவுச்சரில் குறைவாக எழுதுவார்கள். ஆரம்பத்தில் எனக்கு இது தெரியாது. ஆனால் பின்னர், அவர்கள் வவுச்சரில் நோட்டு கட்டுகளின் எண்ணிக்கையை குறைவாகக் காட்டி, அதிகமாக எடுத்துச் செல்வதை நான் உணர்ந்தேன்" என்றார்.

"ஒரு நாள் எனக்கு சந்தேகம் வந்து பெட்டியைத் திறக்கச் சொன்னேன். அவர்கள் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் கொண்டு சென்றனர். இது குறித்து கோபால் ராவ் மற்றும் சம்பத் ராய் பைஜி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். இது டிசம்பர் 2021-ல் நடந்தது. ஆனால் எனது புகாரின் விளைவாக, அறங்காவலர் அனில் மிஸ்ரா எனக்குப் பதிலாக வேறொருவரை நியமித்தார். அதன் பிறகு நான் அங்கு செல்வதை நிறுத்திவிட்டேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய மஹிபால் சிங், "சம்பத் ராயின் ஓட்டுநரான தின்னு யாதவ் தான் வவுச்சர்களில் கையெழுத்திட்டார், அதில் தான் முறைகேடு நடந்தது. சம்பத் ராய் தின்னு யாதவ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், அவரைப் பற்றி யாரும் புகார் கூறுவதை அவர் விரும்பவில்லை. சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டன.

எட்டு மாத சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டன. இவை அனைத்தையும் ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ராவின் வாழ்நாள் அறங்காவலரான தினேந்திர தாஸ் ஜியிடம் கூறினேன், இதற்காக ராமர் விரைவில் அவரை தண்டிப்பார் என்று அவர் கூறினார்" என்றார்.

சம்பத் ராய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சம்பத் ராய் ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்

சம்பத் ராயின் பங்கு குறித்து எழும் கேள்வி

இந்த வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹிபால் சிங் குறிப்பிடும் தின்னு யாதவ் என்பவரும் இந்த எட்டு நபர்களில் ஒருவர்.

சம்பத் ராய் உட்பட ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையானது, பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் பின்னணி கொண்ட நபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரான சம்பத் ராய், பின்னர் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

2018-ல், ராய் வி.எச்.பி-யின் சர்வதேச துணைத் தலைவரானார். காணிக்கை பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு வெளிவந்தபோது, சம்பத் ராய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளராக இருந்தார். அவருக்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருந்தது.

இந்த உண்மைகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, சம்பத் ராய் அறக்கட்டளையிலிருந்து ராஜினாமா செய்தார்.

இந்த அறக்கட்டளையின் உறுப்பினராக இருந்த அனில் மிஸ்ராவும், இந்த பணமோசடி வழக்கு வெளிச்சத்திற்கு வந்த பிறகு ராஜினாமா செய்தார்.

மிஸ்ரா, உத்தரபிரதேசத்தின் அவத் பிராந்தியத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாகாண இணை செயல் தலைவராக உள்ளார்.

ராமர் கோயில் தரிசனப் பொறுப்பாளராக இருக்கும் கோபால் ராவ் என்பவரிடமும் இந்த மோசடி குறித்து தாம் தெரிவித்ததாக மஹிபால் சிங் கூறுகிறார்.

ராவ் ஆர்.எஸ்.எஸ் அதிகாரியாகவும், வி.எச்.பி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி ஆகிய இரு அமைப்புகளும் உயர்ந்த நெறிமுறைகளை ஆதரிப்பதால், இந்த விவகாரத்தால் அவர்களின் நற்பெயர் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அதிகாரிகளின் முன்னிலையில் நன்கொடைகள் எவ்வாறு எண்ணப்பட்டன என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவர் அலோக் குமாரிடம் நான் கேட்டேன்.

இந்தத் திருட்டுச் சம்பவம் இரு அமைப்புகளின் பிம்பத்தையும் எவ்வாறு பாதித்துள்ளது?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அலோக் குமார், "அயோத்தியில் கோயில் காணிக்கை திருடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதனால் நாங்கள் அனைவரும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.காவல்துறை இந்த விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்" என்றார்.

மேலும், "இதில் முக்கியப் புள்ளிகள் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களைத் தப்பிக்க விடக் கூடாது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பயமோ அல்லது இரக்கமோ இன்றி விசாரணை நடத்தப்படும் போதுதான் பரிகாரம் முழுமையடையும்" என்றார்.

பிரதமர் நரேந்திர மோதி-ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதியும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் ராமர் கோவிலைப் பார்வையிட்டனர் (கோப்புப் படம்).

ஆர்எஸ்எஸ் குறித்து எழும் கேள்வி

பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வருவதில் ராம ஜன்மபூமி இயக்கம் ஒரு தீர்க்கமான பங்கை ஆற்றியது.

இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளையும் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வந்தது.

இருப்பினும், காணிக்கை திருடப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் இந்த அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பத் ராய் மீது ஏன் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை?

இந்தக் கேள்வி ஆர்.எஸ்.எஸ்-ஸின் இணை பிரச்சாரத் தலைவர் நரேந்திர தாக்கூரிடம் கேட்கப்பட்டபோது, "நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. சம்பத் ராய் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் என்பது உண்மைதான். இந்த விவகாரத்தில் நாங்கள் அதிகாரப்பூர்வமாக ஏதேனும் கூறும்போது உங்களுக்குத் தெரியும்" என்றார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த வி.எச்.பி சர்வதேசத் தலைவர் அலோக் குமார் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எங்கள் தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இல்லை. காவல்துறை ஒரு சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும்" என்று கூறினார்.

காணிக்கைத் திருட்டு 2021 முதல் நடந்து வருவதாக மஹிபால் சிங் குற்றம் சாட்டியுள்ளார். காணிக்கைகள் ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகின்றன.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர் அல்ல, ஆனால் அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் இதில் உறுப்பினராக உள்ளார், மேலும் உத்தரபிரதேச அரசின் பிரதிநிதியான சஞ்சய் பிரசாத்தும் ஒரு அறங்காவலராக உள்ளார்.

எனவே, இந்த முரண்பாடு குறித்து முதலமைச்சருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

யோகி ஆதித்யநாத் குறித்த புத்தகத்தின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஷரத் பிரதான் இது குறித்து கூறுகையில், முதலமைச்சருக்கு இது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிடுகிறார்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்- சம்பத் ராய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் சம்பத் ராய் (கோப்புப் படம்)

உத்தரபிரதேச முதல்வர் யோகிக்கு இதுகுறித்துத் தெரியாதா?

இதுகுறித்து ஷரத் பிரதான் கூறுகையில், "அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட்டும் சஞ்சய் பிரசாத்தும் அவர்களிடம் இதைச் சொல்லவே இல்லையா?

முதலமைச்சர் ஒவ்வொரு வாரமும் அயோத்திக்கு வருகிறார், ஆனால் அவர் இதைக் கவனிக்கக்கூட இல்லையா? சம்பத் ராய்க்கும் யோகிக்கும் ஒத்துப்போவதில்லை என்பது உண்மைதான். யோகி தானும் அந்த அறக்கட்டளையில் இடம் பெற விரும்பினார், ஆனால் அவர் சேர்க்கப்படவில்லை" என்றார்.

"அதற்கு சம்பத் ராய் முக்கிய பங்கு வகித்தார். யோகிக்கு ஆர்.எஸ்.எஸ் அல்லது வி.எச்.பி பின்னணி எதுவும் இல்லை. அவரது குருக்களான மஹந்த் திக்விஜய் நாத் மற்றும் அவைத்யநாத் ஆகியோர் ராம் ஜன்மபூமி இயக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யோகியும் அதில் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில், அறக்கட்டளையில் ஒரு இடத்தைப் பெற தனக்கும் உரிமை இருப்பதாக அவரும் நம்பினார், ஆனால் சம்பத் ராய் இது நடக்காமல் தடுத்துவிட்டார்"எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஷரத் பிரதான், "இந்த விவகாரத்தில் யோகி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆகியவை பிளவுபட்டுள்ளன. மத்திய அரசு எந்த விலை கொடுத்தாவது சம்பத் ராயைக் காப்பாற்ற விரும்புகிறது. யோகியும் சம்பத் ராய் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறார்.

அறக்கட்டளை தொடங்கப்பட்ட நாள் முதலே யோகியுடன் அவருக்கு இணக்கமான சூழல் இல்லை என்பதால், இருவருக்கும் இடையே நீண்டகாலமாகப் பகை உள்ளது. அறக்கட்டளையில் யோகியின் பங்கேற்பை சம்பத் ராய் தடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சம்பத் ராயைக் காப்பாற்ற முயல்கிறது. சம்பத் ராய்க்கு பலத்த அகங்காரம் உள்ளது, யோகிக்கும் நிச்சயமாக அது இருக்கிறது. இது அகங்காரப் போராகவும் மாறியுள்ளது" என்றார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் யோகி, பாஜக, வி.எச்.பி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்குள் மோதல் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அலோக் குமார் நிராகரிக்கிறார்.

அலோக் குமார் கூறுகையில், "நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எந்த மோதலும் இல்லை. அறக்கட்டளையே ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்கக் கோரியது, மாநில அரசும் உடனடியாக அதைச் செய்தது" என்றார்.

மஹிபால் சிங்கை பேட்டி கண்ட அபிஷேக் உபாத்யாய் கூறுகையில், இந்த விவகாரம் பல ஆண்டுகளாக அறக்கட்டளைக்கு தெரிந்திருந்தும் அனைவரும் இது நடக்க அனுமதித்தனர் என்று குறிப்பிடுகிறார்.

அபிஷேக் உபாத்யாய் கூறுகையில், "நான் மஹிபால் சிங்கை பேட்டி கண்டபோது, அவர் ஒரு நாள் கழித்து எனக்கு போன் செய்து அந்த வீடியோவை நீக்குமாறு கேட்டுக் கொண்டார், ஆனால் நான் மறுத்துவிட்டேன். அவர் கடுமையான அழுத்தத்தில் இருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை என்னால் அவரிடம் அடிக்கடி பேச முடிந்தது, ஆனால் இப்போது அவரது மொபைல் எப்போதும் ஆஃப் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

நானும் மஹிபால் சிங்கிற்கு போன் செய்தேன் ஆனால் அவரது மொபைல் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

ஆர்.எஸ்.எஸ்-இன் நம்பகத்தன்மை குறித்து எழுந்துள்ள கேள்வி

இதுகுறித்து அபிஷேக் கூறுகையில், "இந்த விவகாரத்தில் யாராவது மிகவும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்கள் என்றால், அது ஆர்.எஸ்.எஸ் தான்.

ஆர்.எஸ்.எஸ் பொதுமக்களுக்குப் போதிக்கும் எளிமை மற்றும் நேர்மை குறித்து இந்த வழக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்த மஹிபால் சிங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

ஜனவரி 22, 2024 அன்று, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் பிரதிஷ்டை விழாவை பிரதமர் நரேந்திர மோதி முன்னின்று நடத்தினார், அனில் மிஸ்ரா ஒட்டுமொத்த சடங்குகளையும் செய்தார்.

காணிக்கை திருடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் மிஸ்ராவும் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் சுனிதா ஆரோன் இதுகுறித்துக் கூறுகையில், இந்த விவகாரத்தால் விஷ்வ ஹிந்து பரிஷத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தான் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளன என்று குறிப்பிடுகிறார்.

சுனிதா ஆரோன் தொடர்ந்து பேசுகையில், "முதலமைச்சர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி அளவுக்கு சங்கடத்துக்கு ஆளாகவில்லை. ஆனால், ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் கூறும்போது, அவருக்கும் இதில் ஒரு பொறுப்பு உள்ளது" என்றார்.

அதேபோல், " சம்பத் ராய்க்கு நெருக்கமானவர்கள் அவர் அகங்காரம் பிடித்தவர் என்று உடனடியாகக் கூறுகிறார்கள். யோகி குறித்தும் இதேதான் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இருவருக்கும் இடையே அகங்கார மோதல் ஏற்படுவது மிகவும் இயல்பானதுதான். அவர்களுக்கு இடையே விரிசல் இருந்ததாகவும் நான் கேள்விப்பட்டுள்ளேன். சந்தோஷ் துபே போன்ற கரசேவகர்களும் இந்தத் திருட்டுப் பிரச்னையை எழுப்பி வந்தனர்" என்றார்.

மேலும், "முதலமைச்சரும் பிரதமரும் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் பெரிய தலைகள் பிடிபடும் வரை யாரும் இதை நம்ப மாட்டார்கள். இந்தப் பிரச்னையை மூடிமறைப்பது அவ்வளவு எளிதாக இருக்காது" என்றார்.

தங்கள் கண் முன்னே இதெல்லாம் எப்படி நடந்தது என்பது பற்றிய கூர்மையான கேள்விகளால், இந்துத்துவா மற்றும் அதன் ஆதரவாளர்கள் இப்போது தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருக்கலாம்.

அதாவது, நிதி மோசடியில் நேரடியாக தொடர்பில்லாவிட்டாலும், இந்த முறைகேடுகள் குறித்து யாருக்கெல்லாம் தெரிந்திருந்தது , எந்த அளவுக்கு தெரிந்திருந்தது போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

ராம மந்திர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராம மந்திர் இயக்கம் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக இந்த விசாரணையை விரைவாக முடித்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது.

அறக்கட்டளையில் பல வி.எச்.பி உறுப்பினர்களும், நீண்ட காலமாக ராமர் கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய பெருமளவிலான மக்களும் உள்ளனர்.

வி.எச்.பி-யின் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயினிடம், சம்பத் ராய் வேண்டுமென்றே பாதுகாக்கப்படுவதாகப் பலரும் குற்றம் சாட்டுகின்றனரே என நான் கேட்டேன்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், "சம்பத் ஜிக்கு எந்தளவுக்குப் பொறுப்பு இருந்தது என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும். அவர் பொறுப்பேற்றுக் கொண்டார், அதனால்தான் அவர் ராஜினாமா செய்தார். சிலர் சம்பத் ஜியைக் கண்டதும் சுட வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் அது சாத்தியமில்லை. அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பின்னரே தண்டிக்கப்படுவார்" என்றார்.

இந்த வழக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி மீது பொதுமக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாது என்று சுரேந்திர ஜெயின் நம்புகிறார்.

ஜெயின் கூறுகையில், "ஒரு தவறு நடந்துவிட்டது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் விசாரணைக்குப் பிறகு தண்டனை வழங்கப்படும்" என்றார்.

அயோத்தியின் முன்னாள் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ பவன் பாண்டே, சிறப்புப் புலனாய்வுக் குழு என்பது மக்களைப் பாதுகாப்பதற்காக இருக்கிறதே தவிர, உண்மையான குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அல்ல என்று குற்றம் சாட்டுகிறார்.

இதுகுறித்து பவன் பாண்டே கூறுகையில், "அறக்கட்டளையின் வேண்டுகோளின் பேரில் முதலமைச்சர் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தார். யார் மீது அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதோ, அவர்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தத் திருட்டு நடந்து வருகிறது, நாங்கள் தினமும் இப்பிரச்னையை எழுப்பி வந்தோம். ஆனால் சம்பத் ராய் எதுவும் செய்யவில்லை. யோகியும் மௌனம் காத்தார்" என்கிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு