காணொளி: 'ஆள் இல்லை, வெளிச்சம் இல்லை' - சென்னை அருகே இருட்டில் இயங்கும் ஆலை

காணொளிக் குறிப்பு, "ஆட்கள் இல்லை, வெளிச்சம் இல்லை' - இருட்டில் இயங்கும் டார்க் ஃபேக்டரியின் கதை
காணொளி: 'ஆள் இல்லை, வெளிச்சம் இல்லை' - சென்னை அருகே இருட்டில் இயங்கும் ஆலை
பிரசுரிக்கப்பட்டது

மனிதர்களின் தலையீடு இல்லாமலே இயந்திரங்கள் பணியாற்றுவதைக் கடந்த காலங்களில் நாம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகில் அது யதார்த்தமாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரகடத்தில் உள்ள பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் என்கிற நிறுவனம் டார்க் ஃபேக்டரி முறையில் இயங்கி வருகிறது.

இருள் சூழ்ந்த இடத்தில் மனிதர்களின் தலையீடு இல்லாமல், மின்விளக்குகள் ஒளிராமல் இயந்திரங்கள் தானியங்கி முறையில் செமிகன்டக்டர் சிப்களைத் தயாரித்து வருகின்றன.

இங்கு மூலப் பொருட்களை இயந்திரங்களில் வைப்பதும் பேக்கேஜிங் செய்வதும் மட்டுமே மனிதர்களின் பணியாக இருக்கிறது. தானியங்கிமயமாக்கலில் செயற்கை நுண்ணறிவின் பங்கும் கணிசமாக இருப்பதாக துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

2030 வாக்கில் இந்திய செமிகன்டக்டர் துறை 110 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் என மத்திய அரசாங்கத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் செமிகன்டக்டர் துறையில் முதலீடுகளை ஊக்குவித்து வருகின்றன.

தானியங்கி முறையில் உற்பத்தி செய்யும் ஆலைகள் டார்க் ஃபேக்டரிகள் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார் பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஈஸ்வர ராவ் நந்தம்.

"இங்கு மருத்துவம், வேளாண் மற்றும் பாதுகாப்பு சார்ந்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். 2025-ஆம் ஆண்டு வரை 100% ஏற்றுமதி சார்ந்து தான் இயங்கி வந்தோம். இந்த ஆண்டு முதல் உள்நாட்டு சந்தைக்கும் உற்பத்தி செய்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

செமிகன்டர் துறையில் தற்சார்பு அடைந்து, முன்னோடி ஆக வேண்டும் என்கிற கனவு இந்தியாவிற்கு உள்ளது, ஆனால் அதில் சில இடைவெளிகள் இருப்பதாகக் கூறுகிறார் சென்னை ஐஐடியின் இயக்குநர் வி காமகோடி. செமிகன்டக்டர் துறையில் நிபுணத்துவம் பெற்றவரான இவர் அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்.

"செமிகன்டக்டர் உற்பத்தியில் மொத்தம் நான்கு கட்டங்கள் இருக்கின்றன. அதில் இரண்டில் இந்தியாவில் முன்னணியில் உள்ளது, மீதமுள்ள இரண்டு கட்டங்களில் இந்தியா முன்னேறி வருகிறது," என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

முழுமையான தானியங்கி முறை அமலுக்கு வந்தால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. வேலை முறைகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உற்பத்தி மதிப்பு அதிகமாகின்றபோது நிபுணத்துவம் பெற்ற வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்கிறார் வி காமகோடி.

"செமிகன்டக்டர் துறையில் ஏற்கெனவே கணிசமாக தானியங்கி முறை வந்துவிட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறபோது கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதனால் வேலை இழப்பு என்பது இருக்காது. ஆனால் அனைவரும் ஏஐ சார்ந்து கற்றுக்கொண்டு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.

டார்க் ஃபேக்டரி என்றால் என்ன? இந்த நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது? இந்தக் காணொளியில் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.

தயாரிப்பு - மோகன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - ஜனார்தனன்

முழு காணொளியை பிபிசி தமிழின் யூ-டியூப் சேனலில் காண இங்கே க்ளிக் செய்யவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு