திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை தீபம் ஏற்ற உத்தரவு - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல் தூணில் நவம்பர் 28ஆம் தேதி தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்காவின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை சி.ஆர்.பி.எஃப் எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கார்த்திகை தீபத்தன்று மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை நவம்பர் 27ஆம் தேதியான இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில், "நிர்வாகக் குழப்பம்" நிலவுவதாகக் கூறியது.
நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருந்தது கடும் வேதனையை தருகிறது என்றும் அதிகாரிகள் தங்கள் அரசியல் தலைவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்பட்டதாகத் தெரிகிறது என்றும் நீதிமன்றம் விமர்சித்தது.
திருப்பரங்குன்றம் கல் தூணியில் நவம்பர் 28ஆம் தேதி தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தர்காவிலிருந்து குறைந்தது 50 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது. பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், தர்காவின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை CRPF எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், முந்தைய உத்தரவைச் செயல்படுத்த தவறியதால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்த நீதிமன்றம், முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரை நிர்வாகிகளாக நியமித்துள்ளது.
தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



