'500 ரூபாய் நோட்டுகள்' - ராமர் கோவிலை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலிலும் 'காணிக்கை திருட்டு' புகார்

பத்ரிநாத் கோவில்

பட மூலாதாரம், Asif Ali

    • எழுதியவர், ஆசிப் அலி
    • பதவி, டேராடூனிலிருந்து பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, உத்தராகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் கோவிலில் காணிக்கை செலுத்துவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது கோவில் நிர்வாகத்தின் உள்மட்ட விசாரணையைத் தாண்டி, காவல்துறை விசாரணை, மாநில அரசின் உயர்மட்ட விசாரணை மற்றும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.

ஜூலை 2-ஆம் தேதி காணிக்கைத் தட்டுகளில் உள்ள காணிக்கையை எண்ணும்போது முறைகேடு நடந்ததாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சமூக அமைப்பு ஒன்று கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தது.

இதனைத் தொடர்ந்து, பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் நிர்வாகம் இதில் தொடர்புடையதாக ஊழியர் ஒருவரை இடைநீக்கம் செய்தது. அரசு மூன்று பேர் கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்ததுடன், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சிறப்பு விசாரணைக் குழு இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

ஜூலை 12-ஆம் தேதி இரவு, கோவில் நிர்வாகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் பிரமோத் நௌதியாலை டேராடூனில் சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. இந்த முழு நிகழ்வுகளும் பத்ரிநாத் கோவிலின் காணிக்கை நிர்வாகத்தின் மீது கேள்விகளை எழுப்பியது மட்டுமின்றி, பக்தர்களின் காணிக்கைகளைக் கண்காணிக்கும் மற்றும் பொறுப்புக்கூற வைக்கும் தற்போதைய நடைமுறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

ஒரு புகாரில் தொடங்கிய சர்ச்சை; முழு விவகாரம் என்ன?

ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் ஒரு ஊழியரை காவல்துறை கைது செய்துள்ளது.

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் ஒரு ஊழியரை காவல்துறை கைது செய்துள்ளது.

பத்ரிநாத் கோவிலில் காணிக்கை செலுத்துவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம், ஜூலை 2-ஆம் தேதி கோவிலில் காணிக்கைத் தட்டுகளில் உள்ள காணிக்கையை எண்ணும்போது முறைகேடு நடந்ததாகத் தகவல் வெளியானதையடுத்து வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் குறித்துப் பல தகவல்கள் பரவி, விவகாரம் விவாதப் பொருளானது.

ஜூலை 3-ஆம் தேதி, பைரவ் சேனையின் நிறுவனர் சந்தீப் கத்ரி, ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் நிர்வாகத்தின் முதன்மைச் செயல் அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அனுப்பினார்.

அந்தப் புகாரில், காணிக்கை நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் பொதுவெளியில் தெரிந்த பிறகு, இது வெறும் நிதி முறைகேடாக மட்டும் நீடிக்கவில்லை. பத்ரிநாத் போன்ற முக்கியத் திருத்தலத்தில் காணிக்கை நிர்வாகம் மற்றும் அதைக் கண்காணிக்கும் முறை குறித்தும் இந்த முழு நிகழ்வுகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதையடுத்து, கோவில் நிர்வாகம் உள்நாட்டு விசாரணையைத் தொடங்கியது. பின்னர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது, மாநில அரசும் தனிப்பட்ட முறையில் மூன்று பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

புகார் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிகேடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தக் குழுவின் ஆரம்பகட்ட விசாரணையில் முறைகேடுகள் நடந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, தலைவர் அலுவலகத்தில் பணிபுரிந்த தனி உதவியாளர் பிரமோத் நௌதியால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

விசாரணையில் வேறு யாருடைய பங்காவது இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீதும் விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காவல்துறை விசாரணையில் இதுவரை என்ன தெரியவந்துள்ளது?

கணேஷ் கோடியல்

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, பி.கே.டி.சி தலைவர் ஹேமந்த் திவேதி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கணேஷ் கோடியலின் பதவிக்காலத்திலும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஜூலை 8-ஆம் தேதி, பத்ரிநாத் கோவில் நிர்வாக அதிகாரி யுத்தவீர் புஷ்பவான் அளித்த புகாரின் பேரில், பத்ரிநாத் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவு 306 மற்றும் 316(5)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த எஃப்.ஐ.ஆர்-இன் படி, துறைசார் விசாரணைக் குழுவின் ஆரம்பகட்ட விசாரணையின் போது, காணிக்கைத் தட்டுகளில் உள்ள காணிக்கையை எண்ணும்போது, கோவில் நிர்வாக ஊழியர் பிரமோத் நௌதியால், பணத்தையும் பிற காணிக்கைப் பொருட்களையும் தனது தனிப்பட்ட தேவைக்காக எடுத்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சமோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. சிறப்பு விசாரணைக் குழுவினர், கோவில் ஊழியர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததுடன், ஜூலை 2-ஆம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

உத்தராகண்ட் காவல்துறையின் கூற்றுப்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரமோத் நௌதியால் பலமுறை காணிக்கை எண்ணும் அறையிலிருந்து பணத்தையும் பிற பொருட்களையும் தனது செல்போனுக்கு அடியிலும், பாக்கெட்டிலும் மறைத்து வைத்துக்கொண்டு வெளியே எடுத்துச் செல்வது தெரிந்தது.

இதில் 500 ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயப் பொட்டலங்கள், சாளக்கிராமக் கற்கள் மற்றும் குங்குமப்பூப் பொட்டலங்கள் அடங்கும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சான்றுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், ஜூலை 12-ஆம் தேதி இரவு டேராடூனில் உள்ள தனது வீட்டில் இருந்த பிரமோத் நௌதியாலை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருவதாகவும், வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பதிலடி

கணேஷ் கோடியல்

பட மூலாதாரம், Asif Ali

படக்குறிப்பு, கோவில் நிர்வாகத் தலைவரின் பங்கையும் விசாரணைக் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கணேஷ் கோடியல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது அரசியல் வடிவம் பெற்றுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பத்ரிநாத் கேதார்நாத் கோவில் குழு (BKTC) தலைவர் ஆகியோர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கணேஷ் கோடியல் கூறுகையில், விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட ஊழியர் தன்னை வற்புறுத்தினால் மற்றவர்களின் பெயர்களையும் சொல்வேன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், காவல்துறை அதிகாரப்பூர்வமாக இதை உறுதிப்படுத்தவில்லை.

கோடியல் மேலும் கூறுகையில், காணிக்கை எண்ணும் பொறுப்பு பிரமோத் நௌதியாலிடம் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு ஒரு ஊழியர் மட்டும் பொறுப்பாக முடியாது என்றார். இந்த விவகாரத்தில் மற்றவர்களின் பங்கு குறித்தும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், கோவில் நிர்வாகத் தலைவரின் பங்கையும் விசாரணையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இந்திரேஷ் மைக்ரி, இந்த விவகாரம் ஒரு ஊழியரோடு மட்டும் முடிந்துவிடக் கூடாது என்று குற்றம் சாட்டியுள்ளார். பிரமோத் நௌதியால் தலைவரின் தனி உதவியாளராக இருந்தால், பத்ரிநாத்தில் அவருக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்பட்டன மற்றும் அவர் தனியாகவே பணியாற்றினாரா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். கோவில் நிர்வாகத்தின் உயர்மட்டப் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பி.கே.டி.சி தலைவர் ஹேமந்த் திவேதி, பிரமோத் நௌதியால் தனது "தனிப்பட்ட செயலாளர்" அல்ல, அவர் கோவில் நிர்வாகத்தின் ஊழியர் என்றும், முன்னரும் பல தலைவர்களுடன் தனி உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் என்றும் கூறினார்.

நௌதியால் 2014-இல் அப்போதைய பி.கே.டி.சி தலைவரும், தற்போதைய காங்கிரஸ் மாநிலத் தலைவருமான கணேஷ் கோடியலின் பதவிக்காலத்தில் இணைய ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தில் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார் என்றும், பின்னர் அவர் தனி உதவியாளர் பதவியில் மாற்றப்பட்டார் என்றும் ஹேமந்த் திவேதி குற்றம் சாட்டினார்.

தற்போதைய விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய ஊழியர் மீது இடைநீக்கம், எஃப்.ஐ.ஆர் மற்றும் கைது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், துறைசார் விசாரணை முடிவடைந்துள்ளதாகவும், அரசு உயர்மட்ட விசாரணையும் நடைபெற்று வருவதாகவும் ஹேமந்த் திவேதி தெரிவித்தார். மேலும், பி.கே.டி.சி தலைவராக கணேஷ் கோடியல் இருந்த காலத்திலும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பி.கே.டி.சி தலைவரின் கருத்துகளை காங்கிரஸும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கவில்லை. இந்த அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பதிலடிகளுக்கான இறுதி முடிவு, விசாரணை மற்றும் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையிலேயே வெளிவரும்.

'குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்' - முதலமைச்சர் உறுதி

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடுத்து, பக்தர்களின் நம்பிக்கையோடு தொடர்புடைய தீவிரமான விஷயம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மாநில அரசு மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தது. கார்வால் மண்டல ஆணையர் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் திவாரி மற்றும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையின் இயக்குநர் (நிதி) ஜகத் சிங் சௌகான் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

அரசின் உத்தரவுப்படி, இந்தக் குழு 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் காணிக்கை நிர்வாகத்தை எவ்வாறு இன்னும் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் மாற்றலாம் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்களின் நம்பிக்கையோடு விளையாடுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் முதலமைச்சர் தாமி பொதுவெளியில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் மிக முக்கியமானது, ஏனெனில் பத்ரிநாத் கோவில் நாட்டின் மிக முக்கியமான இந்து திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, பணம், நகை மற்றும் பிற காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். இத்தகைய சூழலில், காணிக்கை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பது நிர்வாக நடைமுறை சார்ந்த கேள்வி மட்டுமல்ல, இது பக்தர்களின் நம்பிக்கை மற்றும் கோவில் நிர்வாகத்தின் நம்பகத்தன்மை சார்ந்த விஷயமும் ஆகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு