ஏஐ பயன்படுத்தினாலும் மூளையை மழுங்கடிக்காமல் வைத்திருப்பது எப்படி?

பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images
- எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஜிபிஎஸ் நமது திசையறியும் திறனைக் கெடுத்துவிட்டது. தேடுபொறிகள் நமது நினைவாற்றலை பலவீனப்படுத்துகின்றன. ஏஐ தொழில்நுட்பமும், படைப்பாற்றல் முதல் சிந்தனை வரை அனைத்திற்கும் இதே போன்ற நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, என்னால் இயன்றவரை அடிக்கடி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன். நான் அதைப் பற்றி எழுதப் போகிறேன் என்றால், நானும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியாக வேண்டும் அல்லவா. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் புதிய ஆய்வுகள் என்னை கவலையடையச் செய்துள்ளன. இந்த செயல்பாட்டில் நான் எனது மூளையை சேதப்படுத்துகிறேனா?
சாட்ஜிபிடி போன்ற கருவிகளை அதிகம் சார்ந்திருக்கும் நபர்களுக்குப் படைப்பாற்றல், கவனக் குவிப்புத் திறன், விமர்சன ரீதியான சிந்தனை, நினைவாற்றல் மற்றும் பலவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏஐ பயனர்கள் சிந்தனையை கூர்மையாக்கும் 'அறிவாற்றல் முயற்சியை' கைவிட நேரிடலாம் என்றும், ஒரு சமூகமாக நம்மிடம் அசல் யோசனைகள் குறைவாகவே இருக்கக்கூடும் என்றும் மற்றவர்கள் கவலை எழுப்புகின்றனர். ஆனால் இது குறித்த அறிவியல் முற்றிலும் புதியது, இதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. எனவே நாம் கவலைப்பட வேண்டுமா?
"பொதுவாக பார்த்தால், ஆம்," என்கிறார் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் பேராசிரியராகவும், ரிலேஷனல் காக்னிஷன் ஆய்வகத்தின் இயக்குநராகவும் இருக்கும் ஆடம் கிரீன்.
இதில் பல நுணுக்கங்கள் உள்ளன, ஆனால் முன்பு மன உழைப்பு தேவைப்பட்ட வேலைகளை இனி ஏஐ செய்யும்.
"நீங்கள் உண்மையான சிந்தனையை அந்த அளவுக்குச் செய்யவில்லை என்றால், அந்த வகையான சிந்தனையைச் செய்வதற்கான உங்கள் திறன் சிதைந்துவிடும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன."
நீங்கள் சாட்ஜிபிடி அல்லது கிளாட் ஆகியவற்றைத் தேடிப் பயன்படுத்தாவிட்டாலும் கூட, கூகுளின் தேடல் முடிவுகளின் முதலில் ஏஐ பதில்கள் இருக்கின்றன, மேலும் தொழில்நுட்பத் பெருநிறுவனங்கள் இதை நமது தொலைபேசிகளில் இன்னும் அதிகமாகத் திணிக்க அவசரப்படுகிறார்கள். இந்தத் தொழில்நுட்பத்தைத் தவிர்ப்பது கடினமாகி வருகிறது, ஆனால் சாத்தியமான பெரிய ஆபத்துகளைத் தவிர்க்க நீங்கள் சில நடவடிக்கைகளை எடுக்கலாம்.
இருப்பினும் இது முற்றிலும் ஒட்டுமொத்தமாக நடக்கும் ஒன்றல்ல என்கிறார் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் டெல் மருத்துவப் பள்ளியின் பேராசிரியரும், மருத்துவ நரம்பியல் நிபுணருமான ஜாரெட் பெஞ்ச்.
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தானாகவே உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. உதாரணமாக, ஏஐ உங்கள் மூளையின் இடத்தை மற்ற மிக முக்கியமான விஷயங்களுக்காக விடுவித்தால், அது உங்கள் அறிவாற்றலுக்குச் சிறந்ததாக இருக்கலாம்.
"ஏஐ தொழில்நுட்பம், நமது மூளை ஏற்கனவே பழகிவிட்ட மற்ற விஷயங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்?" என்கிறார் பெஞ்ச். "ஒரு கருவி நல்லதா அல்லது கெட்டதா என்பது அதன் இயல்பில் இல்லை."
மற்ற எந்தத் தொழில்நுட்பத்தையும் போலவே, நாம் ஏஐ-ஐ எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதுதான் அது நமக்கு உதவுகிறதா அல்லது தீங்கு விளைவிக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும். ஆனால் இந்த கவலைகள் மிகவும் தீவிரமானவை, எனவே நீங்கள் காலம் கடக்கும் முன்பே இந்தக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்ய விரும்பலாம்.
இதைக் கருத்தில் கொண்டு, நமது மூளையை அது மழுங்கடிக்கச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய, நாம் ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இத்துறையின் சில முன்னணி நிபுணர்களுடன் நான் பேசினேன்.
நாம் எதைப் பற்றிக் கவலைப்படுகிறோம்?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தொழில்நுட்பத்தை அதிகமாகச் சார்ந்து இருப்பது ஒரு வகையான "டிஜிட்டல் மறதி நோயை" ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்து உருவானது, இது குறுகிய கால நினைவாற்றல் மற்றும் பிற அறிவாற்றல் செயல்முறைகளின் சிதைவுக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டது.
பெஞ்ச் சமீபத்தில் 411,000 க்கும் மேற்பட்ட முதியவர்களை உள்ளடக்கிய 57 ஆய்வுகளை ஆராய்ந்த ஒரு மெட்டா-பகுப்பாய்வை இணைந்து எழுதினார். மொத்தத்தில், அவரும் அவரது சக எழுத்தாளரும் டிஜிட்டல் மறதி நோய்க்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை. தொழில்நுட்பப் பயன்பாடு உண்மையில் அறிவாற்றல் குறைபாட்டின் அபாயத்தைக் குறைப்பதாகவே தோன்றியது.
ஆனால் அதற்காக பயப்படுவதற்கு எதுவுமே இல்லை என்று அர்த்தமல்ல.
ஜிபிஎஸ் போன்ற செயற்கைக்கோள் வழிசெலுத்தலைச் சார்ந்து இருக்கும் மக்கள், தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளின் மன வரைபடங்களை உருவாக்குவதை நிறுத்திவிடுகிறார்கள் என்றும், காலப்போக்கில் அவர்களின் இடஞ்சார்ந்த நினைவாற்றல் தொடர்ந்து குறைகிறது என்றும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
தேடுபொறிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது "கூகுள் எஃபெக்ட்" எனப்படும் இதே போன்ற ஒரு நிகழ்வு உருவானது. வெளிப்படையாகப் பார்த்தால், ஒரு தேடுபொறியைப் பயன்படுத்தி நாம் கண்டறியும் தகவல்களை நினைவில் வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, ஏனெனில் அதற்கு மிகக் குறைந்த முயற்சியே தேவைப்படுகிறது. பணிகளை நாம் வெளியில் ஒப்படைக்கும்போது மூளை அந்தப் பணிகளில் மோசமடைகிறது என்று தோன்றுகிறது.
மேலும் ஏஐ என்பது இதுவரை இல்லாத அளவு மிகச் சக்திவாய்ந்த அவுட்சோர்சிங் கருவியாகும்.

பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images
"ஏஐ தொழில்நுட்பத்தில் என்ன நடக்கிறது என்றால், அது முதன்முறையாக, செயல்முறைக்குப் பதிலாக தயாரிப்பைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு எளிய வழியை நமக்கு வழங்குகிறது," என்கிறார் கிரீன். கட்டுரை இன்னும் சிறப்பாக எழுதலாம். ஓய்வுபெறும் விழாவின் நகைச்சுவை மிகச் சரியாக அமையலாம்.
"இது நீங்கள் உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும்போது ஒரு ரோபோ உங்களுக்காகப் பளுதூக்குவதைப் போன்றது," என்று கிரீன் கூறுகிறார். "உங்களுக்கு எதுவும் கிடைக்காது."
எனவே நீங்கள் ஏஐ-ஐப் பயன்படுத்தி அதே நேரம் உங்கள் மூளைக்கும் பயிற்சி கொடுக்க முடியும்?
ஏஐ-இன் வார்த்தைகளை அப்படியே நம்பிவிடாதீர்கள்
சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஏஐ-ஐ அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் ஒரு திறனாய்வுச் சிந்தனை தேர்வில் கணிசமாகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது கண்டறியப்பட்டது, வெளிப்படையாக அவர்கள் தங்களின் சிந்தனைச் செயல்முறைகளை ரோபோக்களிடம் ஒப்படைக்கப் பழகிவிட்டதே இதற்குக் காரணம்.
ஏஐ தவறாக இருக்கும்போது கூட மக்கள் தங்கள் சொந்த சிந்தனை மற்றும் உள்ளுணர்வை விட ஏஐ-ஐ அதிகம் நம்புகிறார்கள் இதை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் "அறிவாற்றல் சரணாகதி" என்று அழைக்கிறார்கள்.
உங்களுக்கு விஷயம் குறைவாகத் தெரியும்போது இந்தச் சிக்கல் இன்னும் மோசமாகிறது. மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் நடத்திய ஒரு ஆய்வு, உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றிப் பரிச்சயம் குறைவாக இருக்கும்போது தான் நீங்கள் அதிக ஆபத்தில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. "வெளியீடு சிறப்பானது தானா என்பதை மதிப்பிடுவதற்கான நிபுணத்துவம் பயனரிடம் இல்லை என்றால் அதுதான் ஆபத்து." என்கிறார் இந்த ஆய்வை இணைந்து எழுதிய கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஹாங்க் லீ.
இதற்கான தீர்வு நீங்கள் செயலியைத் திறப்பதற்கு முன்பே தொடங்குகிறது. ஒரு புதிய அந்நியரின் பதிலை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்றால், நீங்கள் ஏஐ-ஐயும் நம்பக்கூடாது என்கிறார் லீ. அந்தத் தலைப்புகளில் தான் நீங்கள் முதலில் உங்கள் சொந்தத் தீர்ப்பைக் கொண்டு வர வேண்டும். ரோபோவின் கருத்தைப் பெறுவதற்கு முன்பு, அந்தத் தலைப்பில் ஒரு தோராயமான பார்வையை உருவாக்க முயலுங்கள் மற்றும் உங்கள் பார்வையைச் சோதிக்க ஏஐ-ஐ பயன்படுத்துங்கள். அந்த வகையில் ஏஐ உங்கள் சிந்தனையை மாற்றுவதற்குப் பதிலாக, அதை அழுத்தப் பரிசோதனை செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images
உங்கள் ஆராய்ச்சியில் கூடுதல் அம்சத்தை சேர்க்கவும்
ஏஐ உங்கள் தகவல்களைத் தக்கவைத்துக் கொள்ளும் திறனில் குறுக்கிடக்கூடும் என்று சில ஆரம்பகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 494 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், சாட்ஜிபிடியை அடிக்கடி பயன்படுத்தியவர்கள் நினைவாற்றல் இழப்பைப் உணர அதிக வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டது. சுய-மதிப்பீடுகள் துல்லியமான அறிவியல் அல்ல, ஆனால் வெளியிடப்படாத 2024 ஆம் ஆண்டின் ஆய்வு போன்ற பிற ஆராய்ச்சிகள், ஏஐ சாட்பாட்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மூளையைச் சில எளிய புதிர்களைத் தீர்க்கத் தயார்படுத்துவது நீங்கள் ஏஐ-லிருந்து கற்றுக்கொள்வதை மேம்படுத்தும் என்பதை வெளிப்படுத்துகிறது.
நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய தகவல்களை ஏஐ-யிடம் கேட்கும்போது, அதனுடன் ஈடுபடச் சற்றே நிதானிப்பது நல்லது. குறிப்புகளை எடுங்கள் - கையால் எழுதலாம், ஆனால் தட்டச்சு செய்வதும் பலன் தரும். நீங்கள் ஏஐ-யிடம் உங்களைச் சோதிக்கக் கேட்கலாம் அல்லது ஃபிளாஷ்கார்டுகளை உருவாக்கச் சொல்லலாம். இந்த உழைப்பு அதை மனதில் பதிய வைக்கிறது. இது சற்று சிரமமாகத் தோன்றலாம், ஆனால் இந்த முயற்சிதான் இங்கு முக்கியம்.
வெற்றுப் பக்கத்தைச் சற்று கூடுதல் நேரம் வெற்றாகவே விடுங்கள்
யோசனைகளைக் கொண்டு வருவதில் ஏஐ வியக்கத்தக்க வகையில் சிறந்தது. அதுதான் பிரச்னையே. படைப்பாற்றல் சார்ந்த பணிகளுக்கு ஏஐ-ஐப் பயன்படுத்தும் மக்கள், அதைப் பயன்படுத்தாத மக்களை விட மிகவும் கணிக்கக்கூடிய மற்றும் குறைவான தனித்துவ தன்மையைக் கொண்ட யோசனைகளையே உருவாக்குகிறார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது உங்கள் படைப்பாற்றல் திறனை பலவீனப்படுத்தக்கூடும்.
எதிர்பாராத இணைப்புகளை உருவாக்குவதன் மூலம் உங்கள் மூளை படைப்பாற்றல் திறனை உருவாக்குகிறது என்கிறார் கிரீன். அந்த வேலையை ஏஐ-யிடம் ஒப்படைத்தால், நீங்கள் பயிற்சியைத் தவிர்க்கிறீர்கள். "உங்கள் படைப்பாற்றல் தசையை இழப்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்," என்கிறார் கிரீன். "ஏஐ உண்மையில் நம்மை அதிக படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்றுகிறது என்று நம்மை நம்ப வைக்கப் பல வழிகளில் நம்மை ஏமாற்றுகிறது."
இதை முறியடிப்பதற்கான ஒரு வழி, உங்கள் யோசனைகள் தோராயமாக இருந்தாலும், முதலில் அவற்றை ஒரு காகிதத்தில் எழுதுவதாகும். ஒரு வெற்றுப் பக்கத்துடன் அதிக நேரம் செலவிடுங்கள் மற்றும் தோன்றுவதை எழுதுங்கள். தரம் முக்கியமல்ல. உங்கள் மூளை இணைப்புகளை உருவாக்குகிறது என்பதும், நீங்கள் மட்டுமே கொண்டு வரக்கூடிய ஒன்றை உருவாக்க உங்கள் சொந்த அனுபவங்கள், நினைவுகள் மற்றும் அறிவைப் பயன்படுத்துகிறது என்பதும்தான் முக்கியம். அதுதான் பயிற்சி. அதன் பிறகு நீங்கள் வைத்திருப்பதை மேம்படுத்த, அதில் உள்ள குறைகளைக் கண்டறிய அல்லது அதைச் செப்பனிட ஏஐ-ஐப் பயன்படுத்துங்கள்.

பட மூலாதாரம், Getty Images
கவனத்தைச் செலுத்துங்கள்
கட்டுரையின் இந்த பகுதி வரை நீங்கள் படித்துவிட்டீர்கள். நன்று. ஆனால் உங்கள் கவனம் சிதறத் தொடங்கினால், நீங்கள் மட்டும் தனியாக இல்லை. எனது எழுத்து உங்களுக்கு அலுப்பைத் தருவதாகக் கூட இருக்கலாம். எவ்வாறாயினும், தொழில்நுட்பத்தின் படையெடுப்பு நாம் கவனம் செலுத்துவதைக் கடினமாக்குகிறது என்றும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏஐ இந்தச் சிக்கலைக் கூட்டக்கூடும். பதில்கள் உங்கள் விரல் நுனியில் உள்ளன, மேலும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் தவிர்க்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் இங்குள்ள மற்ற உதவிக்குறிப்புகளுக்குப் பயன்படுத்திய அதே தர்க்கத்தை நீங்கள் இதற்கும் பயன்படுத்தலாம்: வேண்டுமென்றே விஷயங்களை மெதுவான வழியில் செய்யுங்கள். அந்த நீண்ட கட்டுரையைச் சுருக்க சாட்ஜிபிடியைப் பயன்படுத்த வேண்டாம். ஒரு கடினமான சிக்கலை ஒரு ரோபோவிடம் கேட்பதற்கு முன்பு அதனுடன் சற்று நேரம் செலவிடுங்கள். உங்களுக்கு அலுப்புத் தட்ட அனுமதியுங்கள். விரும்பத்தகாததாக இருப்பதுதான் இலக்கு. அதுதான் ஆழமான சிந்தனைக்குத் தேவைப்படும் அம்சத்தை தாங்கிக்கொள்ளவும், இறுதியில் அதை அனுபவிக்கவும் உங்கள் மூளை கற்றுக்கொள்ளும் வழியாகும்.
மனித மூளைகள் முக்கியமானவை
சாட்ஜிபிடி, கிளாட் அல்லது ஜெமினி போன்ற ஏஐ சாட்பாட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு நான் இங்கு கூறவில்லை. ஆனால் எனது மூளையைத் தொடர்ந்து முன்னிலையில் வைத்திருக்க, நான் அவற்றைப் பயன்படுத்தும்போது இன்னும் சிந்தனையுடன் இருக்க என்னை நானே கட்டாயப்படுத்துகிறேன்.
அது எதிர்காலத்தில் என்னையும், உங்களையும் ஒரு சிறந்த நிலையில் வைத்திருக்கக்கூடும். நாம் தனிப்பட்ட, எதிர்பாராத மற்றும் உண்மையிலேயே புதிய இணைப்புகளை உருவாக்குவதால், மனித மூளைகள் ஏஐ-லிருந்து கட்டமைப்பு ரீதியாக முற்றிலும் வேறுபட்டவை என்று கிரீன் கூறுகிறார்.
"மனித யோசனைகளின் தனித்துவமும் பன்முகத்தன்மையும் தான் வரும் ஆண்டுகளில் பெரும் மதிப்பு கூட்டப்பட்டதாக இருக்கப் போகிறது," என்று அவர் கூறுகிறார். சமூகத்தில் வெற்றி பெற்று முன்னுக்கு வருவதற்கு "பாட்களுக்கு வெளியே யோசிப்பது" நமக்கு ஒரு இயல்பான தற்காப்புத் தூண்டலாக மாறும் என்று கிரீன் கணிக்கிறார்.
மேலும், பெஞ்ச் சுட்டிக்காட்டுவது போல, நாம் இதற்கு முன்பும் இந்த பாதையில் பயணித்துள்ளோம். "நமது மூளை எப்போதும் தொழில்நுட்பத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டுள்ளது. நாம் எப்போதும் தகவமைத்துக் கொள்கிறோம். அது ஒரு இனமாக நமது பலம்," என்று அவர் கூறுகிறார். "நம்மிடம் கார்கள் இருப்பதால் நாம் மாரத்தான் ஓடும் திறனை இழந்துவிட்டோமா? இல்லை. மனிதர்கள் அதைச் செய்ய விரும்புவதால் அது அவர்கள் செய்யும் ஒரு விஷயமாக மாறுகிறது."
கருவிகள் மாறுகின்றன. ஆனால், நமக்காக நாமே சிந்திக்க, உருவாக்க மற்றும் விஷயங்களைக் கண்டறிவதற்கான ஆசை, தானியக்கமாக்கப்படுவதற்கு மிகவும் கடினமானது என்று தோன்றுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































