ஸ்பைடர்-மேன்: 1962இல் ஸ்டான் லீக்கு வந்த 'மோசமான ஐடியா' தலைமுறைகள் கடந்து சாதிப்பதன் ரகசியம்

ஸ்பைடர்-மேன்: 1962இல் ஸ்டான் லீக்கு வந்த 'மோசமான ஐடியா' தலைமுறைகள் கடந்து சாதிப்பதன் ரகசியம்

பட மூலாதாரம், Sony Pictures/IG

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஸ்பைடர்-மேன். 1962ஆம் ஆண்டில் ஒரு நாள் தனது வீட்டின் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பூச்சியைப் பார்த்தபோது ஸ்டான் லீ மூளைக்குள் உதித்த இந்த சூப்பர் ஹீரோ பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் உலகளவில் தொடர்ந்து ரசிகர்களைக் குவித்துக் கொண்டிருக்கிறான்.

ஆனால், முதன்முதலாக ஸ்டான் லீ ஸ்பைடர்-மேன் யோசனையைத் தனது பதிப்பாளரான மார்ட்டின் குட்மேனிடம் தெரிவித்தபோது, "தான் கேட்டதிலேயே மிகவும் மோசமான ஐடியா" என்று கூறிப் புறக்கணித்துவிட்டார்.

அதற்குப் பிறகு, தனக்குள் தோன்றிவிட்ட இந்த கதாபாத்திரத்தை வெளியே கொட்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தில், அமேசிங் ஃபேன்டஸி #15 என்ற காமிக் இதழின் இறுதிப் பதிப்பில் சாதுர்யமாக நுழைத்துவிட்டார். அந்தப் பதிப்பு முடிவுற இருந்ததால் அவரது செயலை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவுமில்லை.

அந்த இதழ் வெளியாகி சில வாரங்கள் கழிந்தபோது, வாசகர்கள் மத்தியில் இருந்து ஸ்பைடர்-மேனுக்கு கிடைத்த அபரிமிதமான ஆதரவு, அதன் உண்மையான மதிப்பைப் புரிந்துகொண்ட குட்மேன், அந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கென தனி காமிக் இதழை வெளியிட முடிவு செய்தார்.

அதுவரை மக்கள் பார்த்து வந்த சூப்பர் ஹீரோக்களில் இருந்து ஸ்பைடர்-மேன் முற்றிலும் வேறுபட்டவனாக இருந்ததே இத்தனை ஆண்டுகளாகத் தொடரும் வெற்றிக்கான காரணம்.

ஒரு பதின்பருவ மாணவனாக, மக்கள் பெரிதும் வெறுக்கும் சிலந்தியை ஒத்த சக்திகளுடன், நிஜ உலகில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திப்பதைப் போன்ற சிக்கல்களை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஓர் இயல்பான, தங்களில் ஒருவராகப் பார்க்கவல்ல சூப்பர் ஹீரோவாக ஸ்பைடர்-மேன் இருந்ததால், மக்கள் தங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைத்துக்கொள்ளும் கதாபாத்திரமாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது.

ஸ்டான் லீ உருவாக்கிய சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேன் முதன்முதலாக 1962ஆம் ஆண்டில் வெளியான 'அமேஸிங் ஃபேன்டஸி' இதழில் அறிமுகம் செய்யப்பட்டது

பட மூலாதாரம், ROBYN BECK/AFP via Getty Images

படக்குறிப்பு, ஸ்டான் லீ உருவாக்கிய சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேன் முதன்முதலாக 1962ஆம் ஆண்டில் வெளியான 'அமேஸிங் ஃபேன்டஸி' இதழில் அறிமுகம் செய்யப்பட்டது

பீட்டர் பார்க்கர் என்னும் பதின்பருவ இளைஞன்

நம்மில் கிட்டத்தட்ட அனைவருமே சிறு வயதில் சிலந்தியைப் போல வலைவிட்டுப் பறக்கும், சுவர்களில் ஏறக்கூடிய சூப்பர் ஹீரோவை மட்டுமே பெரிதும் ரசித்திருப்போம்.

ஆனால், படிப்படியாக வளர, வளர, அந்த முகமூடிக்குப் பின்னால் இருக்கும் பீட்டர் பார்க்கர் என்ற பதின்பருவ இளைஞனுடன் நடைமுறையில் ரசிகர்கள் தங்களைப் பிணைத்துக் கொள்ளத் தொடங்கினர். குறிப்பாக, இன்றைய நவீன உலகிலும் அனைவரும் தங்களுடன் பிணைத்துக் கொள்ளும் வகையில் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரத்தை ஸ்டான் லீ வடிவமைத்துள்ளார்.

ஸ்டான் லீ உருவாக்கிய சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேன் முதன்முதலாக 1962ஆம் ஆண்டில் வெளியான 'அமேஸிங் ஃபேன்டஸி' இதழில் அறிமுகம் செய்யப்பட்டது

பட மூலாதாரம், Mario Tama/Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வீட்டு வாடகை, துயரம், பிரேக்-அப், அடிக்கடி தாமதமாக வருவது குறித்த குற்றவுணர்வு என நம்மில் பலரும் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பீட்டர் அனுபவிப்பது, அவனைத் தங்களில் ஒருவனாக ரசிகர்களைப் பார்க்க வைத்தது.

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் பல தலைமுறைகளிலும் இவ்வாறு பார்க்கப்பட்ட அந்த பீட்டர் பார்க்கரை மீண்டும் கண்முன் கொண்டு வந்துள்ளது. சிறு வயதில் நடுவிலுள்ள இரு விரல்களை உள்ளங்கைக்குள் மடக்கி வைத்து, வலை விடுவதைப் போல பாவித்த போதெல்லாம், ஸ்பைடர்-மேன் போல சூப்பர் பவர் வேண்டுமென விரும்பியதுண்டு. அதுவே, வயது செல்லச் செல்ல, அந்த முகமூடிக்குப் பின்னாலுள்ள பீட்டர் மீது கவனம் குவியத் தொடங்கியது.

இப்படியாக, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, குழந்தைப் பருவத்தில் தொடங்கி எவ்வளவு வயதானாலும் ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமான இடத்தை ஸ்பைடர்-மேன் தொடர்ந்து தக்க வைத்திருப்பது எப்படி?

இதற்கு, "நாம் முகமூடி அணிந்த, சாகசங்களைச் சூப்பர் ஹீரோவை ரசிப்பதையும் தாண்டி, அதற்குள் ஒளிந்திருக்கும் நம்மைப் போன்ற ஓர் இளைஞனை புரிந்துகொள்ளத் தொடங்கியதே காரணம்" என்று கூறுகிறார் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்பைடர்-மேன் குறித்த காமிக் புத்தகங்கள், அனிமேஷன் சீரிஸ், திரைப்படங்கள் என அனைத்தையும் தேடித் தேடி சேகரிக்கும் தீவிர ரசிகரான கோகுல்.

அவரைப் பொறுத்தவரை, நம் அனைவரின் வாழ்வும் ஒருவேளை பீட்டர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைத் தாண்டி வளர்ந்துவிடவில்லை, எதுவும் மாறிவிடவில்லை என்பதுகூட நீடித்து நிற்பதற்குக் காரணமாக இருக்கலாம்.

கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் டோபி மெக்குயர் பீட்டர் பார்க்கராக நடித்திருந்தார்

பட மூலாதாரம், Columbia Pictures/Getty Images

படக்குறிப்பு, கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் டோபி மெக்குயர் பீட்டர் பார்க்கராக நடித்திருந்தார்

சிலந்தியின் சக்திகளை மட்டுமே பார்த்து ரசித்த குழந்தைப் பருவம்

நம்மில் பெரும்பாலானோர் குழந்தைப் பருவத்தில் பீட்டர் பார்க்கரை கவனிக்கவில்லை. அந்தப் பதின்பருவ இளைஞனின் முகமூடியை அணியவே விரும்பினோம்.

அவனைப் போலவே சுவர்களில் ஏற வேண்டும், ஆபத்தை முன்கூட்டியே உணர வேண்டும், நெருக்கடியான தெருக்களில் இருந்து வலை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டுமென ஆசைப்பட்டோம்.

"சுயமாகச் செய்த முகமூடியை அணிந்துகொண்டு, வீட்டுப் படிக்கட்டுகளை வானளாவிய கட்டடமாகக் கற்பனை செய்து, வீட்டுக் கூரைகளில் கயிறு, துண்டு போன்றவற்றைச் செருகி வலையாகக் கற்பனை செய்து தலைகீழாகத் தொங்குவது என ஸ்பைடர்-மேன் மிகச் சாதாரண அறைகளைக்கூட பெரிய உலகமாக என்னை உணரச் செய்தான். இப்போது வெளியாகியுள்ள பிராண்ட் நியூ டே திரைப்படத்தில் காணும் பீட்டர் பார்க்கர் என்னை அந்தப் பருவத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்கிறான்" என்கிறார் கோகுல்.

ஸ்டான் லீ முதன்முதலாக ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை உருவாக்கியபோது, அவரது பதிப்பாளர் குட்மேன், தான் கேட்டதிலேயே மிகவும் "மோசமான ஐடியா" எனக் கூறி நிராகரித்தார்

பட மூலாதாரம், Sebastian Artz/Getty Images

படக்குறிப்பு, ஸ்டான் லீ முதன்முதலாக ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை உருவாக்கியபோது, அவரது பதிப்பாளர் குட்மேன், தான் கேட்டதிலேயே மிகவும் "மோசமான ஐடியா" எனக் கூறி நிராகரித்தார்

பீட்டருக்குள் தன்னைப் போல் ஒருவனைக் கண்ட பதின்பருவ இளைஞர்கள்

குழந்தைப் பருவத்தில் இப்படியாக இருந்த ஸ்பைடர்-மேன் மீதான பார்வை, வளரிளம் பருவத்தில் வேறு வடிவத்தைப் பெற்றது. அதுவரை நாம் பார்த்த அபாரமான சக்திகளைத் தாண்டி, அதற்குள் இருந்த பதின்பருவ இளைஞனை ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கினர்.

பீட்டர் பார்க்கர், அறிவாளியாக இருந்தபோதிலும் கவனிக்கப்படாத மாணவனாக, நகைச்சுவை உணர்வு இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாதவனாக, மக்களால் சூழப்பட்டு இருந்தாலும் அடிக்கடி தனிமையை உணர்ந்தவனாக இருப்பதைக் கவனிக்கத் தொடங்கினோம்.

பீட்டருக்கு நட்பு, காதல், அங்கீகாரம் அனைத்தும் வேண்டும். ஆனால் அவனுக்கு இருக்கும் சமூகப் பொறுப்புகள், அவனைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துகள் அவனை மற்றவர்களைப் போல் இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்குத் தடையாக இருந்தன.

இது, "பீட்டரை போலவே நிஜ உலகில் தாங்கள் எதிர்கொண்ட இளமைப் பருவ பிரச்னைகளுடன் ஒப்பிட்டுக் கொண்டனர். அத்துடன், இந்தப் பிரச்னைகளைக் கடந்து தனது சமூகப் பொறுப்புகளைப் புறக்கணிக்காத பீட்டரை பார்க்கையில், அதேபோன்ற பொறுப்புணர்வும், பிரச்னைகளைத் தாண்டி நகர்வதற்கான மன உறுதியும் கிடைத்ததாக" கூறுகிறார் மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் மீது தீவிர ஆர்வம் கொண்டவரான பவ்யா பாலகிருஷ்ணன்.

குறிப்பாக, கதை தொடங்கவற்கு முன்பே முழுமையான, சக்தி வாய்ந்த நாயகர்களாகத் தோன்றும் பிற சூப்பர் ஹீரோக்களில் இருந்து ஸ்பைடர்-மேன் முற்றிலும் வேறுபடுவதாகக் குறிப்பிட்ட பவ்யா, "பீட்டர் தொடர்ச்சியாக மேம்பட்டுக் கொண்டே இருக்கக்கூடிய கதாநாயகனாக, எவ்வளவு பிரச்னைகளை எதிர்கொண்டாலும், தனக்குள் அச்சம், சுய சந்தேகம் இருந்தாலும், தனது கடமைகளில் இருந்து பின்வாங்காத இளைஞனாக எனக்குத் தெரிந்தான்," என்று கூறினார்.

ஸ்பைடர்-மேன்: 1962இல் ஸ்டான் லீக்கு வந்த 'மோசமான ஐடியா' தலைமுறைகள் கடந்து சாதிப்பதன் ரகசியம்

பட மூலாதாரம், Columbia Pictures/Getty Images

சிறு வயது முதல் பீட்டரை பார்த்து வளரும்போது, அச்சம், நம்பிக்கையின்மை, சுய சந்தேகம் போன்றவை ஏதோ அந்நியமான உணர்ச்சிகள் இல்லை என்பதை உணர்ந்து, அவற்றை அங்கீகரித்து, அதேநேரம் அவை உண்டாக்கும் மனத் தடைகளைக் கடந்து முன்னேற வேண்டுமென்ற உத்வேகத்தை தனக்குக் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

"அபாரமான சக்தியுடன் கூடவே அபரிமிதமான பொறுப்பும் வருகிறது. (With Great Power comes Great Responsibility)"

பீட்டருக்கு அங்கிள் பென் இறப்பதற்கு முன்பாக வழங்கிய இந்தக் கடைசி அறிவுரை, பல தசாப்தங்கள் கடந்த போதிலும், இன்னமும் ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும், புத்துணர்ச்சி அளிக்கும் வாழ்வியல் அறிவுரையாக விளங்குகிறது.

தனிமையில் தவித்த ஒரு பதின்பருவ இளைஞனுக்கு, அந்தத் தனிமை ஒருநாள் முழுவதுமாக மறைந்துவிடும் என்ற எதார்த்தத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நம்பிக்கையை பீட்டர் பார்க்கர் ஏற்படுத்தவில்லை. பீட்டரின் வாழ்க்கை, "தனிமை கடினமாக இருக்கலாம், ஆனால் தனிமையில் இருப்பதாலேயே ஒருவர் மதிப்பற்றவராகி விடுவதில்லை" என்ற உண்மையை ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது.

ஸ்பைடர்-மேன்: 1962இல் ஸ்டான் லீக்கு வந்த 'மோசமான ஐடியா' தலைமுறைகள் கடந்து சாதிப்பதன் ரகசியம்

பட மூலாதாரம், Jeff Spicer/ Getty Images for Sony Pictures

பீட்டர் பார்க்கரால், ஸ்பைடர்-மேனாக சரிந்து விழுகின்ற பிரமாண்ட இயந்திரங்களைத் தாங்கி நிற்க முடியும், இடிந்து விழும் கட்டடங்களில் இருந்து அதிவேகமாகச் செயல்பட்டு சிக்கியவர்களை மீட்க முடியும். ஆனால், இந்த அசாதாரண சக்திகள் பீட்டராக அவனது வாழ்க்கையில் இருக்கும் அழுத்தங்களில் இருந்து அவனை விடுவிக்கவில்லை. மாறாக, அவனது தோளில் கூடுதல் பொறுப்பாகவே அவனுக்கு கிடைத்த சூப்பர் பவர் சேர்ந்தது.

பீட்டர் சுமக்கும் அந்தச் சுமைதான், எதார்த்த உலகில் அவனை ரசித்த அனைவருக்கும் முக்கியமான பாடத்தைக் கற்பித்தது. அது,

"ஒரு மனிதர் எவ்வளவு சிறந்தவர் என்பது அவருடைய திறமை, பலம், ஈர்ப்பு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை. தனது வாழ்க்கை மொத்தமும் சீட்டுக்கட்டு போலச் சரிந்து விழும்போதுகூட, தன்னலமற்ற நேர்மையுடன் இருக்க முயலும் ஒரு சராசரி இளைஞனாக இருப்பதுவே ஒருவரின் தனிச்சிறப்பைத் தீர்மானிக்கும்."

இந்த முரண்பாடே ஸ்பைடர்-மேன் என்றவுடன் காலம் கடந்தும் அசாதாரணமான உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்களை ஆழ்த்துகிறது.

உண்மையில், "ஒரு ஹீரோ அனைத்திலும் முழுமையடைந்த, தலைசிறந்து விளங்கும் ரட்சகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் இயல்பான, சர்வசாதாரணமான சக மனிதராகவும் இருக்கலாம்," என்பதை தலைமுறைகள் கடந்து நிரூபித்து வருவதே ஸ்பைடர்-மேன் பெறக்கூடிய பல்லாண்டுக் கால வெற்றிக்குக் காரணம்.

அந்த மரபு இப்போது, புதிதாக வெளியாகியுள்ள 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்திலும் நீடிக்கிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு