ரூ.10 ஆயிரம் கடனுக்காக கொத்தடிமை ஆக்கப்பட்ட இருளர் பழங்குடி மக்கள் மீட்கப்பட்டது எப்படி?

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

''என் மகனுக்கு உடல்நிலை சரியில்லையென்று சிகிச்சைக்காக சிறிது சிறிதாக ரூ.40 ஆயிரம் வாங்கினோம். அதற்காக ஆம்பூரில் செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்றோம். ஆனால் 2 ஆண்டுகளாக அங்கு வேலை செய்தும்கூட சம்பளமே தராமல், என்னை, எனது கணவரை, இரண்டு மகன்களை வெளியிலும் விடாமல் வேலை வாங்கினர், அடித்துத் துன்புறுத்தினர். எங்கள் வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடுமென்று நினைத்தோம்.''

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள ஒடுகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா பிபிசி தமிழிடம் கூறிய வார்த்தைகள் இவை.

ஓராண்டுக்கு முன்பு வரை குடும்பத்துடன் கொத்தடிமையாக இருந்த சங்கீதாவின் குடும்பம் மீட்கப்பட்டு தற்போது அரசின் முயற்சியால் இழப்பீடு பெற்றுள்ளது. அவரது மகன்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

சங்கீதாவின் குடும்பத்தைப் போலவே, ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை கடன் வாங்கியதற்காகப் பல ஆண்டுகளாக கரும்புத் தோட்டத்தில் ஊதியமே இல்லாமல் கொத்தடிமைகளாகப் பணியாற்றிய 7 குழந்தைகள் உள்பட 26 பேரை தன்னார்வ அமைப்பின் உதவியுடன் நாமக்கல் மாவட்ட அதிகாரிகள் சமீபத்தில் மீட்டனர். இவர்களை கொத்தடிமையாக வைத்திருந்த முகவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் இதுபோல சிறு கடன் தொகைக்காகப் பல குடும்பங்கள், விவசாயப் பண்ணைகளிலும், செங்கல் சூளைகளிலும் கொத்தடிமைகளாகப் பணியாற்றி வருவதாக தன்னார்வ அமைப்பினர் தகவல் பகிர்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கொத்தடிமைகளை மீட்பதற்கும், மறுவாழ்வுக்கும் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அறிய, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகம்மது ஃபர்வேசை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோதும், அவரது கருத்தைப் பெற முடியவில்லை.

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட குடும்பங்கள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள சிக்கநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த ஏழு குழந்தைகள் உள்பட 26 பேர் ஜூலை 21ஆம் தேதி மீட்கப்பட்டனர்.

ஆதிபூமி என்ற பழங்குடியின மக்களுக்கான அமைப்பு, இவர்களை அடையாளம் கண்டு, நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதில், மீட்கப்பட்டவர்களில் 13 வயது சிறுமி உள்பட 7 குழந்தைளும் அடக்கம். மற்ற 19 பேரில் பலரும் தம்பதிகளாகவோ, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ உள்ளனர். செங்கல்பட்டு (4 குடும்பங்கள்), காஞ்சிபுரம் (3 குடும்பங்கள்), திருவண்ணாமலை (2 குடும்பங்கள்) என 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே இருளர் பழங்குடியினர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய ஆதிபூமி அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன், ''காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு முகாம் சமீபத்தில் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட பழங்குடியினர் நலக் குழுவில் உறுப்பினராக இருப்பதால், சிறப்பு முகாமில் மக்கள் அனைவரையும் பங்கேற்க வைக்க வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வடபட்டிணம் என்ற கிராமத்துக்குச் சென்றோம். அப்போதுதான் இந்த விவகாரம் குறித்த அடிப்படைத் தகவல் கிடைத்தது'' என்று விளக்கினார்.

ஆதிபூமி அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன்
படக்குறிப்பு, ஆதிபூமி அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன்

அந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும், தாங்கள் வாங்கிய சிறு கடன் தொகைக்காக, வெளியூர்களில் கரும்புத் தோட்ட வேலைக்குச் சென்று இருப்பதாகவும், ஆனால் அவர்கள் எங்கு பணியாற்றுகின்றனர் என்பது தெரியவில்லை எனவும் ஊர் மக்கள் ஆதிபூமி அறக்கட்டளையின் தன்னார்வலர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஜெகதீஸ்வரனின் கூற்றுப்படி, ''சில நாட்களுக்கு முன், ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் கணவரைச் சந்திக்கச் சென்றபோதுதான், நாமக்கல் மாவட்டத்தில் கரும்புத் தோட்டத்தில் அவர்கள் பணியாற்றியது தெரிய வந்தது. நாங்கள் அங்கு சென்று பார்வையிட்டபோது, 7 குழந்தைகள் உள்பட 26 பேர், ஆண்டுக் கணக்கில் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்ததை அறிய முடிந்தது. இது குறித்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தோம். அதைத் தொடர்ந்து வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் தலையிட்டு அவர்களை மீட்டனர்.''

மேலும் பேசிய அவர், ''அதிகாரிகள் விசாரித்ததில் அவர்கள் வாங்கிய கடனுக்காக 3 மாதம் வேலை பார்க்க வேண்டுமென அழைத்து வந்துள்ளனர். அதற்குப் பிறகு வெவ்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று தோட்டங்களில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால், ஒரு தம்பதி அல்லது இருவருக்கு வாரத்திற்கு 200 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, இவர்கள் ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை, பண்ருட்டியை சேர்ந்த குமார் என்ற முகவரிடம் கடன் வாங்கியுள்ளனர். அந்தக் கடனை அடைக்க மூன்று மாதம் வேலை பார்க்க வேண்டுமென அழைத்து வரப்பட்டதாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்க வைக்காமல் ஆங்காங்கே வெவ்வேறு தோட்டங்களில் தங்க வைத்து, கரும்பு வெட்டும் பணிகளில் ஈடுபடுத்தி வந்ததாக முகவர் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வருவாய்த் துறை அதிகாரிகள் கூற்றின்படி, "இவர்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 அல்லது 7 மணி வரை வேலை தரப்பட்டுள்ளது. அதற்காக தினமும் ஊதியம் எதுவுமே தரப்படவில்லை.கணவன்–மனைவி ஒரு ஜோடிக்கு அல்லது இருவருக்கு வாரம் 200 ரூபாய் படித்தொகையாக தரப்பட்டுள்ளது. கடன், ஊதிய விவரம் எதுவுமே தரப்படவில்லை. இவர்களைக் கண்காணிக்க முகவர் ஒரு மேற்பார்வையாளரை நியமித்திருந்ததும், அந்த நபர் இவர்களை வெளியே அனுப்பாமல் கண்காணித்து வாகனங்களில் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதும்" தெரிய வந்துள்ளது.

கரும்பு வெட்டுவதற்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு சுமார் 700 ரூபாய் வரை வழங்கபட்டு வரும் நிலையில், அந்தத் தொகை முழுவதுமாக இவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தகவல் பகிர்ந்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின், ''மீட்கப்பட்ட 19 பேருக்கும் கொத்தடிமை விடுவிப்புச் சான்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது மீட்கப்பட்ட தோட்டத்தில் அவர்கள் 20 நாட்களாக வேலை பார்த்துள்ளனர். அதற்கும் ஊதியம் தரப்படவில்லை. அதனால் சர்க்கரை ஆலை நிர்வாகிகளை அழைத்துப் பேசி அந்த ஊதியத்தைத் தர ஏற்பாடு செய்துள்ளோம். இவர்களின் மறுவாழ்வுக்கு சொந்த மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு உரிய பரிந்துரைக் கடிதங்களும் சான்றுகளும் தரப்பட்டுள்ளன'' என்று விளக்கினார்.

கொத்தடிமைகளாக இருந்த பழங்குடியினர் மீட்பு; சிறு கடனுக்காக ஆண்டுக்கணக்கில் ஊதியமின்றி வேலை!

பட மூலாதாரம், Getty Images

'100 ரூபாய் படித்தொகை'

மீட்கப்பட்ட ஏழு குழந்தைகளில் இருவர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள். குழந்தைகள் யாரும் எந்தப் பணியிலும் ஈடுபடுத்தப்படவில்லை என்று அவர்களின் பெற்றோர் எழுதிக் கொடுத்திருப்பதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சண்முகம் பிபிசியிடம் தெரிவித்தார். மற்ற 19 பேருக்கும், இவர்களை கொத்தடிமையாக வைத்திருந்த முகவர் குமாரிடம் இருந்து உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தருவதற்கு, அந்தந்த மாவட்ட தொழிலாளர் துறையினரால் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் லெனின் தெரிவித்தார்.

ஆதிபூமி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் கூறுவதன்படி, ''கரும்பு ஒரு டன்னுக்கு அரசு நிர்ணயித்த விலையை சர்க்கரை ஆலைகள் தருகின்றன. அதில் டன்னுக்கு ரூ.800 அல்லது ரூ.850 கரும்பு வெட்டுக்கூலிக்குத் தரப்படும். மீதித் தொகை, கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் கணக்கில் பல வாரங்கள், மாதங்கள் கழித்து வரவு வைக்கப்படும். ஆனால் கரும்பு வெட்டுக்கூலி மட்டும் ஆலைகளால் அன்றன்றைக்கே வரவு வைக்கப்படும். உதாரணமாக 10 தோட்டங்களில் கரும்பு வெட்டப்பட்டால் ஒரு நாளில் மட்டும் வெட்டுக் கூலியாக ஒரு முகவருக்கு ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும்.''

இதை விரிவாக விளக்கிப் பேசிய ஜெகதீஸ்வரன், ''கரும்புத் தோட்டத்தில் இவர்கள் வேலை பார்த்தாலும், அந்தத் தோட்ட உரிமையாளர்களுக்கும் இவர்கள் யாரென்றே தெரியாது. ஆலைகளுக்கும் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையோ, அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களோ எதுவுமே தெரியாது. முகவருக்கும், ஆலைக்கும் இடையே கரும்புகளை வெட்டுவதற்கென ஒப்பந்தம் போடப்படுகிறது. முகவர் ஆட்களை வைத்து கரும்புகளை வெட்டி ஆலைக்கு அனுப்புகிறார். ஆலையிடம் வெட்டுக்கூலியை தினமும் வாங்கினாலும் முகவர் அதை இவர்களுக்குத் தராமல் ஏமாற்றியுள்ளார்'' என்று குற்றம் சாட்டினார்.

இந்த ஆண்டில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள கரும்புக்கான கொள்முதல் விலைகளின்படி, பிழிதிறன் அதிகமுள்ள (10.25%) கரும்புக்கு ரூ.3,650, பிழிதிறன் குறைவாக உள்ள (9.5%) கரும்புக்கு ரூ.3,383 எனவும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கரும்பு வெட்டுக்கூலி, ஒரு டன்னுக்கு ரூ.800 முதல் ரூ.1,200 வரை ஆலைகளுக்கு ஏற்ப மாறுபடுவதாகத் தெரிகிறது. இந்தத் தொகையே கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

ஆனால் கரும்பு வெட்டுக்கூலியைத் தராமல், "சிறு கடனைக் காரணமாகக் கொண்டு, இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்ததாக" கொக்கராயன்பட்டி காவல் நிலையத்தில் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராணி, ''முகவர் குமார் மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அவர், ஜூலை 30 குமாரபாளையம் ஜேஎம் கோர்ட்டில் சரணடைந்தார்'' என்று கூறினார்.

கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த மீட்கப்பட்ட குடும்பங்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர்கள் அனைவருமே "சிறு தொகையை முகவர் குமாரிடம் கடனாக வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்துவதற்காக கணவன், மனைவியாக அல்லது குழந்தைகளுடன் குடும்பமாகப் பணிக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது" தெரிய வந்தது. அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் தரப்படுகிறது, எவ்வளவு கடன் தீர்ந்துள்ளது என்பது பற்றிய எந்தக் கணக்குமே பராமரிக்கப்படவில்லை எனவும் அவர்கள் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டனர்.

இதில், மீட்கப்பட்ட கன்னியப்பன்–அய்யம்மாள் தம்பதி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள சாலவேடு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர். இவர்கள் இருவரும் "முகவர் குமாரிடம் 10 ஆயிரம் ரூபாயைக் கடனாக வாங்கி, அதைத் தீர்ப்பதற்காக கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்ததாக" தெரிவித்தனர். இப்போது வரை இவர்களின் கடன் தீரவில்லை என்று ஊதியமே தராமல் வேலை வாங்கியதாகவும் இந்தத் தம்பதி பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்

அய்யம்மாளின் கூற்றுப்படி, இதுவரை அவர்களுக்கு சம்பளமே கொடுத்ததில்லை, தினமும் ஆளுக்கேற்ப கணக்கிட்டு அரிசி மட்டும் கொடுப்பார்கள், வேறு எந்தப் பொருளுமே தரப்படவில்லை.

"அவர்கள் அளந்து கொடுக்கும் அரிசியை மட்டும் சமைத்து, காலை, மதியம் என இரு வேளைக்கு வைத்துக்கொள்ள வேண்டும். காய்கறி மற்றும் பிற பொருட்கள் வாங்க மூன்று நாட்களுக்கு ஒரு முறை 100 ரூபாய் கொடுப்பார்கள். மற்றபடி உடல்நிலை சரியில்லை என்றாலோ, வேறு ஏதாவது தேவை என்றாலோ எங்களுக்கு எந்தப் பணமும் தந்ததில்லை'' என்றார்.

''நாங்கள் மட்டுமில்லை. எங்களுடன் இருந்த எல்லோருமே ஒரே பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாங்கள் உள்பட 19 பேருக்கும் சம்பளம் என எதுவும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் இருவரும், தினமும் 10 மணிநேரம், 12 மணிநேரம் வேலை பார்த்தும்கூட கடன் தீரவில்லை எனக் கூறி அதிகமாக வேலை செய்ய வைத்தார்கள். எந்த ஊரிலுமே நாங்கள் நிரந்தரமாகத் தங்கியதில்லை. அவர்கள்தான் வண்டி வைத்து ஊர் ஊராக அழைத்துச் செல்வார்கள். அப்படி அழைத்துச் செல்லப்படும் அனைவரும், வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கிக் கொள்ள வேண்டும்'' என்றார்.

பிபிசியிடம் பேசிய அவரது கணவர் கன்னியப்பன், ''இதுவரை எங்கள் சம்பளக் கணக்குப் பார்க்கப்பட்டதே இல்லை. எங்களைப் போல கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த யாருக்குமே சம்பளக் கணக்கு எதுவும் தெரியாது. தினமும் தரும் அரிசியை மட்டும் வைத்து நாங்கள் சமைத்துக் கொள்ள வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை இருவருக்கு 100 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. அதை வைத்து எதையுமே வாங்க முடியாது. அதிகாரிகள் வந்து மீட்டது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே கொத்தடிமைகளாக நாங்கள் நீடித்திருக்க வேண்டியிருக்கும்'' என்றார்.

இவர்களுக்கு சம்பளக் கணக்கு எதுவும் பராமரிக்கப்படாத காரணத்தால், வாங்கிய கடனுக்கான வட்டி, அந்த வட்டிக்கு வட்டி என்று கணக்கு கூறி, அதற்கு இன்னும் வேலை பார்க்க வேண்டுமென ஆட்களை வைத்து தங்களை மிரட்டியதாகவும் மீட்கப்பட்டவர்களில் பிபிசி தமிழிடம் பேசியவர்கள் தெரிவித்தனர். ஏதாவது முக்கிய வேலையாக ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் ஒரே நாளில் திரும்பாவிட்டால் ஆட்களை வைத்து தங்களை மிரட்டி வர வைத்ததாகவும் அவர்கள் கூறுகின்றார்.

இந்தக் கூற்றுகளை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முகவர் குமார் அல்லது அவர் தரப்பின் விளக்கத்தைக் கேட்க பிபிசி எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 9 குடும்பங்கள்

பட மூலாதாரம், NARINDER NANU/AFP via Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

'செங்கல் சூளைகளில்தான் அதிகளவு கொத்தடிமைகள் மீட்பு'

கரும்புத் தோட்டங்களில் இவர்கள் கொத்தடிமைகளாக ஆண்டுக் கணக்கில் பணியாற்றி வருவதைப் போலவே, தமிழகத்தில் செங்கல் சூளைகளிலும் அதிகளவில் கொத்தடிமைகள் பணியாற்றி வருவதாக தன்னார்வ அமைப்பினர் பலரும் தகவல் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தங்கள் அமைப்பு, கொத்தடிமை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இதில் செங்கல் சூளைகளில் இருந்தே அதிகளவில் கொத்தடிமைகளை மீட்டிருப்பதாகவும் ஆதிபூமி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் கூறுகிறார்.

கொத்தடிமைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக இயங்கி வரும் சர்வதேச நீதி இயக்கத்திலும் கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து கொத்தடிமைகள் மீட்பில் இணைந்து பணியாற்றி வருபவரும், சேலம் தாரமங்கலத்தில் செயல்படும் ஊரகப் பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் இயக்குநருமான அலமேலு இது தொடர்பாக பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கினார்.

''தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் கேரளாவிலும் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பலரை மீட்டுள்ளோம். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலின மக்கள் அல்லது பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். சமீப காலமாக வட மாநில தொழிலாளர்களும் இவ்வாறு கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்படுவது அதிகரித்துள்ளது. கல்குவாரி, செங்கல் சூளை, கொலுசுப் பட்டறை, கயிறு தொழிற்சாலைகள், தறிப்பட்டறைகள், ஆலைகளில் இருந்தே இப்படியான தொழிலாளர்களை அதிகமாக மீட்டுள்ளோம்'' என்று விவரித்தார் அலமேலு.

கொத்தடிமை முறையை ஒழிக்க முடியாததற்குக் காரணம், "அரசு அதிகாரிகளின் அலட்சியம்தான்" என்கிறார் அவர்.

அவரது கூற்றுப்படி, வழக்குகளை விரைவாக நடத்தி இழப்பீடு பெற்றுத் தருவதிலும், குற்றம் சாட்டப்பவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. அதோடு, மீட்கப்பட்ட மக்களுக்கான "மறுவாழ்வு நடவடிக்கையும் தொடர்ந்து எடுக்கப் படுவதில்லை என்பதால் ஓரிடத்தில் மீட்கப்பட்டவர்கள், மீண்டும் கடன் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டு, புதிய இடத்தில் மீண்டும் கொத்தடிமையாக பணியாற்றும் நிலைக்கு ஆளாகின்றனர்'' என்றும் அலமேலு தெரிவித்தார்.

ஊரகப் பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் இயக்குநர் அலமேலு
படக்குறிப்பு, ஊரகப் பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் இயக்குநர் அலமேலு

கடந்த 2004ஆம் ஆண்டில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த சிவகங்கை மாவட்டம் சிறுகனப்பேரி தங்கவேல் மீட்கப்பட்டார். அவர், கடந்த ஜூன் மாதத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தனது வழக்கில் 2014ஆம் ஆண்டில்தான் குற்றவாளிகளுக்கு சிவகங்கை நீதிமன்றம் தண்டனை வழங்கியதைக் குறிப்பிட்டு, தனக்கு நீதி கிடைக்க 10 ஆண்டுகள் ஆனதாக அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான செயல் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டில் அறிவித்தது பற்றி மனுவில் குறிப்பிட்டிருந்த அவர், கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பதிவான 134 வழக்குகள் மாநிலத்தின் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகவும், அதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 28 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

''கொத்தடிமை தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பலனடைவதற்கு, வழக்கு விசாரணையின் முடிவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. விசாரணை நடைமுறையில் ஏற்படும் தாமதம் பாதிக்கப்பட்டோருக்கு சிரமங்களை ஏற்படுத்துகிறது. குற்றவியல் வழக்குகளை விரைவாக விசாரிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன்படி, நிலுவையிலுள்ள கொத்தடிமை முறை தொடர்பான வழக்குகளை குறிப்பிட்ட கால வரம்புக்குள் விரைவாக முடிக்க அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கும், கிளை பதிவாளருக்கும் உத்தரவிட வேண்டும்'' என்று தங்கவேல் தனது மனுவில் கோரியிருந்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு, ''மனுதாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக குழு அமைத்திருந்தால் அதன் விவரத்தை தலைமை நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சங்கீதா
படக்குறிப்பு, செங்கல் சூளையில் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த சங்கீதா சமீபத்தில் மீட்கப்பட்டார்

தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மீட்கப்பட்ட 19 கொத்தடிமைகளுக்கும் உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுமென திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதுபோல புகார் வந்தால் மட்டுமே, கொத்தடிமைகளாக அவர்கள் இருக்கும் விவரம் தெரிய வருவதாகக் கூறிய அவர், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பலரும் உண்மையை மறைத்து விடுவதாகவும் குறிப்பிட்டார்.

''ஆனால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பது தெரிந்துவிட்டால், அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதில் எந்தத் தாமதமும் செய்வதில்லை. சில நாட்களுக்கு முன்பு செங்கல் சூளையில் இருந்து மீட்கப்பட்ட ஒருவருக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டை விரைவாகப் பெற்றுத் தந்தோம். அவர் தனது கிராமத்திற்குச் சென்று, அரசு உதவியுடன் வீடு கட்டியுள்ளார்'' என்று வருவாய் கோட்டாட்சியர் லெனின் கூறுகிறார்.

கடந்த ஆண்டு செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சங்கீதா, ''எங்களுக்கு நாங்கள் பணியாற்றிய காலம், கூலியைக் கணக்கிட்டு இரண்டே கால் லட்சம் இழப்பீடு கிடைத்தது. அதோடு சேர்த்து, அரசின் பிற சலுகைகளும் எங்களுக்குக் கிடைக்க அதிகாரிகள் உதவினர். நாங்கள் வாங்கிய கடனுக்காக எங்கள் இரு மகன்களும் எங்களுடன் சேர்ந்து வேலை பார்த்தனர். இப்போது இருவரும் கல்வி பயின்று வருகின்றனர்'' என்றார்.

தமிழ்நாட்டில் கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கும், மீட்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வுக்கும் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துக் கேட்பதற்காக, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகம்மது ஃபர்வேசை பல முறை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும், மின்னஞ்சல் மூலம் பதில் கோரியும், அவர் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு