நீலகிரி: 48 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - என்ன காரணம்?

பட மூலாதாரம், SEBASTIAN D'SOUZA/AFP via Getty Images
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 48 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவரும் சேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் "20 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை" என்று நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் இதேபோன்ற நிலை இருப்பதாக ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகிகள் தகவல் பகிர்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகளவில் நியமிப்பதே இதற்குத் தீர்வு என்று ஆசிரியர்களுக்கான அகில இந்திய அமைப்பின் நிர்வாகி கூறுகிறார்.
ஆனால் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கற்பிப்பதிலும் பணி செய்வதிலும் காட்டும் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் அதிக மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் ரக்சித் வலியுறுத்துகிறார்.
"அரசுப் பள்ளிகளில் தமிழில் பாடங்களை நடத்துவதுடன் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசவும் கற்றுத் தர வேண்டும். அத்துடன், உள்ளூர் மக்களுடன் உரையாடி அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால்தான் அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற முடியும்" என்று வலியுறுத்தினார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த பள்ளிக்கல்வி இயக்குநரக அதிகாரிகள் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதாக தெரிவித்தனர்.
ஒரே ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 16% மாணவர்கள் குறைவு
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 705 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 501 பள்ளிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். அவற்றில் 390 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் இதுவரை 48 ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர்கூட சேரவில்லை.
பிபிசியிடம் பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் பகிர்ந்த தகவலின்படி, நீலகிரி மாவட்டத்தில் 2025–2026 கல்வியாண்டில் 2,183 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டில் 1,689 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 494 மாணவர்கள் (22.63%) குறைவு.

பட மூலாதாரம், Getty Images
நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஆரம்பப் பள்ளிகளில் 12,272 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 10,902 ஆகக் குறைந்துள்ளது. இது 11.16% குறைவு ஆகும்.
அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2025–2026 கல்வியாண்டில் 3,009 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டில் அது 2,749 (8.64%) ஆகக் குறைந்துள்ளது.
பிளஸ் ஒன் வகுப்பில் புதிதாக சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 3,476-ல் இருந்து இந்த கல்வியாண்டில் 2,924 ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 552 (15.88%) குறைவு ஆகும்.
ஒட்டு மொத்தமாக அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை, கடந்த 2025–2026 கல்வியாண்டில் 35,446 மாணவர்கள் படித்து வந்த நிலையில், இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 32,437 ஆகக் குறைந்துள்ளது.
அதிலும் இந்த ஆண்டில் அப்புக்கோடு, காந்தி பேட்டை, பேரகனி, ஆத்தூர் ஆகிய 4 அரசுப் பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு பிபிசி தமிழிடம் பேசியபோது, ''இந்த ஆண்டில் 28 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கையில்லை. 20 பள்ளிகளில் மாணவர்களே இல்லை. அரசுப் பள்ளிகளில் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதுமே மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாவட்டத்திலுள்ள 705 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மொத்தம் 10 ஆயிரம் மாணவர்கள் குறைந்துள்ளனர். பிறப்பு விகிதம் குறைவு, நீலகிரியை விட்டு அதிகமாக குடிபெயர்வு நடந்திருப்பது போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். இதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது'' என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு.
''மொத்தம் 20 அரசு ஆரம்பப் பள்ளிகளில் இப்போது மாணவர்களே இல்லை. ஆனால் இது கடந்த 5 ஆண்டுகளாக சிறிது சிறிதாக ஏற்பட்ட மாற்றம். இந்த ஆண்டில் புதிதாக 4 பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அதனால் இந்த ஆண்டில் மட்டும் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது தவறான தகவல்'' என்றார் அவர்.
நீலகிரி மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இதே நிலை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். அதே கருத்தை ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளும், கல்வியாளர்களும் ஒருமித்துக் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Handout
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் பெரியளவில் நடக்கவே இல்லை என்பதே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார் அகில இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் கூட்டமைப்பின் (AIFETO) தேசிய செயலாளர் அண்ணாமலை.
பிபிசி தமிழிடம் பேசிய அண்ணாமலை, ''2003ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 52 ஆயிரம் ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமித்தார். அவர்களை அடுத்து வந்த கருணாநிதி நிரந்தரமாக்கினார். பின்பு 2012ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 20 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்தார். அதற்குப் பின் பத்தாண்டுகளில் போதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை'' என்றார்.
''மாணவர்கள் குறைவதால் ஆசிரியர்களை நியமிக்கவில்லை எனக் கூறுவது தவறு. போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும், அதனால் தரமான கல்வி கிடைக்காததாலும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். குழந்தை பிறப்பு குறைந்துவிட்ட நிலையில், தங்களுக்குள்ள ஒன்று அல்லது இரு குழந்தைகளையும் ஆசிரியரல்லாத பள்ளியில் ஏன் சேர்க்க வேண்டுமென பெற்றோர் கருதுகின்றனர். பள்ளிகளுக்கு கட்டமைப்பு, உபகரண வசதிகள், காலை உணவு, மதிய உணவு திட்டங்களைச் செயல்படுத்திய தமிழக அரசு, ஆசிரியர்களை நியமிக்கத் தயங்குகிறது'' என்றார் அண்ணாமலை.

பட மூலாதாரம், Getty Images
"ஆசிரியர்கள் தயக்கம்"

பட மூலாதாரம், Handout
ஆனால், அவரது கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபடும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ரக்சித், ''மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். அதேநேரத்தில் மிகக் குறைவான மாணவர்களுக்காக அதிக ஆசிரியர்கள் பணியாற்றுவதும் உண்மையே" என்றார்.
அத்துடன், "தற்போதுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள், அதிக மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றத் தயக்கம் காட்டுகின்றனர் என்பதும் உண்மை. மாணவர்கள் குறைவாகவுள்ள பள்ளிகளைப் பிற பள்ளிகளுடன் இணைத்து, அதிக மாணவர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்ற வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார்.
''முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதுதான் அரசின் கொள்கை. ஆனால், பல பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் உபரியாகப் பணியாற்றுகின்றனர். எனவே மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளை அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளுடன் இணைத்து, கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். கூடுதலாக, அருகிலுள்ள ஊர்களில் இருந்து அந்தப் பள்ளிக்கு வர மாணவர்களுக்கு இலவச பேருந்துகளை இயக்கலாம்'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 31 வரை அவகாசம்

பட மூலாதாரம், Handout
உண்மையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததுதான் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலைக்குக் காரணம் என்று கூறுகிறார் கல்வியாளரும், மாநில பொதுப் பள்ளி கல்விக்கான கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு.
பிபிசி தமிழிடம் பேசிய பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைகிறது என்ற செய்தி கடந்த 10 ஆண்டுகளாக அதிகமாக வருகிறது. இதற்குக் காரணம், எந்தவொரு ஆரம்பப் பள்ளியிலும் போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதுதான். விளையாட்டு ஆசிரியர், கணினி ஆசிரியர், துாய்மைப் பணியாளர், வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்பது எந்த அரசுப் பள்ளியிலும் இல்லை'' என்றார்.
''ஒரு மாணவர் எந்த விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறார், அவருக்கு எந்தத் துறை சார்ந்த ஆர்வமும் அறிவும் இருக்கிறது என்பனவற்றை ஆரம்பப் பள்ளியில்தான் அறிய முடியும். அதை அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்கினால்தான் மாணவர்களால் முன்னேற முடியும். அதற்கு ஆசிரியர்கள் தேவை. ஆனால் அப்படி எந்த வாய்ப்புமே இல்லை எனும்போது பெற்றோர் யாரும் அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க விரும்புவதில்லை'' என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
ஆசிரியர்களை நியமித்து மாணவர்களை ஈர்க்கும் தனியார் பள்ளிகளின் உத்திகளுக்கு நேர்மாறாக, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களைக் குறைத்து, அதனால் மாணவர்களைக் குறைத்து, அதைக் காரணம் காட்டி மேலும் ஆசிரியர்களைக் குறைத்து இறுதியாக பள்ளிகளை மூடுவதாகக் கூறுகிறார் அவர்.
''தொடக்கப்பள்ளி வயது விளையாடும் வயது. விளையாட்டு ஆசிரியர், உபகரணம், மைதானம் ஆகியவை அங்கிருக்க வேண்டும். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் நிச்சயம் வேண்டும். அரசுப் பள்ளி இருக்கும் வரைதான் கல்வியின் மீது சமூகத்தில் நம்பிக்கை இருக்கும்," என்றார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பள்ளிக்கல்வி இயக்குநரக இணை இயக்குநர் சாமிநாதன், ''அரசுப் பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை முடியவில்லை. வரும் ஜூலை 31 வரை கால அவகாசம் இருப்பதால் அதற்குப் பிறகே இறுதியான எண்ணிக்கை தெரியும்'' என்று பதிலளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு























