கும்பிடு பூச்சி இனத்தில் இனச் சேர்க்கை முடிந்ததும் ஆணை பெண் சாப்பிட்டுவிடுமா? அறிவியல் விளக்கம்

கும்பிடு பூச்சி இனத்தில் இனச் சேர்க்கை முடிந்ததும் ஆணை பெண் சாப்பிட்டுவிடுமா? அறிவியல் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் பருவமழைக்குப் பிறகு நெல் வயல், காய்கறித் தோட்டம் அல்லது மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதிகளில் செல்லும்போது, கும்பிடுபூச்சியைப் (Praying Mantis) பார்த்திருப்பீர்கள்.

பச்சை இலை அல்லது காய்ந்த குச்சியுடன் கச்சிதமாக ஒன்றிப்போய், அசையாமல் அமர்ந்திருக்கும் இந்த கும்பிடுபூச்சி, இரைக்காக மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கும்.

முன்னங்கால்கள் இரண்டையும் மடித்து வைத்து, கைகூப்பி வேண்டுவதைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் இவை தமிழில் கும்பிடுபூச்சி எனவும் ஆங்கிலத்தில் பிரேயிங் மேன்டிஸ் எனவும் அழைக்கப்படுகின்றன. அதன் தோற்றம் சாந்தமானதாக இருந்தாலும், அது பூச்சி உலகிலேயே மிகவும் திறமையான மறைந்திருந்து வேட்டையாடும் உயிரினங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

மேற்கு மலைத்தொடரின் அடிவாரங்கள் முதல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமப்புற விவசாய நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தவல்ல பூச்சிகளை உண்டு வாழ்வதன் மூலம் இவை முக்கியமான சூழலியல் சேவையைச் செய்கின்றன.

இந்த இனத்தைச் சேர்ந்த பெண் பூச்சிகள் இனச்சேர்க்கை முடிந்தவுடன் ஆண் பூச்சியை உணவாகக் கொள்வதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. கும்பிடு பூச்சியினத்தில் இனச்சேர்க்கை எவ்வாறு நடக்கிறது? அதற்குப் பிறகு என்ன நடக்கிறது?

உருமறைப்புத் திறனில் கைதேர்ந்த கும்பிடுபூச்சி

இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) தரவுகள்படி, உலகம் முழுவதும் 2,300க்கும் மேற்பட்ட கும்பிடுபூச்சி இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, "இந்தியாவில் பல்வேறு வகையான வாழ்விடங்களில் சுமார் 184 வகையான கும்பிடுபூச்சி வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன."

வெப்பமண்டலக் காடுகள், புல்வெளிகள், புதர்க்காடுகள், வேளாண் நிலங்கள் என இவை பன்முகத்தன்மை வாய்ந்த வாழ்விடங்களைச் சார்ந்துள்ளன. உலகின் பல்லுயிரியவளம் மிக்க வாழ்விடங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் மேற்கு மலைத்தொடரின், குறிப்பாக "கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பரவியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில், 12 அறிவியல் குடும்பங்களைச் சேர்ந்த 61 வகையான கும்பிடுபூச்சிகள் இருப்பதாக" இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

இந்த வேட்டையாடிப் பூச்சிகளை அசாதாரணமான உயிரினமாகப் பார்க்க வைப்பதில் அவற்றுடைய அபாரமான உருமறைப்புத் திறன் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அவற்றின் உடல் தோற்றம், செழுமையான பச்சை இலை, காய்ந்துபோன பழுப்பு நிறக் கிளை, மரப்பட்டை அல்லது ஒரு பூவை ஒத்த வகையில்கூட இருக்கலாம்.

இந்தத் திறன், இயற்கையின் பலவகை சூழல்களுடன் ஒன்றாக மறைந்துகொண்டு, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்க அவற்றுக்கு உதவுகிறது. ஆனால், இந்த உருமறைப்பு என்பது பாதுகாப்பு செயல்முறையாக மட்டுமின்றி, தனது இரைகளை வேட்டையாடுவதற்கான ஓர் உத்தியாகவும் பயன்படுகிறது.

பெண் கும்பிடு பூச்சி இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் துணையை சாப்பிட்டுவிடுவது ஏன்?

பட மூலாதாரம், SUBAGUNAM KANNAN

காற்றில் இரையைத் துரத்தி வேட்டையாடும் தும்பிகள், வலைகளைப் பின்னிக் காத்திருந்து சிறைபிடித்துச் சாப்பிடும் சிலந்திகள் போலன்றி, இவை இலையோடு இலை போல, சருகுடன் சருகுபோல, பூவுடன் பூ போல உருமறைந்து, நிதானமாகவும் மிகப் பொறுமையுடனும் காத்திருந்து வேட்டையாடுகின்றன.

ஒரே இடத்தில், உருமறைப்பு நிலையில் நீண்ட நேரத்திற்குச் சிறிதும் அசைவின்றி இருப்பதன் மூலம், தன்னை நெருங்கி வரும் பூச்சிகளைத் துரிதமாக வேட்டையாடுகின்றன.

அவற்றின் அசைவின்மை அதீத நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், அனுபவம் வாய்ந்த பறவை மற்றும் பூச்சி நோக்கர்கள், காட்டுயிர் புகைப்படக் கலைஞர்கள்கூட, அவற்றைக் கவனிக்கத் தவறுவதுண்டு.

கும்பிடு பூச்சிகளின் இந்த உருமறைப்புத் திறன் வேட்டையாடுவதில் வெற்றி சதவிகிதத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, பறவைகள் போன்ற அவற்றை வேட்டையாடக்கூடிய பிற உயிரினங்களால் நேரக்கூடிய அபாயத்தையும் குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெண் கும்பிடு பூச்சி இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் துணையை சாப்பிட்டுவிடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கும்பிடு பூச்சிகளின் கண்கள் முப்பரிமாண பார்வைத் திறனைக் கொண்டுள்ளன

வியக்க வைக்கும் முப்பரிமாண பார்வைத்திறன்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உருமறைப்புத் திறன் மட்டுமின்றி, கும்பிடு பூச்சிகளின் மற்றுமொரு மிகச் சிறந்த ஆயுதமாக அவற்றின் தனித்துவமான பார்வைத் திறன் கூறப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த பி.என்.ஏ.எஸ் வெளியிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையின்படி, "இவற்றுக்கு இரண்டு பெரிய கூட்டுக் கண்கள் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் ஒம்மாட்டிடியா எனப்படும் நுண்ணிய காட்சி அலகுகளால் ஆன அமைப்புகள் உள்ளன. ராயல் என்டமாலஜிக்கல் சொசைட்டி வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கைப்படி, கும்பிடு பூச்சியின் ஒரு கண்ணில் சுமார் 3,500 ஒம்மாட்டிடியா உள்ளன. அவற்றின் இத்தகைய கண் அமைப்பு, தம் உடலைத் திருப்பாமலே சுற்றியுள்ள அனைத்தையும் கண்காணிக்க உதவும் மிகப் பரந்த அளவிலான பார்வைத் திறனை வழங்குகின்றது."

அதுமட்டுமின்றி, முப்பரிமாண (3D or stereoscopic vision) பார்வையைக் கொண்ட பூச்சியினமாகவும் கும்பிடு பூச்சிகள் இருப்பதாகக் கூறுகிறார் அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையின் பூச்சியியலாளர் முனைவர் சஹானா.

இதை நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2018ஆம் மேற்கொண்ட ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

"கும்பிடு பூச்சிகள் தங்கள் இரு கண்களிலும் விழும் பிம்பங்களை முப்பரிமாண பார்வையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மனிதர்களைவிட மேம்பட்ட துல்லியத்துடன் அவை பார்க்கும் உருவத்தின் தூரத்தைக் கணிப்பதும்" அந்த ஆய்வில் தெரிய வந்தது.

இந்தத் திறன், "தாக்குதலைத் தொடுக்க கச்சிதமான தூரத்திற்கு இரை எப்போது வருகிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட அவற்றுக்கு உதவுகிறது. இதன்மூலம், அவை கடைசி தருணம் வரை அசைவின்றி மறைந்திருந்து, திறமையாகப் பதுங்கித் தாக்கும் வேட்டையாடிகளாகச் செயல்படுகின்றன" என்று விளக்கினார் சஹானா.

இந்த அணுகுமுறை, வேட்டை முயற்சி தோல்வியடைவது, ஆற்றல் விரயமாவது போன்றவற்றைப் பெருமளவில் குறைப்பதாக" நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

கும்பிடு பூச்சிகளைப் பொறுத்தவரை, பல்லாண்டுக் காலமாக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தி வரும் மற்றொரு விஷயம், அவற்றின் கண்களில் காணப்படும் "நகரும் கருவிழி" (moving pupil). அதாவது, இந்தப் பூச்சிகளின் கண்ணில் உள்ள அடர் நிறப் புள்ளி கருவிழியைப் போலவும் அந்தப் பகுதி, அது பார்க்கும் பக்கமாக நகர்வதைப் போலவும் தோற்றமளிக்கும்.

ஆனால், "உண்மையில் கும்பிடு பூச்சிகளுக்கு கருவிழி ஏதுமில்லை எனவும், கண்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஒம்மாட்டிடியா அலகுகள் ஒளியை உள்வாங்கும் விதத்தால் இப்படியான மாயத்தோற்றம் உருவாகிறது" என்று ராயல் என்டமாலஜிக்கல் சொசைட்டி வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

பெண் கும்பிடு பூச்சி இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் துணையை சாப்பிட்டுவிடுவது ஏன்?

பட மூலாதாரம், SUBAGUNAM KANNAN

படக்குறிப்பு, பாக்சர் மேன்டிஸ் (Boxer Mantis)

அதீத பொறுமை அபார வேகம்

கும்பிடு பூச்சிகளின் வேட்டை பாணியை வரையறுப்பது அவற்றின் அதீத பொறுமை. அதேவேளையில் அவை மேற்கொள்ளும் தாக்குதலை வரையறுப்பது அவற்றின் அபாரமான வேகம்.

இதற்கு உதாரணமாக, திருப்பூரில் ஒருமுறை பாக்சர் மேன்டிஸ் என்று அழைக்கப்படும் ஒரு வகை கும்பிடு பூச்சி தத்துப்பூச்சி ஒன்றை வேட்டையாடுவதைப் பார்க்க நேர்ந்ததைக் குறிப்பிடலாம்.

புத்துணர்ச்சியளிக்கும் அதிகாலைப் பொழுதில், இரண்டு காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களுடன் பூச்சி நோக்குதலுக்காக திருப்பூரில் இருந்த ஒரு மரங்களும் புதர்களும் நிறைந்த ஒரு பகுதிக்குச் சென்றிருந்தோம்.

அங்கு, நாம் வழக்கமாகப் பார்க்கும் பச்சை நிற இலைகளை ஒத்த தோற்றத்தில் தென்படும் கும்பிடு பூச்சி, புதிதாக அது இட்டுச் சென்ற முட்டைகளின் தொகுப்பு, பாக்சர் மேன்டிஸ் என்ற வகை கும்பிடு பூச்சி ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

அப்போது, நான் பார்த்த பாக்சர் மேன்டிஸ் ஒரு தாவரத்தின் கிளையில் நீண்ட நேரம் அசைவின்றி அமர்ந்திருந்தது. குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது அது அவ்வாறு இருந்ததை நான் அவதானித்திருப்பேன். இறுதியாக, ஒரு தத்துப்பூச்சி அது இருப்பதைக் கவனிக்காமல் அருகிலேயே அமர்ந்தது. அந்த தத்துப்பூச்சி வந்து கிளையில் அமர்ந்த வேகத்தில், நான் நடப்பதை உணர்ந்து முடிக்கும் முன்பாகவே, அது பாக்சர் மேன்டிஸின் முன்னங்கால்கள் இரண்டுக்கும் இடையே சிக்கியிருந்தது.

கும்பிடு பூச்சிகளின் முன்னங்கால்கள், இரையைப் பிடிப்பதற்கென்றே சிறப்பாகத் தகவமைந்துள்ளன என்பதை இது உணர்த்துகிறது. வலுவான தசைகளுடன் இறுக்கமாகப் பிடிக்கப்பட்ட ஒரு சுருள்வில் போல, தலைக்குக் கீழே மடிந்த நிலையில் முன்னங்கால்கள் அமைந்திருக்கும். தனக்கு இரையாகப் போகும் பூச்சி, தான் தாக்க வசதியான தூரத்திற்குள் நுழையும்போது, முன்னங்கால்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் முன்னோக்கிப் பாய்ந்து, எதிரிலுள்ள பூச்சி நிலைமையை ஊகிக்கும் முன்பே, காலிலுள்ள கூர்மையான முட்களுக்கு நடுவில் அதைச் சிக்க வைத்துவிடுகின்றன.

அதிவேக காணொளிப் பகுப்பாய்வுகள், இத்தகைய சில தாக்குதல்கள் சுமார் 50-70 மில்லி விநாடிகளுக்கு உள்ளாகவே நிறைவடைவதாகக் காட்டியுள்ளன. இது மனிதர்கள் கண் சிமிட்டும் நேரத்தைவிட வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, "நீண்ட நேரம் அசைவேதுமின்றி மிகுந்த பொறுமையுடன் இரைக்காக காத்திருக்கும் இவற்றால், தங்களது தோற்றத்தை (உருமறைப்பு நிலையிலேயே) வெளிப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைக் கவனிக்கும் வகையில் தலையை 180 டிகிரி வரை சுழற்ற முடியும். இந்த குறிப்பிடத்தக்க நெகிழ்வுத்தன்மை, தான் மறைந்திருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், இரையைக் கண்காணித்து திறம்பட வேட்டையாடவும், நெருங்கி வரும் வேட்டையாடிகளைக் கண்டறியவும் அவற்றுக்கு உதவுகிறது" பூச்சியியல் ஆய்வாளர் சஹானா விளக்கினார்.

கூடுதலாக, "இயற்கையாகவே ஏராளமான தாவர உண்ணிப் பூச்சிகளை உணவாகக் கொள்வதால், அவை விவசாய நிலங்களுக்கு நன்மை பயக்கும் வேட்டையாடி உயிரினமாகக் கருதப்படுகின்றன. அதேவேளையில், அவை தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் என எந்த பேதமுமின்றி அனைத்து வகை பூச்சிகளையும் வேட்டையாடுவதால், மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுவது போன்ற நன்மைகளைப் பயக்கும் பூச்சிகளும் இரையாகின்றன" என்று முனைவர் சஹானா குறிப்பிட்டார்.

பெண் கும்பிடு பூச்சி இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் துணையை சாப்பிட்டுவிடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னங்கால்களைப் பயன்படுத்தி அதிவேக தாக்குதலைத் தொடுப்பதன் மூலம் கும்பிடு பூச்சி இரையை வேட்டையாடுகிறது

இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் பூச்சியை பெண் சாப்பிட்டு விடுமா?

கும்பிடு பூச்சி தனித்துவமானதாக அறியப்படுவதற்கு வேட்டைத் திறன் மட்டுமே காரணமில்லை. அவை மேற்கொள்ளும் அசாதாரணமான இனப்பெருக்க நடத்தைகளுக்கும் அதில் முக்கியப் பங்கு உள்ளது.

பெண் கும்பிடு பூச்சிகள் இனச்சேர்க்கை முடிந்தவுடன் தனது ஆண் துணையைச் சாப்பிட்டு விடுவதாகப் பரவலாக நம்பப்படுகிறது.

அதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும், "அனைத்து நேரங்களிலும், அனைத்து கும்பிடு பூச்சி இனங்களிலும் இது நிகழ்வதல்ல. இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் துணையை பெண் சாப்பிட்டுவிடுவது, இனம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து மாறுபடுகிறது" என்றார் முனைவர் சஹானா.

அவரது கூற்றுப்படி, "சில கும்பிடு பூச்சி இனங்கள் பொதுவாகவே இந்த நடத்தையை வெளிப்படுத்தினாலும், மற்றவற்றில் அரிதாக நிகழ்வதாக அல்லது அது நடக்காமலேகூட போவதாகது ஆய்வுகள் காட்டுகின்றன. பெண் பூச்சியின் பசி அளவு, வயது, பருவம், இனப்பெருக்க முறை போன்ற காரணிகள், இனப்பெருக்கத்திற்குப் பிறகு ஆண் பூச்சி கொல்லப்பட்டு, உணவாக்கப்படுமா என்பதைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்துகிறது."

நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில்லியம் டி பிரவுன், ஆய்வாளர்கள் கேத்தரின் பேரி, மார்க் எல்கர் போன்ற நடத்தையியல் சூழலியலாளர்கள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள், "இந்தப் பூச்சிகளுடைய இனப்பெருக்க செயல்முறையின் தவிர்க்க முடியாத இறுதி விளைவாக எப்போதுமே ஆண் இணையைச் சாப்பிடுவது என்பது இருப்பதில்லை" என்பதைக் காட்டியுள்ளன.

பெண் கும்பிடு பூச்சி இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் துணையை சாப்பிட்டுவிடுவது ஏன்?

பட மூலாதாரம், SUBAGUNAM KANNAN

படக்குறிப்பு, பெண் கும்பிடு பூச்சி இனச்சேர்க்கைக்குப் பிறகு தனது முட்டைகளை நுரை போன்ற திரவத்தில் இடுகிறது. அது சிறிது நேரத்தில் கெட்டியாகி, ஊத்தேக்கா எனப்படும் பாதுகாப்பான முட்டையாக மாறுகிறது. அதனுள் சில டஜன் முதல் பல நூறு முட்டைகள் வரை இருக்கலாம்.

இனப்பெருக்கத்தில் பெண் கும்பிடுபூச்சியின் ஊட்டச்சத்து மிக முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்ட சஹானா, "பசியுடன் இருக்கும் பெண் பூச்சிகள், தங்களை அணுகும் ஆண் பூச்சிகளைத் தாக்கி உணவாக்குவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகம். அதேநேரம், போதுமான உணவு கிடைத்த நிலையில் இருக்கும் பெண் பூச்சிகள் பொதுவாக குறைவான ஆக்ரோஷத்துடனே இருக்கும்" என்று கூறினார்.

அதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "ஆண் பூச்சியை உண்பதன் மூலம், பெண் பூச்சி மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது. இது அதன் உடல்நிலையை மேம்படுத்தி, பெரிய அளவிலான முட்டை உறைகள் மற்றும் சில நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான முட்டைகள் என இனப்பெருக்கத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவுகிறது."

"பொதுவாக, உணவுப் பற்றாக்குறை அல்லது மோசமான சூழலில் உள்ள பெண் பூச்சிகள் ஆண் பூச்சிகளை உணவாக்கிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், ஆண் பூச்சி வேண்டுமென்றே செய்யும் தியாகம் என்ற கோணத்தில் பார்ப்பதைவிட, பெண் பூச்சிக்கு இனப்பெருக்க நன்மைகளை வழங்கக்கூடிய ஓர் உத்தியாகவே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று விளக்கினார்.

அதேபோல, ஆண் கும்பிடுபூச்சிகளும் அவ்வளவு அலட்சியமாக இருப்பதில்லை என்று நியூயார்க் மாகாண பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி, "இனச்சேர்க்கையில் ஈடுபட பெண் பூச்சியை அணுகும் முன்பாகவே கவனமாக மதிப்பிட்டு, பெரும்பாலும் தாங்கள் உணவாகிவிடக்கூடிய அபாயத்தைக் குறைக்க முனைகின்றன."

இப்படியாக இனச்சேர்க்கை முடிந்ததும், பெண் பூச்சி ஒரு நுரை போன்ற திரவத்தில் தனது முட்டைகளை ஒரு தொகுப்பாக இடுகிறது. அந்தத் திரவம் சிறிது நேரத்தில் கெட்டியாகி 'ஊத்தேக்கா' (ootheca) எனப்படும் பாதுகாப்பான முட்டை உறையாக மாறுகிறது. கும்பிடுபூச்சி வகையைப் பொறுத்து, ஒரு முட்டை உறையில் சில டஜன் முதல் பல நூறு முட்டைகள் வரை இருக்கலாம்.

இந்த அற்புதமான முட்டை உறை இயற்கையான காப்பகமாகச் செயல்பட்டு, முட்டையில் இருந்து இளம்பருவப் புழுக்கள் வெளியே வரும் வரை, நீரிழப்பு, வெப்பநிலை மாற்றங்கள், பிற வேட்டையாடிகளின் தாக்குதல் ஆகியவற்றில் இருந்து அவற்றைப் பாதுகாக்கிறது.

இனப்பெருக்க காலத்தின்போது ஊத்தேக்கா எனப்படும் முட்டை உறைகள் பெரும்பாலும் புல் தண்டுகள், புதர்கள், மரம் அல்லது செடிகளின் கிளைகள், வேலிக் கம்பங்களில் ஒட்டப்பட்ட நிலையில் காணப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு