காணொளி: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு

காணொளி: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது

காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. "மேகேதாட்டு திட்டம் கர்நாடகாவைவிட தமிழ்நாட்டிற்குத் தான் அதிகம் உதவும்," என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். ஆனால் இந்தத் திட்டம் வந்தால் தங்களுக்கான காவிரி நீர் பங்கீட்டில் பாதிப்பு ஏற்படும் என்பது தமிழ்நாட்டின் குரலாக இருக்கிறது.

மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாட்டில் தீவிர எதிர்ப்பு நிலவும் சூழலில் கர்நாடகாவிலும் அதற்கு எதிர்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்தத் திட்டத்திற்கு செய்யப்படவிருக்கும் செலவு மற்றும் இதனால் சந்திக்கவிருக்கும் இழப்புக்கு நிகராக உரிய பலன்கள் கிடைக்காது என்கிறார் விஞ்ஞானி டி.வி.ராமச்சந்திரா.

மேகேதாட்டு திட்டம் 'ஒரு சூழலியல் பேரிடராகவும் நீரியல் பேரிடராகவும் அமையும்' என்றும் அவர் தெரிவிக்கிறார்.

"சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி, வனவிலங்கு சரணாலயம் போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் அதனை அழித்து தான் இந்த அணை கட்ட திட்டமிடப்படுகிறது," என்றார் டி.வி.ராமச்சந்திரா.

இதன் விளைவுகளாக அவர் பட்டியலிடுபவை

இயற்கையாக நீரைச் சேமித்து வைக்கும் திறன் குறையும்

மனித - விலங்கு மோதல் அதிகரிக்கும்

காடுகள் அழிக்கப்படுவதால் வறட்சி மற்றும் வெப்பம் அதிகரிக்கும்

பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு என்று கூறி அந்த அளவைவிட பன்மடங்கு அதிகமாக 67 டிஎம்சி கொள்ளளவில் ஏன் அணை கட்ட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

பெங்களூருவில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது எனக் கூறும் பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஊழியரான சேத்தன், இந்தத் திட்டத்தால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் பற்றியும் கவலை தெரிவிக்கிறார்.

மேகேதாட்டு திட்டத்திற்கான 2019-ஆம் ஆண்டு வரைவு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இத்திட்டத்திற்கு மொத்தம் 5,252.40 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில், 3,181.90 (சுமார் 7,860 ஏக்கர்) ஹெக்டேர் நிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்தது, 1,869.5 ஹெக்டேர் (சுமார் 4,620 ஏக்கர்) பாதுகாக்கப்பட்ட வன நிலம் மற்றும் 201 ஹெக்டேர் (சுமார் 490 ஏக்கர்) வருவாய்த் துறை நிலம் ஆகும்.

இந்தத் திட்டத்திற்குச் சுமார் ரூ.9,000 கோடி செலவாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"என்னுடைய கவலை எல்லாம் அங்குள்ள சூழலியலைப் பற்றியது தான். காவிரியில் வனவிலங்குகள் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கும். ஆனால் அரசாங்கம் சூழலியல் மற்றும் அங்குள்ள வெள்ள சூழ்நிலை இடையே சமநிலையை உருவாக்கினால் உதவியாக இருக்கும்," என்கிறார் சேத்தன்.

இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சூழலியல் செயற்பாட்டாளர் மேதா பட்கரும் இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

இது கர்நாடகாவுக்குச் சாதகமான ஒன்று என்பதிலிருந்து இது உண்மையில் கர்நாடகாவின் நலனுக்கானதா என்கிற கேள்விக்குறியாக மாறியுள்ளது என்கிறார் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் சேத்தன் குமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பெங்களூருவில் குடிநீர் சிக்கல்களுக்கு மேகேதாட்டு தான் உண்மையான தீர்வு இல்லை என கர்நாடகாவிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் யத்தினஹோலே போன்ற பெரிய வளர்ச்சித் திட்டங்களில் செலவு ரூ.13,000 கோடியிலிருந்து தொடங்கி 26 முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை சென்றதோடு மட்டுமில்லாமல் தற்போதும் முடிவடையவில்லை. இது சுற்றுச்சூழலை அழிப்பதோடு சிலருக்கு மட்டும் லாபமாகவும் இருக்கிறது." என்று தெரிவித்தார்.

கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி பிபிசி தமிழிடம் பேசுகையில், "மேகேதாட்டு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் சமர்ப்பிக்க இருப்பதாகப்" பதிலளித்தார்.

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து பெற நீர்வளத் துறையை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால் அவர்களின் கருத்தை நேரடியாகப் பெற முடியவில்லை.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு பேசினார்.

"காவிரி நதி நீரைப் பகிர்வது மற்றும் கர்நாடகா அரசு மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தவெக அரசு உரிய கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது," என்று தெரிவித்தார்.

பிபிசி தமிழ் கள ஆய்வில் திரட்டிய முழு விவரம் காணொளியில்...

தயாரிப்பு - மோகன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு - பி.டேனியல்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு