புற்றுநோயை நாய்கள் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க முடியுமா? - புதிய ஆய்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்

புற்றுநோய் ஆய்வுகள், நாய்கள்

பட மூலாதாரம், Dognosis

படக்குறிப்பு, டாக்னோசிஸ் ஆய்வகத்தில் இந்திய-லாப்ரடார் கலப்பின நாய் ஒன்று முகக்கவசத்தை முகர்ந்து பார்க்கிறது.
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அடுத்த முறை நீங்கள் ஒரு மருத்துவப் பரிசோதனை முகாமுக்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லும்போது, ஒரு முகக்கவசத்தினுள் 10 நிமிடங்கள் மூச்சுவிடுமாறு உங்களிடம் கேட்கப்பட்டால், எந்தவொரு தயக்கமும், பயமும் இன்றி அவ்வாறு செய்யுங்கள்.

புற்றுநோய் போன்ற மறைந்திருக்கும் ஏதேனும் ஒரு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதைக் கண்டறியவே அந்த மருத்துவக் குழு உங்களை முகக்கவசத்தினுள் மூச்சுவிடுமாறு கேட்கிறது.

பெருங்குடல் புற்றுநோய் போன்ற சில நோய்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் கட்டத்தில் மட்டுமே கண்டறியப்படுவதால், புற்றுநோய் மருத்துவர்களுக்கு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் கடினமாகிறது என்பது நமக்குத் தெரியும்.

முகக்கவசம் அணிந்து மூச்சுவிடுமாறு உங்களைக் கேட்கும் மருத்துவக் குழு, உண்மையில் உங்களிடமிருந்து ஒரு மாதிரியை எடுக்கிறது.

இதன் மூலம் உங்கள் உடலின் எந்தப் பகுதியிலாவது புற்றுநோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என்பதைச் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நாய் மோப்பம் பிடித்துத் தீர்மானிக்க முடியும்.

புற்றுநோய் எவ்வளவு சீக்கிரம் கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு எளிதாக உயிரைக் காப்பாற்ற முடியும்.

இஸ்ரேல், பிரிட்டன் , பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட பல நாடுகளில் புற்றுநோயைக் கண்டறிய நாய்களைப் பயன்படுத்தும் முறை நீண்ட காலமாக இருந்து வருகிறது , அதேபோல், இது நன்கு சோதிக்கப்பட்ட ஒரு முறையாகும்.

ஆனால் இந்தியாவில் முதல்முறையாக, கர்நாடகாவின் ஆறு வெவ்வேறு மருத்துவமனைகளில் பயிற்றுவிக்கப்பட்ட நாய்களின் உதவியுடன் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், நாய்கள் 1,502 நோயாளிகளின் மாதிரிகளை மோப்பம் பிடித்து, 91 சதவிகித துல்லியத்துடன் எந்தெந்த நோயாளிகளுக்கு ஏழு முக்கிய வகையான புற்றுநோய்கள் உள்ளன, யாருக்கு இல்லை என்பதைச் சரியாகக் கண்டறிந்துள்ளன.

பரிசோதிக்கப்பட்ட 1502 பேரில், 283 பேருக்கு திசுப்பரிசோதனை (பயாப்ஸி) மூலம் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் 1,219 பேருக்கு புற்றுநோய் இல்லை என தெரிய வந்தது.

நாய்களின் அற்புதமான மோப்ப சக்தி

 ஆகாஷ் குல்கோட் (இடது) மற்றும் இட்டாமர் பிட்டன்

பட மூலாதாரம், Dognosis

படக்குறிப்பு, பெங்களூருவில் உள்ள டாக்னோசிஸ் மையத்தில் ஆகாஷ் குல்கோட் (இடது) மற்றும் இட்டாமர் பிட்டன் தங்கள் நாய்களுடன்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த ஆய்வு பெங்களூருவைச் சேர்ந்த டாக்னோசிஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை அன்று 'ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி' இதழில் வெளியிடப்பட்டன.

இந்த ஆய்வுக்கு ஹுப்பள்ளியில் உள்ள 'ரெட் ஆன் கேன்சர் சென்டர்' இயக்குநரும், அறுவை சிகிச்சை புற்றுநோய் நிபுணருமான மருத்துவர் சஞ்சீவ் குல்கோட் தலைமை தாங்கினார்.

டாக்னோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ஆகாஷ் குல்கோட் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "இதுவரை கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து 10,000 மாதிரிகளைச் சேகரித்துள்ளோம். அடுத்தகட்டமாக, மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 15,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படும்" என்றார்.

இந்த 10,000 மாதிரிகள் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கவும், ஏஐ அமைப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படும் என்று ஆகாஷ் குல்கோட் விளக்கினார். இந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் பெரிய அளவில் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.

"30 நாய்களின் உதவியுடன் ஆண்டுதோறும் 10 லட்சம் மாதிரிகளைப் பரிசோதிக்கும் திறனை வளர்ப்பதே எங்கள் நோக்கம்" என்று அவர் கூறுகிறார்.

அவரது சொற்களில் காணப்படும் அவசரத்துக்கு ஒரு காரணம் இருக்கிறது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் இந்த ஆண்டில் 1.5 மில்லியனைத் தாண்டும் என்றும், இது கடந்த முப்பது ஆண்டுகளில் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிய வருகிறது.

இந்த ஆய்வின் ஆசிரியரான மருத்துவர் சஞ்சீவ் குல்கோட் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "புற்றுநோய் அதிகரிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இரண்டாவது, புற்றுநோய் என்பது வயது முதிர்வுடன் தொடர்புடைய ஒரு நோய். மக்களின் வயது கூடும்போது, ​​புற்றுநோய் பாதிப்புகளும் அதிகரிக்கின்றன." என்றார்.

1989 ஆம் ஆண்டில் தான் நாய்கள் மீது முதல் கவனம் செலுத்தப்பட்டது.

"ஒரு பெண் தனது தோலில் இருந்த ஒரு புள்ளியை பரிசோதிக்குமாறு ஒரு நாயிடம் கேட்டுக்கொண்டார்" என்று ஆராய்ச்சியாளர்கள் எமிலி மோசர் மற்றும் மைக்கேல் மெக்கல்லோக் 2010 இல் 'ஜர்னல் ஆஃப் வெட்டர்னரி பிஹேவியர்' இதழில் எழுதியுள்ளனர். "அந்த நாய் அந்தப் புள்ளியின் மீது அதிகப்படியான ஆர்வத்தைக் காட்டியது."

"மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்தப் புள்ளி ஒரு ஆபத்தான தோல் புற்றுநோய் வகையான 'மாலிக்னன்ட் மெலனோமா' என்பது கண்டறியப்பட்டது," என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நாய்கள் மூலம் மனித புற்றுநோயைக் கண்டறிவதன் செயல்திறன், முறைகள் மற்றும் துல்லியம் பற்றிய ஒரு ஆய்வு" (A review of the efficacy, methods and accuracy of human cancer detection by dogs) என்பது தான் அந்த ஆய்வறிக்கையின் தலைப்பு.

கேரளாவில் சடலங்களை மோப்பம் பிடிக்கும் நாய்கள்

நாய்களால் உடலின் ஆவியாகும் கரிம சேர்மங்களில் (VOCs) ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய முடியும் மற்றும் ஆரம்ப கட்ட புற்றுநோய் உட்பட ஏழு வகையான புற்றுநோய்களை அடையாளம் காண முடியும்.

பட மூலாதாரம், Kerala Police Academy

படக்குறிப்பு, வயநாடு மீட்புப் பணியில் பணியாற்றும் ஏஞ்சல்

நாய்களுக்கு கூர்மையான மோப்ப சக்தி உள்ளது.

எளிமையாகச் சொன்னால், அவற்றிடம் 300 மில்லியன் வாசனை ஏற்பிகள் அல்லது வாசனையைக் கண்டறியும் செல்கள் உள்ளன. மனிதர்களில், இந்த எண்ணிக்கை வெறும் 5 மில்லியனாக மட்டுமே உள்ளது.

"மனித உடலில் இருந்து வெளியேற்றப்படும் மிகச் சிறிய அளவிலான ஆவியாகக் கூடிய கரிம சேர்மங்களைக்கூட நாய்களால் கண்டறிய முடியும்," என்று ஹாங்காங்கின் திமோதி குவான் லோ மற்றும் அவரது குழுவினர் 'ஃபிரான்டியர்ஸ் இன் மெடிசின்' இதழில் எழுதியுள்ளனர்.

"இந்த வாசனைகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், நோய்த்தொற்றுகள் அல்லது புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்."

மருத்துவக் குழுவினர் முகக்கவசத்தை அணிவித்து, நோயாளிடம் அதில் 10 நிமிடங்களுக்கு சுவாசிக்குமாறு கூறுகிறார்கள்.

இந்த முகக்கவசங்கள் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் தங்களின் செயல்திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன. இந்த முகக்கவசங்கள் பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் நாய்களிடம் காண்பிக்கப்படுகின்றன.

நாய்களால் உடலின் ஆவியாகும் கரிம சேர்மங்களில் (VOCs) ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய முடியும் மற்றும் ஆரம்பகட்ட புற்றுநோய் உட்பட ஏழு வகையான புற்றுநோய்களை அடையாளம் காண முடியும்.

பெங்களூருவில் உள்ள ஹெச்சிஜி கேன்சர் சென்டரின் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் மருத்துவர் யுஎஸ் விஷால் ராவ் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "ஜேகப்சனின் ஆர்கன் என்று அழைக்கப்படும் வோமரோநாசல் உறுப்பு என்பது நாயின் மூக்கின் ஆழப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறப்பு அமைப்பாகும். இது வாசனைகளையும், ஈரப்பதத்துடன் தொடர்புடைய சிக்கலான ரசாயன சமிக்ஞைகளையும் கண்டறிய அவற்றுக்கு உதவுகிறது." என்றார்.

நாய்களின் இந்தத் திறனை மனதில் கொண்டு, கேரளா போலீஸ் அகாடமி அத்தகைய நாய்களுக்குப் பயிற்சி அளித்தது, அவை ஜூலை 20240இல் வயநாடு நிலச்சரிவு பேரிடரின் போது இறந்த உடல்களை அடையாளம் கண்டன.

வெறும் மூன்றே நாட்களில் (ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை), மாயா, மர்பி மற்றும் ஏஞ்சல் ஆகிய நாய்கள், பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவுக்குள்ளான அந்தப் பகுதியிலிருந்து 23 உடல்களை மீட்டெடுத்தன.

கேரளா இதற்கு முன்பு இப்படி ஒரு பேரிடரைக் கண்டதில்லை.

இந்த நாய்களால் இடிபாடுகளுக்கு அடியில் 25 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட உடல்களைக்கூட மோப்பம் பிடித்துக் கண்டறிய முடிந்தது.

உடல்கள் இருக்கும் இடத்தை கண்டறிய உதவ, மீரட்டில் உள்ள ரெமவுண்ட் வெட்டர்னரி கோர்ப்ஸ் மையத்திலிருந்து மேலும் மூன்று நாய்களும் வரவழைக்கப்பட்டன.

அகாடமியின் ஐஜிபி-யும் இயக்குநருமான கே. சேதுராமன் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "உடல்களைக் கண்டறிய எங்களது நாய்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையினராலும் (என்டிஆர்எஃப் ) பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, நாய்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக என்டிஆர்எஃப் பணியாளர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம்" என்றார்.

இந்த நாய்களுக்கும் அவற்றின் பயிற்சியாளர்களுக்கும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் துறை பயிற்சி அளித்தது.

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் துறையின் பாடநெறி ஒருங்கிணைப்பாளர் சிவா பிரசாத் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "நாங்கள் ரத்தத்தை காஸில் (gauze - ஒரு வகை மெல்லிய, மென்மையான மருத்துவத் துணி) தடவி, அது சிதைவடைவதற்காக சில காலம் ஒரு மறைவான இடத்தில் வைத்திருந்தோம். நாய்களுக்குப் பயிற்சி அளிக்க இதுபோன்ற செயற்கை வாசனைகள் பயன்படுத்தப்படுகின்றன." என்றார்.

கேரளா போலீஸ் அகாடமி மற்றும் தடய அறிவியல் துறைக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தற்போது போலீஸ் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பு மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிய நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும்.

இதுகுறித்து பேசிய சிவா பிரசாத், "நாங்கள் பேசிய மருத்துவமனைகளில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மருத்துவமனைகளைச் சேர்ந்த பல மருத்துவர்கள் கேரளா போலீஸ் அகாடமியின் தலைமையகமான திருச்சூரில் உள்ள எங்களது பயிற்சி மையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். இந்த மருத்துவ நிறுவனங்களில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, முதலில் நாய்களுக்கும், பின்னர் பணியாளர்களுக்கும் பயிற்சி அளிப்பதே எங்களது நோக்கமாகும்." என்றார்.

நாய்களைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு சிறந்த காரணம்

மனித சுவாச மாதிரிகளில் உள்ள குறிப்பிட்ட வாசனைகளைக் கண்டறிய நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக மருத்துவர் சஞ்சீவ் குல்கோட் விளக்கினார்.

பட மூலாதாரம், Dognosis

படக்குறிப்பு, டாக்னோசிஸ் ஆய்வகத்தில் ஒரு நாய் முகக்கவசத்தை முகர்ந்து பார்க்கிறது.

புற்றுநோய் பரிசோதனையில் நாய்கள் ஒரு மதிப்புமிக்க கருவியாக மாறக்கூடும்.

இதற்கு ஒரு காரணம் என்னவென்றால், தற்போதைய பரிசோதனை முறைகள் நோயாளிகளுக்குக் கணிசமான சவால்களை ஏற்படுத்துவதே ஆகும்.

மேமோகிராம் போன்ற பரிசோதனைகள் நோயாளிகளை அயனியாக்கும் கதிர்வீச்சுக்கு ஆளாக்குகின்றன, இது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைக்கு உடலுக்குள் ஊடுருவும் செயல்முறைகள் தேவைப்படுகின்றன.

இந்தியா போன்ற ஒரு நாட்டில், இத்தகைய புற்றுநோய்களைப் பரிசோதிப்பதற்கான நம்பகமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய இடங்களை நோயாளிகளால் கண்டறிய முடிகிறதா இல்லையா என்பதும் ஒரு பெரிய கேள்வியாகயாக உள்ளது.

புற்றுநோய் பரிசோதனையில் உள்ள இந்த குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலின் எலிசபெத் ஹால்ஃப் மற்றும் அவரது குழுவினர் 2024 இல் 'நேச்சர்: சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் ஓர் ஆய்வை வெளியிட்டனர்.

இஸ்ரேலிய நிறுவனமான ஸ்பாட்இட் ஏர்லி லிமிடெட் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு உடலின் உட்புற ஊசிகள் அல்லது பிரத்யேக உதவிகள் எதுவும் தேவையில்லை. இது புற்றுநோயைக் கண்டறியக்கூடிய ஒரு சுவாச மாதிரியை மட்டுமே சேகரிக்கிறது.

இந்தத் தொழில்நுட்பம் நாயின் மோப்ப சக்தியை செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கிறது.

சிறுநீர் மாதிரிகளை விட சுவாச மாதிரிகள் பெரும்பாலும் புற்றுநோயைக் கண்டறிவதில் அதிக செயல்திறன் கொண்டவை என்றும் அவர்களது ஆய்வு கூறுகிறது.

மனித சுவாச மாதிரிகளில் உள்ள குறிப்பிட்ட வாசனைகளைக் கண்டறிய நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக மருத்துவர் சஞ்சீவ் குல்கோட் விளக்கினார்.

குண்டுகள், போதைப் பொருட்கள் மற்றும் நிலநடுக்கங்களில் புதைந்திருக்கும் மனிதர்களைக் கண்டறிய நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதைப் போன்றதே இந்த முறையும் ஆகும்.

எந்த நாய் இனங்கள் சிறந்தவை?

டாக்னோசிஸ் நிறுவனம் நான்கு பீகிள் நாய்கள், ஒரு லேப்ரடார்-இன்டி கலப்பின நாய் மற்றும் ஒரு டச்சு ஷெப்பர்ட்-பெல்ஜிய மாலினாய்ஸ் கலப்பின நாய் ஆகியவற்றைப் பயன்படுத்தியது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த லேப்ரடார்-இன்டி கலப்பின நாய் ஒரு காப்பகத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டது ஆகும்.

பட மூலாதாரம், Kerala Police Academy

படக்குறிப்பு, லைலா, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் துறையால் சடலங்களைக் கண்டறிவதில் பயிற்சி பெற்றுள்ளது.

கேரளா போலீஸ் அகாடமியும் டாக்னோசிஸ் நிறுவனமும் இந்திய நாய் உட்பட பல்வேறு வகையான நாய் இனங்களைப் பயன்படுத்தியுள்ளன.

உள்ளூர் நாய்கள், ஒரு லேப்ரடார் மற்றும் ஒரு பீகிள் ஆகியவற்றைத் தங்களது அகாடமி பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறது.

சான்றிதழ் படிப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் தடய அறிவியல் துறை எட்டு பெல்ஜிய மாலினாய்ஸ் நாய்களை வாங்கியுள்ளது.

டாக்னோசிஸ் நிறுவனம் நான்கு பீகிள் நாய்கள், ஒரு லேப்ரடார்-இன்டி கலப்பின நாய் மற்றும் ஒரு டச்சு ஷெப்பர்ட்-பெல்ஜிய மாலினாய்ஸ் கலப்பின நாய் ஆகியவற்றைப் பயன்படுத்தியது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த லேப்ரடார்-இன்டி கலப்பின நாய் ஒரு காப்பகத்திலிருந்து தத்தெடுக்கப்பட்டது ஆகும்.

கேரளா போலீஸ் அகாடமியும் டாக்னோசிஸ் நிறுவனமும் இந்த நாய்களுக்கு வெகுமதி அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி 10 வாரங்களுக்கும் மேலாகப் பயிற்சி அளித்தன.

இதில் சரியான வாசனையை அடையாளம் காணும்போது அவற்றுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன.

சிவா பிரசாத் அவர்களின் கூற்றுப்படி, இந்தச் செயல்முறையானது முகக்கவசத்தை அணிந்து, சம்பந்தப்பட்ட நபரை சுமார் 10 நிமிடங்களுக்கு இயல்பாக சுவாசிக்குமாறு கூறுவதை உள்ளடக்கியது. நாயின் மதிப்பீடு துல்லியமானது தானா என்பதை உறுதிப்படுத்த, பின்னர் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ஆகாஷ் குல்கோட் கூறுகையில், " புற்றுநோய் இருக்கலாம் என்று நாய்களால் சந்தேகிக்கப்படும் நபர்கள், முழு உடல் பிஇடி-சிடி (PET-CT) ஸ்கேன் போன்ற மேலும் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்." என்றார்.

மேலும், "இந்தப் பரிசோதனையானது கட்டிகளை அவற்றின் ஆரம்ப கட்டங்களில்கூட கண்டறிகிறது. இது அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குப் பரிசோதனை செய்வதை எளிதாக்குகிறது மற்றும் செலவையும் குறைக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

எளிமையாகச் சொன்னால், இந்த சுவாசப் பரிசோதனையானது, பெரிய அளவிலான புற்றுநோய் ஆரம்பகட்டப் பரிசோதனைக்கான ஒரு பயனுள்ள கருவியாக உருவெடுத்து வருகிறது.

மேலும், மருத்துவர் யுஎஸ் விஷால் ராவ் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார்.

"சமூக அளவில் இதனை அடையாளம் காண்பதற்கான மிகவும் தரப்படுத்தப்பட்ட முறையை உருவாக்குவதற்கு", கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனை நிபுணர்களுக்கு இடையே தீவிரமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இத்தகைய கண்டுபிடிப்புகள் குறித்து அவர் கூறுகையில், "நாய்களின் மோப்ப அமைப்பைப் பிரதிபலிக்கக்கூடிய மற்றும் இந்த ஆவியாகும் கரிம சேர்மங்களைக் (VOCs - ஆவியாகக் கூடிய ஆர்கானிக் சேர்மங்கள்) கண்டறியக்கூடிய செயற்கை மூக்குகளை இந்தியா உருவாக்குவதற்கு இதுவே சரியான தருணம்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு