ராபின் ஹூட் உண்மையில் யார்? இருண்ட அத்தியாயங்கள் காணாமல் போன வரலாறு

ராபின் ஹூட் யார்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கேரின் ஜேம்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தத் கட்டுரையில் சிலர் மனவருத்தம் அடையக்கூடிய வன்முறை பற்றிய துல்லியமான விவரிப்பு இடம்பெற்றுள்ளது.

ராபின் ஹுட் கதை, 12-ஆம் நூற்றாண்டில் வாய்மொழி மரபாகத் தொடங்கி, பின்னர் ஒரு குடும்பப் பாங்கான, நற்பண்புகள் கொண்ட கதாபாத்திரமாக உருமாறியது.

தற்போதைய புதிய படைப்புகள் அவரது இருண்ட பக்கத்தை எவ்வாறு மீண்டும் கொண்டு வருகின்றன என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

எழுத்தாளரும் இயக்குநருமான மைக்கேல் சர்னோஸ்கி தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியபோது, தனக்கு எப்போதும் பிடித்த ஒரு படத்தை நடிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் காட்டினார்.

அது, 1973-ல் டிஸ்னி தயாரித்த ராபின் ஹூட் அனிமேஷன் திரைப்படம்.

அதன் நாயகன், தனது பச்சை நிறத் தொப்பியில் ஒரு இறகைச் செருகிக்கொண்டு, பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குக் கொடுப்பார்.

மக்களுக்குப் பிடித்தமான அந்தப் பதிப்பானது, சர்னோஸ்கியின் இருண்ட, சிந்திக்க வைக்கும் நாடகத் திரைப்படமான 'தி டெத் ஆஃப் ராபின் ஹுட்' என்ற படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இதில் ஹியூ ஜேக்மேன், நரைத்த தலைமுடியுடன், போரினால் சோர்வடைந்த, தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் மற்றும் தனது சொந்த வரலாற்றை ஆழமாக உணர்ந்த ஒரு ராபின் ஹுட்டாக நடித்துள்ளார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நற்பண்புகளும் நீதியும் தேடும் ராபின் ஹுட்டைப் பற்றிப் பேசும் ஒரு பெண்ணை அவர் சந்திக்கும் போது, தான் யார் என்பதை அவர் மறுக்கிறார்.

தன்னை ஒரு மூன்றாம் நபராகக் குறிப்பிட்டுப் பேசுகிறார். "அவர் ஒரு மாவீரன் அல்ல. அவர் வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமே கொள்ளையடித்தார் மற்றும் கொலை செய்தார், அதற்கு மேல் ஒன்றுமில்லை."

இந்த வன்முறையான ராபின் ஹுட்டும், அவரது நற்பண்புகள் கொண்ட, நன்மை செய்யும் பிம்பத்திற்கு எதிராக வெளிவரும் பிற திருத்தியமைக்கப்பட்ட படைப்புகளும், இன்று நாம் நினைக்கும் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தை விட, அசல் இடைக்காலக் கதைகளுக்கு மிக நெருக்கமாக உள்ளன என்பது தெரியவருகிறது.

ராபின் ஹுட்டின் சித்தரிப்பு பல நூற்றாண்டுகளாக உருமாறியுள்ளது, ஒவ்வொரு மாற்றமும் அதை மறுவடிவமைப்பு செய்த காலத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த இருண்ட 21-ஆம் நூற்றாண்டு வடிவங்கள் கதையின் தோற்றத்தை நோக்கி பின்னோக்கிப் பார்க்கின்றன, ஆனால் அவற்றின் படைப்பாளிகள் சிலர் குறிப்பிடுவது போல, அவை தற்போதைய காலத்தைப் பற்றியும் பேசுகின்றன.

பல நூற்றாண்டுகளாக ராபின் ஹுட் கதை எளிமையாக்கப்பட்டதைப் போலல்லாமல், ஹீரோக்களும் வில்லன்களும் பெரும்பாலும் முற்றிலும் நல்லவர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவோ மட்டுமே சித்தரிக்கப்படும் இந்தத் துருவப்படுத்தப்பட்ட உலகிற்கு, இந்தக் கதாபாத்திரத்தின் மீதான இத்தகைய சிக்கலான பார்வைகள் சவால் விடுக்கின்றன.

ராபின் ஹூட் என்பவர் யார்?

உண்மையான ராபின் ஹுட் பற்றி ஏராளமான ஊகங்கள் இருந்தாலும், இந்தக் கதாபாத்திரத்திற்குப் பின்னால் நிஜமாக வாழ்ந்த மனிதர் என எவரும் இல்லை என்றே வரலாற்றாசிரியர்கள் பெருமளவில் கருதுகிறார்கள்.

மாறாக, பணக்கார நிலப்பிரபுக்களும் ஏழை விவசாயிகளும் இருந்த ஒரு மிகப்பெரிய சமத்துவமற்ற சமூகமே அவரது உருவாக்கத்திற்கு உத்வேகமாக இருந்தது. இந்த கதைகள் 12-ஆம் நூற்றாண்டில் வாய்மொழி மரபாகத் தொடங்கின, ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகே, அப்போதும் அவர் ஒரு புகழ்பெற்ற நபராகக் காட்டப்பட்ட கதைப்பாடல்கள் வழியாக முதல் எழுத்துப்பூர்வ பதிவுகள் வந்தடைந்தன.

அந்த முதல் எழுத்துப்பூர்வ பதிவுகளில், பிற்காலப் பதிப்புகள் காட்டியதைப் போல அவர் உன்னதமான 'சர் ராபின் ஆஃப் லாக்ஸ்லி' ஆக இருக்கவில்லை.

அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவரே அல்ல, மாறாக விவசாயியை விட ஒரு படி மேலே இருந்த ஒரு சாதாரண எளிய மனிதன் மட்டும் தான்.

16-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கதையில் 'மெய்ட் மரியன்' என்ற கதாபாத்திரமே இல்லை.

அவர் ஏழைகளிடம் மிகவும் அன்பாக இருந்தபோதிலும், அவர்களுக்கு உதவுவது அவரது முக்கிய நோக்கமாக இருக்கவில்லை. ஊழல் நிறைந்த மதகுருமார்களும், தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களைப் பயன்படுத்திக் கொண்ட நிலப்பிரபுக்களுமே அவரது எதிரிகளாக இருந்தனர்.

ராபின் ஹூட் பற்றிய கதைகள் 12 ஆம் நூற்றாண்டில் ஒரு வாய்மொழி மரபாகத் தொடங்கின.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராபின் ஹூட் பற்றிய கதைகள் 12 ஆம் நூற்றாண்டில் ஒரு வாய்மொழி மரபாகத் தொடங்கின. முதல் எழுத்துப்பூர்வ பதிவுகள் 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிவந்தன

இடைக்கால வரலாற்றாசிரியரான ஏமி எஸ். காஃப்மேன், தனது மறுஆய்வு நாவலான 'தி டிரைட்டர் ஆஃப் ஷெர்வுட் ஃபாரஸ்ட்' -இன் பின்னுரையில், ஆரம்பகாலக் கதைகளின் ராபின் ஹுட்டை "ஒழுக்க ரீதியாக சாம்பல் நிறம் கொண்ட (நன்மை தீமை கலந்த) ஒரு இடைக்கால ஏமாற்றுக்காரர்" என்றும், "வன்முறையான, மரியாதையற்ற போக்கிரி" என்றும் விவரிக்கிறார்.

டிஸ்னி ஒரு விஷயத்தில் சரியாக இருந்தது. ராபின் ஒரு நரியைப் போல தந்திரமானவர் என்பதையே முதல் கதைப்பாடல்கள் உணர்த்துகின்றன என்பது தான் அது.

16-ஆம் நூற்றாண்டில் இந்த கதையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

மன்னர் எட்டாம் ஹென்றி இதன் ரசிகராக இருந்தார், சில சமயங்களில் ராபின் ஹுட் போல உடையும் அணிந்தார்.

கத்தோலிக்க திருச்சபையிலிருந்து விலகிய அந்த மன்னரின் ஆட்சியின் போது, ராபின் கன்னி மரியாளின் மீது கொண்டிருந்த பக்தி கதையிலிருந்து மறைந்து போனது.

உயர் வர்க்கத்தினர் அவரைக் கொண்டாடியதால், அக்காலத்தின் செல்வாக்குமிக்க வரலாற்றுப் பதிவுகளில் பிரபுத்துவத்தை வெறுப்பதை நிறுத்திவிட்டு, அந்த கதாபாத்திரமே ஒரு பிரபுவாக மாறியது.

இழிவான பிரபுக்களை எதிர்த்துப் போராடும் ஒரு ஒழுக்கநெறிமிக்க பிரபுவாக அவர் சித்தரிக்கப்பட்டதால், சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பைக் கேள்வி கேட்பதை அவர் நிறுத்திக் கொண்டார்.

அவரது தீய சகோதரனான இளவரசர் ஜானால் பறிக்கப்பட்ட அரியணையை, நல்ல மன்னரான ரிச்சர்ட் மீண்டும் பெறுவதற்கு உதவுவதற்காக அவர் பயன்படுத்தப்பட்டார்.

ஜானை ஒரு பேராசை பிடித்த, அதிகாரப் பசி கொண்ட சிங்கமாக டிஸ்னி சித்தரித்தது வரை இந்த வடிவமே நீடிக்கிறது.

1973-ல் டிஸ்னி வெளியிட்ட, நரியைக் கொண்ட ராபின் திரைப்படம்,

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, 1973-ல் டிஸ்னி வெளியிட்ட, நரியைக் கொண்ட ராபின் திரைப்படம், ராபினின் துணிச்சலான, நன்மை செய்யும் பிம்பத்தை மக்கள் மத்தியில் நிலைநிறுத்தியது

19-ஆம் நூற்றாண்டில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் ராபின் ஹுட்டை விக்டோரியன் காலத்து மக்களுக்கு ஏற்றவாறு, தூய்மைப்படுத்தப்பட்ட ஒரு நன்மை செய்பவராக மாற்ற உதவின.

மேலும் 20-ஆம் நூற்றாண்டில், சினிமா இந்த சித்தரிப்பைத் தொடர்ந்து தக்கவைத்தது.

1938-இல் புகழ்பெற்ற 'தி அட்வெஞ்சர்ஸ் ஆஃப் ராபின் ஹுட்' திரைப்படத்தில் மேட்டினி ஐகான் எரோல் ஃபிளின், வாள்வீசும் வீரன் சர் ராபினாக நடித்தார். மிகவும் செல்வாக்குமிக்க பதிப்பாகக் கருதப்படும் டிஸ்னி, இந்த பிம்பத்தை கலாச்சாரத்தில் நிலைநிறுத்தியது.

ஒரே கதாபாத்திரத்தின் இரண்டு பதிப்புகள்

டிஸ்னி திரைப்படத்திற்கும் அசல் இடைக்காலக் கதைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு, சிறுவயதில் 'தி டெத் ஆஃப் ராபின் ஹுட்' என்ற இடைக்காலக் கதைப்பாடலின் புத்தகப் பதிப்பைப் படித்தது முதலே தன்னை மிகவும் கவர்ந்ததாக சர்னோஸ்கி பிபிசி-யிடம் கூறுகிறார்.

அதில், ஒரு தீய மடாலயத் தலைவியாலும் அவரது காதலனாலும் கொல்லப்பட்டு, ராபின் அமைதியாக உயிர் இழக்கிறார்.

"டிஸ்னியின் ராபின் ஹுட்டைத் தெரிந்துகொண்டு, பின்னர் 'தி டெத் ஆஃப் ராபின் ஹுட்' கதையைப் படித்தபோது, அந்தக் கதாபாத்திரத்தின் அந்த இரண்டு வடிவங்களையும் புரிந்து கொள்ள முயன்றதும், எப்படி அவர்கள் இருவரும் ஒரே கதாபாத்திரமாக இருக்க முடியும் என்று யோசித்ததும் ஒரு குழந்தையாக என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது" என்று அவர் கூறுகிறார்.

சர்னோஸ்கியின் திரைப்படத்தில், ஒரு கொடூரமான போரின் போது ராபின் காயமடைகிறார்.

ஒரு அம்பு ஒரு சிறுவனின் தலையின் பின்புறமாகப் பாய்ந்து அவனது கண் வழியாக வெளியே வருகிறது. பின்னர் அவன் குணமடைவதற்காக ஒரு மடாலயத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.

ஜோடி கோமர் அந்த மடாலயத் தலைவியாக நடிக்கிறார், அவர் கதைப்பாடலின் சித்தரிப்பில் இருந்து மாறுபட்டு, அன்பானவராகக் காட்டப்படுகிறார்.

"மடாலயத் தலைவி வெறும் ஒரு சாதாரண தீய கன்னியாஸ்திரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை, அதேபோல ராபின் வெறும் ஒரு சாதாரண நல்ல மாவீரனாக இருக்க வேண்டும் என்றும் நான் விரும்பவில்லை" என்று கதாபாத்திரங்களை இன்னும் நுணுக்கமாக உருவாக்கியது குறித்து சர்னோஸ்கி கூறுகிறார்.

ராபின் தனது கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்து, அதற்காக வருந்தத் தொடங்கும்போது, "இப்படம் உண்மையில் அவர் தனது சொந்த வரலாற்றோடு போராடுவதைப் பற்றியும், தனக்கு எது சரியான மரணம் என்று அவர் கருதுகிறாரோ, அதற்கான அவரது சொந்த விருப்பத்தோடு போராடுவதைப் பற்றியுமான ஒரு கதையாக மாறுகிறது" என்று அவர் கூறுகிறார்.

 ஹக் ஜாக்மேன்

பட மூலாதாரம், A24

படக்குறிப்பு, அசல், இருண்ட இடைக்காலப் புராணக்கதையை நினைவுபடுத்தும் வகையில், ராபின் ஹுட் கதையை மறுபரிசீலனை செய்து எடுக்கப்பட்ட புதிய ஏ24 திரைப்படத்தில் ஹக் ஜாக்மேன் நடிக்கிறார்

புராணங்களின் உண்மையற்ற தன்மை காஃப்மேனின் நாவலிலும் ஒரு முக்கிய கருப்பொருளாக உள்ளது. டிஸ்னியும் அவரது ஆரம்பகால எண்ணங்களை வடிவமைத்தது.

அதுகுறித்து அவர் பிபிசி-யிடம் கூறுகையில், "நான் நரி வடிவிலான ராபின் ஹுட்டைப் பார்த்துதான் வளர்ந்தேன், பின்னர் நான் இடைக்கால ஆய்வுகளை மேற்கொண்டபோது இந்தக் கதைப்பாடல்களைக் கண்டறிந்து, 'எனக்குத் தெரிந்த, நான் நேசித்த என் ராபின் ஹுட் எங்கே?' என்று யோசித்தேன்" என்கிறார்.

'தி டிரைட்டர் ஆஃப் ஷெர்வுட் ஃபாரஸ்ட்' நாவல், ராபின் ஹுட்டின் புராணக்கதையைக் கேட்டு வியந்து அவர் மீது ஈர்க்கப்படும் ஜேன் என்ற ஒரு கற்பனையான ஏழைப் பெண்ணை மையமாகக் கொண்டது.

அப்பெண் அவர் மீது மயங்கி, அவரது சட்டவிரோதக் கும்பலின் ஒரு பகுதியாக மாறுகிறார்.

ஆனால் அவரது மாவீர பிம்பமும், வசீகரமான ராபினும் அவரை தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிட்டனவா என்று யோசிக்கத் தொடங்குகிறார் அப்பெண்.

காஃப்மேனின் ராபின், மாவீரனும் அல்ல, வில்லனும் அல்ல, அவர் அந்தக் கதாபாத்திரத்தின் அசல் தோற்றத்திற்கு உண்மையாக இருக்கிறார்.

கதைப்பாடல்களில், "மன்னர்கள், பிரபுக்கள், திருச்சபை போன்ற அதிகாரத்தில் உள்ளவர்களை அவர் எதிர்க்கும் விதத்தைப் பார்க்கும்போது அவர் நம்ப முடியாத அளவுக்கு புரட்சிகரமானவராக இருக்கிறார். ஆனால் அதே நேரத்தில், ஒவ்வொரு கதைப்பாடலிலும், அவர் ஒரு சோகமான முடிவைச் சந்திக்கிறார் அல்லது அவரது சொந்தக் குறைபாடுகளுக்கே பலியாகிறார்" என்று அவர் கூறுகிறார்.

கடந்த நூற்றாண்டில், ராபின் ஹுட் பற்றிய இத்தகைய சிக்கலான பார்வைகள் அரிதாகவே இருந்தன.

திரையில், டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் முதல் கெவின் காஸ்ட்னர் மற்றும் ரசல் குரோவ் வரையிலான பல நடிகர்கள் இந்த பாத்திரத்தில் நடித்துள்ளனர், அவர்கள் அனைவரும் அந்தப் பொதுவான பிம்பத்தையே பின்பற்றினர்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு 'ராபின் அண்ட் மரியன்' திரைப்படமாகும்.

இது இன்னும் பரவலாக அறியப்பட வேண்டிய ஒரு புத்திசாலித்தனமான, நேர்த்தியான படமாகும்.

வயதான ராபினாக சீன் கானரி நடித்துள்ளார்.

அவர் பல தசாப்தங்களுக்குப் பிறகு இப்போது ஒரு மடாலயத் தலைவியாக இருக்கும் மரியனை (ஆட்ரி ஹெப்பர்ன்) மீண்டும் சந்திக்கிறார்.

இந்த ராபின், தன்னைப்பற்றிய புராணக் கதைகள் உண்மை என்பதை மறுக்கிறார். தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் சிந்தனையூட்டும் நபராக இருக்கிறார்.

"நான் பார்த்த மரணங்களைப் பற்றியே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், இதெல்லாம் எதற்காக என்று எனக்குத் தோன்றுகிறது" என்று அவர் மரியனிடம் கூறுகிறார்.

இது இன்னும் பரவலாக அறியப்பட வேண்டிய ஒரு புத்திசாலித்தனமான, நேர்த்தியான படமாகும். வயதான ராபினாக சீன் கானரி நடித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திரையில், டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் முதல் கெவின் காஸ்ட்னர் வரையிலான நடிகர்கள் இந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளனர்

அதிகாரம், மாவீரர்கள் மற்றும் அவர்களின் கதைகள் எவ்வாறு சொல்லப்படுகின்றன என்பது போன்ற கேள்விகள் தான், இந்த மறுபரிசீலனைப் பார்வைகளை தற்காலத்திற்கு மிகவும் உகந்ததாக மாற்றுகின்றன.

"இடைக்காலத்தில் இருந்ததைப் போன்றே தற்போதும் உலகம் அதிகாரத்தை ஒருங்கிணைத்து வருகிறது" என்று கூறும் காஃப்மேன், "அவர்கள் சிந்திக்க வேண்டியிருந்த சில விஷயங்களைத் தான் நாமும் இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது"என்கிறார்.

தனது கதாபாத்திரங்கள் கதைகளை எவ்வாறு அதிகாரமாகப் பயன்படுத்துகின்றன என்பதை சர்னோஸ்கி சுட்டிக்காட்டுகிறார்.

பின்தொடர்பவர்களைத் தன்வசம் ஈர்ப்பதற்காக "ராபின் கதைகளை ஒரு ஆயுதமாகவும், வன்முறையைத் தூண்டுவதற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்தினார்" என்று கூறும் அவர், அதே நேரத்தில் "மடாலயத் தலைவி கதைகளை மக்களுக்கு உதவவும் அவர்களைக் குணப்படுத்தவும் ஒரு வழியாகப் பயன்படுத்துகிறார்" என்கிறார்.

இத்தகைய உத்திகள் இன்று எங்கும் நிறைந்திருக்கின்றன.

"சமூக ஊடகங்கள், இணையம் மற்றும் நம்மைச் சுற்றி சுழலும் அனைத்திற்கும் இடையே நாம் இப்போது கதைகளில் மிகவும் மூழ்கிப் போயுள்ளோம்" என்று சர்னோஸ்கி கூறுகிறார்.

"நாம் மிக விரைவாக ஏதேனும் ஒரு பிரிவிலும் பழங்குடி மனப்பான்மையிலும் குதித்துவிடுகிறோம். மாவீரர்களையும் வில்லன்களையும் உருவாக்கி விடுகிறோம், ஆனால் உண்மையில் வாழ்க்கை அப்படியானதல்ல . அது நல்லது கெட்டது என்ற இரண்டுக்கும் நடுவில் இருக்கும் நுணுக்கங்களில்தான் உள்ளது"என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராபின் ஹுட்டின் இந்த இருண்ட புதிய வடிவங்கள் எவ்வளவு விறுவிறுப்பாக இருந்தாலும், அவை டிஸ்னி உருவாக்கிய பிம்பத்தை மாற்றிவிட வாய்ப்பில்லை.

"எல்லோரும் தங்களின் ராபின் ஹுட் கற்பனை கலைக்கப்படுவதை விரும்புவதில்லை" என்று கூறும் காஃப்மேன், "அசல் வரலாறு என்னவாக இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி ஒரு பெரிய விஷயத்தின் அடையாளமாக அவர் விளங்குவதால், அவர் இப்போது சாண்டா கிளாஸ் போல ஆகிவிட்டார்"என்கிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு