You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சத்தியமங்கலம் 'பள்ளி சத்துணவில் மாணவியை மிரட்டி சாணி பவுடரை கலக்க வைத்த' குற்றச்சாட்டில் ஒருவர் கைது
- எழுதியவர், பி. சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் ருசி பார்ப்பதற்காக எடுத்து வைக்கப்பட்ட உணவில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவத்தில் காலை உணவுத் திட்ட முன்னாள் பணியாளரின் கணவரை காவல்துறை கைது செய்துள்ளது.
தனது மனைவியின் பணியைப் பறித்தவர்களைப் பழிவாங்க, பள்ளி மாணவி ஒருவரை மிரட்டி அவர் இதைச் செய்ய வைத்ததாக காவல்துறை விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் சாப்பிடவிருந்த உணவில் சாணி பவுடரை கலக்காமல், ஆசிரியர்களுக்கு எடுத்து வைக்கப்பட்ட உணவில் சிறிதளவு கலந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.
சாம்பாரில் கசப்பு – 'மஞ்சள் தூள் அதிகம் என நினைத்தோம்'
இந்தச் சம்பவம் குறித்து ராமபைலூர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமுதா பிபிசி தமிழிடம் பேசினார்.
அவர் கூறிய தகவலின்படி, பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு முன், ஆசிரியர்கள் உணவை ருசி பார்த்துப் பரிசோதிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 29ஆம் தேதியன்று காலை சுமார் 9 மணியளவில் ஆசிரியர்களுக்கென தனியாக வைக்கப்பட்டிருந்த உணவும், சாம்பாரும் பரிசோதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பள்ளி ஆசிரியை ஒருவர் சாம்பாரை சிறிதளவு ருசி பார்த்துவிட்டு பிரார்த்தனைக்குச் சென்றுவிட்டார். அந்தப் பாத்திரத்தையும் கழுவி வைத்துவிட்டனர்.
அதன் பிறகு, மதிய உணவு நேரத்தில் அந்த ஆசிரியை காலை உணவில் வழக்கத்தைவிட அதிக அளவில் மஞ்சள் தூள் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, 31ஆம் தேதி திங்கள் கிழமை காலை உணவு தயாரிக்கும் பணியாளர்கள் பள்ளிக்கு வந்தபோது, சாம்பாரில் அதிக அளவு மஞ்சள் தூள் இருப்பது போல் தெரிகிறது என்று அவர்களிடம் ஆசிரியர்கள் கேட்டதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
அதற்கு அவர்கள் வழக்கம் போலத்தான் உணவு சமைத்ததாகக் கூறியுள்ளனர். அப்படியென்றால் சாப்பிட்ட ஆசிரியரின் கையில் எப்படி மஞ்சள் கரை ஏற்பட்டது எனக் கேள்வி எழுப்பினோம். அவர்கள் எங்கள் கையில் ஓட்டவில்லை எனக் கூறிவிட்டனர்.
'மாணவியின் கையில் மஞ்சள் கரை'
இந்த நிலையில், ஒரு மாணவியின் கையிலும் மஞ்சள் நிறத்திலான கரை இருந்துள்ளது. அந்த மாணவியிடம் கேட்டபோது, வீட்டிலிருந்து சாணி வழித்ததாக முதலில் கூறியதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
ஆனால், மாணவியின் பெற்றோரிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் வீட்டில் செய்யவில்லை என்று கூறியதாகவும், இதற்கிடையே சில மாணவர்கள், அந்த மாணவி கடையில் சாணி பவுடர் வாங்கியதைத் தாங்கள் பார்த்ததாகத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இதனால் பயம் ஏற்பட்ட நிலையில், மாணவியின் தாயாரை பள்ளிக்கு வருமாறு அழைத்ததாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
"கடையில் வாங்கினேன்" என்று மாணவி கூறியதால், சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த தலைமை ஆசிரியர் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, அந்த மாணவி சாம்பார் வைக்கப்பட்டிருந்த டம்ளரில் தானே சாணி பவுடரை போட்டதாக முதலில் கூறியதாகவும், பின்னர் போலீசார் விசாரணை நடத்தியபோது மற்றொரு நபர் கூறியதன் பேரிலேயே அதைச் செய்ததாக மாணவி கூறியதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
'ஆசிரியர்கள் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை'
'இதன் பின்னணியில் ஆசிரியர்களுக்கும் சமையல் பணியாளர்களுக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் இருந்ததா?' என்ற கேள்விக்கு பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் எவ்விதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை என்று தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
இருப்பினும், போலீசார் நடத்திய விசாரணையில், இதற்கு முந்தைய காலத்தில் பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஒருவரை, சரியாகப் பணியாற்றவில்லை என்ற புகாரின் பேரில் பணியில் இருந்து நீக்கியதாகத் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
சுகாதாரத்தை முறையாகப் பேணவில்லை, உணவு தயாரிப்பில் குறைபாடுகள் இருந்தன என்பவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்தப் பணியாளர் நீக்கப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாக தலைமை ஆசிரியர் கூறினார்.
அதன் பின்னர், பணியில் இருந்த அந்தப் பெண்ணுக்கும் முன்பு பணியாற்றி நீக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே பிரச்னை இருந்ததாகவும், அது பள்ளிக்கு வெளியே நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர் யார்?
இந்த வழக்கில், முன்பு பள்ளியில் சமையல் பணியில் இருந்து நீக்கப்பட்ட ஆலம்மாளின் கணவர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு இருப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
அந்த நபர்தான் மாணவியிடம் சாம்பாரில் சாணி பவுடரை கலக்குமாறு கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்தத் தகவல்கள் தங்களுக்கு நேரடியாகத் தெரிய வந்தவை அல்ல என்றும், போலீஸ் விசாரணையின்போதுதான் தெரிய வந்ததாகவும் தலைமை ஆசிரியர் குமுதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
'உணவை ருசி பார்ப்பது வழக்கம்'
பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ஆசிரியர்கள் முன்கூட்டியே ருசி பார்த்துப் பரிசோதிப்பது வழக்கமான நடைமுறை எனக் கூறிய குமுதா, "காலை உணவு மற்றும் மதிய உணவை ஆசிரியர்கள் தினமும் ருசி பார்த்து, உப்பு, காரம் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்று சமையல் பணியாளர்களிடம் கருத்துகளைத் தெரிவிப்போம். காலை உணவு தயாரிக்கும் பணியாளர்கள் சுமார் 9 மணியளவில் சென்றுவிடுவதால், ஏதேனும் குறை இருந்தால் அடுத்த நாள் அதுகுறித்துப் பேசுவது வழக்கம்" என்றார்.
அவ்வாறு வழக்கமாக உணவை ருசி பார்த்துப் பரிசோதித்த காரணத்தாலேயே சம்பவத்தன்று உணவில் ஏற்பட்ட சந்தேகம் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் வைரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பி.என்.எஸ் சட்டத்தின் 123வது பிரிவின்கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் குறைந்தது பத்து ஆண்டுகள் தண்டனை கிடைக்கும். உணவுப் பொருளில் விஷத்தைக் கலக்குவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படும் என்பதைத் தெரிந்திருந்தே இந்தச் செயலைச் செய்துள்ளனர்."
அதோடு, "உணவை ருசி பார்த்த ஆசிரியைக்கு வயிற்று உபாதை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவனையில் சிகிச்சை எடுத்ததற்கான சான்றிதழ்கள் பெறப்பட்ட பிறகே, இந்தக் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக" தெரிவித்தார்.
இந்த வழக்கில், பள்ளி குழந்தைகளை விசாரித்ததன் அடிப்படையில் ஆறுமுகம் கைது செய்யப்பட்டதாகக் கூறிய வைரம், "விசாரணையில் ஆறுமுகத்தின் மனைவி சமையலராக இதே பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். மனைவியின் வேலை போகக் காரணமானோரை மாட்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தில், கண்காணிப்பாளர் ஆசிரியர்கள் மீது பழி போடுவதற்காக சாணி பவுடர் கலந்ததை ஒப்புக் கொண்டார்" என்று விளக்கினார்.
இந்தச் சம்பவம் கடந்த 29ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது. ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் 31ஆம் தேதி பள்ளியில் தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் உணவைச் சாப்பிட்டுப் பார்த்துதான் கொடுப்பார்கள். அப்படி ஆசிரியர் சாப்பிட்ட உணவில் கசப்புத் தன்மையோடு மஞ்சள் அதிகமாக இருந்துள்ளது.
அதோடு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் சாணி பவுடரை கலக்கவில்லை. ஆசிரியர் சாப்பிட்ட உணவில் கலந்துவிட்டனர். இதையடுத்து கடந்த 31ஆம் தேதி குழந்தைகளிடம் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் சாப்பாட்டில் சாணிப்பவுடர் கலந்தது தெரிய வந்தது.
பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆலோசனை செய்து புகாரளிக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி புகார் பெறப்பட்டு, 2ஆம் தேதி குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டதாக சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் வைரம் தெரிவித்தார்.
'மாணவியை மிரட்டி செய்ய வைத்துள்ளார்'
ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மான்விழி பிபிசி தமிழிடம் பேசும்போது, "மாணவி ஒருவரைக் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும், ஆசிரியர் ருசி பார்த்த உணவில் மட்டும் இதைக் கலக்கச் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், உடனடியாக தலைமை ஆசிரியரை புகார் கொடுக்கச் சொல்லி உத்திரவிட்டதன் அடிப்படையில் புகாரளிக்கப்பட்டதாக" தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பிபிசி தமிழிடம் இந்தச் சம்பவம் குறித்து அளித்த விளக்கத்தில், "இது தனிப்பட்ட விரோதத்தில் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை மாணவர்கள் உண்பதற்கு முன்பாக மாதிரியை எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக" தெரிவித்தார்.
அத்துடன், ஏற்கெனவே மாதிரி எடுத்து வைக்கும் நடைமுறை இருந்தாலும் அதைக் கடுமையாகப் பின்பற்ற இப்போது உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு