You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் பயங்கரவாதிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது? வீடு வாடகைக்கு விட்ட பெண் பேட்டி
- எழுதியவர், ஜேன் மெக்முல்லென்
- பதவி, பிபிசி பனோரமா & பிபிசி ரேடியோ 4
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள்
ஹோலி ராட்ச்ஃபோர்டால் இன்னமும் நம்ப முடியவில்லை, தாம் நிர்வகித்து வந்த குடியிருப்பு வளாகத்துக்கு குடியேறிய அந்த நபர், பின்னர் அமெரிக்காவின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் இருண்ட நாளில் நடந்த சம்பவத்தில் பங்கேற்றதாகக் குற்றம்சாட்டப்படுவார் என்று.
"அவர் தன்னைப் பற்றி கூறியது என்ன, அவர் உண்மையில் யார் என்பது என்ன என்பதை என்னால் இன்னும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இதை ஏற்றுக்கொள்வது எனக்கு இப்போதும் கடினமாக இருக்கிறது" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
அந்த நபர் ஓமர் அல்-பயூமி. அப்போது சுமார் 40 வயதான சௌதி அரேபியரான அவர், 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனது குடும்பத்துடன் கலிஃபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள அந்தக் குடியிருப்பு வளாகத்துக்குக் குடியேறினார்.
பார்க்வுட் குடியிருப்பு வளாகத்தில் 152-வது வீட்டுக்குப் புதிதாக குடியேறிய அவர், ராட்ச்ஃபோர்ட் நடத்தி வந்த நீச்சல் குள விருந்துகளில் தொடர்ந்து கலந்துகொள்ளத் தொடங்கினார்.
"அவர் எப்போதும் மிகவும் உற்சாகமாகவும் புன்னகையுடனும் இருப்பார். மிகவும் நட்பாகப் பழகுவார்" என்று அவர் நினைவுகூர்கிறார்
சில மாதங்களுக்குப் பிறகு, பயூமி இரண்டு ஆண்களை ராட்ச்ஃபோர்டுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் அமைதியாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்பவர்களாக தோன்றியுள்ளனர். பின்னர் அவர்களும் அந்தக் குடியிருப்பு வளாகத்தில் அவரது அண்டை வீட்டுக்காரர்களாக மாறினர்.
அவர்கள் இருவரும் பின்னர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 77-ஐ கடத்தி, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின்போது அதை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் கட்டடத்தின் மீது மோதச் செய்தவர்களாக அறியப்பட்டனர்.
கடந்த 25 ஆண்டுகளாக, இந்த மூன்று ஆண்களுடனான தனது தொடர்பு ராட்ச்ஃபோர்டைத் தொடர்ந்து வாட்டி வருகிறது. தொடக்கத்திலிருந்தே பயூமி தன்னை ஏமாற்றியதாக அவர் கருதுகிறார்.
"நான் விருந்துகளை ஏற்பாடு செய்யும்போதெல்லாம் அவர் வந்து கலந்துகொள்வார். என் குடும்பத்தினர் அவரைச் சாப்பிடவும் அழைப்பார்கள். அவர் எங்கள் வீட்டுக்கு வருவதை மிகவும் விரும்பினார்" என்று அவர் நினைவுகூர்கிறார்.
ஆனால், பார்க்வுட் குடியிருப்பு வளாகத்தின் 152-வது வீட்டில் வசித்து வந்த பயூமி, தற்போது 9/11 தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் பல ஆயிரம் குடும்பங்கள் சௌதி அரேபிய அரசுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள ஒரு டிரில்லியன் டாலர் இழப்பீட்டு வழக்கின் மையமாக உள்ளார்.
2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அல்-கொய்தாவைச் சேர்ந்த 19 பேர் நான்கு பயணிகள் விமானங்களைக் கடத்தினர்.
அவற்றில் ஒரு பென்டகன் மீது மோதியது. மற்ற இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதின. இதனால் அந்த இரண்டு கட்டடங்களும் இடிந்து விழுந்தன.
நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு வயல்வெளியில் விழுந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் கடத்தல்காரர்களை எதிர்த்து போராட முயன்றதைத் தொடர்ந்து இந்த விமானம் அங்கு விழுந்தது.
மொத்தத்தில், சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். இதில் உலக வர்த்தக மையத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற அவசரகாலப் பணியாளர்களும் அடங்குவர்.
9/11 தாக்குதல் சதித்திட்டத்துக்கு உதவியதாக பயூமி மீது குற்றச்சாட்டு உள்ளது.
தாக்குதலுக்கு முன்னதாக பல மாதங்கள் பார்க்வுட்டில் வசித்த நவாஃப் அல்-ஹஸ்மி மற்றும் காலித் அல்-மிஹ்தார் ஆகிய முதல் இரண்டு விமானக் கடத்தல்காரர்களும் அமெரிக்காவுக்குள் வருவதற்கு அவர் உதவியதாகக் கூறப்படுகிறது.
9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியூயார்க்கில் தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, கடந்த ஆண்டு ஆதாரங்களைப் பரிசீலித்த பின்னர், பயூமியும் அமெரிக்காவில் பணியாற்றிய சௌதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவரும் "கடத்தல்காரர்களுக்கு உதவி வழங்கியபோது செளதி அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கலாம்" என்ற நியாயமான முடிவுக்கு வர முடியும் என்று தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வழக்கு தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்பட்டது. சௌதி அரேபியா இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. பயூமியும் சௌதி அரசும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
தாக்குதல்களுக்குப் பிறகு, பயூமி குறித்த செய்திகள் மற்றும் பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து வெளியாகின.
கடத்தல்காரர்களுடன் பயூமி பழகியதைப் பார்த்ததுடன், அவர்களுக்கு முக்கியமான உதவியை அவர் வழங்கியதையும் நேரில் பார்த்த ராட்ச்ஃபோர்ட், நியூயார்க் நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆனால், தான் பார்த்த விஷயங்கள் குறித்து அவர் இதுவரை பொதுவெளியில் பேசியதில்லை.
ஹோலி ராட்ச்ஃபோர்டைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
அமெரிக்க அரசு, "நவீன வரலாற்றில் அமெரிக்க மண்ணில் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான குற்றச்செயல்" என்று வர்ணித்த சம்பவம் குறித்த விசாரணையில், தன்னையும் அறியாமல் சிக்கிக்கொண்ட பிறகு, அமெரிக்காவில் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து முடிந்தவரை தொலைவில் உள்ள இடத்துக்கு அவர் சென்றுவிட்டார்.
மேற்கு அமெரிக்காவில், பாம்புகள் அதிகம் காணப்படும் வறண்ட பாலைவனப் பகுதிக்கு அருகே அவரை நான் கண்டுபிடித்தேன். செய்திகளைப் பார்ப்பதையே தவிர்த்து வருவதாகவும், குறிப்பாக செய்தியாளர்களிடம் பேசுவதில்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். ஆனால், நான் எதிர்பாராத வகையில், என்னிடம் பேச அவர் சம்மதித்தார்.
நான் நடத்திய நேர்காணல், காவல்துறை, எஃப்.பி.ஐ மற்றும் நியூயார்க் நீதிமன்றத்திடம் பயூமி தெரிவித்த சம்பவ விளக்கத்தின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது.
நிலையான வாழ்க்கையும் கனவு வேலையும்
1999- ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ராட்ச்ஃபோர்டின் வாழ்க்கை இறுதியாக ஒரு நிலையான பாதைக்கு வந்தது.
அதற்கு முன்பு அவரது வாழ்க்கை நிலையற்றதாக இருந்தது. பலமுறை இடம் மாறியிருந்தார். 21 வயதை எட்டுவதற்குள் திருமணம் செய்துகொண்டார், கர்ப்பமானார், பின்னர் விவாகரத்தும் பெற்றார்.
ஆனால் 27 வயதுக்குள் அவருக்குச் சொந்தமாக ஒரு வீடும், தான் விரும்பிச் செய்யும் வேலையும் இருந்தது.
சான் டியாகோ நகரின் புறநகரில் அமைந்திருந்த 175 வீடுகளைக் கொண்ட பார்க்வுட் குடியிருப்புகள் வளாகத்தின் புதிய நிர்வாகியாக அவர் பணியில் சேர்ந்தார்.
அவரது சிறப்பான செயல்பாட்டால் அந்தக் குடியிருப்பு வளாகம் நீண்ட காலம் காலியாக இருந்ததில்லை.
ஆனால் அந்த வேலையை ஒரு கனவு வேலையாக மாற்றியது ஆவணப் பணிகளோ நல்ல சம்பளமோ அல்ல. அங்கிருந்த மக்கள்தான்.
ராட்ச்ஃபோர்ட் பார்க்வுட்டில் பணிபுரிந்ததுடன் அங்கேயே வசித்தும் வந்தார்.
"என் ஊழியர்களிடம் நான் எப்போதும் சொல்வேன்: 'இது அவர்களுடைய சொந்த வீடு என்று அவர்கள் உணரும்படி செய்யுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் இங்கேயே இருப்பார்கள்'" என்று அவர் நினைவுகூர்கிறார்.
பார்க்வுட்டில் தனது இடத்தை உருவாக்கிக்கொண்டிருந்த ராட்ச்ஃபோர்ட், தான் கட்டியெழுப்பிய உலகில் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தார். அங்கு அனைவரையும் அவருக்குத் தெரியும். அனைத்தும் பழக்கமானவையாக இருந்தன.
பின்னர், அனைத்தும் எதிர்பாராத விதமாகவும் வியத்தகு வகையிலும் சிதைந்துபோனது.
ஓமர் அல்-பயூமி, தன்னை வழக்கமான வயதை தாண்டி படிக்கும் மாணவன் என்று கூறிக்கொண்டு பார்க்வுட்டில் குடியேறினார்.
"அவர் படித்துக்கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும். அதைத்தவிர, அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை" என்று ராட்ச்ஃபோர்ட் கூறுகிறார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகக் கழித்து, ரகசியம் நீக்கப்பட்ட எஃப்பிஐ ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களும் பயூமியின் படிப்பு உண்மையில் 1998-ம் ஆண்டிலேயே நின்றுவிட்டதை வெளிப்படுத்தின. அவர் முஸ்லிம் சமூகத்தில் மதம் சார்ந்த செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் அதிக நேரம் செலவிட்டு வந்தார். அவற்றை அவர் அடிக்கடி வீடியோவாகவும் பதிவு செய்தார்.
அவர் தொடர்ந்து வீடியோ எடுத்ததும், பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரித்துக் கேட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
"சான் டியாகோ முஸ்லிம் சமூகத்தில் இருந்த பலரிடமும், பயூமி செளதி உளவுத்துறையின் ஏஜென்டாகச் செயல்படுகிறார் என்ற பொதுவான கருத்து நிலவியது" என்று 9/11 தாக்குதலுக்குப் பிறகு சான் டியாகோவில் எஃப்பிஐ நடத்திய விசாரணைக்குத் தலைமை வகித்த ரிச்சர்ட் லாம்பர்ட் என்னிடம் கூறுகிறார்.
ஆனால், அவரைப் பற்றி விசாரிப்பது ராட்ச்ஃபோர்டின் வேலையாக இருக்கவில்லை. அவர் கவலைப்பட்டது ஒன்றைப் பற்றித்தான்: பயூமியால் வாடகையைச் செலுத்த முடியுமா? அவரால் முடிந்தது.
பின்னர், பயூமிக்கு ஆண்டுக்கு சுமார் 90,000 டாலர் ஊதியம் வழங்கப்பட்டு வந்ததை எஃப்பிஐ கண்டறிந்தது.
"அவர் சொன்ன அனைத்தையும் நான் நம்பினேன்"
பயூமி, தன்னை ஒரு சாதாரண குடும்ப மனிதராகவே வெளிப்படுத்திக்கொண்டார்.
"அவர் என்னிடம் சொன்ன அனைத்தையும் நான் அப்படியே நம்பிவிட்டேன். அவர் உண்மையிலேயே அப்படித்தான் என்று நான் நினைத்தேன்" என்று ராட்ச்ஃபோர்ட் கூறுகிறார்.
ஆனால், பயூமி குறித்து ராட்ச்ஃபோர்ட் பார்த்த இந்தப் பிம்பம், மற்ற வீடியோக்களில் வெளிப்படும் அவரது உருவத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
1999-ம் ஆண்டு கோடையில், வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தை பல்வேறு கோணங்களில் பயூமி வீடியோ எடுத்தார். அப்போது ஒரு "திட்டம்" குறித்தும் அவர் குறிப்பிட்டார். பின்னர், கேமராவைத் தன்னை நோக்கித் திருப்பி, செய்தியாளர் பாணியில் அந்த இடம் குறித்து விளக்கமளித்தார்.
9/11 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சார்பில் வழக்குத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர்கள், தாக்குதலுக்கான இலக்காக அந்தக் கட்டடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததா என்பதை ஆய்வு செய்வதற்காகவே பயூமி அதை வீடியோ எடுத்ததாகக் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இது சுற்றுலாவின்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று செளதி அரேபியா தொடர்ந்து கூறி வருகிறது.
2025 ஆகஸ்டில் வழங்கிய தீர்ப்பில், நியூயார்க் நீதிபதி, இந்த வீடியோவிலிருந்து "நீதிமன்றத்தால் முடிவுக்கு வர முடிவது" பயூமி "வாஷிங்டன் டிசிக்கு சென்று நகரை வீடியோ எடுத்தார்" என்பது மட்டுமே என்று குறிப்பிட்டார்.
2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி, இரண்டு இளைஞர்களை ராட்ச்ஃபோர்ட் பணியாற்றிய சான் டியாகோ வாடகை அலுவலகத்துக்கு பயூமி அழைத்து வந்தார். அவர் மிகவும் அவசரமாக இருந்ததாகக் கூறும் ராட்ச்ஃபோர்ட், அந்த இருவரும் தனது மசூதியைச் சேர்ந்தவர்கள் என்றும், வாடகைக்கு வீடு தேடும் வரை தன்னுடன் தங்கியிருப்பதாகவும் கூறியபடி, பயூமி ஆவண அலமாரி மீது அமர்ந்திருந்ததாக கூறுகிறார்.
"அவர்களிடம் முற்றிலும் அசாதாரணமாக எதுவும் தெரியவில்லை. அவர்கள் நல்லவர்களாகவும் பணிவாகவும் இருந்தார்கள்" என்று அவர் கூறுகிறார்.
அந்த இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆனால், பயூமி அவர்களுக்காகப் பேசினார். பார்க்வுட் குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுப்பதற்குத் தகுதி பெற அந்த இருவரும் என்னென்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ராட்ச்ஃபோர்டிடம் அவர் கேட்டதாகக் கூறுகிறார்.
"வருமானம் தொடர்பான தகுதி விதிகளையோ, வங்கிக் கணக்கு தொடர்பான நிபந்தனையையோ அவர்கள் பூர்த்தி செய்யவில்லை. அவர்களிடம் அதுபோன்ற எதுவுமே இல்லை" என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
ராட்ச்ஃபோர்டுக்கு சில விதிமுறைகள் இருந்தன. எனவே, உடனடியாக அவர்களுக்கு வாடகை வீடு வழங்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டார்.
ஆனால், அந்த இருவரிடமும் பல ஆயிரம் டாலர்கள் ரொக்கமாக இருந்தன. வங்கி ஆவணங்களின்படி, மறுநாள் பயூமி அவர்களை அருகிலிருந்த வங்கிக்கு அழைத்துச் சென்று வங்கிக் கணக்கு தொடங்க உதவினார்.
மூன்றாவது நாளில் மீண்டும் ராட்ச்ஃபோர்டின் அலுவலகத்துக்கு வந்த பயூமி, வருமானம் தொடர்பான தகுதி விதியைச் சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அவர்களுடைய வாடகை ஒப்பந்தத்தில் இணைந்து கையெழுத்திட்டு, அந்தக் குடியிருப்புக்கான சட்டப்பூர்வ உத்தரவாததாரராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வாடகை ஒப்பந்தத்தில் பயூமி பல இடங்களில் கையெழுத்திட்டிருப்பது தெரிகிறது. அவர் அந்த இருவரின் உத்தரவாததாரராகவும், நண்பராகவும், அவசர காலத் தொடர்பு நபராகவும் குறிப்பிடப்பட்டிருந்தார். மேலும், அவர்களின் தற்போதைய முகவரியாக பார்க்வுட்டில் உள்ள பயூமியின் வீட்டு முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பிறகு தாமதமின்றி, அந்த இருவரும் 150-ஆன் எண் கொண்ட, ஒரு படுக்கையறை வசதியுள்ள குடியிருப்பில் குடியேறினர். அது பயூமியின் நீச்சல் குளத்தை ஒட்டிய வீட்டில் இருந்து சில வீடுகள் தள்ளி இருந்தது.
பயூமி சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அந்த இருவர் நவாஃப் அல்-ஹஸ்மி மற்றும் காலித் அல்-மிஹ்தார், பின்னர் 9/11 தாக்குதலை நடத்திய விமானக் கடத்தல்காரர்களில் இடம்பெற்றனர்.
கதவைத் தட்டிய எஃப்.பி.ஐ
அடுத்த சில மாதங்களில் ராட்ச்ஃபோர்ட் அவர்கள் இருவரையும் பலமுறை பார்த்தார்.
"நான் அவர்களுடன் தேநீரும் பிஸ்கட்டும் சாப்பிட்டிருக்கிறேன். அவர்கள் அலுவலகத்துக்கு வந்து எங்களிடம் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தவர்கள் மட்டுமல்ல" என்று அவர் கூறுகிறார்.
ஹஸ்மியும் மிஹ்தாரும் அந்த ஆண்டின் மே மாத இறுதி வரை அந்தக் குடியிருப்பில் தங்கியிருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ராட்ச்ஃபோர்ட் அந்த விஷயத்தைப் பற்றி மீண்டும் சிந்திக்கவே இல்லை.
16 மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 11 தாக்குதலின் அதிர்ச்சியிலும் துயரத்திலும் அமெரிக்கா தத்தளித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அவர்கள் இருவரின் வாடகை ஒப்பந்தம் தொடர்பான பரிந்துரையை அந்தப் பெண் கேட்டார். எவ்வித தயக்கமும் இல்லாமல் ராட்ச்ஃபோர்ட் அவருக்குத் தேவையான தகவல்களை வழங்கினார்.
ஆனால், அந்தப் பெண் ரியல் எஸ்டேட் முகவர் அல்ல; ஒரு செய்தியாளர்.
அந்த செய்தியாளர் அடுத்து கேட்ட கேள்வி ராட்ச்ஃபோர்டை குழப்பமடையச் செய்தது.
"பென்டகன் மீது விமானத்தை மோதச் செய்த இரண்டு பயங்கரவாதிகள் இவர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?"
"'என்ன?' என்று நான் கேட்டேன்" என்கிறார் ராட்ச்ஃபோர்ட்.
பின்னர் எஃப்.பி.ஐ அவரது கதவைத் தட்டியது.
2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி, இரண்டு சிறப்பு முகவர்கள் பார்க்வுட் அலுவலகத்தில் ராட்ச்ஃபோர்டிடம் விசாரணை நடத்தினர்.
அவர் பயூமி உத்தரவாததாரராக கையெழுத்திட்டிருந்த படிவத்தை அவர்களிடம் கொடுத்தார். இதையடுத்து, சான் டியாகோவில் அந்த இரண்டு விமானக் கடத்தல்காரர்களின் நடவடிக்கைகளுக்கு முக்கியமாக உதவியதாக பின்னர் கருதப்பட்ட பயூமி குறித்த விசாரணை தொடங்கியது.
"விமானக் கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர்களை நாங்கள் அடையாளம் காணத் தொடங்கியபோது, ஓமர் அல்-பயூமி தலைமையில் ஒரு வலையமைப்பு இருந்தது என்பது தெளிவாகத் தெரியவந்தது" என்று தற்போது ஓய்வு பெற்றுள்ள எஃப்.பி.ஐ அதிகாரியும், 9/11 குடும்பங்களின் வழக்கில் ஆலோசகருமான ரிச்சர்ட் லாம்பர்ட் கூறுகிறார்.
பயூமியின் தொடர்புகள் மூலம் ஹஸ்மி மற்றும் மிஹ்தார் கலிஃபோர்னியா ஓட்டுநர் உரிமங்களைப் பெறவும், விமானப் பயிற்சிப் பள்ளிகளில் சேரவும், மத்திய கிழக்கிலிருந்து பணப் பரிமாற்றங்களைப் பெறவும், பல் சிகிச்சைகளைக்கூட ஏற்பாடு செய்யவும் உதவி பெற்றிருந்தது எஃப்.பி.ஐ விசாரணையில் தெரியவந்தது.
எஃப்.பி.ஐ அதிகாரிகள் பயூமியிடம் விசாரணை நடத்த விரும்பினர்.
9/11 தாக்குதலுக்கு சற்று முன்பு அவர் குடிபெயர்ந்திருந்த பிரிட்டனின் பர்மிங்காம் நகரம் வரை சென்று அவரை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
2001 செப்டம்பர் 21 அன்று, மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர். பின்னர் துப்பறியும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தத் தொடங்கினர்.
எவ்விதக் கவலையும் இல்லாதவரைப் போலவும், சில நேரங்களில் கோபமடைந்தவரைப் போலவும் தோன்றிய பயூமி, ஆரம்பத்தில் அந்த விமானக் கடத்தல்காரர்களில் யாரையும் தனக்குத் தெரியாது என்று மறுத்தார்.
சிலர் வீடு தேடுவதற்கு தான் அடிக்கடி உதவியதாகக் கூறிய அவர், ஒரு குடியிருப்புக்காக உத்தரவாதம் அளித்த யாருடைய பெயரையும் நினைவில் வைத்திருக்கவில்லை என்று விசாரணையாளர்களிடம் தெரிவித்தார்.
ஒரு நாள் கழித்து, இரண்டு நபர்களுக்கு உதவியதாக தனக்கு நினைவிருப்பதாகக் கூறினார். அவர்கள் ஹஸ்மி மற்றும் மிஹ்தாரின் முதல் பெயர்களான "நவாஃப்" மற்றும் "காலித்" என்று தெரிவித்தார்.
அந்த அளவுக்கு உதவி செய்த ஒரே இருவர் அவர்கள்தான் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒரு உணவகத்தில் அவர்கள் அரபு மொழியில் பேசுவதைக் கேட்டபோது அவர்களைச் சந்தித்ததாக பயூமி கூறினார்.
அவர்கள் எப்போதாவது சான் டியாகோ வந்தால் உதவ முடியும் என்று தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த நாள், பிரிட்டிஷ் விசாரணையாளர்களிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, அந்த இருவரும் சான் டியாகோவில் அவர் வழக்கமாகச் செல்லும் மசூதிக்கு வந்தனர். தங்களுக்கு வசிக்க இடம் தேவை என்று அவர்கள் கூறினர்.
அதன்பிறகு, அவர்களுக்கு ஒரு குடியிருப்பைக் கண்டுபிடிப்பதற்காக ராட்ச்ஃபோர்டைச் சந்திக்க பார்க்வுட்-க்கு அவர்களை காரில் அழைத்துச் சென்றதாக பயூமி கூறினார்.
ஹஸ்மியும் மிஹ்தாரும் குடியேறிய பிறகு, அவர்களுடனான தொடர்பைத் தவிர்த்ததாக பயூமி கூறினார்.
தான் நகரத்தைவிட்டு வெளியே சென்றதாகவும், திரும்பி வந்தபோது அவர்கள் ஏற்கெனவே அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, எதிர்காலத்தில் விமானக் கடத்தல்காரர்களாக மாறிய அந்த இருவருடனான அவரது தொடர்பு மிகவும் குறுகிய காலமே நீடித்தது.
ஆனால், அவரது இந்த விளக்கம் ராட்ச்ஃபோர்டின் வாக்குமூலத்துடன் ஒத்துப்போகவில்லை.
"அவர் எப்படி தப்பித்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை"
"அவர் அப்படித்தான் கூறினார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அது முழுக்க முழுக்க பொய் என்பதும் எனக்குத் தெரியும்" என்று அவர் கூறுகிறார்.
விமானக் கடத்தல்காரர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து வருவதற்கு முன்பே, அந்த இருவருக்கும் ஒரு குடியிருப்பு கிடைக்குமா என்று பயூமி தன்னிடம் பலமுறை கேட்டதாக ராட்ச்ஃபோர்ட் கூறுகிறார்.
"என்னென்ன குடியிருப்புகள் காலியாக உள்ளன என்று நான் அவரிடம் கூறுவேன். அதற்கு அவர், 'வேண்டாம், வேண்டாம், எனக்கு அந்தக் குடியிருப்புதான் வேண்டும்' என்பார். அவருக்கு அருகிலேயே அவர்கள் தங்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதே நேரத்தில், குறைந்த வாடகையுள்ள குடியிருப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார்" என்று அவர் கூறுகிறார்.
குடியிருப்பை ஏற்பாடு செய்த பிறகு, விமானக் கடத்தல்காரர்களை பயூமி பெரிதாகச் சந்திக்கவில்லை என்ற அவரது கூற்றையும் ராட்ச்ஃபோர்ட் மறுக்கிறார். அதற்குப் பிறகு வந்த சில வாரங்களில், அவர்கள் இருவரையும் பயூமியுடன் சேர்ந்து பலமுறை பார்த்ததாக அவர் விளக்குகிறார். ஒருமுறை, அந்த மூவரும் தனது அலுவலகத்துக்கு வந்து தேநீரும் பிஸ்கெட்டும் சாப்பிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
"அவர்களுக்கு ஒரு குடியிருப்பைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு அவர்களிடம் பேசவே இல்லை என்பது போல இல்லை" என்று கூறும் அவர், அந்த மூவரும் "நிச்சயமாக நட்பாகப் பழகினர்" என்கிறார்.
விமானக் கடத்தல்காரர்கள் வாடகை செலுத்துவதில் பின்தங்கியபோது, பயூமிதான் அந்த வாடகையைச் செலுத்தியதாகவும் ராட்ச்ஃபோர்ட் எஃப்பிஐ அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.
மெட்ரோபாலிட்டன் காவல்துறையினர் பயூமியை ஏழு நாட்கள் காவலில் வைத்திருந்தனர். அப்போது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்சக் காவல் காலம் அதுதான். அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரிப்பதற்காக அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டாம் என்று அமெரிக்க நீதித்துறை முடிவு செய்தது.
2001 செப்டம்பர் 28 அன்று பயூமி விடுவிக்கப்பட்டார்.
இதைக் குறித்து ராட்ச்ஃபோர்ட் இன்னமும் அதிர்ச்சியில் இருக்கிறார்.
"அவர் தப்பித்துச் சென்றுவிட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று அவர் கூறுகிறார்.
எனினும், எஃப்பிஐ அதிகாரிகள் பயூமிக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து வலுப்படுத்தினர்.
சான் டியாகோவில் பணியாற்றிய எஃப்பிஐ அதிகாரிகள், சௌதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்கள் பயூமிக்கு ஆண்டுக்கு 90,000 டாலர் ஊதியம் வழங்கி வந்ததைக் கண்டறிந்தனர். ஆனால், அவர் வேலைக்குச் சென்றதற்கான எந்தத் தகவலும் இல்லை. அதேவேளையில், "அளவுக்கு அதிகமான" செலவுகளையும் அவர் செய்திருந்தார்.
அந்த இரண்டு விமானக் கடத்தல்காரர்களும் சான் டியாகோவுக்கு வந்த பிறகு, பயூமியின் ஊதியம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்ததாகவும், அவர்கள் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியை விட்டு வெளியேறிய பிறகு அவரது ஊதியம் மீண்டும் குறைந்ததாகவும் எஃப்பிஐ அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதற்கிடையில், பர்மிங்காமில் இருந்த பயூமியின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மெட்ரோபாலிட்டன் காவல்துறையிடம் இருந்து பெறப்பட்ட ஏராளமான ஆவணங்களை நியூயார்க் எஃப்பிஐ அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தனர் என்று பிபிசி அறிந்துள்ளது.
அல்-கொய்தாவுடன் நேரடித் தொடர்பு கொண்ட, சௌதி அரசுடன் தொடர்புடைய ஒரு தொண்டு நிறுவனத்துக்கு பயூமி எழுதிய கடிதங்களை எஃப்பிஐ கண்டுபிடித்தது. மேலும், "ஓமர் அல்-பயூமியின் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தக்கூடிய" ஆவணங்களும், பயூமியே எழுதிய சில குறிப்புகளும் கிடைத்தன. அவற்றை "ஜிஹாதி கருத்துகளைக் கொண்டதாகப் பொருள்கொள்ள முடியும்" என்று அதிகாரிகள் மதிப்பிட்டனர்.
ஆனால், இவற்றில் எதுவுமே பயூமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ, அவரை வழக்குத் தொடரவோ வழிவகுக்கவில்லை.
25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனத்தில் பணியாற்றிய அதிகாரிகள் தற்போது அங்கு இல்லாததால், அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அமெரிக்க அரசு பிபிசி-யிடம் தெரிவித்தது.
முக்கிய ஆவணங்கள்
2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பயூமி பிரிட்டனில் இருந்து சௌதி அரேபியாவுக்குச் சென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 9/11 தாக்குதல்களை விசாரித்த சுயாதீன அமைப்பான அமெரிக்க 9/11 ஆணையம், பயூமியை "உதவிகரமான மற்றும் சமூகத்துடன் நன்றாகப் பழகக்கூடிய" நபர் என்றும், "இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் ரகசியமாகத் தொடர்புடையவராக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு" என்றும் கூறியது.
எஃப்.பி.ஐ தன்னிடம் சேகரித்திருந்த அனைத்து ஆதாரங்களையும் அந்த ஆணையத்திடம் காட்டவில்லை.
இதுகுறித்து பிபிசி கேட்டபோது எஃப்.பி.ஐ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இதற்கிடையில், 9/11 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பயூமிக்கு எதிராக சட்ட நடவடிக்கையைத் தொடங்கியிருந்தனர்.
அல்-கொய்தாவுக்கு அவர் அளித்ததாகக் கூறப்படும் ஆதரவுக்காக, பல்வேறு தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசுகளுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்த ஒரு டிரில்லியன் டாலர் வழக்கில் பயூமியும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டார்.
பல ஆண்டுகளாக, எஃப்.பி.ஐ விசாரணை தொடர்பான ஆவணங்களை ரகசிய நீக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்தக் காத்திருப்பு மிகவும் நீண்டதாக இருந்தது.
ஆனால் 2018-ஆம் ஆண்டு முதல், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் நியூயார்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும், ஜோ பைடன் கையெழுத்திட்ட அதிபர் உத்தரவின் மூலம் வெளியிடப்பட்ட ஆவணங்களும் அடங்கும்.
அவற்றில் ஹோலி ராட்ச்ஃபோர்ட்டிடம் எஃப்.பி.ஐ நடத்திய விசாரணைகளும் இடம்பெற்றிருந்தன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, பயூமி "வெறுமனே ஒரு அப்பாவியான பங்கேற்பாளர்" என்ற முடிவை ஆதாரங்கள் ஆதரிக்கவில்லை என்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி ஜார்ஜ் பி. டேனியல்ஸ், விமானக் கடத்தல்காரர்களுக்கு குடியிருப்பு தொடர்பாக பயூமி செய்த அனைத்து உதவிகளும் வெறுமனே "நல்லெண்ணத்துடன் உதவிய ஒருவரின்" செயலாக இல்லாமல், சௌதி அரசின் அறிவுறுத்தலின்படி அவர் செயல்பட்டிருக்கலாம் என்று நியாயமாகக் கருத முடியும் என்றும் குறிப்பிட்டார்.
9/11 தாக்குதல்களில் எந்தத் தொடர்பும் இல்லை என்று சௌதி அரேபியா மறுக்கிறது. ஓமர் அல்-பயூமி சௌதி முகவர் அல்ல என்றும், தாக்குதல்கள் குறித்து அவருக்கு முன்கூட்டியே எந்தத் தகவலும் இல்லை என்றும், அவற்றில் அவர் ஈடுபடவில்லை என்றும் சௌதி அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
மேலும், அமெரிக்கச் சட்டத்தின்படி தனக்கு இறையாண்மை விலக்கு இருப்பதாகவும் சௌதி அரசு வாதிடுகிறது. அதாவது, ஒரு அரசுக்கோ ஆட்சியாளருக்கோ குறிப்பிட்ட வகையான சிவில் வழக்குகள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து சட்டப்பூர்வ விலக்கு கிடைப்பதாகும்.
எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சௌதி அரசு கோருகிறது.
இந்த வழக்கு தற்போது அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் உள்ளது. அக்டோபரில் இரு தரப்பினரின் நேரடி வாய்மொழி வாதங்கள் விசாரிக்கப்பட உள்ளன.
"நான் மிகவும் முட்டாளாக உணர்ந்தேன்!"
செப்டம்பர் 11 தாக்குதல், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தனிப்பட்ட பேரதிர்ச்சியை ஏற்படுத்திய பேரழிவாக இருந்தது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், உயிர் தப்பியவர்கள், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோர் இதனால் பாதிக்கப்பட்டனர்.
ஹோலி ராட்ச்ஃபோர்டைப் பொறுத்தவரை, பார்க்வுட்-ல் பல ஆண்டுகளாக அவர் உணர்ந்து வந்த அனைத்து நம்பிக்கைகளும் பாதுகாப்பு உணர்வும் திடீரென முடிவுக்கு வந்தன.
"செப்டம்பர் 11ஆம் தேதி பலருடைய வாழ்க்கை உடனடியாக மாறியது என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் விஷயத்தில், ஓரிரு வாரங்களுக்குள் என் வாழ்க்கை, என் கொள்கைகள், என் நம்பிக்கைகள்... எல்லாமே மிக வேகமாக மாறிவிட்டன. ஒரே ஒரு சுவிட்சை அணைத்தது போல இருந்தது" என்கிறார் அவர்.
"நான் மிகவும் முட்டாளாக உணர்ந்தேன். மோசமான செயல்களைச் செய்தவர்களை நான் நம்பியிருந்தேன்; அவர்களைப் பற்றி அக்கறையும் கொண்டிருந்தேன். தாங்கள் யார் என்று கூறிக்கொண்டவர்கள் உண்மையில் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பதை மீண்டும் யாரும் இவ்வளவு எளிதாக என்னை ஏமாற்றிவிடக் கூடாது என்று விரும்புகிறேன்."
செப்டம்பர் 11ஆம் தேதி தாக்குதலுக்குப் பிறகு சிறிது காலத்திலேயே, ராட்ச்ஃபோர்ட் பார்க்வுட்-ஐயும், தனது பணியையும், பெரிய நகர வாழ்க்கையையும் விட்டு வெளியேறினார்.
முதலில் கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். பின்னர் ஒரு பழங்குடியின மக்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குச் சென்றார். அதன்பிறகு தொலைதூரமான, தனிமையான இடத்துக்குச் சென்றார்.
தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்ற உணர்விலிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளாக இவை அனைத்தும் இருந்தன.
ராட்ச்ஃபோர்ட் தன்னைச் சுற்றி ஒரு தனிமையை உருவாக்கிக்கொண்டார் என்று கூறுகிறார். முழுமையாக நம்பியவர்களுடன் மட்டுமே அவர் தொடர்பில் இருந்தார்.
"செப்டம்பர் 11 தாக்குதல் மனிதர்களைப் பற்றி எனக்கு பயத்தை ஏற்படுத்தியது" என்று அவர் கூறுகிறார்.
"இப்போது தங்களைப் பற்றி பொய் சொல்லக்கூடியவர்களிடமிருந்து விலகியே இருக்க விரும்புகிறேன். ஒரு சிறிய நகரத்தில் ரகசியங்களை வைத்திருப்பது சாத்தியமில்லை. அது எனக்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர வைக்கிறது. மக்களை நம்பக்கூடிய இடத்தில் இருப்பதையே நான் விரும்புகிறேன்."
ஆனால், வெளி உலகத்திலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்ல அவர் முயன்றபோதிலும், பார்க்வுட்-ல் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த சந்தேகங்கள் அவரை இன்னமும் துன்புறுத்துகின்றன.
"நான் இன்னும் கொஞ்சம் கடுமையாக இருந்திருந்தால், இன்னும் ஏதாவது செய்திருக்க முடியுமா என்று என்னில் ஒரு பகுதி யோசிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு