You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாரடைப்பின்போது நெஞ்சில் மட்டுமல்ல வேறு எங்கெல்லாம் வலி ஏற்படும்? 8 கேள்வி - பதில்கள்
- எழுதியவர், பிரியங்கா திமான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
முன்பெல்லாம் மாரடைப்பு என்று கேள்விப்பட்டவுடன், வயதான ஒருவரின் உருவம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இன்றோ இளம் வயதினரும் மாரடைப்புக்கு ஆளாகி வருகின்றனர். சில நேரங்களில் ஒருவர் வெளித்தோற்றத்தில் மிகவும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் தோன்றலாம். ஆனால், அவரும் இதய நோயுடன் போராடிக் கொண்டிருக்கலாம்.
இளம் வயதினரிடையே மாரடைப்பு பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்த முக்கியமான கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வதற்காக, டெல்லியில் உள்ள பிஎஸ்ஆர்ஐ மருத்துவமனையின் இதயவியல் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வரும் இதயநோய் நிபுணர் மருத்துவர் கேவல் கிஷன் தல்வாரிடம் பேசினோம்.
அவர் எய்ம்ஸில் இதயவியல் துறைத் தலைவராகவும், சண்டிகரில் உள்ள பிஜிஐ-யின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
மருத்துவர் தல்வார் பத்ம பூஷண் விருது பெற்றவர். இந்தத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
20 அல்லது 30 வயதிலேயே இளம் வயதினர் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். இதற்கு என்ன காரணம்?
இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணம் புகைப்பிடிப்பதாகும். இரண்டாவது முக்கிய காரணம் சமநிலையற்ற உணவுப் பழக்கம். அதாவது, துரித உணவுகள் மற்றும் வெளியில் வாங்கிச் சாப்பிடும் உணவுகள். இவ்வகை உணவுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் காரணமாக கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் பிரச்னை ஏற்படுகிறது.
இதுதவிர, மது அருந்துவது அல்லது வேறு ஏதேனும் போதைப்பொருளைப் பயன்படுத்துவதும் மாரடைப்புக்கு ஒரு காரணமாகும்.
மற்றொரு முக்கியக் காரணம், இளைஞர்களின் பரபரப்பான வாழ்க்கை முறையால் உடற்பயிற்சி செய்வதற்குக் கூட நேரம் கிடைக்காமல் போவது.
இப்போது மற்றொரு முக்கியக் காரணமும் முன்னுக்கு வருகிறது. அதாவது மன அழுத்தம். இன்றைய வாழ்க்கை முறை, நீண்ட நேரப் பணி மற்றும் அதிகப்படியான வேலைப்பளு ஆகியவை இளைஞர்களிடையே மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக மாரடைப்பு பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
சண்டிகரில் உள்ள பிஜிஐ-யில் நாங்கள் சிகிச்சை அளித்த மாரடைப்பு நோயாளிகளில் 25 சதவிகிதம் பேர் 40 வயதுக்குக் குறைவானவர்கள்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இளைஞர்கள் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?
மிக முக்கியமான விஷயம் தினமும் உடற்பயிற்சி செய்வது. வேலை செய்யும் இடத்தில்கூட, லிஃப்ட்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து உடல் செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.
தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடப்பது மிகவும் முக்கியம். 10 முதல் 12 நிமிடங்களில் ஒரு கிலோமீட்டர் நடந்து முடிக்க முயற்சி செய்யுங்கள்.
உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுங்கள். முட்டை சாப்பிடுவது நல்லது. உலர் பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை சுட்டு அல்லது கிரில் செய்து செய்து சாப்பிடலாம். ஆட்டிறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், அதை குறைவாகச் சாப்பிடுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
மரபணுக் காரணிகளும் இந்த நோயில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, ஒருவருக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அவர் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், உடனடியாக மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தொடங்க வேண்டும் என்று நான் கூறவில்லை. முதலில் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உடல்நிலையை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். இதுதவிர, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்.
சிகரெட் என்பது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
இளைஞர்கள் பிறர் புகைப்பிடிப்பதால் ஏற்படும் புகையை சுவாசிப்பது குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதாவது, நீங்கள் சிகரெட் புகைக்காமல் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு அருகில் இருப்பவர் புகைப்பிடித்தால், அதன் புகை உங்களையும் அதேபோல் பாதிக்கிறது.
உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பது அடிக்கடி காணப்படுகிறது. உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு ஏதேனும் சிறப்புப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டுமா?
உடற்பயிற்சி உடலுக்கு நல்லது. பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் உதவுகிறது. ஆனால், இதுவரை உடற்பயிற்சி செய்யாத ஒருவர் திடீரென அதிக அளவில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினால், அது உடலுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே, உடற்பயிற்சியைத் தொடங்கும்போது ஒரே நேரத்தில் அதிகமாகச் செய்யக்கூடாது. படிப்படியாக உடலை அதற்குப் பழக்க வேண்டும்.
உடற்பயிற்சி உடலுக்கு மிகவும் முக்கியமானது. அது இதயத்தையும் பாதுகாக்கிறது. ஒரு இயந்திரத்துக்குச் சீராக எண்ணெய் தேவைப்படுவது போல, உடலுக்கும் உடற்பயிற்சி அவசியம்.
ஆனால், எந்தவொரு உடற்பயிற்சியையும் தொடங்குவதற்கு முன்பு சில வழக்கமான பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. உதாரணமாக, ரத்தச் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
இதுதவிர, உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு டிரெட்மில்லில் ஓடிப் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் நாங்கள் அறிவுறுத்துகிறோம். ஏதேனும் பிரச்னை அல்லது அசௌகரியம் இருந்தால், அது ஆரம்பத்திலேயே தெரியவரும்.
திடீரென அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் சில நேரங்களில் உடலில் பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்களின் அளவு குறையலாம். இதனால் இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யப் பரிந்துரைக்கிறீர்கள்?
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இளம் வயதிலும் ஆரோக்கியமாகவும் இருப்பவர் 10 நிமிடங்களில் ஒரு கிலோமீட்டர் நடந்து முடிக்கக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.
பேட்மிண்டன், டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாட முடிந்தால், அதுவும் மிகவும் நல்லது. இதனால் உடலும் மனமும் அதிகம் தளர்வடையும்.
நடக்கும்போது நமது மனம் பல்வேறு விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருக்கும். ஆனால், விளையாடும்போது நமது முழுக் கவனமும் விளையாட்டிலேயே இருக்கும்.
பொதுவாக, வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஆனால், 7 நாட்களும் செய்ய முடிந்தால் அது இன்னும் சிறப்பு.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு தென்படும் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
இளம் வயதினருக்கு பெரும்பாலும் எச்சரிக்கை அறிகுறிகள் இருப்பதில்லை. திடீரெனவே மாரடைப்பு ஏற்படுகிறது.
ஆனால், வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு பல எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கலாம். உதாரணமாக, நடக்கும்போது மூச்சுத்திணறல், படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத்திணறல், நெஞ்சில் பாரம் அல்லது அழுத்தம் போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஆனால், இளைஞர்களைப் பொறுத்தவரை இதுபோன்ற அறிகுறிகள் இல்லாமலேயே திடீரென மாரடைப்பு ஏற்படலாம்.
நடக்கும்போது ஒருவருக்கு மூச்சுத்திணறல் அல்லது நெஞ்சில் பாரம் போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி இதுபோன்ற பிரச்னை உருவாகிறதா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
மாரடைப்பின்போது எந்தப் பக்கத்தில் வலி ஏற்படும்?
இதயத்திலிருந்து வரும் வலி பொதுவாக நெஞ்சின் நடுப்பகுதியில் உள்ள எலும்புப் பகுதியில் உணரப்படும். அந்த வலி தாடைப் பகுதிக்குப் பரவலாம். வலது அல்லது இடது கைக்கும் பரவலாம். சில சமயங்களில் அடிவயிற்றிலும் வலி ஏற்படலாம்.
சில நேரங்களில் இதை வெறும் வயிற்று வலி என்று நினைத்து பலரும் அலட்சியப்படுத்திவிடுகின்றனர். அவ்வாறு செய்யக்கூடாது.
மாரடைப்பு குறித்து மற்றொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது எவ்வளவு விரைவாக மருத்துவ உதவியை நாடுகிறோமோ, அவ்வளவு விரைவாக அவருக்கு சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும்.
இதயத்தில் மூன்று முக்கியமான தமனிகள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியைப் பெற்று அந்த அடைப்பை நீக்க வேண்டும். எவ்வளவு விரைவாக அடைப்பு நீக்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக நோயாளி குணமடைவார்.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்?
முதலில் மருத்துவமனைக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும்.
ஆஸ்பிரின் அல்லது டிஸ்பிரின் போன்ற சில மருந்துகளை அருகில் வைத்திருக்கலாம். மாரடைப்பு ஏற்படும் நிலையில் அவற்றை மென்று சாப்பிடுவது உடனடியாகச் சில நன்மைகளை அளிக்கலாம்.
ஆனால், மிக முக்கியமான விஷயம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவ உதவியைப் பெறுவதுதான்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புபவர்கள் வழக்கமாக என்னென்ன பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்?
ரத்தச் சர்க்கரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் மற்றும் யூரிக் அமிலம் ஆகியவற்றைப் பரிசோதிக்க வேண்டும். இவை அனைத்தும் அவசியமான பரிசோதனைகள்.
இதுதவிர, தற்போது சிஆர்பி பரிசோதனையையும் செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகிறது.
ஆனால், இதுகுறித்து என்னுடைய கருத்து என்னவென்றால், பல்வேறு காரணங்களால் சிஆர்பி அளவு அதிகரிக்கலாம். ஒருவருக்கு முன்பு ஏதேனும் தொற்று ஏற்பட்டிருந்தால், அதன் காரணமாகவும் சிஆர்பி அளவு அதிகரிக்கலாம். இதனால் மக்களிடையே தேவையற்ற குழப்பம் ஏற்படத் தொடங்குகிறது.
மற்றொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இளைஞர்கள் நோய் குறித்து தெரிந்துகொள்ள கூகுளில் தேடுவதோ அல்லது ஏஐ-யின் உதவியை நாடுவதோ அதிகரித்துள்ளது. நோய் தொடர்பான விஷயங்களில் இவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் கூறுவேன். இது குழப்பத்தைத்தான் அதிகரிக்கும். நன்மையைவிட தீமையே அதிகம் ஏற்படலாம்.
பலர் மருத்துவரிடம் செல்வதற்குப் பதிலாக கூகுள் அல்லது ஏஐ-யின் உதவியுடன் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் பிரச்னை குணமடைவதற்குப் பதிலாக, சில நேரங்களில் அது மேலும் மோசமடையக்கூடும்.
ஒருவேளை ஒருவருக்கு மாரடைப்பு நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு வரும்போது, அங்கு முழுமையான இதயச் சிகிச்சை வசதிகள் தயாராக இருக்கும்.
முதலில் இசிஜி எடுக்கப்படும். இதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம். அதன் பிறகு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும்.
பின்னர், அது பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும், முழுத் துறையும் தயார் நிலையில் வைக்கப்படும். நோயாளி குறித்த தகவல் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.
ஏனெனில், அது பொன்னான நேரம். நோயாளி எவ்வளவு விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாரோ, எவ்வளவு விரைவாக ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக இதயத் தசையைப் பாதுகாக்க முடியும்.
இத்தகைய சிகிச்சை வசதி உள்ள மருத்துவமனை அருகில் இல்லாத நிலையில், தற்போது பல இடங்களில் 'த்ராம்பாலிட்டிக் சிகிச்சை' எனப்படும் ரத்த உறைவை கரைக்கும் சிகிச்சை கிடைக்கிறது. அங்கு உடனடியாகச் சென்று இந்தச் சிகிச்சையைப் பெறலாம்.
இதற்கு ஒரு ஊசி செலுத்துவது மட்டுமே தேவைப்படும். அதன் பிறகு நோயாளியை மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பலாம்.
இதுதவிர, சிபிஆர் குறித்து நமது சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்..
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உடனடியாகச் சுயநினைவை இழந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு உடனடியாக சிபிஆர் அளித்து, அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தால், பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு