3 இலவச சிலிண்டர் யாருக்கு? எந்தெந்த பேருந்துகளில் மகளிருக்கு இலவசம்?

3 இலவச சிலிண்டர் யாருக்கு? எந்தெந்த பேருந்துகளில் மகளிருக்கு இலவசம்?
பிரசுரிக்கப்பட்டது

வரும் பொங்கல் முதல் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டணமில்லா எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். அதன்படி அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பட்டியல் பெறப்பட்டு சிலிண்டருக்கான விலை பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்தார். ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள 1,30,16,104 குடும்பங்கள்பயனடையும் என அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவித்த முதலமைச்சர் விஜய் இத்திட்டத்திற்காக ஆண்டு தோறும் தோராயமாக 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்

விதி எண் 1100இன் கீழ் மற்றொரு அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் மாநகர நகர்புற சாதாரண பேருந்துகள் மற்றும் மலைப்பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார். தற்போது இந்த திட்டம் வெற்றிப் பயணத் திட்டம் என விரிவுபடுத்தப்பட்டு அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.

முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகர, நகர பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என அவர் அறிவித்தார். மேலும் மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்தார். வெற்றிப்பயணத் திட்டம் படிப்படியாக் இதர சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 6000 கோடி ரூபாய் கூடுதலாக செலவினம் ஏற்படும் என முதலமைச்சர் விஜய் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு