You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அமெரிக்கா, இஸ்ரேலிடம் இல்லாத ஒன்று இரானிடம் உள்ளது' - இன்றும் பொருந்தும் 200 ஆண்டு கோட்பாடு
- எழுதியவர், லூயிஸ் அன்டோனியோ அராவுஜோ
- பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
இரான் போர் ஏப்ரல் 1ஆம் தேதி ஐந்தாவது வாரத்திற்குள் நுழையவிருந்த நிலையில், 'தி டெப்ரீஃப்' என்ற அமெரிக்க இணையதளம் ஓர் அசாதாரணமான நேர்காணலை வெளியிட்டது.
ஏறக்குறைய இரு நூற்றாண்டுகளுக்கு முன் இறந்த ஒரு ராணுவ சிந்தனையாளருடன், செயற்கை நுண்ணறிவில் அந்த நேர்காணல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
நெப்போலியன் போனபார்ட், வில்லியம் டெகும்சே ஷெர்மன், எர்வின் ரோமெல் போன்ற உலகப் புகழ்பெற்ற ராணுவ தலைவர்களையும் போர் உத்தியாளர்களையும் தேர்வு செய்வதற்குப் பதிலாக, அந்த இணையதளம் கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் என்ற அதிகம் அறியப்படாத பிரஷ்ய ராணுவ சிந்தையாளரைத் தேர்ந்தெடுத்தது.
கிளாஸ்விட்ஸ் தனது வாழ்நாளில், நெப்போலியன், ஷெர்மன் அல்லது ரோமெல் அளவுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்றவராக இருக்கவில்லை.
நெப்போலியனைப் போல் அவர் போர்முறையை வியத்தகு முறையில் மாற்றவில்லை. ஷெர்மனைப் போல் அவர் ராணுவ தந்திரங்களையும் அழிவுகளையும் விரிவுபடுத்தவில்லை. ரோமெலைப் போல் அவர் ஒரு போர்க்கள மேதையாகவும் கருதப்படவில்லை.
இருப்பினும், போரைப் பற்றி, குறிப்பாக கோட்பாட்டு மற்றும் தத்துவ ரீதியாக ஆழமாகச் சிந்திக்கும்போது, பல ராணுவத் தலைவர்களின் கருத்துகளைவிட கிளாஸ்விட்ஸின் கருத்துகள் அதிக செல்வாக்கு பெற்றதாகப் பல நிபுணர்கள் நம்புகிறார்கள்.
இதன் காரணமாக, உலகில் எங்கு ஒரு பெரிய போரோ அல்லது சர்வதேச மோதலோ நிகழும்போது, என்ன நடக்கிறது என்பதை நன்கு புரிந்துகொள்வதற்காக மக்கள் பெரும்பாலும் கிளாஸ்விட்ஸின் கருத்துகளையும் எழுத்துகளையும் நாடுகிறார்கள்.
ஜெர்மன் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர் அகாடெமியின் இயக்குநரான பியாட்ரீஸ் ஹியூசர், கிளாஸ்விட்ஸ் மீதான தொடர்ச்சியான ஆர்வம், அவரது கருத்துகள் இன்றும் பொருத்தமானவையாக இருப்பதைக் காட்டுவதாகக் கூறினார்.
பிபிசி நியூஸ் பிரேசிலுக்கு அளித்த பேட்டியில், கிளாஸ்விட்ஸ் ஏன் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார் என்பதை ஹியூசர் விளக்கினார்.
"போரைப் பற்றி எழுதிய முதல் நபர் என்பதால் கிளாஸ்விட்ஸ் இன்றும் வாசிக்கப்படுகிறார். அவர் அறநெறி அல்லது இறையியல் கண்ணோட்டத்திலோ அல்லது இதையெல்லாம் செய்தால் போரில் வெற்றி பெறலாம் என்பது போன்ற போர்க் கோட்பாடுகளின் கையேட்டை வழங்கும் நோக்கத்துடனோ அவர் எழுதவில்லை," என்று ஹியூசர் கூறினார்.
மாறாக, ஹியூசரின் கூற்றுப்படி, கிளாஸ்விட்ஸ் மக்கள் போரைப் பற்றியே ஆழமாகச் சிந்திக்க வேண்டுமென விரும்பினார். அதாவது, "போர் என்பது உண்மையில் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, அரசியல் எவ்வாறு போர்களையும் ராணுவ முடிவுகளையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்பினார்."
"போர் என்னும் நிகழ்வை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காகவும், அதன் இயல்பு குறித்தும் அரசியல் அதன்மீது எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது குறித்தும் அதிலிருந்து நுண்ணறிவுகளைப் பெறுவதற்காகவும், போரைப் பற்றிச் சிந்திப்பதே அவரது நோக்கமாக இருந்தது," என்று ஹியூசர் விளக்கினார்.
'போர் என்பது அரசியலின் ஒரு தொடர்ச்சியே'
தனக்கு முந்தைய பல எழுத்தாளர்களைப் போலன்றி, கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் போரை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்த்தார். கிளாஸ்விட்ஸ், பிரஷ்ய ராஜ்ஜியத்தில் உள்ள பர்க் பை மாக்டெபர்க் என்ற இடத்தில் ஓர் உயர்குடி குடும்பத்தில் பிறந்தார். போர் என்பது வெறும் வீரம், ஒழுக்கம் அல்லது மதம் சார்ந்தது மட்டுமல்ல என்று அவர் நம்பினார்.
மாறாக, போரை அதற்கென தனி விதிகள், முறைகள், உத்திகளைக் கொண்ட ஒன்றாக அவர் பார்த்தார். அவரைப் பொறுத்தவரை, போரின் முக்கிய நோக்கம், தோல்வியடையும் தரப்பை, வெற்றி பெறும் தரப்பின் விருப்பங்களையும் குறிக்கோள்களையும் ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதே ஆகும்.
கிளாஸ்விட்ஸ் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தாலும், அவரது கருத்துகள் உலகம் முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற தலைவர்கள், சிந்தையாளர்கள் மற்றும் நிபுணர்கள் மீது தாக்கம் செலுத்தியுள்ளன. அவரது சிந்தனை, வெலிங்டன் பிரபு போன்ற ராணுவத் தலைவர்களையும், ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் விளாதிமிர் லெனின் போன்ற அரசியல் பிரமுகர்களையும், பிரெஞ்சு தத்துவஞானி ரேமண்ட் ஆரோன் போன்ற அறிஞர்களையும், முன்னாள் அமெரிக்க பெருநிறுவன நிர்வாகி ஜாக் வெல்ச் போன்ற வணிகத் தலைவர்களையும் பாதித்தது. பிற்காலத்தில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணரான தாமஸ் ஷெல்லிங்கையும் அவரது கருத்துகள் பாதித்தன.
ராணுவ திறன்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளரான யுஜெனியோ டினிஸ், போர், ராணுவ சக்தி, சமூகம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள கிளாஸ்விட்ஸின் கருத்துகள் மக்களுக்கு உதவுவதால், அவை இன்றும் முக்கியமானவை என்று கூறுகிறார்.
டினிஸின் கூற்றுப்படி, "போர் நடவடிக்கை, போர்த் திறன், ஒரு சமூகம் அல்லது குழுவின் தேவைகள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவை, அவை மோதலுக்கு உள்ளாகக்கூடிய பிற குழுக்கள் மற்றும் சமூகங்களுடனான தொடர்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதற்கு, கிளாஸ்விட்ஸ் மட்டுமே ஒரே சீரான கருத்தியல் கட்டமைபை வழங்குகிறார்."
எளிதாகக் கூறுவதெனில், போர்கள் எப்படி நிகழ்கின்றன, நாடுகள் ஏன் சண்டையிடுகின்றன, அவற்றின் ராணுவ பலம் எவ்வளவு, அரசியல், சமூக அழுத்தங்கள் நாடுகளுக்கு இடையிலான மோதல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பனவற்றைப் படிப்பதற்கான மிகத் தெளிவான வழிகளில் ஒன்றை கிளாஸ்விட்ஸ் உருவாக்கியதாகக் குறிப்பிடுகிறார் டினிஸ்.
அமெரிக்க இணையதளமான 'தி டெப்ரீஃப்' கேட்ட கேள்விகளும், பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட நவீன போர்களில்கூட, கிளாஸ்விட்ஸின் கருத்துகள் இன்றும் ஏன் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட சில கேள்விகள்:
"இரானுக்கு எதிராகப் போர் தொடுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முடிவை நாம் எவ்வாறு மதிப்பிட வேண்டும்?"
"அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அறிவிக்கப்பட்ட போர் நோக்கங்கள் குறித்த உங்கள் கருத்து என்ன?"
"அமெரிக்காவும் இஸ்ரேலும் இதுவரை அடைந்துள்ள மூலோபாய வெற்றிகள் யாவை?"
கிளாஸ்விட்ஸின் எழுத்துகளையும் அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களையும் ஆய்வு செய்வதன் மூலம், அந்த செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருள் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை உருவாக்கியது.
பிரேசிலிய ராணுவ கட்டளை மற்றும் பணியாளர் பள்ளியின் (Eceme) ராணுவ அறிவியல் பேராசிரியரான சாண்ட்ரோ டெய்செய்ரா மொய்தா, போர்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கங்களைப் புரிந்துகொள்ள, இன்றைய மக்கள் இப்போதும் கிளாஸ்விட்ஸின் கருத்துகளையே பயன்படுத்துவதாகக் கூறுகிறார்.
மொய்தாவின் கூற்றுப்படி, "அந்தப் போரில் அமெரிக்காவின் நோக்கங்கள் என்னவாக இருந்தன என்பதை நாம் புரிந்துகொள்ள முயல்வதற்கு முக்கியக் காரணம், பழைய பிரஷ்யரான கிளாஸ்விட்ஸிடம் இருந்து நாம் குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றையாவது கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதே ஆகும்."
இந்த மோதலில் இரான் மற்றும் இஸ்ரேலின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கலாம் என்றாலும், அமெரிக்காவின் உள்நோக்கங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை என்றும், அவற்றை அடையாளம் காண்பது மிகவும் கடினம் எனவும் மொய்தா குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் சாத்தியமான நோக்கங்கள் குறித்து அவர் பல கேள்விகளை எழுப்பினார்:
"சீனாவை தடுத்து நிறுத்துவதே அமெரிக்காவின் நோக்கமா? ஐரோப்பாவுக்கு பிரச்னைகளை உருவாக்குவதா? இரானை தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வருவதா? அல்லது உலகின் மற்றொரு எரிசக்தி ஆதாரத்தின் மீதும், அதன் வாயிலாக உலகின் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான எண்ணெய் உற்பத்தியின் மீதும் கட்டுப்பாட்டைப் பெறுவதா?" என்று அவர் வினவுகிறார்.
இந்தக் கேள்விகள் வாயிலாக, ஒரு போரின்போது பகிரங்கமாக அறிவிக்கப்படும் காரணங்களுக்கு அப்பால், ராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னால் வல்லமைமிக்க நாடுகளுக்குப் பெரிய அளவிலான அரசியல், பொருளாதார அல்லது உத்திசார் நோக்கங்கள் இருக்கக்கூடும் என்று மொய்தா சுட்டிக்காட்டுகிறார்.
"இந்தக் காரணங்கள் அனைத்தையும் பட்டியலிடுவதே, இந்த மோதலில் அமெரிக்காவின் உத்தி என்னவென்று நமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்பதை நிரூபிக்கிறது" என்று கூறுகிறார் சாண்ட்ரோ டெய்செயிரா மொய்தா.
ஸ்காட்லாந்தின் எடின்பரோவில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியரான ஹியூ ஸ்ட்ராச்சன், கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் 19ஆம் நூற்றாண்டின் தொடக்க கால அனுபவங்களின் அடிப்படையில் போரைப் பற்றி எழுதியிருந்தாலும், அவரது முக்கிய நோக்கம் அதைவிடப் பெரிதாக இருந்தது என்கிறார்.
அவரது கூற்றுப்படி, கிளாஸ்விட்ஸ் "போரை ஒரு நிகழ்வாக" புரிந்துகொள்ள விரும்பினார்.
இதன் பொருள், கிளாஸ்விட்ஸ் போரை முழுமையாக ஆய்வு செய்ய முயன்றார். போர்கள் ஏன் நடக்கின்றன, அவை சமூகங்களையும் அரசியலையும் எவ்வாறு பாதிக்கின்றன, தலைவர்கள் தங்கள் இலக்குகளை அடைய போர்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பனவற்றை ஆராய முயன்றார்.
கிளாஸ்விட்ஸ் போரை ஆயுதங்கள் அல்லது ராணுவ தொழில்நுட்பத்தின் வாயிலாக ஆய்வு செய்யவில்லை என்கிறார் ஸ்ட்ராச்சன். மாறாக, அவர் போர்களுக்குப் பின்னாலுள்ள அரசியல் மற்றும் சமூகக் காரணங்களின் மீது கவனம் செலுத்தினார். இதன் காரணமாக, அவரது பல கருத்துகள் நவீன காலத்திலும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
ஸ்ட்ராச்சனின் கூற்றுப்படி, "அவர் போரை ஒரு தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், ஒரு சமூக மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்ததால், இன்றும் பொருத்தமான விஷயங்களைக் கூற முடிந்தது. அவர் மேலோட்டமான பதில்களை வழங்குவதற்குப் பதிலாக ஆழமான கேள்விகளை எழுப்பினார்."
எளிதாகக் கூறுவதெனில், கிளாஸ்விட்ஸ் போரைப் பற்றி சுலபமான பதில்களைக் கொடுக்கவில்லை என்று ஸ்ட்ராச்சன் குறிப்பிடுகிறார். அவர் மோதல்களுக்குப் பின்னாலுள்ள அரசியல் இலக்குகள், மனித நடத்தை மற்றும் சமூக அழுத்தங்கள் பற்றி மக்கள் ஆழமாகச் சிந்திக்க ஊக்குவித்தார்.
தி டெப்ரீஃப், கிளாஸ்விட்ஸுடனான தனது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட நேர்காணலை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, பிரிட்டிஷ் இதழான தி எகானமிஸ்ட், இரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைக் காட்டும் ஓர் அட்டைப் படத்தை, "வியூகம் இல்லாத போர்" என்ற தலைப்புடன் வெளியிட்டது.
"வியூகம்" என்ற சொல் முதலில் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. அதன் நேரடிப் பொருள் "ராணுவத்தின் கட்டளை" என்பதாகும்.
ஒரு ராணுவ தலைவரின் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றான, தெளிவான அரசியல் அல்லது ராணுவ இலக்குகளை அடைய உதவும் வகையில் ஆயுதப் படைகளை வழிநடத்துவதை, விவரிக்க கிளாஸ்விட்ஸ் "வியூகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
கிளாஸ்விட்ஸின் கருத்துகள் பற்றிய பல சுருக்கங்கள், பொதுவாக போரைப் பற்றிய அவரது மிகவும் பிரபலமான கூற்றுகளில் ஒன்றில் இருந்து தொடங்குகின்றன.
அந்த பிரஷ்ய சிந்தனையாளர், "போர் என்பது வேறு வழிகளில் அரசியலின் தொடர்ச்சி மட்டுமே." என்று எழுதினார்.
இந்தப் புகழ்பெற்ற வரி கிளாஸ்விட்ஸின் 'போர் பற்றி' (On War) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் இறப்பதற்குள் அந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க முடியவில்லை. பின்னர், அவரது மனைவி மேரி வான் கிளாஸ்விட்ஸ், 1832-இல் அதைத் தொகுத்து வெளியிட்டார்.
ஹியூ ஸ்ட்ராச்சனின் கூற்றுப்படி, அந்தப் புத்தகத்தின் மையக் கருத்து, "வியூகத்தின் தாக்கம் போரை நடத்துவதற்கான ஒரு வழியாக இருக்கிறது" என்பதாகும்.
அதாவது, "போரின் நோக்கங்களுக்காக போர்க்களத்தைப் பயன்படுத்துவதே வியூகம் என்று கிளாஸ்விட்ஸ் வரையறுத்தார். போர் என்பது வேறு வழிகளில் அரசியலின் தொடர்ச்சி என்று அவர் பிரபலமாகக் கூறினார். அந்த அளவுகோல்களின்படி, அமெரிக்காவிடமோ அல்லது இஸ்ரேலிடமோ ஒரு சீரான வியூகம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இரானிடம் உள்ளது." என்று விளக்கினார் ஸ்ட்ராச்சன்.
கிளாஸ்விட்ஸின் சிந்தனைகள் அனைத்து போர்களுக்கும் பொருந்துமா?
'ராணுவ திறன்கள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் கண்காணிப்பகத்தின்' ஒருங்கிணைப்பாளரான யுஜெனியோ டினிஸ், இரான் மோதலைப் பகுப்பாய்வு செய்வது கடினம் என்பதை ஒப்புக்கொள்கிறார். ஏனெனில், இதுகுறித்துக் கிடைக்கக் கூடிய தகவல்கள் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளன. இருப்பினும், இந்த மோதலின் தற்போதைய நிலை குறித்து அவர் மாறுபட்டதொரு கருத்தை முன்வைக்கிறார்.
டினிஸின் கூற்றுப்படி, இந்த மோதலின் விளைவாக இரான் "மிகவும் பலவீனமடைந்துள்ளது." அதேவேளையில், இஸ்ரேல் "பிராந்திய அளவில் கணிசமாக வலுவடைந்துள்ளது" என்று அவர் கருதுகிறார். அதாவது, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் நிலைப்பாடும் செல்வாக்கும் தற்போது மிகவும் வலுப்பெற்றுள்ளன.
"குறைந்தபட்சம் இப்போதைக்காவது, தொடர்புடைய அதிகாரச் சமநிலைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அமெரிக்கா கணிசமாக வலுப்பெற்று இருப்பதாகவே தெரிகிறது," என்றும் டினிஸ் குறிப்பிடுகிறார்.
இந்தச் சூழலில் நிலவும் மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை என்பது இரானிய அரசின் எதிர்காலம் குறித்ததே என்று டினிஸ் கூறுகிறார்.
அதுகுறித்துப் பேசிய அவர், "இரானிய ஆட்சியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை அறிவதே மிகவும் கடினமான விஷயம். வெளிப்படையாகப் பார்க்கையில் அந்த ஆட்சி இன்னும் கவிழ்க்கப்படவில்லை. இருந்தாலும் அங்கு ஒரு குழப்பமான சூழல் நிலவுவதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுகின்றன. சொல்லப்போனால், பிப்ரவரி மாத இறுதியில் நிலவிய சூழலுக்கு முன்பு வரை அந்த ஆட்சி செயல்பட்டு வந்த குறிப்பிட்ட மாதிரியின் அடிப்படையில், அது தற்போது இயங்கவில்லை என்றே தோன்றுகிறது," என்று விளக்கினார்.
ஜெர்மன் ஆயுதப் படை பொதுப் பணியாளர் அகாடெமியின் இயக்குநரான பியாட்ரீஸ் ஹியூசர், எந்தவொரு போரையும் தொடங்குவதற்கு முன்பு தெளிவான இலக்குகளைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம் என்று கார்ல் வான் கிளாஸ்விட்ஸ் வலியுறுத்தி இருந்ததாகக் கூறுகிறார்.
தனது இந்தக் கருத்துகள் இரான் போர் குறித்து மட்டுமின்றி, பொதுவாக போர்கள் அனைத்துக்கும் பொருந்தக் கூடியவை என்றே ஹியூசர் தெளிவுபடுத்துகிறார்.
"எந்தவொரு போர் குறித்தும் பேசும்போது, கிளாஸ்விட்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'ஒரு போரைத் தொடங்குவதற்கு முன்பு, அதன் நோக்கங்கள் என்ன, அதன் குறிக்கோள்கள் யாவை, அந்தப் போரின் வாயிலாக எதிர்த்தரப்பின் மீது எத்தகைய விளைவுகளை அல்லது நிபந்தனைகளைத் திணிக்க முயற்சி எடுக்கப்படுகிறது என்பவை குறித்த தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, அந்தப் போரின் அடிப்படை இயல்பு அல்லது தன்மை எத்தகையது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்" என்றார் ஹியூசர்.
தாங்கள் ஈடுபடவிருக்கும் போரின் தன்மையை அல்லது வகையையும் தலைவர்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் விளக்குகிறார்.
ஹியூசரின் கூற்றுப்படி, "போரின் தன்மையை புரிந்துகொண்ட பிறகு, அதுவொரு வரையறுக்கப்பட்ட போரா? அதன் நோக்கங்கள் வரையறுக்கப்பட்டவையா? அவை மிக விரிவானவையா? அல்லது வரம்பற்றவையா? இதுவொரு நாட்டின் இருப்பே கேள்விக்குறியாகும் வகையிலான போரா அல்லது ஒரு சிறிய நிலப்பகுதியை அடைவது போன்ற குறிப்பிட்ட நோக்கத்தை மட்டுமே கொண்ட போரா?"
இருப்பினும், ஒரு முக்கியமான விஷயத்தில் கிளாஸ்விட்ஸுடன் தான் மாறுபடுவதாக ஹியூசர் குறிப்பிடுகிறார்.
போரின் தொடக்கத்தில் இருந்தே நாடுகள் தங்கள் இலக்குகள் குறித்து மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டுமென கிளாஸ்விட்ஸ் நம்பினார்.
ஆனால், போர்க்கால சூழல்கள் மாறக்கூடும் எனவும், அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பொருத்து அரசுகள் தங்கள் இலக்குகளை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம் எனவும் ஹியூசர் வாதிடுகிறார்.
"கிளாஸ்விட்ஸின் கருத்துக்கு மாறாக, ஒரு போரில் எதைச் சாத்தியமாக்க முடியும் என்பதையும், எதிர் தரப்பைப் பற்றி என்ன தகவல்கள் கிடைக்கின்றன என்பதையும் பொறுத்து, போரின் நோக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வது அவசியமாக இருக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் அவர்.
"எனவே, இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், கிளாஸ்விட்ஸின் சிந்தனைகள் அனைத்துப் போர்களுக்கும் பொருந்தாமல் போகலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய ஹியூசர், "போரின் தொடக்கத்திலேயே அதன் நோக்கம் குறித்த முழு தெளிவு இருக்க வேண்டுமெனவும் போர் முடியும் வரை அதே நோக்கத்தையே உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்க வேண்டுமெனவும் கிளாஸ்விட்ஸ் கூறிய கருத்துகள் விவாததிற்குரியவை. ஏனெனில், போர்க்கள நிகழ்வுகளையும் எதிர் தரப்பைப் பற்றி புதிதாகக் கண்டறியப்படும் தகவல்களையும் பொறுத்து, நோக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம்." என்றார்.
"போர் என்பது வேறு வழிமுறைகள் வாயிலாக அரசியலின் தொடர்ச்சியே" என்னும் புகழ்பெற்ற கருத்து, கிளாஸ்விட்ஸின் 'போர் குறித்து' என்னும் நூலிலும் அவரது ஏனைய படைப்புகளிலும் காணப்படும் ஒரே முக்கியமான கருத்து இல்லை.
போர் ஒரு "பச்சோந்தி"
கார்ல் வான் கிளாஸ்விட்ஸ், போர் என்பது "ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்பத் தனது குணாதிசயங்களைத் தகவமைத்துக் கொள்ளும் ஒரு பச்சோந்தி" என்று எழுதியுள்ளார்.
போரை, தனது சுற்றுப்புறத்தைப் பொறுத்து நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியுடன் ஒப்பிடுவதன் மூலம், ஒவ்வொரு போரும் சூழ்நிலை, அதில் சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகள், அரசியல் நிலைமைகள், அது நிகழும் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப மாறுவதாக கிளாஸ்விட்ஸ் குறிப்பிட்டார்.
அனைத்துப் போர்களுக்கும் ஒரே நிலையான வரையறையைக் கொடுப்பதற்குப் பதிலாக, போர்கள் அவை நடத்தப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்து தொடர்ந்து தனது வடிவத்தையும் தன்மையையும் மாற்றிக் கொள்வதாக அந்த பிரஷ்ய ராணுவ சிந்தனையாளர் விளக்கினார்.
பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, தற்போதைய இரான் போர் கிளாஸ்விட்ஸின் கருத்துடன் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தெரிகிறது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மோதலைப் போல, மிகச் சில சமீபத்திய போர்களே இவ்வளவு அதிகமாகத் திசையையும் தன்மையையும் மாற்றியுள்ளன.
மோதலின் ஆரம்ப நாட்களில், இரானை தாக்குவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் பலவிதமான காரணங்களைக் கூறின. சில அதிகாரிகள் தெஹ்ரானில் உள்ள அரசாங்கத்தை அகற்றுவது பற்றிப் பேசினர். மற்றவர்களோ ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடிய இரானின் அணுசக்தி நடவடிக்கைகளைத் தடுப்பதே நோக்கம் என்றனர்.
ஆயினும், இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், நிலைமை கணிசமாக மாறியுள்ளது.
அமெரிக்கா இப்போது உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை தொடர்பான பிரச்னைகளைக் கையாண்டு வருகிறது. அதேநேரத்தில், இஸ்ரேல் 1978-க்கு பிறகு லெபனான் மீது தனது நான்காவது பெரிய படையெடுப்பை நடத்தி வருகிறது.
அதேநேரம், போரின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட அசல் இலக்குகளில் எதுவும் இதுவரை உண்மையில் அடையப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், நிபுணர்களின் கூற்றுப்படி, அந்த இலக்குகளை அடைவது முன்பைவிட இப்போது இன்னும் கடினமானதாகத் தெரிகிறது.
"போர் என்பது குறிப்பிடத்தக்க மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் வெறுப்பு, வாய்ப்பு, அரசியல் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளால் ஆனது" என்று கிளாஸ்விட்ஸ் விளக்கினார்.
அவர் இந்த மூன்று கூறுகளையும் சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளுடன் இணைத்தார்.
அவர் இந்த மூன்று கூறுகளையும் சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளுடன் இணைத்தார். கிளாஸ்விட்ஸின் கூற்றுப்படி, "வெறுப்பு" என்பது மக்கள் மற்றும் பொது உணர்ச்சிகளுடன் தொடர்புடையது, "வாய்ப்பு" என்பது ராணுவம் மற்றும் போர்க்களத்தில் எடுக்கப்படும் ராணுவ முடிவுகளுடன் தொடர்புடையது, "அரசியல் நோக்கங்கள்" என்பது அரசுகள் மற்றும் அரசாங்க தலைவர்களுடன் தொடர்புடையது.
ஹியூசரின் கூற்றுப்படி, "இது மிகவும் சிக்கலானது. ஏனெனில் இந்த மூன்று கூறுகள் தொடர்ந்து மாறிகொண்டே இருக்கின்றன, ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் மற்றவற்றைப் பாதிக்கின்றன."
மேலும், "அந்தக் கண்ணோட்டத்தில் ஒரு போரின் முடிவைக் கணிக்க முடியாது. என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது, ஒரு போர் தொடங்கப்படுகிறது என்றால், அதன் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று கிளாஸ்விட்ஸ் இறுதியாக வாதிட்டிருப்பார். ஏனெனில், அதைப் பாதிக்கும் பல வேறுபட்ட காரணிகள் உள்ளன. குறிப்பாக, வெறுப்பு, வாய்ப்பு, அரசியல் நோக்கங்கள்." என்று அவர் விளக்குகிறார்.
அதோடு, "ஒரு முடிவைக் கணிப்பது அல்லது அதன் மீது பந்தயம் கட்டுவதுகூட மிகவும் கடினம்" என்கிறார் ஹியூசர்.
அதாவது, கிளாஸ்விட்ஸின் கருத்துகளின்படி, போர்கள் மிகவும் கணிக்க முடியாதவை, ஒரு மோதல் இறுதியில் எவ்வாறு முடிவடையும் என்பதை சக்திவாய்ந்த நாடுகள்கூட அறியாமல் இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு