'தலை வடக்கு, கால்கள் தெற்கு': கட்ச் பாலைவனத்தில் ஒரே திசையில் புதைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பின்னணி

பட மூலாதாரம், ugc
குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் தளமான 'தோலாவிரா', யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய இடமாகும்.
ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தோலாவிரா நகரம், அக்காலத்திலேயே ஒரு நவீன 'ஸ்மார்ட் சிட்டி'க்கு இணையான கட்டமைப்பைக் கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல.
2018-ஆம் ஆண்டில், தோலாவிராவை உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆவணங்களை இந்தியத் தொல்லியல் துறை யுனெஸ்கோவுக்கு அனுப்பி வைத்தது. குஜராத் அரசும் இந்தத் தளத்தை மேம்படுத்த குழுக்களை அமைத்தது.
வரலாற்றைப் பொறுத்தவரை, கட்ச் பகுதி தனித்துவமான தொடர்பைக் கொண்டிருப்பதுடன், பல்வேறு வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்தி வருகிறது
சமீபத்தில், இந்தியா–பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள கட்ச் பாலைவனப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.
இங்கு புதைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளின் தலைப்பகுதி வடக்கு நோக்கியும், கால்கள் தெற்கு நோக்கியும் இருக்கும்படி வைக்கப்பட்டிருந்ததுதான் இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம். மேலும், அவற்றின் முகங்கள் மேற்கு நோக்கி இருந்தன.
இந்த எலும்புக்கூடுகள் கிடைத்த இடத்தை சுற்றிலும் ஆய்வு செய்தபோது, மேலும் ஐந்து தொல்லியல் தளங்கள் கண்டறியப்பட்டன. அங்கு மண்பாண்டங்கள், சுடுமண் (டெரகோட்டா) பொம்மைகள் மற்றும் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்கள் கிடைத்தன. முதற்கட்ட ஆய்வுகளின்படி, இவை இடைக்காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த ஆரம்பக்கட்ட முடிவுகள் விரிவான ஆய்வுக்குப் பிறகு உறுதிசெய்யப்பட்டால், அது கட்ச் அல்லது குஜராத்தின்வரலாற்றில்மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்றிலும் பல மர்மங்களை விலக்கிப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) இதை முதலில் கண்டறிந்தனர்.
தலைப்பகுதி வடக்கு நோக்கி, கால்கள் தெற்கு நோக்கி

பட மூலாதாரம், ugc
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது குறித்து கட்ச் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் கௌரவ் சவுகான் பிபிசி குஜராத்திக்கு அளித்த பேட்டியில், "கட்ச் பகுதியில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு தனித்துவமான தொல்லியல் தளம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதுதான் இதன் சிறப்பம்சம்." என்று கூறினார்.
"எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் இருந்தபோதுதான் இந்த இடத்தை முதலில் பார்த்தனர். அவர்கள் இதை ஒரு 'பாழடைந்த கிராமம்' என்று குறிப்பிட்டார்கள்."

பட மூலாதாரம், ugc
"நான் முதன்முதலில் அங்கு சென்றபோது மிகுந்த ஆச்சரியமடைந்தேன்" எனக் கூறும் கௌரவ் சவுகான், "ஆண், பெண் என இத்தனை எலும்புக்கூடுகளும் மிகவும் நேர்த்தியான முறையில் புதைக்கப்பட்டிருந்தன" என்கிறார்.
"அவற்றின் தலைகள் வடக்கு நோக்கியும், கால்கள் தெற்கு நோக்கியும் முகங்கள் மேற்கு நோக்கியும் இருந்தன. இது அக்காலத்திய மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். அதே சமயம், இத்தனை பேர் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருப்பதால், அக்காலத்தில் ஏதேனும் பேரிடர் அல்லது பெருந்துயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது."
"இதன் சுற்றுவட்டாரத்தில் மேலும் நான்கு முதல் ஐந்து தளங்கள் கண்டறியப்பட்டது வியப்பளிக்கிறது. அங்கு மண்பாண்டங்கள், வீடுகளின் எச்சங்கள் மற்றும் சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனே டெக்கான் கல்லூரியின் உதவியுடன் அங்கு ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இங்கு கிடைத்த எச்சங்கள் சுமார் 1,000 முதல் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய இடைக்காலத்தைச் சேர்ந்தவை என்பது உணரப்பட்டது."
"ஒரு நாள் கூட தங்குவதற்குச் சிரமமான இந்த வறண்ட பாலைவனப் பகுதியில் அக்காலத்தில் இவ்வளவு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதன் முக்கியத்துவத்தை மேலும் கூட்டுகிறது." என்று அவர் குறிப்பிடுகிறார்.
எலும்புக்கூடுகளுக்கும் சும்ரா வம்சத்திற்கும் உள்ள தொடர்பு
"பண்டைய காலத்தில் மக்கள் வாழ்வதற்காகத் தேர்ந்தெடுத்த மிகச்சிறந்த இடமாக தோலாவிரா இருந்தது" என கௌரவ் சவுகான் கூறுகிறார்.
"தோலாவிரா செழித்தோங்கிய காலகட்டத்தில், சிந்து நதியின் நீர் இப்பகுதி வரை பாய்ந்து வந்தது. மக்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்ததாகவும், வெளியிலிருந்து இங்கு வந்து குடியேறியதாகவும் நம்பப்படுகிறது."
"இந்தத் தளத்தில் சில செப்பு நாணயங்களையும் கண்டெடுத்துள்ளோம். பாகிஸ்தானின் கஞ்சர்கோட் போன்ற எல்லைப் பகுதிகளில் கிடைத்த நாணயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த எலும்புக்கூடுகளும் எச்சங்களும் 'சும்ரா' வம்சத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று தெரிகிறது."
புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் திடீரெனத் தரைக்கு மேலே தெரியத் தொடங்கியது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இது குறித்துப் பேசிய பேராசிரியர் சவுகான், "ஏதோ ஒரு இயற்கைச் சீற்றத்தின் காரணமாக, புதைக்கப்பட்ட உடல்களின் மேல் இருந்த மண் அடித்துச் செல்லப்பட்டு, அவை மேற்பரப்பில் தெரிய ஆரம்பித்திருக்க வேண்டும்." என்கிறார்.
"இந்தத் தளம் உண்மையில் தோலாவிரா காலத்திற்கும் தற்காலத்திற்கும் இடையே ஒரு இணைப்புப் புள்ளியாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் ஆய்வு செய்வதற்குப் பல பகுதிகள் உள்ளன. விரைவில் இந்த எலும்புக்கூடுகளின் டி.என்.ஏ மற்றும் கார்பன் காலக்கணிப்பு சோதனைகளை மேற்கொள்ள உள்ளோம்," என்றார்.
இந்த எலும்புக்கூடுகள் சும்ரா வம்சத்தைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. சும்ரா வம்சம் என்றால் என்ன? பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தின்படி, சும்ரா வம்சம் என்பது 11-ஆம் நூற்றாண்டில் தற்கால பாகிஸ்தானின் சிந்து பகுதி உட்பட அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை ஆட்சி செய்த ஒரு வம்சமாகும். வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் இவர்களை அரேபிய வம்சாவளியோடு தொடர்புபடுத்துகின்றனர்; ஆனால் சிலர் இவர்கள் ராஜபுத்திர பூர்வீகத்தைக் கொண்டவர்கள் என்று கருதுகின்றனர்.
சும்ரா வம்சத்தினர் இப்பகுதியை சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். இவர்களுக்குப் பிறகு 'சம்மா' வம்சத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். பின்னர் இப்பகுதி முகலாயப் பேரரசர் அக்பரால் கைப்பற்றப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
புஜ் நகரத்திலிருந்து வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் 'காதிர்பெட்' அமைந்துள்ளது. இந்தத் தீவில்தான் தோலாவிரா கிராமம் அமைந்துள்ளது. கட்ச் பகுதியின் ஏனைய சாதாரண கிராமங்களைப் போலவே காட்சியளிக்கும் இந்தக் கிராமம், தனக்குள் ஓர் அசாதாரண வரலாற்றைக் கொண்டுள்ளது.
கிராமத்திலிருந்து வடக்கே ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் 'கோட்டடா டிம்பா' என்ற பகுதியை அடையலாம். இந்தப் பகுதிதான் இந்தக் கிராமத்தை தனித்துவமானதாக மாற்றுகிறது.இங்குதான் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அக்காலத்தின் அதிநவீன நாகரிக நகரமான தோலாவிரா தழைத்தோங்கி நின்றது.
ஐஐடி காந்திநகர் மற்றும் இந்திய தொல்லியல் துறை இணைந்து நடத்திய ஆய்வில், இந்த 'பண்டைய நகரம்' ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அற்புதமான நீர் மேலாண்மையைக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































