You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஆயதுல்லா அலி காமனெயிக்கு இறுதி அஞ்சலி - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
ஞாயிறு அன்று இரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
காமெனெயின் மற்ற மூன்று மகன்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் புரட்சிகர காவல் படைத் தலைவர் அஹ்மத் வாஹிதி உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.
ஆனால், இரான் அதி உயர் தலைவர் மொஜ்தபா காமெனெயி, தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதது அதிக கவனம் பெற்றுள்ளது. இதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என பல ஊகங்களும் பரவி வருகின்றன.
மொஜ்தபா காமெனெயின் உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவரது தந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் அமெரிக்கா, இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களில் அவரும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மார்ச் மாத தொடக்கத்தில் அவர் பதவியேற்ற பிறகு இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பதும் இந்த ஊகங்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
மறைந்த அலி காமெனெயியின் உடல், டெஹ்ரானில் அமைந்துள்ள கிராண்ட் மொசல்லா மத வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், திங்கட்கிழமை தலைநகர் முழுவதும் நடைபெறவுள்ள இறுதி ஊர்வலத்திற்காக அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு தயார் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் மிகுந்த திட்டமிடலுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், மொஜ்தபா காமெனெயி நிகழ்வுகளில் பங்கேற்காதது குறித்து மற்றொரு ஊகமும் உள்ளது. இஸ்ரேல் அவரையும் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்ற பாதுகாப்பு அச்சம் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது அமலில் உள்ளது. நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஆக்சியஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, காமெனெயின் இறுதிச்சடங்கை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளால் அமைதி பேச்சுவார்த்தைகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், "இரான் ஆட்சியின் மூத்த அதிகாரிகள் பலரும் ஒரே இடத்தில் கூடியிருப்பதால், ஒரே தாக்குதலில் அவர்களை அனைவரையும் கொல்ல முடியும். ஆனால் அதை நாங்கள் செய்யப் போவதில்லை; அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தை நடத்த யாரும் இருக்க மாட்டார்கள்" என்று டிரம்ப் கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், காமெனெயின் மறைவால் பொதுமக்கள் கண்ணீர் வடிப்பதைப் பார்த்து தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும், மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன். ஒருவேளை அது போலிக் கண்ணீராக இருக்கலாம் என்றும் டிரம்ப் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் சிலர் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாக அசோஅசியேட்டட் பிரஸ் மற்றும் தி கார்டியன் வெளியிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த நிகழ்வில் அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம், டிரம்பைக் கொல்லுங்கள், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு) கொல்லுங்கள், நாங்கள் பழிவாங்குவோம் என்பது போன்ற பதாகைகளுடன் முழங்கங்கள் எழுப்பட்டடன.
ஆயதுல்லாஅலி காமெனெய் 1989 முதல் கடந்த பிப்ரவரி மாதம் அவர் இறக்கும் வரை இரானின் அதி உயர் தலைவராக பதவி வகித்தார்.
அவரின் இறுதிச்சடங்கை நூற்றாண்டின் மிகப் பெரிய இறுதிச்சடங்கு என இரான் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது இவரின் உடல் டெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா மத வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை டெஹ்ரானில் நடைபெறும் இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று அவரது உடல், கோம் நகருக்கு எடுத்துச் செல்லப்படும். அதன் பிறகு புதன்கிழமை அண்டை நாடான இராக்கில் உள்ள முக்கிய ஷியா புனிதத் தலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வியாழக்கிழமை அன்று அவரது சொந்த ஊரான மஷ்ஹத் நகரில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு