'ஆபரேஷன் சிந்தூர்' ஆவணப்படம் குறித்து விவாதம் - பாகிஸ்தான் கூறியது என்ன?

2025 மே மாதம்: இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்களைத் தெரிவித்தபோது.

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, 2025 மே மாதம் இந்திய ராணுவ அதிகாரிகள் ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்களைத் தெரிவித்தபோது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியா - பாகிஸ்தான் இடையே 2025 மே மாதம் நடைபெற்ற ராணுவ மோதல் முடிந்து ஓராண்டு மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், சில நாட்கள் மட்டுமே நீடித்த இந்த மோதல் தொடர்பான இரு நாடுகளின் நிலைப்பாடுகள் இன்றளவும் வேறுபட்டே உள்ளன.

இரு தரப்பினரும் தாங்கள்தான் வெற்றி பெற்றதாகக் கூறியதுடன், மோதலின்போது ஏற்பட்ட ராணுவ இழப்புகள் குறித்தும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான டிஸ்கவரி சேனலின் 'டிக்ளாசிஃபைடு: ஆபரேஷன் சிந்தூர்' என்ற ஆவணப்படம், இந்த மோதலை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.

இந்த ஆவணப்படத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா பெற்ற வெற்றிகள் குறித்து பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவான ஐஎஸ்பிஆர், இந்தக் கூற்றுகளை "தவறானவை, சர்ச்சைக்குரியவை, பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டவை" என்று கூறியுள்ளது.

ஆவணப்படத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

ஆவணப்படத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

பட மூலாதாரம், Discovery Channel India

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 2025 மே 6-7ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. ஆனால், பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்றும், அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் புன்யான் அல் மர்சூஸ்' என்றும் பெயரிடப்பட்டது.

'டிக்ளாசிஃபைடு: ஆபரேஷன் சிந்தூர்' ஆவணப்படத்தின் அறிமுகக் காணொளி, டிஸ்கவரி சேனல் இந்தியா மற்றும் டிஸ்கவரி பிளஸ் இந்தியாவின் யூடியூப் சேனல்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் தளங்களின் முழு ஆவணப்படத்தையும் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பலர் இந்த ஆவணப்படத்தைத் தங்களது கணக்குகளில் பதிவேற்றியுள்ளனர்.

ராணுவ அதிகாரிகளுடனான நேர்காணல்கள் மூலம், ராணுவ நடவடிக்கை தொடங்கியது முதல் போர் நிறுத்தம் வரையிலான நிகழ்வுகளை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

இந்திய ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமானப்படைத் தளங்கள் மற்றும் கட்டளை மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், பாகிஸ்தான் நடத்திய பதிலடித் தாக்குதல்கள் இலக்கைத் தாக்கத் தவறியதாகவோ அல்லது இலக்கை அடைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டு அழிக்கப்பட்டதாகவோ அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Discovery Channel India

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2025 மே 10-ஆம் தேதி காலைக்குள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் விரும்பியதாகவும், இதற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவைத் தொடர்புகொண்டதாகவும் இந்த ஆவணப்படம் கூறுகிறது. இதையடுத்து, மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பாகிஸ்தான் ராணுவத்தின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர், இந்திய ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநரை தொடர்புகொள்ள வேண்டும் என்று மார்கோ ரூபியோவிடம் கூறப்பட்டது. ஏனெனில், அவர்தான் இதுகுறித்து பேசுவதற்கு சரியான நபர்" என்று ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணப்படத்துக்காக அளித்த நேர்காணலில், இந்தியாவின் முன்னாள் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் தன்னைத் தொடர்புகொண்டு போர் நிறுத்தம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் எங்கள் மீது இவ்வளவு பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசியிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். நாம் ஏன் இதை (போரை) நிறுத்தக்கூடாது?" என்று பாகிஸ்தான் அதிகாரி தன்னிடம் கூறியதாக ராஜீவ் காய் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அளித்த நேர்காணலின் ஒரு பகுதியும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அதில், பாகிஸ்தான் தரப்பு "தொடர்ந்து எங்களிடம் கோரிக்கை விடுத்தது. 'போதும், நீங்கள் ஏராளமான சேதத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இப்போது போர் நிறுத்தம் செய்யலாம்' என்று அவர்கள் கூறினர். நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டோம்" என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

ஆவணப்படத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, இந்த ஆவணப்படத்தை ஸ்பார்க்கிள் வொர்க்ஸ் ஃபிலிம்ஸ், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரிக்காக தயாரித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் என்ன கூறுகிறது?

ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள கூற்றுகளை பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்புப் பிரிவான ஐஎஸ்பிஆர் நிராகரித்துள்ளது. அவை பொய்யானவை என்று கூறியுள்ள ஐஎஸ்பிஆர், "தோல்வியடைந்த நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்தியா தனது விருப்பத்திற்கேற்ப வரலாற்றை மீண்டும் எழுத முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "வரலாற்றைத் திரித்து காட்டுவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த படைப்பாளிகள் மிகவும் நாடகத்தன்மை கொண்ட, ஒருதலைப்பட்சமான மற்றும் பொய்யான கதைகளை உருவாக்கியுள்ளனர். அவை ஆவணப்படமாக முன்வைக்கப்பட்டுள்ளன" என்று ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது.

ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளில் முரண்பாடுகள் இருப்பதாகவும், இந்தியாவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் வகையில் நிகழ்வுகளின் ஒரு தரப்பை மட்டும் முன்வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது இதன் மூலம் தெரியவருவதாகவும் ஐஎஸ்பிஆர் கூறியுள்ளது.

"2025 மே 7ஆம் தேதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பஹல்காம் சம்பவம் 'தண்டனையாக' அமைந்தது என்று தற்போது ஆவணப்படம் கூறுகிறது. ஆனால், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டு 2025 ஜூலை 28ஆம் தேதி கொல்லப்பட்டதாக இந்தியா முன்பு தெரிவித்திருந்தது. அதாவது, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு 82 நாட்கள் கழித்து அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என்று ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது.

மேலும், எக்ஸ் பதிவில், "பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் ஜூலை 28ஆம் தேதி கொல்லப்பட்டிருந்தால், இந்தியா கூறுவதுபோல் மே 7ஆம் தேதி யாருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பதை இந்தியா விளக்க வேண்டும்" என்றும் ஐஎஸ்பிஆர் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையில் இந்தியா கூறிய "100 சதவீத வெற்றி" என்ற கூற்றை ஐஎஸ்பிஆர் நிராகரித்துள்ளது.

ஐஎஸ்பிஆர் கூறியதன்படி, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலில், "இந்தியாவில் உள்ள 26 ராணுவ இலக்குகள் தாக்கப்பட்டன. இதில் பாகிஸ்தான் குடிமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ நிலைகளும் அடங்கும். நீண்ட தூர மற்றும் துல்லியமாக வழிநடத்தப்படும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன."

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து "எந்தக் கதையையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றும் ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது. மேலும், "நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க பாகிஸ்தான் ஆயுதப் படைகள் முழுமையாகத் தயாராகவும் திறன் கொண்டதாகவும் உள்ளன" என்றும் கூறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் வெளியாகவில்லை.

2025 மே மாத மோதலின்போது என்ன தகவல்கள் வெளியாகின?

டிக்ளாசிஃபைடு: ஆபரேஷன் சிந்தூர்' ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, மே 6-7ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, பாகிஸ்தான் முதலில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பதிலடித் தாக்குதலை மேற்கொண்டது.

இந்த ஆவணப்படத்தில் இந்திய விமானப்படையின் முன்னாள் துணைத் தளபதி நர்மதேஸ்வர் திவாரி, "அடுத்த 15 முதல் 20 நிமிடங்களுக்குள், இரு தரப்பையும் சேர்ந்த 40 முதல் 50 விமானங்கள் வானில் இருந்தன" என்று தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு விமானப்படைக் கட்டளையின் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர், "எங்கள் வான்வெளிக்குள் அவர்களது விமானங்கள் எதுவும் நுழையாமல் இருப்பதற்காகவும், அவர்கள் வான்வெளியில் இருந்தபடியே எங்கள் மீது குண்டுகளை வீச முடியாதபடியும் வானில் தீவிரமாகக் கண்காணித்து வந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நர்மதேஸ்வர் திவாரி, "நாங்கள் வானிலிருந்து தரையை நோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணைகளை ஏவினோம். இதனால் எதிரிக்கு நிச்சயமாக சில சேதங்கள் ஏற்பட்டிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, "சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, அவர்கள் (பாகிஸ்தான் விமானங்கள்) திரும்பிச் செல்ல முடிவு செய்தனர்."

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த இரவில் இந்திய விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து நர்மதேஸ்வர் திவாரியும் நாகேஷ் கபூரும் ஆவணப்படத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், மே 7-ஆம் தேதி ஆறு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்தது.

2025 ஜூன் மாதம், இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா இல்லையா என்பது முக்கியமல்ல. அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதுதான் முக்கியம்" என்று தெரிவித்திருந்தார்.

2025 மே மாதம், பிபிசி வெரிஃபை மூன்று காணொளிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியது. அவற்றில் காணப்பட்ட சிதைவுகள், இந்திய விமானப்படை பயன்படுத்திய போர் விமானம் ஒன்றினுடையவை என்று கூறப்பட்டது.

இந்தக் கூற்றும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா பல இடங்களை குறிவைத்ததாகக் கூறியது

பட மூலாதாரம், Maxar/PlanetLabs

படக்குறிப்பு, இந்தியா பல இடங்களை குறிவைத்ததாகக் கூறியது

எனினும், பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தாம்தான் நிறுத்தியதாகக் கூறினார்.

இது தொடர்பாக, போர் நிறுத்தத்துக்குப் பின்னால் இருந்தது யார் என்று இந்திய எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் பேசிய காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய், "பாகிஸ்தான் உண்மையிலேயே சரணடையத் தயாராக இருந்தால், நீங்கள் ஏன் போரை நிறுத்தினீர்கள்? ஏன் பணிந்தீர்கள்? யாரிடம் சரணடைந்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தனது நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றதாகவும், பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள், பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கியதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது.

மேலும், பாகிஸ்தானின் ஐந்து போர் விமானங்களையும் ஒரு பெரிய ரக விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறியது. ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் இதை மறுத்தார். "ஒரு பாகிஸ்தான் விமானம்கூட குறிவைக்கப்படவோ அழிக்கப்படவோ இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு