கருவளையம் வருவதற்கான 4 முக்கிய காரணங்கள்: வெள்ளரி வைத்தால் குறையுமா? நிபுணர் பதிலளிக்கும் 13 கேள்விகள்

கருவளையங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கண்ணுக்குக் கீழே உருவாகும் கருவளையம் என்பது பலரும் கவலைகொள்ளும் விஷயமாக இன்று மாறியுள்ளது. தூக்கமின்மை மற்றும் திரைகளை உற்று நோக்குவது போன்ற காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன. ஆனால் அவற்றை விடவும் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சமீப நாட்களில் கருவளையங்கள் மறைவதற்கான சில க்ரீம்களும் இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் செயல்திறன் மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த நிலையில் கருவளையம் என்பது அடிப்படையில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல, அது அழகு சார்ந்த பிரச்னையாகவும் பார்க்கப்படுகிறது என்கிறார் தோல் மருத்துவரும் பேராசிரியருமான பி விஜயலட்சுமி.

கருவளையங்கள், அதற்கான காரணிகள், சிகிச்சைகள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார்.

1.என்னென்ன காரணங்களால் கருவளையங்கள் வருகின்றன?

கண்ணைச் சுற்றி கருவளையங்கள் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதனைப் பரவலாக 4 வகைப்பாட்டுக்குள் அடக்கிவிடலாம்.

முதலில் மரபணு சார்ந்து வருவது. ஒரு குடும்பத்தில் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வரலாம். அதற்கு எவ்வளவு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் மீண்டும் வரவே செய்யும்.

இரண்டாவது வீக்கத்தினால் வருவது. பொடுகு போன்ற காரணங்களால் அரிப்பு இருக்கும். அரிப்பை நாம் தேய்க்கும்போது அதனாலும் கருவளையம் உண்டாகும். மெலனின் என்கிற பொருள் அங்கு அதிக அளவில் உற்பத்தியாவதால் இந்த கருவளையங்கள் வரும். அதனுடைய காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

மூன்றாவது ரத்த ஓட்டம் மாறுபடும்போதும் சில வகையான கருவளையங்கள் வரும். நான்காவது வயதாகிறபோது கண்ணுக்கு கீழே உள்ள திசுக்கள் குறையும்போது கருவளையம் வரும். பெரும்பாலும் மேற்கூறிய காரணங்களாலே கருவளையங்கள் வருகின்றன. கருவளையம் வருவது பல காரணங்களால் ஏற்படக்கூடிய தோற்ற மாற்றம் மட்டுமே. அதற்கான காரணத்தை கண்டுபிடித்துதான் அதனை சரி செய்ய முடியும்.

2. தூக்கத்திற்கும் கருவளையத்திற்கும் தொடர்பு உள்ளதா?

தூக்கத்திற்கும் கருவளையத்திற்கும் நேரடி சம்பந்தம் கிடையாது. ஆனால் ஒருவருக்கு ஏற்கெனவே கருவளையம் இருந்து அவருக்கு தூக்கம் போதாமல் இருந்தால் கருவளையம் மிகையாகத் தெரியும். தூக்கமே போதுமாக இல்லையென்றால் நீரிழப்பு ஏற்பட்டிருக்கும். அந்த இடத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. அப்போது கருவளையம் பார்ப்பதற்கு அது மிகையாக உள்ளது போலத் தெரியும்.

கருவளையங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

3. கருவளையத்திற்கும் இதயத்திற்கும் தொடர்பு உள்ளதா?

இதற்குமே நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணிகள் இருப்பவர்களுக்கு சில வகைகளில் ரத்த ஓட்டம் சரியில்லாதபோது கருவளையங்கள் வரலாம். ஆனால் நேரடியாக அதுதான் காரணம் எனக் கூறிவிட முடியாது. கருவளையம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதைப் போல இதய நோய் ஏற்படும் அபாயத்தை ஏற்படும் நிலைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

4. கருவளையங்களில் வித்தியாசங்கள் உள்ளனவா? அதனைக் கண்டுபிடிக்க முடியுமா?

ஒரு தோல் மருத்துவரால் அதைக்கூற முடியும். சில சந்தர்ப்பங்களில் கண்ணுக்குக் கீழே குழியாக இருக்கும். அதனை ஃபில்லர்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது சரி செய்ய முடியும். அதிகமாக அரிக்கின்றபோது தேய்ப்பதனால் தோல் தடிமனாகி உரிந்திருக்கும். அதைப் பார்த்து சரி செய்ய முடியும். இந்தக் காரணங்கள் அல்லாமல் சுருக்கங்கள் போன்ற வேறு சில காரணங்களும் உள்ளன.

5. கருவளையங்கள் இருப்பது ஒரு ஆபத்தான விஷயமா?

கருவளையம் என்பது ஆபத்தான விஷயம் கிடையாது. அது ஒரு அழகு சார்ந்த விஷயம் தான். கருவளையத்துடனும் ஒருவர் இருக்கலாம். தினமும் முகத்தில் அது வெளிப்படையாகத் தெரிவதால் பலரும் சுயமாக ஏதேனும் சிகிச்சை முயற்சி செய்து பார்ப்பார்கள். அதன் பின்னர் மருத்துவர்களையும் அணுகுகிறார்கள். பெரும்பாலான மக்கள் கருவளையத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.

கருவளையங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

6. நீண்டகாலமாக ஒருவருக்கு கருவளையம் இருந்தால் அதனால் ஏதேனும் பாதிப்புகள் வருமா?

கருவளையம் என்பதே பாதிப்பில்லாத ஒரு விஷயம் தான். அது நீண்ட காலமாக இருந்தாலும் சரி அல்லது சமீபமாக வந்திருந்தாலும் சரி. அதற்கான காரணத்தைக் கண்டறிந்தால் அதனைச் சரி செய்துவிட முடியும்.

7. கைப்பேசி அல்லது கணினி திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதாலும் கருவளையங்கள் வருமா?

திரைகளைப் பார்ப்பதால் சில ஒளிக் கதிர்கள் கண்களுக்கு வெளிப்படுகின்றன. நாம் வெயிலில் சென்றாலும் பல ஒளிக் கதிர்கள் நம்மைத் தாக்குகின்றன. வெயிலில் போனால் எந்தப் பாதிப்பு வருமோ அது தான் திரைகளைப் பார்க்கும் போதும் இருக்கும். ஆனால் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு வரும்.

8. கண்ணுக்குக் கீழே வெள்ளரிப் பழங்கள் வைப்பதால் கருவளையங்கள் குறையுமா?

தோலுக்கு நீர்ச்சத்து, ஈரப்பதமூட்டுவது என நாம் சொல்கிறோம். தோல் ஆரோக்கியத்திற்கு நீர்ச்சத்து அவசியமானது. சில நேரங்களில் தோல் காய்ந்து போவதால் தோல் சுருக்கமாக இருக்கும். அதற்கு தேவையான நீர் கிடைத்திருக்காது. வெள்ளரி போன்ற பழங்களை வைக்கின்றபோது அங்கு நீர்ச்சத்து கிடைக்கும். அவற்றை நேரடியாக கண்ணுக்குக் கீழே வைக்கின்றபோது நீர்ச்சத்து அதிகரிக்கும். சில வகையான கடற்பாசிகளையும் வைக்கலாம். நீர்ச்சத்து அதிகரிக்கிறபோது கருவளையம் சற்று குறையலாம்.

கருவளையங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

9. இணையத்தில் விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்தினால் கருவளையம் மறையுமா?

முதலில் தோலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தோல் கீழிருந்து மேல் வருவதற்கு குறைந்தது நான்கு வாரங்கள் வரை ஆகும். சிகிச்சையைப் பொருத்து அதன் செயல்திறனைத் தெரிந்து கொள்வதற்கே குறைந்தது ஒரு மாதம் வரை ஆகும். அதற்கான சில க்ரீம்கள் இருக்கின்றன. ஆனால் சில நாட்களிலே பலன்களை எதிர்பார்க்க முடியாது.

சந்தையில் கிடைக்கின்ற க்ரீம்களைப் பயன்படுத்துவது எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூற முடியாது. தோல் மருத்துவர்கள் பரிசோதித்து காரணத்தைக் கண்டறிந்து பரிந்துரைக்கும் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இணையத்தில் கிடைக்கும் க்ரீம்களைக் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.

10. கருவளையம் வராமல் தவிர்க்க முடியுமா?

வெயிலில் போனால் அனைவரும் சன் கிளாஸ், சன் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். ஒருவருக்கு மரபணு ரீதியாக இருக்கிறதென்றால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். பொடுகு காரணமாக இருந்தால் சீராக ஷாம்பூ பயன்படுத்துவது போன்றவற்றை செய்வதன் மூலம் கருவளையத்தைக் கட்டுப்படுத்தலாம்.

11. கருவளையம் இல்லாமல் செய்துவிட முடியுமா?

எல்லா காரணிகளுக்கும் சிகிச்சை இருக்கின்றது. முறையான பரிசோதனையின் மூலம் முதலில் மூலக் காரணத்தைத் தெரிந்து கொள்வது அவசியமானது.

கருவளையங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

12. கருவளையத்தை குறைப்பதற்கான சிகிச்சைகள் அல்லது வழிகள் என்ன?

கருவளையம் சரியான பிறகும் கூட சன் ஸ்க்ரீன் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். பொடுகு போன்ற காரணிகளைக் கட்டுப்படுத்தலாம். மெலனின் உற்பத்தியுடன் தொடர்புடைய சில பொருட்கள் இருக்கின்றன. அதைக் குறைப்பதற்கு சில க்ரீம்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்தினால் கருப்பு நிறம் குறையும். சுருக்கங்களுக்கு தனி சிகிச்சைகள் உள்ளன. வயதாவதால் தோலில் பள்ளம் ஏற்படும். அதற்கு ஃபில்லர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிறங்களைச் சரி செய்யக்கூடிய லேசர்களும் இருக்கின்றன.

ரசாயன பீல்கள் உள்ளன. அதன்மூலம் சிகிச்சை அளிக்க முடியும். அதன் மூலமும் கருவளையத்தைக் கட்டுப்படுத்த முடியும். சில மருந்துகளும் உள்ளன. அதன்மூலமும் கருவளையத்தைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் எல்லாமே எல்லோருக்கும் பொருந்தாது. அதனால் முதலில் பரிசோதனை செய்துவிட்டு அதன் பின்னர் தான் சிகிச்சையைத் தொடர வேண்டும்.

கருவளையங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

13. மருந்துகள் இல்லாமல் வாழ்க்கை முறை மாற்றங்களினால் கருவளையங்களை குறைக்க முடியுமா?

கருவளையமே சில காரணிகளால் தான் வருகின்றன. அவை இல்லாமல் பார்த்துக் கொண்டாலே கருவளையங்களைக் குறைக்கலாம். நீர்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வயதாவதால் ஏற்படும் தோல் மாற்றங்களை குறைப்பதற்கு ஆண்டிஆக்சிடன்ட்ஸ் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளில் இயற்கையாகவே ஆண்டிஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் கிடைக்கின்றன.

அடுத்து புரதச்சத்து உள்ள உணவுகளில் அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் சோயா பீன், பருப்பு வகைகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகள் இயல்பாகவே புரதச்சத்து நிறைந்தவை.

வைட்டமின் என எடுத்துக் கொள்கையில் நீரில் கரையும் வைட்டமின்கள் நிறைய உள்ளன. வைட்டமின் சி, பி 12 போன்றவை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வைட்டமின் பி 12, முளைகட்டிய பயிர் மற்றும் மாமிச உணவுகளாக எடுத்துக் கொள்ளும் கல்லீரல்களில் அதிக அளவில் இருக்கும். வைட்டமின் சி என்பது எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் மிகுதியாக இருக்கும். வைட்டமின் ஏ கேரட், பப்பாளி போன்ற பழங்களில் அதிகம் இருக்கும். வைட்டமின் இ முளைகட்டிய பயிர்களிலும் கிடைக்கும். வைட்டமின் டி மீன், முட்டை மற்றும் பால் போன்ற உணவுகளில் அதிக அளவில் இருக்கும்.

அடுத்து நீர்ச்சத்து சீராக இருக்க வேண்டும். தண்ணீர் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்கள், தகவல்கள் விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு மருத்துவரை அணுகவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு