ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற புதிய அறிவிப்பு யாருக்கு பொருந்தும்? யாருக்கு விலக்கு?

ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்ய இனி கட்டணமா? 5 கேள்வி - பதில்கள்

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர் (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக, ரூ.5,000 பரிவர்த்தனை செய்தால் 20 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இக்கட்டணம் அதிகபட்சமாக 300 ரூபாயைத் தாண்டாது.

யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான இக்கட்டணங்கள் சாதாரண நுகர்வோரைப் பாதிக்காது.

நுகர்வோருக்கு யுபிஐ சேவை முற்றிலும் இலவசமாக இருக்கும் அதே வேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கான திருத்தப்பட்ட 'வணிகர் தள்ளுபடி விகித' (எம்.டி.ஆர்) கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வரும் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது.

இக்கட்டமைப்பின் கீழ், 2,000 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள 95 சதவீத யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும், சிறு வணிகர்களுக்கான பரிவர்த்தனைகளுக்கும் (P2PM) கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, முற்றிலும் இலவசமாக வைக்கப்பட்டுள்ளன. சிறு வணிகர்களிடையே யுபிஐ பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு புதிய நிதி உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளதாக என்.பி.சி.ஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எம்.டி.ஆர்-ம், பயனரிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணமும் ஒன்றல்ல என்பதை இங்கே குறிப்பிடுவது மிகவும் முக்கியம்.

எம்.டி.ஆர் என்பது கட்டணச் செயல்முறை அமைப்பில் உள்ள வங்கி மற்றும் பிற கட்டணச் சேவை வழங்குநர்களுக்கு வணிகரால் செலுத்தப்படும் கட்டணமாகும்.

இனி எதற்கு கட்டணம்? எதற்கு கட்டணம் இல்லை?

என்.பி.சி.ஐ. தனது சமீபத்திய அறிக்கையில், பல்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தக்கூடிய கட்டணங்கள் குறித்த விரிவான தகவல்களை வழங்கியுள்ளது.

பொதுப் பயனர்கள் மற்றும் குறைந்த மதிப்புடைய பரிவர்த்தனைகள்: வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் யுபிஐ மூலம் எந்தக் கட்டணமும் இன்றி பணப் பரிவர்த்தனைகளைத் தொடரலாம். 2,000 ரூபாய் வரையிலான தனிநபர்-தனிநபர் (P2P) மற்றும் தனிநபர்-வணிகர் (P2M) பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிறு வணிகர்கள்: தனிநபர் - வணிகர் கட்டமைப்பின் கீழ் செயல்படும் சிறு வணிகர்கள், பூஜ்ஜிய எம்.டி.ஆர் மூலம் தொடர்ந்து பயனடைவார்கள். யுபிஐ கியூ.ஆர் குறியீடு மூலம் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நேரடியாகத் தங்கள் வங்கிக் கணக்குகளில் பெறும் சிறு விற்பனையாளர்களுக்கு இது ஆதரவளிக்கிறது. இதன் மூலம், அமைப்புசாரா சில்லறை வர்த்தகத் துறையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

சிறு வணிகர்களுக்கான சிறப்பு நிதி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பயன்பாட்டை மேலும் விரைவுபடுத்தவும், மூன்றாம் நிலை மற்றும் அதைவிடச் சிறிய நகரங்களில் உள்ள வணிகர்களுக்கும் டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கும் ஆதரவளிக்கவும் சிறு வணிகர்களுக்கென ஒரு பிரத்யேக நிதி உருவாக்கப்படும்.

குறிப்பிட்ட வணிகர் பிரிவுகள்: ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு மற்றும் எரிபொருள் போன்ற குறிப்பிட்ட துறைகளில், 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 என்ற நிலையான எம்.டி.ஆர் பொருந்தும்.

பெரிய பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர் (P2M) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% எம்.டி.ஆர் பொருந்தும்; இதன் அதிகபட்ச வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு 300 ரூபாய் ஆகும்.

கார்டுகள்: கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் டிஜிட்டல் வாலெட் உள்ளிட்ட பிற பணப்பரிவர்த்தனை முறைகளுடன் தொடர்புடைய கட்டணங்களை விட, திருத்தப்பட்ட இந்த யுபிஐ எம்.டி.ஆர் கட்டணம் மிகவும் குறைவாகவே உள்ளது.

மத்திய அரசு அறிவிப்பால் எழுந்த சந்தேகம்

சமீபத்தில், யுபிஐ பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் கவலையும், சில கேள்விகளும் எழுந்துள்ளன.

மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, சமூக ஊடகங்களிலும் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பில், " 2,000 ருபாய் வரையிலான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. 2,000 ரூபாய் வரையிலான பணம் செலுத்துவதற்கு ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது" என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதன் படி, "இந்த முறைகள் மூலம் பணம் செலுத்தும் அல்லது பெறும் நபரிடமிருந்து எந்த வங்கியும் அல்லது அமைப்பு வழங்குநரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது."

2007-ஆம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 10A-ன் கீழ் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

மக்களின் கேள்வி

2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுமா?

பட மூலாதாரம், Thomas Fuller/SOPA Images/LightRocket via Getty Images

அரசின் அறிவிப்பில் 2,000 ரூபாய் என்ற வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது ஏன் என்பது பற்றி சமூக ஊடகங்களையும் யுபிஐயையும் பயன்படுத்தும் மக்களின் மனதில் மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

இதுவரை, யுபிஐ மூலம் 500 ரூபாய் , 2,000 ரூபாய் , 5,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைச் செலுத்தியபோது, பயனரிடம் எந்தப் பரிவர்த்தனைக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

புதிய அறிவிப்பின் மூலம் 2,000 ரூபாய்க்கும் அதிகமான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் வசூலிக்க அரசு வழிவகுத்துள்ளதா என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த அச்சம் முற்றிலும் ஆதாரமற்றது அல்ல. ஏனெனில், புதிய அறிவிப்பில் 2,000 ரூபாய் வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் கட்டணம் அல்லாத பிரிவில் இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேற்பட்ட தொகைக்கான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு தற்போது எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது என்பது இதன் பொருள் அல்ல. இதை அரசு வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.

யுபிஐ பணப் பரிவர்த்தனை மூலம் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்க மோதி அரசு தயாராகி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

2,000 ரூபாய்க்கும் அதிகமான ஒவ்வொரு யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கும் 0.5 சதவீதக் கட்டணம் வசூலிக்க அரசு திட்டமிட்டு வருவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

உண்மையில், 2026 செப்டம்பர் 14 அன்று வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பின்படி, 2,000 ரூபாய் வரையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால், 5,000 ரூபாய் மதிப்பிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கூடுதலாக 25 ருபாய் செலுத்த வேண்டியிருக்கும் என்று காங்கிரஸ் கூறுகிறது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ், "நரேந்திர மோதி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்க புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இனி 2,000 ரூபாய்க்கும் அதிகமான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு அரசு கட்டணம் வசூலிக்கும். 2,000 ரூபாய்க்கும் அதிகமான ஒவ்வொரு யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கும் 0.5 சதவீதம் கட்டணம் வசூலிப்பதே திட்டம். அதாவது, நீங்கள் 5,000 ரூபாய்க்கு பொருள் வாங்கினால், 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 10,000 ரூபாய்க்கு பொருள் வாங்கினால், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளது.

காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பாஜக நிராகரித்துள்ளது. "காங்கிரஸ் மீண்டும் போலிச் செய்திகளைப் பரப்புகிறது" என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போதைய விதிகள் என்ன?

தற்போது, யுபிஐ பயனர்கள் பணம் செலுத்துவதற்கு எந்தப் பரிவர்த்தனைக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

2026 ஆகஸ்ட் மாதத்திலும் பொதுப் பயனர்கள் மேற்கொள்ளும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இருக்காது என்றும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு (P2P) நடைபெறும் பணப் பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

எதிர்காலத்தில் எம்.டி.ஆர் (MDR) எனப்படும் வணிகர் தள்ளுபடி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டால், குறைந்த எண்ணிக்கையிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அது பொருந்தும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

இதில் ஒரு முக்கியமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

எம்.டி.ஆர் மற்றும் பயனர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் இரண்டும் ஒன்றல்ல.

எம்.டி.ஆர் என்பது, பணம் செலுத்தும் அமைப்பில் வணிகர்களால் வங்கிகள் மற்றும் பிற பணம் செலுத்தும் சேவை வழங்குநர்களுக்கு செலுத்தப்படும் கட்டணமாகும்.

யுபிஐ பயனர்களிடம் எந்தப் பரிவர்த்தனைக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், ஒருவருக்கொருவர் பணம் செலுத்தும் முறைகள் இலவசமாகவே தொடரும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கம் தெளிவாகக் கூறியிருந்தது.

2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Images

2,000 ரூபாய் என்ற வரம்பு எதற்கு?

இதுதான் இந்த விவகாரத்தில் எழும் மிகப்பெரிய கேள்வி.

அரசின் புதிய அறிவிப்பில், தற்போது 2,000 ரூபாய் வரையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு நேரடியாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தொகைக்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுமா? அவ்வாறு விதிக்கப்பட்டால் அதன் விகிதம் என்ன, எப்போது முதல் அது அமலுக்கு வரும் என்பது குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

எனவே, தற்போது 2,000 ரூபாய்க்கும் அதிகமான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறுவது சரியாக இருக்காது.

ஆனால், எதிர்காலத்தில் அதிக மதிப்பிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்கள் விதிக்கப்படுமா என்பது குறித்த கேள்வி விடை காணப்படாமல் உள்ளது.

மக்களின் மனதில் உள்ள 5 கேள்விகளும் அதற்கான பதில்களும்

1. இனி 2,000 ரூபாய்க்கும் அதிகமான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படுமா?

  • இன்னும் இல்லை. அதற்கான எந்தக் கட்டண விகிதங்களும் அல்லது பயனர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

2. யுபிஐ மூலம் 2,000 ரூபாய்க்கும் அதிகமாக அனுப்பினால், வங்கி பணத்தில் பிடித்தம் செய்யுமா?

  • தற்போது, இதுபோன்ற புதிய பயனர் கட்டணம் எதுவும் அமல்படுத்தப்படவில்லை.

3. ஒவ்வொரு யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுமா?

  • அரசு அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில், ஒருவருக்கொருவர் நடத்தும் பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடரும் என்று அரசு தெரிவித்திருந்தது.

4. 2,000 ரூபாய்க்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர் வசூலிக்கப்படுமா?"

  • எதிர்காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு பெயரளவிலான எம்.டி.ஆர் கட்டணம் விதிக்கப்படுவதற்கான சாத்தியம் குறித்து அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அதன் விகிதம் மற்றும் அமல்படுத்தப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

5. இது சாமானிய மக்களின் ஒருவருக்கொருவர் பணம் செலுத்தும் முறைகளைப் பாதிக்குமா?

  • ஒருவருக்கொருவர் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, தற்போது தனிநபர்கள் மற்ற தனிநபர்களுக்குப் பணம் அனுப்புவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு