சிந்து நதிநீர் ஒப்பந்தம்: பாகிஸ்தான் ராணுவம் என்ன சொன்னது? 'போரிட தயார்' என பிலாவல் பூட்டோ ஆவேசம்

பட மூலாதாரம், Getty Images
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பற்றி பாகிஸ்தானில் மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் காட்டமான கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் பெற்ற நீர் உரிமைகளைப் பாதுகாக்க 'தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்' பாகிஸ்தான் ராணுவம் எடுக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் பாதுகாக்கப்படும் எனக் கூறியுள்ள பிலாவல் பூட்டோ சர்தாரி, பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் "எந்த சமரசமும் செய்துகொள்ள பாகிஸ்தான் தயாராக இல்லை" என்றும் தேவையென்றால் சண்டையிடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
"எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட நிலையிலேயே தொடரும்," என இந்திய வெளியுறவு அமைச்சகம் ஜூலை 3-ஆம் தேதி தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது. அதன் பொருள் என்னவென்றால் பாகிஸ்தான் உடன் இந்தியா எந்தத் தகவலும் பகிராது மற்றும் ஒப்பந்தம் தொடர்பான எந்தக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளாது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் ராணுவம் கூறுவது என்ன?
பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர், திங்கள்கிழமை ராவல்பிண்டியில் நடைபெற்ற 276-வது படைப்பிரிவுத் தளபதிகள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
இந்த மாநாடு தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் முப்படைகளின் மக்கள் தொடர்புத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
"சிந்து நதி நீர் ஓப்பந்தம் தொடர்பாக இந்தியா தெரிவித்த கருத்துக்களைக் குறிப்பில் எடுத்துக்கொண்ட இந்த மன்றம் ஏப்ரல் 24, 2025 அன்று தேசிய பாதுகாப்பு குழு வழங்கிய வழிகாட்டுதல்களை ஆதரிக்கிறது. பாகிஸ்தான் தனது நீர் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என உறுதியளிக்கிறது," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தவிர, அந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் ராணுவம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
"இந்தியா ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த ஆப்கன் தாலிபன் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளைப் பயன்படுத்துகின்றன," என்றும் பாகிஸ்தான் ராணுவம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் அதில், "பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்பது இத்தகைய குழுக்கள் ஆப்கன் நிலத்தை பயன்படுத்தாமல் தடுப்பதில் தான் உள்ளது. அதற்கு ஆப்கன் தாலிபன் அரசாங்கம் தான் பொறுப்பு." என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது.
"சுய நிர்ணயத்திற்கான காஷ்மீர் மக்களின் உரிமையைத் தொடர்ந்து ஆதரிப்பதில் தனது உறுதிபாட்டை இந்தக் கூட்டம் தெரிவிக்கிறது. மேலும் பிராந்தியத்தில் நீடித்த அமைதி என்பது ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதைப் போல காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு கிடைப்பதைச் சார்ந்திருக்கிறது," என பாகிஸ்தான் ராணுவத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிலாவல் பூட்டோ கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
கில்ஜிட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ சர்தாரி, "சிந்து நதியைப் பாகிஸ்தானுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த இந்தியா விரும்புகிறது." என்றார்.
மேலும் அவர், "இந்த ஒப்பந்தத்தை நாங்கள் பாதுகாப்போம் என இந்தியாவுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். சிந்து நதியில் சமரசம் செய்துகொள்ள நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் போர் செய்ய வேண்டுமென்றால் அதற்கும் தயாராக இருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.
மோதி அரசாங்கத்தின் பெயரைக் குறிப்பிட்டு பேசிய பிலாவல் பூட்டோ சர்தாரி, "சிந்து நதி நீர் ஒப்பந்தக் களத்திலும் மோதி அரசாங்கத்தை நாங்கள் தோற்கடிப்போம்." என்றும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இஷாக் தார் கூறியது என்ன?
கடந்த ஜூன் 30-ஆம் தேதி பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், இந்தியா உடன் பாகிஸ்தான் எந்த 'மோதலும்' விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். ஆனால் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் நீர் ஆதாரங்களை முடக்கும் எந்த முயற்சியும் 'போர் போன்ற நடவடிக்கையாகக்' கருதப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பேசியபோது பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார். "இந்தியா ஒருதலைபட்சமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சர்வதேச சட்டத்திலும் அதற்கு முகாந்திரம் இல்லை." என்றார்.
2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானைக் குற்றம் சுமத்திய இந்தியா பதில் நடவடிக்கையாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது.
இந்தியாவின் இந்த நகர்வை நிராகரித்த பாகிஸ்தான் சர்வதேச நடுவர் மன்றத்தை நாடியது.
நெதர்லாந்தில் அமைந்துள்ள நடுவர் மன்றம், இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக நிறுத்த முடியாது என தெளிவுபடுத்தியிருந்தது.
ஆனால் இந்த முடிவை நிராகரித்த இந்தியா, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது தொடர்வதாக அறிவித்தது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்ததை இந்தியா நிறுத்தியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு, "பாகிஸ்தானின் நதியை நிறுத்துவது அல்லது மடைமாற்றுவதற்கான இந்தியா எந்த முயற்சியும் 'போர் போன்ற நடவடிக்கையாகக்' கருதப்படும்." எனத் தெரிவித்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன?
இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து, ஜேலம் மற்றும் செனாப் ஆகியவை மேற்கு நதிகள் என வகைப்படுத்தப்பட்டு அவற்றில் வரும் நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. ரவி, பீஸ் மற்றும் சட்லெஜ் ஆகியவை கிழக்கு நதிகள் என வகைப்படுத்தப்பட்டு அவற்றில் வரும் நீர் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டது.
அதன்படி, கிழக்கு நதிகளின் நீரை இந்தியா சில விதிவிலக்கான சூழல்கள் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் எந்தத் தடையுமின்றி பயன்படுத்தலாம்.
அதே நேரத்தில், மேற்கு நதிகளின் நீரை மின்சார உற்பத்தி மற்றும் வரையறுக்கப்பட்ட அளவிலான விவசாயப் பயன்பாடு போன்ற நோக்கங்களுக்காக இந்தியா பயன்படுத்துவதற்கும் குறிப்பிட்ட அளவிலான உரிமைகள் வழங்கப்பட்டன.
இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும் தளத்தை ஆய்வு செய்வது தொடர்பாகவும் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான விதிகளும் இந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் சிந்து ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் கீழ் இருநாடுகளின் ஆணையர்களும் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது.
எந்தச் சிக்கலான விவகாரத்திலும் இரு ஆணையர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன.
ஒரு நாடு ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது மற்றொரு நாடு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நாடு விளக்கம் அளிக்க வேண்டும். இதற்காக இரு தரப்புக்கும் இடையே கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களிலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லையென்றால் இரு நாடுகளின் அரசாங்கங்களும் இணைந்து அதனை தீர்க்க வேண்டும்.
இவை போக ஒரு நடுநிலையான நிபுணரின் உதவியை நாடுவது அல்லது எந்த சிக்கலான விவகாரத்திலும் நடுவர் மன்றத்தை நாடுவதற்கான விதியும் அதில் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































