You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் வெற்றி இலங்கை நாடாளுமன்றத்திலும் பேச்சு: நாமல் ராஜபக்ஸ கூறியது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது இலங்கையிலும் எதிரொலித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை இலங்கைக்கு வருகைத் தந்து, புதிய உறவொன்றை ஆரம்பிக்க வேண்டும் என, இலங்கை அரசியல்வாதிகள் அழைப்பு விடுக்கின்றனர்.
யாழ்ப்பாணம் உள்பட இலங்கையின் பல இடங்களில் விஜயின் வெற்றியை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் தினத்திலும் பல்வேறு மகிழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை நாடாளுமன்றத்திலும் இன்றைய தினம் (06) விஜய் தொடர்பில் கருத்துகள் பகிரப்பட்டன.
தமிழக மீனவர்களுக்கும், இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காண தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இலங்கைக்கு வருகைத் தருவார் என்று தான் நம்புவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
''தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகிய விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன். வழமையாகவே அரசியலையும், சினிமாவையும் மக்கள் வேறுவேறாக பார்த்ததில்லை. இவ்வளவு காலம் நடிகராக பார்த்த மக்கள், அவரை ஒரு தலைவனாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
ரசிகர்கள் ஒரு மனிதனை உயர்த்தலாம், ஆனால், மக்கள் வாக்கு மட்டும் தான் அந்த உயர்வை ஒரு தலைமைத்துவமாக மாற்ற முடியும். அப்படியிருக்கும்போது இன்று ஒரு வரலாறு எழுதப்பட்டுள்ளது." என்று கூறினார்.
"விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின் போது இலங்கை சார்ந்து பல்வேறு விடயங்கள் பேசியிருந்தார். குறிப்பாக கச்சத்தீவு சம்பந்தமாக. என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம் நான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் அதிகமான அளவு தமிழ்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் பார்த்த ஒரு விடயம்.
முக்கியமான பிரச்னை வந்து கச்சத்தீவு கிடையாது, முக்கியமான பிரச்னை அங்கு முகாம்களில் வாழும் நம்முடைய தமிழ் சொந்தங்கள். அதுமட்டும் இல்லாமல், இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் மீனவர் பிரச்னை இன்னும் தொடர்ச்சியாக தான் போய்கொண்டிருக்கின்றது.
ஆனால், தமிழ்நாட்டு அரசியலை பொருத்தவரையில் விழிப்புணர்வை நாங்கள் கட்டாயம் வழங்கியாக வேண்டும். அது என்னவென்றால், மீனவ பிரச்னை என்பது தமிழர்களுக்கும் ராணுவத்துக்கும், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நடக்கின்ற பிரச்னை கிடையாது.
இது தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களுக்கும், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மீனவர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடு. ஆனால், இதுவரைக்கும் தீர்வு காணவில்லை. ஆகவே, அவரின் புதிய ஆட்சியின் கீழ் அவர் கட்டாயம் இலங்கைக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கின்றோம். ஒரு புதிய உறவை ஆரம்பித்து அதன் மூலம் இந்த தீர்வுகளை பெற்றெடுக்கலாம் என்று நான் நம்புகின்றேன்.'' என்று ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.
நடிப்பதை விடவும், அரசியல் செய்வது மாறுப்பட்ட ஒன்று எனவும், யதார்த்தத்துக்கு முகம் கொடுத்து, தமிழக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
''நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தகவலொன்றை வெளியிட்டிருந்தேன். அவர் அரசியலுக்கு புதிய நபர். கலைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து மிகவும் குறுகிய காலத்தில் அரசியலில் வெற்றி பாதையை தொட முடிந்துள்ளது. அவருக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
"அவர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நடிப்பதை விடவும், அரசியல் வேறுப்பட்டது. இதிலுள்ள யாதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டும். திரைப்படம் நடிப்பது மிகவும் இலகுவானது. இலங்கையில் சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்னர் நாம் அனைவரும் நண்பர்கள் என்று சொல்லி அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாரானார்கள். அவ்வாறான சக்தியை வழங்க வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றேன். இல்லையென்றால், எமது நாட்டு அரசாங்கம் போன்று ஆகிவிடும்.
"இந்திய அரசியல் மேடைகளில் கச்சத்தீவு மிகப்பெரிய பேசுபொருளாகியது. அவருக்கும் அந்த விடயம் தொடர்பில் எண்ணமொன்று இருந்தது. அது தொடர்பில் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்" என்று நாமல் ராஜபக்ஸவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதில் வழங்கிய நாமல் ராஜபக்ஸ, "அடுத்த வருடம் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் கச்சத்தீவு உற்சவம் நடக்கும்போது அவர் விசா எடுத்துக்கொண்டு வருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இலங்கைக்கு வந்து கச்சத்தீவு உற்சவத்தில் பங்குகொள்ள முடியும். மாநில அரசாங்கத்துக்கு இலங்கை தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியாது. அவரது மாநிலம் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும். மாநிலத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும். கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு பகுதி. அவருக்கு இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகை தந்து அடுத்த வருடம் மார்ச். பிப்ரவரி மாதத்தில் நடக்கும் உற்சவத்தில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்." என அவர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெற்ற மாபெரும் வெற்றியை தமது வெற்றி போல இலங்கைத் தமிழர்கள் கொண்டாடி வருவதாக, இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவிக்கின்றார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். "தமிழ்நாட்டில் நடைபெற்று முடிவடைந்துள்ள தேர்தலில் தமிழ்நாட்டின் ஒரு நடிகராக இருந்த நண்பர் விஜய் அவர்கள் ஒரு பாரிய வெற்றியை அந்த தேர்தலில் பெற்றிருக்கின்றார். இலங்கைத் தமிழர்கள் சார்பாக இந்திய வரலாற்றில் குறிப்பாக தமிழ்நாட்டினுடைய தேர்தல் வரலாற்றில் பாரிய வெற்றியை உருவாக்கிய சகோதரர் விஜய்க்கு எங்களுடைய வாழ்த்துகளை இந்த உயர்ந்த சபையின் ஊடாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
புதுமுக அரசியல் கட்சியாக புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் இன்னும் இன்னும் தெளிவும், திடமும் மிகுந்ததாய் தங்கள் அரசியல் பயணம் தொடர வாழ்த்துகிறேன். இலங்கை தமிழர்கள் உங்களுடைய வெற்றியை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கின்றார்கள் என்பதையும் இலங்கையினுடைய உயர்ந்த சபை வாயிலாக நண்பர் சகோதரர் விஜய்க்கு பரிமாறிக்கொள்கின்றேன்'' என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவிக்கின்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், நாடாளுமன்றத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
''எங்களது நாட்டிலே எப்போதுமே பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக நாங்கள் நெருக்கடிக்கு உள்ளாகிய போதெல்லாம், நாங்கள் உதவி கோரிய நாடு, ஒரே நாடு, அயல் நாடு இந்தியா தான். இந்தியாவின் ஜனநாயக தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. முக்கியமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. தமிழ்நாடு என்பது இலங்கையில் வாழக்கூடிய இந்திய வம்சாவளி மக்களாகிய எங்களது, இலங்கை பிரஜைகளாகிய எங்களது தந்தையர் நாடு.
அந்த நாட்டில் இப்போது நடந்த ஜனநாயக திருவிழாவிலே ஜோசப் விஜய் சந்திரசேகரன், அவரின் கட்சி தமிழக வெற்றிக் கழகம் வெற்றியீட்டியிருக்கின்றது. அதற்கான மகிழ்ச்சியை தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்த்துகளை நான் தலைவர் என்ற முறையில் பகிர்ந்துகொள்கின்றோம்.' என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
தமிழக மக்கள் விஜயை உள்ளத்தில் வைத்து, தமது தளபதியாக மாற்றியுள்ளார்கள் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவிக்கின்றார்.
''தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை சொல்ல வேண்டும். இன்று முக்கியமானதொரு நாள். இன்று தமிழ்நாட்டில் கூட பாரிய மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு நாள்.
தமிழ்நாட்டில் விஜய் அவர்களை ஒரு முதலமைச்சராக நியமித்திருக்கின்றார்கள். எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.'' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
இலங்கையுடனான விஜயின் உறவு எப்படி அமைய வேண்டும்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் இலங்கையுடனான உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன் பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் விஜயின் நடவடிக்கைகள், இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தி விடக்கூடாது என மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன் தெரிவிக்கின்றார்.
''தமிழ்நாட்டில் விஜய் பெற்றுள்ள வெற்றிக்கு இலங்கையில் கூட பாரிய ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. விஜய் கச்சத்தீவை மீட்டு தர வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவருடைய தேர்தல் பிரசாரம் இருந்தது.
இலங்கையுடன் ஒப்பிடும்போது அது சாத்தியமற்ற விடயம். அப்படி கேட்டாலும் கூட அது மிகப்பெரிய இன ரீதியான பிரச்னையை இலங்கைக்குள் உருவாக்கி விடும். இலங்கையிலும் விஜயை கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், சினிமா மோகம் வேறு. எங்களுக்கான உரிமை வேறு. அவர் கச்சத்தீவை கேட்டாலும், அதை கொடுக்கும் இடத்தில் இலங்கை அரசாங்கம் இருக்காது.
நிறைய முரண்பாடான விடயங்கள் தான் நடக்கும் என்று நினைக்கின்றேன். ஆரம்பத்தில் இருந்தே நமக்கும், தமிழ்நாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. நிறைய விடயங்களில் நாங்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட தமிழ்நாட்டில் இருந்து நிறைய உதவிகள் தமிழ்நாட்டு மக்கள் என்ற பெயரில் நிறைய நிறைய உதவிகள் கிடைத்தது. அதை நாம் என்றுமே மறக்க முடியாது.
அந்த தொடர்பை விஜய் எப்படி தக்க வைத்துக்கொள்வார் என்பது தான் இங்குள்ள கேள்வி. அநேகமாக தக்க வைத்துக்கொள்வார் என்று நினைக்கின்றேன். இங்குள்ள சிங்கள - தமிழ் முரண்பாடுகளை அவர் அதிகரித்து விடக்கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு.'' என மூத்த பத்திரிகையாளர் நிர்ஷன் இராமானுஜம் தெரிவிக்கின்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு